பூரிக் கோவிலை விட்டு வெளியேறுபவர்கள் கோவிலைச் சுற்றியுள்ள தடங்களில் நடந்து நான்கு திசைகளிலும் நான்கு முனைகளிலும் கோபுரத்தைக் கண்டு களிக்கலாம். ஒவ்வொரு திசையிலும் நடைத்திறப்புகள் உள்ளன. வெளிப்புறத்திலிருந்து பார்க்கும்போதுதான் கோபுரத்தின் பேருரு நன்றாகத் தெரியும். வழக்கம்போலவே, கோவிலைச் சுற்றியுள்ள வீதிகளில் எண்ணற்ற பொருட்கடைகள் விரிக்கப்பட்டிருக்கின்றன. கோவிலுக்கு வந்த பெண்டிரும் குழந்தைகளும் அக்கடைகளில் மொய்த்திருக்கிறார்கள். திருவிழா நடக்கும் ஊரில் எத்தகைய பேச்சொலிகள் தொடர்ந்து கேட்குமோ அவ்வாறே அவ்வீதிகளில் ஒலிக்கலவையாக இருக்கும். தெருக்களில் எண்ணற்ற இரவலர்கள் நடந்தபடியும் வரிசையாய் அமர்ந்தபடியும் காத்திருக்கிறார்கள். யாரும் நம்மை அணுகிக் கையேந்தியதைக் காண முடியவில்லை. அவர்கள் பாட்டுக்கு அமர்ந்திருக்கிறார்கள். விருப்பப்பட்டவர்கள் ஈகிறார்கள். வீதிகளை அடைத்திருந்த கடைகளில் பெரும்பான்மையானவை சாலையோரத்து உணவகங்கள்தாம். எல்லாக் கடைகளிலும் இட்டிலிகள் கிடைக்கின்றன.
வந்த வழியே விடுவிடுவென்று நடந்தபோது அவ்வீதியெங்கும் நிறைந்திருந்த எளிய மக்கள் கூட்டம் கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. ஒரு வண்டியிலிருந்து நாற்பது ஐம்பதின்மர் இறங்கி நிற்கிறார்கள். அவர்களில் நான்கைந்து பேர் இசைக் கருவிகளை இசைக்க பாடிக்கொண்டே அணிவகுத்துச் செல்கிறது அக்கூட்டம். கோவிலில் வணங்கி முடித்தவர்கள் ஓரிடத்தில் கும்பலாகக் கூடிநிற்க, விடுபட்டவர்களைத் தேடிச் செல்கிறார்கள். எங்கேனும் தம்மை மறந்து நின்றுகொண்டிருக்கும் அவர்களைத் தேடிப்பிடித்து அழைத்து வந்து கூட்டத்தில் சேர்க்கிறார்கள். அவ்வீதிகளில் நடமாடுபவர்களில் ஈருருளிகளில் திரிபவர்கள் உள்ளூர்வாசிகள் என்று கணிக்க முடிகிறது. பிறர் அனைவருமே வெளியூரிலிருந்து வந்திருப்பவர்கள்.
அப்பெரிய தேர்வீதியில் கணினிமயப்படுத்தப்பட்ட வங்கிக் கிளைகளும் இருக்கின்றன. சாலையோரத்து மிதிவண்டிப் பழுது நீக்கும் கடைகளும் இருக்கின்றன. "எங்கள் வாயிலின் முன்னே வண்டியை நிறுத்தாதே," என்று எவரையும் அறிவிப்புப் பலகை வைத்து அகற்ற முடியாது என்பது தெரிகிறது.
நான் பார்த்த ஒரு மிதிவண்டிப் பழுது நீக்கு கடை மிகவும் களிநயமானது. சாலையோரத்தில் ஒரு தகரக் குடுவையை வைத்து அதில் ஒரு கழியை நட்டிருக்கிறார். அக்கழியின் மேல்விளிம்பில் ஒரு மிதிவண்டிச் சக்கரத்தை மாட்டி வைத்திருக்கிறார். நம்மூரில் சாலையோரக் காற்றுத்துளை அடைப்புக் கடைகளில் இவ்வாறு மாட்டி வைத்திருப்பார்கள். இங்கே அது பெரிய வண்டியின் சக்கர உருளையாக இருக்கும். இங்கே மிதிவண்டிச் சக்கரம். அது ஒன்றுதான் வேறுபாடு. பொதுவாகவே, பூரித் தெருக்களில் மிதிவண்டிகளும் மிதிஇழுனிகளும் (ரிக்ஷா) நிறையவே காணப்பட்டன. அதனால் சாலையோரத்தில் மிதிவண்டிகளுக்குக் காற்றுத்துளையடைப்பு செய்வதற்குக் கடைபோட்டால் அவர் பணிப்பளுவோடுதான் இருக்க வேண்டியிருக்கும்.
நான் பார்த்த கடைக்காரர் மாருதித் தொழிலகத்தில் வேலை செய்பவரைப்போல நீலச் சட்டை அணிந்திருந்தார். அவர் அந்தத் தற்தொழிலைத் தொடங்குவதற்கு முன்னர் ஏதேனும் வண்டிப் பெரு நிறுவனத்தில் ஒரு தொழிலாளியாகப் பாடுபட்டிருப்பார் என்று நினைக்கிறேன். அதிலிருந்து தன்னை விடுவித்துக்கொண்டு, "என் மண்ணில் ஒரு மரைதிருகியைப் பிடித்து கஞ்சியோ கூழோ குடித்துக்கொள்கிறேன்...," என்று இங்கே கடை போட்டிருக்க வேண்டும். "அந்த ஜகந்நாதர் என்னைக் காப்பாற்றுவார்..." என்று வணங்கி அமர்ந்திருக்க வேண்டும்.
என்ன பெரிய தொழில்... என்ன பெரிய பதவி ! வாழ்வதற்கு நமக்கு நாமே வழங்கிக்கொள்ளும் பொருள்தான் வேலை, தொழில் எல்லாமே. அவரைப் பார்த்ததும் எனக்குள் தோன்றிய நம்பிக்கையை அளவிடல் அரிது. இருக்கும் இடத்தில் பிழைத்துக் கிடப்பதற்குரிய வாய்ப்பு என்னவோ அதைப் பற்றி நில். அதில் உயர்வுமில்லை. தாழ்வுமில்லை. நம் தட்டில் விழும் அன்னத்தின் பின்னே ஆயிரம் கைகளின் உழைப்பு மறைந்திருக்கிறது. அந்த அன்னத்தைத் தொட்டு வாயிலிடுவதற்கு முன் நாம் அதற்கு மாற்றாய் நம்மால் இயன்றை உடல் திறத்தை இந்த உலகத்திற்கு வழங்கினால் போதும். வாழ்க்கை இனிமையாகிவிடும். அதைத்தான் அவர் மனமுவந்து செய்துகொண்டிருக்கிறார் என்று நினைத்துக்கொண்டே நடந்தேன்.
- தொடரும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக