கலிங்கம் காண்போம் - பயணத் தொடர்: பகுதி 33
நுழைவுச் சீட்டினைக் கொடுத்துவிட்டு உள்ளே நுழைந்தோம். இப்போது நாம் இருப்பது கொனாரக் சூரியக் கோவிலின் தலைவாயில் பகுதி. உள்ளே இரண்டு கால்பந்து மைதானத்தளவு பெரிதான வளாகத்தின் நடுவில் தேர்போன்ற அமைப்பில் சூரியக் கோவில் அமைந்திருக்கிறது. நம் கோவில்கள் முன்மண்பட அமைப்பும் கருவறையும் கொண்டவை. ஆனால், கொனாரக் கோவிலானது மாபெரும் கற்றேர் வடிவில் கட்டப்பட்டிருக்கிறது.
கொனாரக் கோவிலின் இடிபாடுகள் பற்றிய படங்கள் கிடைக்கின்றன. அவற்றைப் பார்க்கையில்தான் இக்கோவில் எத்தகைய கொடுங்காலத்தைக் கடந்து மீந்திருக்கிறது என்பது விளங்கும். இயற்கைப் பேரழிவோ கொடிய படையெடுப்புகளோ இக்கோவிலைப் பாழ்படுத்தியிருக்கலாம். நாம் இப்போது காணப்போவது அத்தகைய எல்லாப் பாழடைவுகளும் போக மிஞ்சியிருக்கும் ஒரு கோவிலைத்தான். ஆங்கிலேயர் ஆட்சியின் தொல்லாய்வுத்துறை முயற்சியிலிருந்து இன்றுவரை மேற்கொள்ளப்பட்ட சீரமைப்புகளே கோவிலின் இன்றைய இருப்புக்குக் காரணங்கள்.
தன் பொற்காலத்தில் கொண்டாட்டங்களோடும் வழிபாட்டுச் செம்மையோடும் விளங்கிய தலம்... ஆயிரக்கணக்கான அடியவர்கள் வந்து வணங்குமிடமாகத் தன் செழிப்பின் கொடுமுடியில் இருந்த கொனாரக் சூரியக் கோவில்... எப்படி நடுக்காலத்தில் பெரும் பாழடைவாக மாறியது? இடையில் நேர்ந்தது என்ன ? ஆயிரக்கணக்கான ஆண்டுகளாய் எத்தனையோ கோவில்கள் ஏதேனும் சிறிய குழுவினரால் வழிபடப்பட்டிருக்கையில்... இவ்வளவு பெரிய கோவிலொன்று வௌவால்கள் பறக்கும் கற்சிதைவாய் மாறியது எப்படி ? அதற்கான காரணங்களைத் தேடினால் பல்வேறு கணிப்புகளும் அரைகுறைச் சான்றுகளும் வரலாற்றறிஞர்களைத் தொடர்ந்து குழப்புகின்றன.
முதற்கண் இக்கோவில் முழுமையாகக் கட்டி முடிக்கப்படவேயில்லை என்பது ஒரு தரப்பினர் கருத்து. இக்கோவிலைக் கட்டத் தொடங்கிய அரசர் நரசிங்கதேவர் இடையிலேயே இறந்துவிட்டதால் கோவில் பணிகள் தடைபட்டு நின்றன என்கிறார்கள். ஆனால், பூரி ஜகந்நாதர் ஆலயத்தின் பதிவேடுகளின்படி நரசிங்கதேவரின் ஆட்சிக்காலம் கிபி 1282ஆம் ஆண்டு வரை நீடித்திருந்ததாகத் தெரிகிறது. எப்படிப் பார்த்தாலும் கிபி 1253 முதல் கிபி 1260ஆம் ஆண்டுக்குள் கொனாரக் சூரியக் கோவிலின் கட்டுமானப் பணிகள் முடிவுற்றிருக்கின்றன. ஆகவே, இந்தக் கோவிலானது முழுமையற்ற கட்டுமானமாய் எஞ்சியது என்ற முடிவுக்கு வருவதற்கு வாய்ப்பே இல்லை. அதனால் கோவிலின் அரைகுறைக் கட்டுமானம் என்ற கருத்து பெரும்பாலோரால் தவிர்க்கப்படுகிறது.
கோவிலுக்குள் நிகழ்ந்த தற்கொலை ஒன்று கோவிலின் புனிதத்தைக் கெடுத்துவிட்டதால் கோவில் கைவிடப்பட்டது என்று சிலர் கூறுகின்றனர். அந்தத் தற்கொலை நிகழ்வின்பின் கோவிலின் நலங்கெட்டுக் கெட்டவற்றின் இருப்பிடமாக மாறியதாகக் கருதியிருக்கின்றனர். கோவில் பக்கமே யாரும் வருவதற்கு அஞ்சி ஒதுங்கியதால் இன்றைய சிதைவு ஏற்பட்டிருக்கலாம் என்பதும் சிலருடைய கருத்து.
ஒடியமொழியின் பெருங்கவிஞர் இராதாநாதராயர் எழுதிய 'சந்திரபாகை' என்னும் காவியத்தில் ஒரு காரணம் சொல்லப்படுகிறது. சுமன்யு முனிவர் என்பவரின் மகள் சந்திரபாகையின் திருமணத்தின்போது சூரியதேவன் முறை தவறி நடந்துகொண்டானாம். அதனால் கடுஞ்சினங்கொண்ட முனிவர் அழிமொழி (சாபம்) கூறிவிட்டுத் தற்கொலை செய்துகொண்டாராம். அன்றிலிருந்து சூரியக்கோவிலின் பொலிவு குன்றிற்று என்று அந்தக் காவியம் கூறுகிறது. ஆனால், ஒரு கற்பனைக் கதையில் கூறப்படும் காரணத்தை வரலாற்றோடு தொடர்புபடுத்துவது இயலாதது.
இவை மட்டுமில்லை, இன்னும் பற்பல காரணங்கள் கொனாரக் கோவிலின் சிதைவுக்குக் கூறப்படுகின்றன. அவற்றின் உண்மைத் தன்மையை ஆராய்ந்து ஆராய்ந்து ஆய்வறிஞர்கள் சோர்ந்துவிட்டனர். ஆனால், அவற்றின் உள்ளடுக்குகளில் உள்ள புனைவும் "அப்படியும் இருந்திருக்கலாமோ..." என்னும் வாய்ப்பும் கேட்போரின் நெஞ்சங்களைப் பதைபதைக்கச் செய்கின்றன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக