சாலையில் சிறிது தொலைவு நடந்து மேற்காகத் திரும்பினால் சூரியக் கோவிலை அடையலாம். நாம் ஆங்கில எழுத்து வடிவம் கூறியதன்படி "கோனார்க்" என்று எழுதவும் சொல்லவும் செய்கிறோம். கலிங்க மக்களின் ஒடிய மொழியில் "கொனாரக்" என்பதுதான் அவ்விடத்தின் பெயராம். கொனாரக் என்பதை ஆங்கிலத்தில் KONARK என்று எழுதுவதால் ஒடியமொழி தெரியாத நம்மைப் போன்றவர்களும் பிறரும் கோனார்க் என்றே படிக்கவும் எழுதவும் தலைப்பட்டுவிடுகிறோம். நமக்குத் தெரிய வந்த பிறகு நாமும் அதே முறையில் அவ்விடத்தைக் கூறிச்செல்லல் தகாது என்று கருதுகிறேன். அதனால் இனிமேற்கொண்டு 'கொனாரக்' என்றே அவ்விடத்தைக் குறிப்பிடுவோமாக. இப்படித்தான் முல்லைப் பேரியாறு என்பதை ஆங்கிலத்தில் PERIYAR என்று எழுதியவாறு தமிழிலும் முல்லைப் பெரியார் என்று எழுதிக்கொண்டிருக்கிறோம்.
கோவிலுக்குச் செல்லும் வழியில் பூங்காக்களைப்போல் பாதுகாக்கப்பட்டும் கைவிடப்பட்டதுமான வெற்று நிலங்கள் இருக்கின்றன. அங்கே வளர்த்துக் காக்கப்படும் மரங்கள் பல நன்னிழல் பொழிகின்றன. மண்தரை மணற்பாங்கானது. மணற்பாங்கான நிலத்தில் பெருங்கோவிலைக் கட்டியெழுப்பியது 'ஒரு வரலாற்று வியப்பு' என்று கொனாரக் சூரியக் கோவிலைப் பற்றிக் குறிப்பிடுகிறார்கள். கொனாரக் சூரியக் கோவிலின் சுற்றுச்சூழல் சிறப்பு வேறெந்தக் கோவிலுக்கும் அமைந்திருக்க வாய்ப்பில்லை. அப்படி ஓர் இயற்கைப் பெருவளம் சூழ்ந்த இடம்.
கடற்கரைக் கோவில் என்னும்போது அது கடலையொட்டியபடி இருக்கின்றதா என்ற கேள்வி எழலாம். நம் திருச்செந்தூர் ஆலயம் அப்படித்தானே இருக்கிறது ? கடலையொட்டி இருக்கும் திருச்செந்தூரில் அலைத்தூறல்கள் கோவில் சுவரை நனைக்கின்றன. மாமல்லபுரக் கடற்கரைக் கோவில் கடல்மணலில் நிற்கின்றது. கொனாரக் கோவிலும் அத்தகைய கடற்கரை மடியில் அலை நீண்டால் தொட்டுவிடும் தொலைவில் அமைந்திருக்கிறதா? இல்லை.
பூரி ஜகந்நாதார் கோவிலாகட்டும், கொனாரக் சூரியக் கோவிலாகட்டும்... கடலிலிருந்து நிச்சயமாக ஒரு கிலோமீட்டர்களுக்கும் மேற்பட்ட தொலைவில் உள்ளடங்கித்தான் இருக்கின்றன. ஆழிப்பேரலை பெருகி வந்தாலும் இக்கோவில்களின் வாயிற்படிகளைத் தொடுவதற்கு வாய்ப்பில்லை. ஆனால், இக்கோவில்கள் அமைக்கப்பட்டிருக்கின்ற நிலப்பாங்கு கடற்கரைத் தன்மையுடையது. நல்ல மரங்கள் வளர்ந்து நிற்கும் அகன்ற கடற்கரையொன்றில் அவை கட்டியெழுப்பப்பட்டிருக்கின்றன. ஜகந்நாதர் கோவில் அடைசலான நகரத்துக்குள் சிக்கிக்கொண்டிருக்கிறது. வரலாற்றுக் கோவிலொன்று இயற்கை எழிலார்ந்த சுற்றுச்சூழல் அமைப்புக்குள் தனிப்பெரும் கற்சிற்பக் கலையகமாகக் காட்சியளிப்பது கொனாரக்கில்தான்.
வழியோரப் புல்வெளியில் சற்றே இளைப்பாறினோம். கடற்காற்றுக்கும் மகிழ மரத்தின் மணிநிழலுக்கும் நம் களைப்புக்கும் ஓர் உடன்பாடு ஏற்பட்டு இமைகள் தாழ்ந்தன. நம்மையறியாமல் சில மணித்துளிகள் கண்ணயர்ந்துவிட்டோம். நண்பகல் வெய்யில் நடுவானைக் கடந்து மேற்கில் சாயத் தொடங்கியிருந்தது. கோவில் வளாகத்தை அடைந்து கொற்றச்சிற்பிகளின் கலைப்பேராட்டத்தைக் காணப்போகிறோம் என்கின்ற எண்ணத்தால் உள்ளம் நெகிழ்ந்தது.
கர்நாடக மாநிலத்தின் ஹளேபீடு, பேலூர் ஆகிய ஊர்களில் உள்ள கோவில்களின் சிற்பங்களைப் பன்முறை சென்று கண்டிருக்கிறேன்தான். அக்கோவில்களில் நம் தென்னிந்திய மரபையொட்டிய செதுக்கங்கள் மிகுதியாய் இருக்கும். ஆனால், கலிங்கம் என்பது முற்றிலும் வேறான நிலம். இந்தியத் துணைக்கண்டத்தின் நெடிய வரலாற்றில் கலிங்கப் பகுதியானது முற்றிலும் மாறுபட்ட பண்பாட்டுக்கூறுகளைக் கொண்டிருக்கிறது. கோவில் அமைப்புகளிலேயே அதன் தனிப்பான்மை சிறப்பாகத் தெரிகிறது. பூரி, புவனேசுவரம், கட்டாக் போன்ற கடலுக்கு அருகிலான நகரங்கள் தோன்றிவிட்டனவே தவிர, மாநிலத்தின் பிற பரப்புகள் கன்னி நிலத்தைப்போன்றே இயற்கையால் கைவிடப்படாத எழிற்பச்சை நிலமாக இருக்கின்றன. கட்டாக் நகரம் மட்டும்தான் மக்கள்தொகைப் பெருக்கத்தின் சுற்றுச்சூழல் சீர்க்கேட்டு விளைவுகளுக்கு இலக்காகி இருக்கின்றது. பூரி நகரமாகட்டும், புவனேசுவரமாகட்டும் காட்டுக்குள் இருக்கும் பெருநகரங்களைப்போன்றே இன்றும் விளங்குகின்றன. நகரங்களுக்கே இயற்கைக்குள் அடங்கிய நிலை என்னும்போது கொனாரக் போன்ற இயற்கையால் மூழ்கடிக்கப்பட்ட ஓரிடத்தில் எழுந்திருக்கும் கோவில் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள்.
- தொடரும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக