கலிங்கம் காண்போம் - பகுதி 45 - பரவசமூட்டும் பயணத்தொடர்
பார்த்தவுடனேயே எனக்குப் பிடித்துப் போன நகரங்களில் புவனேசுவரத்தை முதலிடத்தில் வைப்பேன். தமிழகத்திற்கு வெளியேயுள்ள நகரங்களில் மைசூரு எனக்கு நிரம்பப் பிடித்திருந்தது. விளக்குகள் அனைத்தும் ஒளிரும் இருள்தொடங்கும் மாலையில் மைசூரு நகரத்தின் அகல்தெருக்களில் நடந்தால் ஓர் ஐரோப்பிய நகரத்தில் இருக்கும் மயக்கத்தை அடையலாம். எங்கெங்கும் உயர்தருக்கள், வரலாற்றுத் தொன்மைமிக்க கட்டடங்கள், வளமனைகள், நீர்த்தடங்கள் என்று மைசூருக்கு வாய்த்த சிறப்புகள் பல. இப்பயணத்தில் கண்ட விசாகப்பட்டினமும் எனக்குப் பிடித்துப்போன நகரம்தான்.
புவனேசுவரத்தைக் கண்டதும் இவை அனைத்தையும் விஞ்சிய ஈர்ப்பினை அடைந்தேன். ஏன் ? புதிய புவனேசுவரமானது சண்டிகர் நகரத்தைப்போன்று முழுமையாகத் திட்டமிட்டுக் கட்டப்பட்டது. அங்கிருந்த இரண்டு மூன்று நாள்களும் புவனேசுவரத்தில் நான் பார்த்தவை பட்டவை யாவும் அந்நகரைப்பற்றிய மதிப்பை உயர்த்தியபடியே இருந்தன. கண்காணாத தொலைவிற்குப்போய் யாருமறியாதபடி வாழ்ந்து மறையவேண்டும் என்றால் என் தேர்வு புவனேசுவரமாகத்தான் இருக்கும்.
புவனேசுவரத்தில் யாரும் மிகுதியாகப் பேசுவதில்லை. ஒருவர்க்கொருவர் தேவைக்கு மீறிய எச்சொற்களையும் பயன்படுத்துவதில்லை. வாயே திறப்பதில்லை. அங்கே இருவர்க்கிடையே சண்டையே வராது. தானிழுனி ஓட்டுநர்கள் “மவனே சொல்லிட்டு வந்துட்டியா ?” என்று வைவதும் இல்லை. வியப்பாக இருக்கிறதா ? எனக்கும் வியப்பாகத்தான் இருந்தது. ஏனென்றால் அங்குள்ள ஒவ்வொருவரும் வாய்நிறைய புகையிலைப் பாக்கு போட்டு அதக்கிக்கொண்டிருந்தார்கள். வாய்நிறைய ஊறிய எச்சிலை அடக்குவதற்காக உதட்டை இறுக்கியபடியே இருப்பதால் அவர்கள் பேசிக்கொள்வதற்கு வழியே இல்லை. ஒருவர்க்கொருவர் வாக்குவாதம் செய்தால்தானே சண்டை தோன்றும் ? பேசாத இருவர்க்கிடையே எந்தச் சண்டை சச்சரவுக்கும் வழியில்லையே.
பிகாரியும் உத்தரப்பிரதேசத்தவனுமே பாக்கு மென்று துப்புகிறார்கள் என்று நினைத்துக்கொண்டிருக்கிறோம். ஒடியர்கள் இதில் தலைமைப் பட்டத்தை வெல்லுவார்கள். ஒருவர் விடாமல் எல்லாருமே பாக்கு மெல்லிகளாக இருக்கிறார்கள். வாயூறிய எச்சிலால் வாயுதிர்க்கும் வார்த்தைகளை மறந்து கண்சாடையாலும் கைச்சைகையாலும் பேசிக்கொண்டிருந்தார்கள். சிற்றுந்து நடத்துநர்கூட வாயடக்கிய எச்சிலால் “ம்ம்ம்?” என்றுதான் செல்லுமிடத்தை வினவுகிறார். தமிழகத்தின் மதுப்பெருக்கம் மக்கள் நலத்திற்கு விடுத்திருக்கும் அச்சுறுத்தலைப்போல் ஒடியர்களின் பாக்குப் பழக்கம் அவர்களுக்குப் பெரும் நலக்கேடாக மாறியிருக்கிறது. அதை யாரும் உணர்ந்ததைப்போல் தெரியவில்லை.
புவனேசுவரத்தை நாமடைந்தபோது குளிர்காலம். அதனால் அங்கே இதமான குளிர் நிலவியது. கடற்கரையிலிருந்து அறுபது கிலோமீட்டர்கள் உள்ளிருக்கும் நகரம். சுற்றிலும் காப்பிடப்பட்ட கானகங்களும் கானுயிர் வாழ்விடங்களும் இருக்கின்றன. மாலையில் அந்நகரத்தில் உலவும் மக்கள் வியர்ப்புடை (ஸ்வெட்டர்) அணிந்து திரிகின்றனர். சாலைகளில் போக்குவரத்து நெரிசல் பெரிதாக இல்லை. தானிழுனியர் அடுத்த நிறுத்தத்திற்குப் பத்து உரூபாய்க்கு வருகின்றனர். பன்னெடுங்காலமாக பழங்குடிகளின் வாழ்வுமுறை மாறாத மாநிலம். இயற்கையோடு ஒன்றியவர்களாய் வாழும் மக்களின் தனித்த உலகம். புவனேசுவரம்தான் ஒடியத்தின் தனிப்பெரும் நகரம். பூரியும் கொனாரக்கும் புவனேசுவரமும் கோவில்களுக்காகப் புகழ்பெற்ற தங்க முக்கோணத் தலங்கள். இன்று வரைக்கும் கோவில்களை வணங்குவதற்காக வருகை தரும் சுற்றுலாப் பயணிகளையே அந்நகரின் பொருளாதாரம் நம்பியிருக்கிறது. தமிழ்நாட்டு நகரங்களைப்போல் வீக்கமில்லாத இயல்பான வளர்ச்சியை அடைந்த நகரமாகத் தெரிகிறது.
ஒடியாவிலிருந்து எண்ணற்ற தொழிலாளர்கள் தமிழகத் தொழிற்சாலைகளில் பணியாற்றுகின்றனர். நாளொன்றுக்கு எண்பது உரூபாய்தான் அங்கே நாட்கூலியாக இருக்கிறதாம். அத்தகைய நிலையில் திருப்பூர் போன்ற ஊர்களில் நாட்கூலியாக முந்நூறோ ஐந்நூறோ ஈட்டுவது அவர்களுக்குப் பெருந்தொகைதான். நம் நாட்டில் மிகக் குறைவான வாழ்க்கைச் செலவுகளைக் கோரும் நகரம் புவனேசுவரம் என்று நினைக்கிறேன். முப்பது உரூபாய்க்குத் தரப்படும் மசால் தோசை வயிற்றை நிறைத்துவிடுகிறது. காய்கறிகளும் நெல்லும் பெருவாரியாக விளையும் ஆற்றுமுகப்பகுதி என்பதால் அவை கொள்ளை மலிவாகக் கிடைக்கக்கூடும். வேண்டியதை விரும்பியுண்டாலும் ஐம்பதுக்கு மிகாத விலையில் நிறைவான நல்லுணவு கிடைக்கிறது.
- தொடரும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக