Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

புதன், 19 பிப்ரவரி, 2020

நாங்களும் நல்லவர்களே..!

Image result for நாங்களும் நல்லவர்களே..!


ரு காட்டில் நரிகளும் மற்ற விலங்குகளும் வாழ்ந்து கொண்டிருந்தன. அந்த காட்டில் நரிகள் என்றாலே ஏமாற்றுப் பேர்வழிகள் என்று பெயர் பெற்றிருந்தன. அதனால் அந்தக் காட்டுக்குள் இருக்கும் நரிகளை எல்லா விலங்குகளும் அடித்து விரட்டின. அதனால் நரிகள் அந்தக் காட்டை விட்டு வெளியேறி அடுத்த காட்டிற்குச் சென்றுவிட்டன.

இரண்டு தலைமுறைகள் கடந்துவிட்டது. மூன்றாவது தலைமுறையில் பரதன் என்ற இளம் நரி இருந்தது. அந்த நரி அவமானத்தை துடைத்து திரும்பவும் சொந்த காட்டில் நாம் வாழ வேண்டும். நம் இனத்தையும் சொந்த காட்டிற்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்று எண்ணியது.

அதற்காக பழைய காட்டிற்கு சென்றது. பரதனைக் கண்ட வயதான விலங்குகள் நரியை அடையாளம் கண்டு கொண்டு, இவன் இங்கு எதற்கு வந்தான் என்று முறைத்து பார்த்தனர். அவனிடம் யாரும் பேச வேண்டாம்! என்று இளைய தலைமுறைக்கு உத்தரவிட்டன.

எங்கள் இனத்தை சகுனி குணம் படைத்தவர்கள், கூட இருந்தே குழி பறிப்பவர்கள். தந்திரசாலிகள் என்று யாரோ கட்டிவிட்ட கதையை நம்பாதீர்கள். நாங்கள் மட்டும்தான் கெட்டவர்களா? மலர்களில் எல்லாமே மணமிக்கதா? மணமற்றவையும் கலந்துதான் உள்ளன. எங்களிலும் நல்லவர் இருக்கிறோம் என்று வாதம் செய்து விலங்குகளிடம் நியாயம் கேட்டது.

ஆனால் எல்லா விலங்குகளும் அதை ஏற்பதாக இல்லை. நீ இங்கிருந்து ஓடிப் போய்விடு! என்று மற்ற விலங்குகள் பரதன் நரியை விரட்டின. மனம் உடைந்த நரி, மலை மீதேறி கீழே விழுந்து உயிரை விட்டுவிட முடிவெடுத்தது.

அப்போது அங்கிருந்த குயில், நரி அண்ணே உங்கள் இனத்தின் அவப்பெயரை துடைக்க தானே புறப்பட்டு வந்தீர்கள்? ஒரு லட்சியத்தை சுலபமாக அடைய முடியாது. விலங்குகள் போற்றும்படி செய்து அவைகளின் நம்பிக்கையைப் பெற்றால் உங்கள் குறிக்கோள் வெற்றி பெறும். முதலில் முயற்சி செய்யுங்கள்! என்று கூறியது.

இதைக் கேட்ட நரி, நீ கூறுவதும் சரிதான் என்று கூறி தன் தற்கொலை முடிவை கைவிட்டு, புத்திசாலித்தனமாக செயல்பட முடிவெடுத்தது. இதற்காக வேடர்கள் வலை விரித்திருப்பதை முன்பே அறிந்து, அதை பறவைகளிடம் கூறி நன்மதிப்பைப் பெற்றது நரி. அதேபோல காலுடைந்த முயலை பத்திரமாக அதன் இருப்பிடத்திற்கு அழைத்து வந்து விட்டது. ஒரு மரத்தில் இருந்து தவறி விழுந்த குருவி குஞ்சை, அதன் கூட்டில் எடுத்து வைத்தது. இதைக் கண்ட தாய்ப்பறவை நரியை வாழ்த்தியது.

இதுபோல சின்னச் சின்ன உதவிகளை செய்து நரி கொஞ்சம் கொஞ்சமாக நற்பெயர் பெற்று வந்தது. ஒரு நாள் வேட்டைக்காரர்கள், பெரிய பள்ளம் வெட்டி இலை தழைகளால் மூடி வைப்பதை நரி பார்த்தது. அந்தப் பக்கமாக வந்த யானைக் கூட்டத்தை எச்சரிக்கை செய்து யானைகளை காப்பாற்றியது.

யானைக்கூட்டம் காட்டுக்கு ராஜாவான சிங்கத்திடம் நரி செய்த உதவியை சொல்லின. அதேபோல முயல், புறாக்கள் என அனைத்து பறவைகளும் தங்களுக்கு நரி செய்த நன்மையைக் கூறினர். இதைக்கேட்ட சிங்கராஜா, நரிகளை தங்கள் காட்டில் சேர்த்துக் கொள்வதாக முடிவெடுத்தது. இதைக் கேட்டதும் பரதன் சந்தோஷமாக தங்கள் வசிப்பிடத்திற்குச் சென்று, மற்ற நரிக்கூட்டங்களை அழைத்து வந்து தனது சொந்தகாட்டில் மகிழ்ச்சியாக வாழத் தொடங்கியது.

தத்துவம் :

உலகில் நல்லவர்களும் இருக்கிறார்கள், கெட்டவர்களும் இருக்கிறார்கள். ஒட்டுமொத்தமாக அனைவரையும் தீயவர்கள் என்று நினைக்கக்கூடாது. அது நாம் செய்யும் பெரும் தவறாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக