கடற்கரைக் காற்றின் இதத்தை உணர்ந்தேன். கடற்கரையில் அலைகள் ஓங்கியெழுந்து விழுந்து உடைவது தெரிந்தது. கடலோரத்தில் மக்கள் தொகை மிகுதியாய் இல்லையெனில் அந்தக் கடற்கரை வானத்தையே தோழமையாகக்கொண்டு தனிமையில் திளைக்கிறது. அதனையொட்டிச் செல்லும் சாலை அந்தக் கடற்கரைக்குக் காண்போர்களைக்கொண்டு வரவில்லை. இயற்கையைக் காண்பதா, இயற்கையை வெல்லும் பெருவேட்கையில் கலைச்செயலாற்றிய மனிதப் பேருழைப்பைக் காண்பதா என்னும் இருவகைத் தேர்வு அங்கே நம்முன்னே நிற்கிறது.
கடலை உலகத்தில் எங்கு வேண்டுமானாலும் காணலாம், காணற்கரிய கற்பெருங்கோவிலைத்தான் முதலில் காண வேண்டும் என்றுதான் மனம் துடிக்கிறது. ஆனாலும் கடலம்மையின் பேரழகு கடந்துபோய்விடக் கூடியதுமில்லையே. நுவாநை ஆறும் குசபத்திரை ஆறும் சீராகப் பாய்ந்துகொண்டிருக்கும் அந்தக் கானகத்தின் மறு பகுதியை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறோம். வழியெங்கும் பரவியிருந்த பச்சைப் பசேல் வனத்தின் குளிர்ச்சியை கடற்காற்று மிகுவிக்கிறதா இல்லை தணிவிக்கிறதா என்றுணர முடியாத தட்பவெப்பம்.
இடையிடையே சாலையானது கடல் வெளியை ஒட்டினாற்போன்றும் செல்கிறது. நாம் சொந்த வண்டியில் சென்றிருந்தால் அத்தகைய இடங்களில் மணிக்கணக்கில் நிறுத்திக்கொண்டிருப்போம். இது முழுக்க முழுக்க அந்தந்த இடங்களில் வாய்க்கும் போக்குவரத்தை நம்பியே செல்கின்ற ஆட்பயணம். பத்து நாள்களுக்கு வேண்டிய உடைகளும் பிறபொருள்களும் அடைத்து வைத்திருக்கும் பெரும்பைச்சுமை. நெடுந்தொலைவுக்கு இருப்பூர்தி முன்பதிவு. சேருமிடத்தில் சென்றிறங்கியவுடன் நாம் பார்க்குமிடங்கள்தோறும் பொதுப்போக்குவரத்தில் ஏறிச்சென்றே காண வேண்டும். அந்நிலையில் தானிழுனியில் சென்றிருந்தாலேனும் கடலோரம் நிறுத்தியிருக்கலாம். இது எள்விழ இடமில்லா நிலையில் பெருங்கூட்டத்தை இட்டு நிரப்பிக்கொண்டு நகரும் உள்ளூர்ச் சிற்றுந்து, இதில் இடையிடையே இறங்கி எப்படிச் செல்வது ? அதனால் பாலுகந்து கானுயிர்க் காப்பகத்தின் ஓரம் தருநிழல்களின் குளிரைத் துய்த்தவாறே சென்றுகொண்டிருக்கிறோம்.
இடையிடையே வரும் கடலோரத்தின் அலைகளில் நாம் கால்வைக்கவில்லையே தவிர, ஆங்காங்கே நின்று நின்று செல்வதால் கடலழகை முழுமையாகக் கண்டுவிட்டோம். அந்தச் சாலைப் பகுதி கானுயிர்க் காப்பகத்தின் வழியாகச் செல்வதால் இடையிடையே வண்டியை நிறுத்துவதற்குத் தோதான ஒதுக்கிடங்களும் இருக்கவில்லை. ஒடியாவைப் பொறுத்தவரை வண்டிகளை மிதமிஞ்சிய விரைவில் ஓட்டுவதாகவே தெரிகிறது. சாலைகளில் வண்டி நெரிசல் குறைவாக இருப்பதால் அவர்களின் அவ்விரைவு எவ்வொரு கொடுமுட்டுகளையும் ஏற்படுத்துவதில்லை. அந்த வாய்ப்புத்தான் அரதப் பழையதான இச்சிற்றுந்து யாரையும் உரசாமல் எங்கேயும் படுத்தாமல் செல்வதற்கும் உதவுகிறது.
கானுயிர்க் காப்பகத்தைத் தாண்டிய பிறகு கடற்கரையை ஒட்டிச் சிறிது தொலைவு சென்றதும் வடமேற்காகத் திரும்ப வேண்டும். நேராகச் சென்றால் அங்குள்ள பழைய கடற்கரையையும் காணலாம். கடற்கரை என்றதும் சென்னைக் கடற்கரையைப்போல கண்ணுக்கெட்டிய தொலைவு மணற்பரப்பு என்று கருத வேண்டா. கொடிகள் படர்ந்திருக்கும் மணல் திட்டு மட்டும்தான். கடற்கரையிலிருந்து சில மணித்துளிகளில் வண்டி வந்து சேர்கிறது. அவ்விடம் பேருந்து நிலையம் போன்றும் இல்லை, பேருந்து நிறுத்தம் போன்றும் இல்லை. ஒதுக்குப்புறமான மண் மைதானம்போன்று அமைந்த பகுதி. வண்டி அங்கே நின்றதும் எல்லாருமே இறங்கிக்கொள்கிறார்கள். நாம் இறங்க வேண்டிய இடம் என்று நடத்துநராக இருந்த இளைஞர் கண்காட்டினார். வண்டியை விட்டு இறங்கிக்கொண்டோம்.
அங்கிருந்து தளர்வான நடைபோட்டதில் ஒரு கடைத்தெரு வருகிறது. அக்கடைகளில் சூரியக்கோவிலை நினைவூட்டும் கைவினைப்பொருள்கள் விற்கப்படுகின்றன. இளநீர்க் கடைகள் மிகுதியாய் இருந்தன. வரலாற்றின் மாபெரும் நினைவு மீதத்தின் அருகே அதற்குரிய எவ்வொரு முன் தடயத்தையும் காண முடியவில்லை. நாம் நிற்குமிடம், வாழுமிடம், பணியாற்றுமிடம்கூட கோடானு கோடி ஆண்டுகள் பழையவையே. ஆனால், நமக்கும் முன்னே அங்கே என்ன இருந்தது என்றால் ஒன்றுமில்லை. நாம் ஏன் இவ்வளவு தொலைவு ஓரிடத்தைக் காண வருகிறோம் ? ஏனென்றால் அவ்விடத்தில் நமக்கும் முன்னே அங்கே ஞாலத்தின் பெருவள வாழ்வு நிகழ்ந்தது என்பதால்தான்.
- தொடரும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக