கலிங்கம் காண்போம் - பகுதி 28: பரவச பயணத்தொடர்!
பூரியிலிருந்து கோனார்க் வரை செல்லும் முப்பத்தாறு கிலோமீட்டர்கள் நீளமுள்ள சாலையை நம் நாட்டின் அழகிய கடற்கரைச் சாலைகளில் ஒன்று எனலாம். ஒடிசா முழுக்கவே இயற்கையழகு பாழ்படாத மாநிலம்தான். அத்தகைய மாநிலத்தின் கடலோரம் எப்படியிருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள். கடல்வழி கண்டுபிடிக்கக் கலமேறி வந்த கப்பல் தலைவன் வந்திறங்கும் கன்னிக் கடற்கரைபோல் தூயதாய் இருக்கிறது.
பூரியிலிருந்து கோனார்க் வரையிலான கடற்கரை நெடுகவும் வனவிலங்குப் புகலிடமாகவும் விளங்குகிறது. காப்பிடப்பட்ட அக்காடுகளின் நடுவேதான் சாலை அமைக்கப்பட்டிருக்கிறது. அக்காட்டிடையே செல்கையில் இது நெய்தல் நிலச்சாலையா அடர்ந்த முல்லை நிலச்சாலையா என்ற ஐயமும் ஏற்படாமலில்லை. குச்சி குச்சியான மரங்கள் வானளாவி வளர்ந்து நிற்கின்றன. பார்த்தால் சவுக்கு மரங்களைப்போல் தெரியவில்லை. கடலோரம் வளரும் ஏதோ ஒருவகைத் தனிமரங்கள் அவை. அவற்றோடு பல்வேறு பழ மரங்களும் காணப்பட்டன. இடையிடையே ஊர்களும் வருகின்றன. அரசுத்துறைக் குடியிருப்புகளும் உள்ளன. நம்மூர்ப் பகுதியில் மிகச் சிறிதான ஊர் என்றாலும் ஐம்பது அறுபது வீடுகள் இருக்குமே... அங்கு அப்படியில்லை. நான்கைந்து வீடுகள் மட்டுமே இருக்கின்ற ஊர்ப்பகுதிகளும் இருக்கின்றன.
கடலோரத்தில் அத்தகைய அடர்ந்த காடுகளை வளர்த்தால்தான் அவை ஆழிப்பேரலையை அரணாய்த் தடுத்து நிற்கும். நடுக்கடலில் எத்தகைய கடல்நடுக்கங்கள் வந்தாலும் கடல் கரைமேவாது காக்கப்படும். மந்தை மந்தையாக மேய்ந்துகொண்டிருந்த ஒரு மான்கூட்டத்தைக் கண்ட பிறகுதான் இது ஏதோ அடர்ந்த வனப்பகுதியாக இருக்கும்போலும் என்ற உணர்வு வந்தது. நான் எண்ணியவாறே அது வனவிலங்குப் புகலிடம்தான். மணற்பாங்கான இடத்தில் அடர்த்தியாய் மரங்கள் வளர்ந்திருப்பதும் வியப்புத்தான்.
பெய்த மழைநீர் ஆங்காங்கே தேங்கியிருந்ததில் காட்டின் இடையிடையே சதுப்பு நிலங்களும் தோன்றியிருந்தன. அந்தப் பகுதிக்குள் கடல்வரை சென்றுவர ஆவல் ஏற்பட்டது. ஆனால், காட்டையொட்டிய கடற்கரைப் பகுதியானது புகழ்பெற்ற கடல் ஆமைகளின் புகலிடம் என்று சொன்னார்கள். ஆலிவர்-ரிட்லி கடல் ஆமைப் புகலிடம். இப்புவியில் பிறந்து வாழும் உயிரினங்களில் இருநூற்றைம்பது ஆண்டுகள்வரை உயிர்வாழும் கடல் ஆமைகளின் வசிப்பிடம் என்றால் அதற்கேயுரிய தனித்தன்மைகளோடு இருக்கும்தானே ? மக்களுக்குக் கடற்கரையைத் திறந்துவிட்டால் அவர்கள் மணலடியில் இட்டு வைத்திருக்கும் ஆமை முட்டைகளை மிதித்து உடைத்துவிடுவார்களே. அதனால் உள்செல்ல இசைவில்லை.
கடற்கரைப் பகுதி கடல் ஆமைகளின் புகலிடம் என்றால் காட்டுப்பகுதி எண்ணற்ற வனவிலங்குகளுக்குப் புகலிடம். உயிரிடர் ஏற்படுத்துகின்ற கொல்விலங்குகள்தாம் இல்லையே தவிர, மேய்விலங்குகள் நிறையவே காணப்பட்டன. அந்தப் பகுதிக்குப் பாலுகந்து என்று பெயர். நாம் சென்றுகொண்டிருப்பது பாலுகந்து-கோனார்க் கானுயிர்க் காப்பகம். சிற்றுந்தின் மென்னுறுமலோடு கடலோர அலைச் சத்தமும் இசையாய் நம் காதில் விழுந்தது. அந்தக் காட்டுக்குள் கடலோர நீர்வளத்தைக் கண்டாலும், பெய்ம்மழையின் நீர்த்தேங்கல்கள் பல இருப்பினும் மான்கள் மாடுகள் முயல்கள் போன்ற இத்தனை மேய்விலங்குகளும் குடிப்பதற்கு என்ன செய்யும் ? நன்னீர் வேண்டுமே. அதற்கான அழகிய விடையாக ஓர் ஆறு குறுக்கிட்டது.
நுவாநை என்னும் ஓர் ஆறுதான் அது. மகாநதியின் கிளையாறான அதில் கரைகொள்ளாத அளவுக்குத் தண்ணீர் இருந்தது. அந்த நன்னீரின் கடைசி ஓட்டம் மான்களுக்கு விடாய் தீர்த்த பிறகு கடலில் சென்று கலக்கிறது. மகாநதியின் ஒரு கிளையாறுதானே என்றிருந்தால் சற்று தொலைவில் இன்னோர் ஆறும் குறுக்கிடுகிறது. அது குசபத்திரை ஆறு. அதுவும் மகாநதியின் கிளையாறு. ஆக, நுவாநை ஆறும் குசபத்திரை ஆறும் நன்னீர் வளத்தைப் பெருக்கி நிற்க... ஆங்கே ஓர் அடர்ந்த வனவளம் செழித்திருக்கின்றது. இடையிடையே நாம் செல்லும் சாலை கடலை அணைத்துத் தீண்டினாற்போல் ஒட்டியும் செல்கிறது. அலைகள் ஓங்கியடித்தால் திவலைகள் சிற்றுந்தில் செல்லும் நம்மீது தெளிக்கக்கூடும். அவ்வழியில் ஆங்காங்கே வண்டியை நிறுத்தியவர்கள் கடலைக் கண்டுகளித்து நின்றனர்.
- தொடரும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக