Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வியாழன், 29 மார்ச், 2018

ஒன் + ஒன் = ஜீரோ 22

செல்போனின் மறுமுனையில் இருந்த தியோடர் ஒரு மெல்லிய சிரிப்பை வெளியிட்டுக்கு கொண்டே கேட்டார்.
"என்ன மிஸ்டர் விவேக்... பேச்சையே காணோம்?"
"எனக்கு என்ன பேசறதுன்னு தெரியலை ஸார். நொடிக்கு நொடி இந்த வழக்குல காட்சிகள் மாறிட்டேயிருக்கு.... ஜெயவேல் குற்றவாளி இல்லாத பட்சத்துல அவர் ஏன் ஓடணும்....?"
"ஜெயவேல் குற்றவாளிதான் விவேக்"
"என்ன சார் சொல்றீங்க.... வேளச்சேரி ரயில்வே ஸ்டேஷனில் சுடர்கொடியை வெட்டி கொலை செஞ்சவன் ஜெயவேலாய் இருக்க முடியாதுன்னு நீங்கதான் ஸார் சொன்னீங்க?"
"இப்பவும் சொல்றேன் சுடர்கொடியை கொலை பண்ணினவன் அவன் இல்லை."
"பின்னே எப்படி அவன் குற்றவாளி?
"பழங்கால கோயில் சிற்பங்களை திருடற கோஷ்டியை சேர்ந்தவன் இந்த ஜெயவேல். சுடர்கொடி அன்னிக்கு ஸ்டேஷனில் வைத்து கொலை செய்யப்பட்ட போது ஜெயவேல் ஒரு கனமான சூட்கேஸைத் தூக்கிகிட்டு ஸ்டேஷனை விட்டு வெளியே வருகிற காட்சி ஸ்டேஷனுக்கு வெளியே இருக்கிற ஒரு ஹோட்டலின் சி.சி.டி.வி. காமிராவில் பதிவாகியிருந்தது. அந்த சூட்கேஸில் இருந்தது பழங்கால கோயில் சிலைகள். ஜெயவேலோட வீட்டை போலீஸார் சோதனை போட்டபோது அந்த சூட்கேஸ் அவங்க பார்வையில் படப் போய் சந்தேகப்பட்டு சூட்கேஸைத் திறந்து பார்த்ததில் உண்மை வெளியே வந்திருக்கு. எல்லாமே பஞ்ச உலோகச் சிற்பங்கள். சில மாதங்கள் முன்னாடி கும்பகோணத்துக்கு பக்கத்தில் இருக்கும் ஐஸ்வர்யப் பெருமாள் கோயிலில் இருந்து திருடு போன சிலைகள். அவைகளின் மதிப்பு கோடிக்கணக்கான ரூபாய்களில் இருக்கும்ன்னு சி.பி.சி.ஐ.டி. போலீஸார் தெரியப்படுத்தி இருக்காங்க..."
"விவேக் நிம்மதி பெருமூச்சொன்றினை வெளியேற்றிவிட்டு சொன்னான். "எப்படியோ ஜெயவேல் கொலைப்பழியிலிருந்து தப்பிச்சிட்டான்...."
"அதுதான் இல்லை..."
"வாட் டூ யூ மீன் ஸார்... ஜெயவேல் சாமி சிலைகளைத் திருடுகிற பேர்வழின்னு இப்ப கன்ஃபர்ம் ஆயிடுச்சு...?"
"போலிஸுக்கு அதுதான் இப்ப பிளஸ் பாயிண்ட் "
"பிளஸ் பாயிண்டா?"
"போலீஸ் இப்ப ஒரு புதுக்கதையைத் தயார் பண்ணிட்டாங்க. கோயில்களில் இருந்து சாமி சிலைகளைத் திருடி வெளிநாட்டுக்குக் கடத்தற தொழிலில் ஜெயவேல், சுடர்கொடி, திலீபன் மூணு பேருமே பார்ட்னர்ஸ். சிலைகளை விற்று வந்த பணத்தில் பங்கு போட்டுக் கொள்கிற விஷயத்தில் மூணு பேருக்கும் இடையில் கருத்து வேறுபாடு இருந்தது. அது கொஞ்சம் கொஞ்சமாய் வளர்ந்து பகையாய் மாறி ஜெயவேல், சுடர்கொடியையும் திலீபனையும் போட்டுத் தள்ளிட்டான். கொலைகளுக்கான மோட்டீவும் இப்போ கிடைச்சுட்டதால அந்தப் பக்க போலீஸ் தரப்பு உற்சாகத்துல இருக்காங்க. எல்லாவற்றுக்கும் மேலாய் ஜெயவேலை 'பார்த்த இடத்திலேயே சுட்டுத் தள்ளும்' உத்தரவும் கைவசம் இருக்கறதால இந்த கேஸுக்கு சீக்கிரமே மூடுவிழா நடத்தப்பட்டுவிடும் விவேக்....!"
"அப்படீன்னா... உண்மையான குற்றவாளி?"
"அடுத்த ஜென்மம்ன்னு ஒண்ணு இருந்தா அந்த ஜென்மத்துல அவனுக்குத் தண்டனை கிடைக்கும்...!"
"ஸார்... யாரைக் காப்பாத்தறதுக்காக இதெல்லாம்?"
"யார்க்குத் தெரியும்....?"
"டி.ஜி.பி. க்குத் தெரியாதா?"
"சர்வ நிச்சயமாய் அவருக்குத் தெரியாது விவேக். அந்த பவர்ஃபுல் ஆசாமி நிச்சயமாய் தமிழ் நாட்டில் இல்லை. மும்பையில்தான் இருக்கணும். அதுவும் இந்திய அளவில் அரசியல் ரீதியாய் ஒரு சக்தி வாய்ந்த மனிதராய் இருக்க வாய்ப்பு அதிகம்...!"
"ஸார் சட்டத்துக்கு முன்னாடி எல்லாரும் சமம்"
"அது முன்னொரு காலத்துல...," தியோடர் சிரித்து விட்டு பேச்சை தொடர்ந்தார்.
"விவேக், நீங்க இப்போ வளையோசை பத்திரிக்கை ஆசிரியர் மீனலோசினியைப் பார்க்கத்தானே போயிட்டிருக்கிங்க?"
"ஆமா.... ஸார்.... "
"அங்கே போய் மீனலோசினியை விசாரிச்சா எது மாதிரியான உண்மைகள் கிடைக்கும்ன்னு நினைக்கறீங்க?"
"ஜெபமாலை சொன்ன அந்த மூணு வார்த்தைகளுக்கும் என்ன அர்த்தம் என்கிற விபரம் மீனலோசினிக்கு தெரிஞ்சிருக்கலாம் ஸார். அட்லீஸ்ட் ஒரு வார்த்தைக்கு அர்த்தம் தெரிஞ்சா கூட போதும் குற்றவாளிக்கும் நமக்கும் இருக்கிற தூரத்தில் பாதி குறைஞ்சிடும்!"
"எனக்கு நம்பிக்கையில்லை மிஸ்டர் விவேக். பட் எனிவே விஷ் யூ ஆல் த பெஸ்ட்.... ஜெயவேலை பார்த்த இடத்திலேயே ஷூட் பண்றதுக்கு நாலு போலீஸ் தனிப்படை போர்க்கால அடிப்படையில் இயங்கிட்டு இருக்கு... எந்த நிமிஷமும் நான் உங்களுக்கு போன் பண்ணி ஒரு மோசமான விஷயத்தை சொல்ல நேரலாம்."
"அதுக்கு அவசியம் இருக்காது ஸார். நீங்க மோசமான விஷயத்தைச் சொல்றதுக்கு முந்தி நான் உங்களுக்கு ஒரு நல்ல விஷயத்தைச் சொல்லிடுவேன்....!"
"அயாம் வெயிட்டிங் ஃபார் தட் மொமன்ட்" தியோடர் செல்போனை அணைத்துவிட, விவேக் தன்னுடைய செல்போனை மௌனமாக்கிவிட்டு காரை நகர்த்தினான்.
காரின் வேகம் படிப்படியாய் அதிகரித்தது. சாலையின் இரண்டு பக்க மரங்களும் விருட் விருட்டென்று பின்னோக்கிப் போயிற்று.
விஷ்ணு மிரண்டான்.
"என்ன பாஸ்... ஏதோ 'கிராண்ட் ப்ரிக்ஸ்' கார் ரேஸ் டிராக்கில் ஓட்டற மாதிரி நம்ம ஸ்விப்ட்டை பறக்க விடறீங்க?"
"விஷ்ணு...!"
"எனக்குத் தெரியும் பாஸ்.... இனிமே நமக்கு ஒவ்வொரு நிமிஷமும் முக்கியம்னு சொல்லப் போறீங்க..."
"இல்லை"
"பின்னே?"
"ஒவ்வொரு வினாடியும் முக்கியம்"
............................................
வளையோசை பத்திரிக்கை அலுவலகம்.
இரண்டு டன் ஸ்பிலிட் ஏஸி அந்த அறையை சிம்லாவாய் மாற்றியிருக்க, மீனலோசினிக்கு எதிரே விவேக்கும் விஷ்ணுவும் நேர்கோடுகளாய் நிமிர்ந்து உட்கார்ந்திருந்தார்கள்.
மீனலோசனி மூன்றாவது தடவையாய் அந்தக் கேள்வியைக் கேட்டாள். "ஜெபமாலை மயக்கத்துக்கு போறதுக்கு முன்னாடி உங்ககிட்டே திணறி திணறிச் சொன்ன அந்த மூணு வார்த்தைகள் என்ன.... கொஞ்சம் நிறுத்தி நிதானமாய் சொல்லுங்க."
விஷ்ணு தன் கையில் இருந்த துண்டுச் சீட்டை நீட்டினான்.
"நீங்க ரெண்டாவது தடவை கேட்கும் போதே மறுபடியும் ஒரு தடவை எப்படியும் கேட்பீங்கன்னு நினைச்சு ஒரு துண்டு பேப்பர்ல அந்த மூணு வார்த்தைகளையும் எழுதிட்டேன் மேடம்... இந்தாங்க....!"
மீனலோசனி லேசான முறைப்போடு விஷ்ணுவை முறைத்துக் கொண்டே அந்தத் துண்டுச் சீட்டை வாங்கினான். வெள்ளி பிரேமிட்ட ஸ்பெக்சை லேசாய் சரிப்படுத்தியபடி அந்த மூன்று வார்த்தைகளையும் வாய்விட்டுப் படித்தாள்.
"குர் நோக்கம், ஜெ.சி.ஹச், ஹாசீர்வதம்"
விவேக் கேட்டான். "இந்த வார்த்தைகளைப் படிக்கும் போது உங்களுக்கு ஏதாவது பொறி தட்டுதா மேடம்?"
"ஸாரி அப்படியொண்ணும் தெரியலையே?"
விஷ்ணு குறுக்கிட்டான்.
"கொஞ்சம் யோசனை பண்ணி சொல்லுங்க மேடம். ஒண்ணும் ஒண்ணும் எவ்வளவுன்னு கேட்டா ரெண்டுன்னு சுலபமாய் பதில் சொல்ற மாதிரி சட்டுன்னு தெரியாதுன்னு சொல்றீங்க?"
"தெரிஞ்சாதானே சொல்ல முடியும்....?" லேசாய் சிடுசிடுத்த மீனலோசனியை ஒரு சின்னப் புன்னகையோடு பார்த்து கையமர்த்தினான் விவேக்.
"இதோ பாருங்க மேடம்.... சுடர்க்கொடி உங்க வலையோசைப் பத்திரிகைக்காக வேலை பார்த்த பெண். ஒரு கல்யாணத்தைப் பண்ணிக்கிட்டு கணவனோடு சந்தோஷமாய் வாழ வேண்டிய அவளை கொடூரமாய் அரிவாளாலே வெட்டி ரத்த வெள்ளத்துல எவனோ ஒருத்தன் சாய்ச்சிருக்கான். அவனை யாருன்னு கண்டு பிடிச்சு சட்டத்துக்கு முன்னாடி நிறுத்தி தூக்குல தொங்க விட வேண்டாமா....?"
"கண்டிப்பா...."
"அப்படீன்னா எங்களுக்கு முழுமையான ஒத்துழைப்பைக் கொடுங்க.... நாங்க கேட்கிற கேள்விகளுக்கு யோசிச்சு பதில் சொல்லுங்க. நீங்க சொல்லப் போகிற ஏதாவது ஒரு பதிலில்தான் நாங்க தேடிட்டு இருக்கிற உண்மைகள் ஒளிஞ்சிட்டிருக்கும்....!"
"உங்களுக்கே தெரியாத அந்த மூணு வார்த்தைகளைப் பற்றி என்கிட்டே கேட்டா எனக்கெப்படி தெரியும் ஸார்?"
"நீங்க தெரிஞ்சுக்க ஆர்வம் காட்டலை மேடம்"
"எப்படி சொல்றீங்க...?"
"அந்த மூணு வார்த்தைகள் என்னென்று ஒருதடவை படிங்க மேடம்."
மீனலோசனி மறுபடியும் தன கையில் வைத்து இருந்த பேப்பர் துண்டைப் பார்த்துவிட்டு மெல்லிய குரலில் படித்தாள்.
"குர் நோக்கம், ஜேசிஹச், ஹாசீர்வதம்"
"இப்ப நீங்க சொன்ன மூன்று வார்த்தைகளில் முதல் வார்த்தையான 'குர் நோக்க'த்துக்கு இந்த அறையிலேயே பதில் இருக்கு... மேடம்."
மீனலோசனி அதிர்ந்து போனவளாய் விவேக்கை மெல்ல ஏறிட்டாள். "வாட் டூ யூ மீன்.... இந்த அறையிலேயே பதில் இருக்கா?"
"எஸ்"
"எங்கே?"
"கொஞ்சம் பின்னாடி திரும்பிப் பாருங்க"
மீனலோசனி கலவர விழிகளோடு திரும்பிப் பார்த்தாள்.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக