கலிங்கம் காண்போம் - பகுதி 46 - பரவசமூட்டும் பயணத்தொடர்
நாட்டின் தொன்மையான நகரங்களில் ஒன்றான புவனேசுவரத்திற்கு இரண்டாயிரத்து முந்நூற்றாண்டு வரலாறு இருக்கிறது. புவனேசுவரத்திலிருந்து எட்டுக் கிலோமீட்டர்கள் தொலைவில் உள்ள தௌலி என்ற இடத்திற்கருகேதான் மாமன்னர் அசோகரின் மனமாற்றத்திற்குக் காரணமான 'கலிங்கப்போர்' நடந்தது. தௌலியில் உள்ள புத்தவிகாரையும் கல்வெட்டுகளும் சிம்மத்தூண்களும் அந்நிகழ்வின் வரலாற்று எச்சங்களாக இன்றும் காப்பிடப்பட்டிருக்கின்றன. வரலாற்றுக் கணக்குப்படி இம்மண்ணில் நிகழ்ந்த பெரும்போர் புவனேசுவரத்திற்கு அருகில் நடந்தது என்கையில் அங்கே அதற்கும் முன்பாக நிலைத்திருந்த பேரரசுகள் எத்தனை எத்தனையோ ! அவை காலத்தின் இருள்வெளிக்குள் சுவடின்றிப் புதைந்துபோய்விட்டன.
அசோகரைப் பற்றிய வரலாற்றுச் சான்றுகள் புவனேசுவரத்தின் வரலாற்றுப் பதிவுகளைத் தொடங்கி வைக்கின்றன. மூவுலகின் தலைவன் என்னும் பொருள்படும் "திரிபுவன ஈஸ்வரம்" என்ற பெயரிலிருந்தே புவனேசுவரம் என்னும் ஊர்ப்பெயர் பெறப்பட்டது. ஊரில் கோவில்கொண்டிருக்கும் இலிங்கராஜனும் ஈசுவரனே. அசோகரின் காலம் கிமு. 272 முதல் கிமு 236 வரை. மௌரியப் பேரரசை விரிவாக்கும் பொருட்டு அசோகர் படையெடுத்த காலம் ஆட்சிக்கு வந்த முதற்பத்தாண்டுகளுக்குள்ளாக இருக்க வேண்டும். அதன்படி கிமு 261-262 ஆண்டுகளில் கலிங்கப்போர் நடந்திருக்க வேண்டும்.
போர்க்களத்தின் குருதியாற்றுக்குப் பெருக்குக்கு அஞ்சாத பெருவீரனாகிய ஒரு மாமன்னன் கலிங்க மண்ணில் பெருக்கெடுத்து ஓடிய செந்நீர்க்குச் சிந்தை கலங்கி அன்புவழிக்குத் திரும்பி இந்நாட்டையே பௌத்தத்தின்பால் திருப்பினான் என்றால் அப்பெருநிகழ்வின் பெற்றியை என்னென்று உரைப்பது ? அவ்விடத்தில் உலவக் கிடைத்த இந்நல்வாய்ப்பினை நான் எப்படிக் கூறி ஆறுவேன் ? அந்த ஆற்றாமைதான் கலிங்கத்தைப் பற்றி தளர்வில்லாது எடுத்துக் கூறிவிட வேண்டும் என்று என்னை இயக்குகிறது.
அசோகரின் காலத்திற்குப் பிறகு மௌரியர்கள் வலுவிழக்கத் தொடங்கினர். மௌரியர்களுக்குப் பிறகு கலிங்கத்தை ஆண்டவர்கள் மகாமேகவாகனப் பேரரசர்கள். அவர்களில் காரவேலன் என்பவன் புகழ்பெற்ற மன்னன். அந்தக் காரவேலன் எழுதி வைத்த பதினெட்டு வரிகளாலான கல்வெட்டினைக் கண்டதுதான் கலிங்கப் பயணத்தில் நானடைந்த தனிப்பெரும்பேறு என்று சொல்ல வேண்டும். உதயகிரிக் குகைத்தொகுதியில் ஹாத்திகும்பாக் குகையின் நெற்றியில் எழுதப்பட்டுள்ள அக்கல்வெட்டினைக் கண்ட அருநிகழ்வைப் பிற்பாடு கூறுவேன்.
காரவேலனின் ஆட்சிக்குப் பின்னர் கலிங்கத்தினைக் கைப்பற்றியவர்கள் சாதவாகனர்கள். பிற்பாடு குப்தர்களின் ஆட்சி. அதன்பிறகு ஆண்டவர்கள் ஒடியக் கேசரிகள். அவர்களை அடுத்து கிழக்குச் சோடகங்கர்கள். புவனேசுவரத்தை ஒட்டிய பகுதிகளில் கட்டப்பட்ட கோவில்கள் அனைத்தும் எட்டாம் நூற்றாண்டிலிருந்து பன்னிரண்டாம் நூற்றாண்டுகளுக்குள் கட்டப்பட்டவை. வங்காளத்தின்மீது மொகலாயர்களின் செல்வாக்கு நிலவியபோது கலிங்கத்தையும் அவர்கள் கைக்கொண்டனர். கிபி 1568ஆம் ஆண்டுவரை வேற்றுப் பகுதியினரால் கைப்பற்றப்படாமல் தனிப்பெரும் நன்னிலமாக விளங்கிய கலிங்கம் மொகலாயர்களின் ஆட்சியில் மட்டும் சின்னாபின்னப்பட்டது. அவர்களை விரட்டியடித்த மராத்தியர்கள் மீண்டும் ஒடியக் கோவில்களில் செல்வாக்கை மீட்டெடுத்தனர்.
கிபி 1803ஆம் ஆண்டுக்குப் பிறகு கலிங்கத்தின் முழுக்கட்டுப்பாடு ஆங்கிலேயர்களிடத்தில் வந்துவிட்டது. ஆங்கிலேயர்களின் ஆட்சிக்காலத்தில் கலிங்கப் பகுதியானது வங்காள மாகாணத்தின் ஒரு மண்டலமாக ஆளப்பட்டது. கலிங்கத்தின் ஆட்சித் தலைநகரமாக மகாநதிக்கரைத் தீவு நகரமான கட்டாக் நகரமே இயங்கியது. அப்போது புவனேசுவரமானது கோவில்கள் மிக்கிருந்த பழைமையான நகரமாக அமைதியாக விளங்கியது. மகாநதி வெள்ளப்பெருக்குக்குப் புகழ்பெற்ற பேராறு. அவ்வெள்ளமானது கட்டாக் நகரைச் சூழ்ந்துகொண்டு வெளிப்போக்குவரத்தைத் துண்டித்தது. அப்பேரிடரிலிருந்து தப்பிக்க ஆட்சித் தலைமையகத்தைக் கட்டாக்கிலிருந்து வெளியே கொண்டு செல்ல வேண்டிய கட்டாயம் ஆங்கிலேயர்களுக்கு ஏற்பட்டது. அதன்படி அமைக்கப்பட்டதுதான் இன்றைய புதிய புவனேசுவரம். ஜாம்செட்பூர், சண்டிகர்க்கு அடுத்தபடியாக முறையாகத் திட்டமிட்டு கட்டப்பட்ட நகரங்களில் ஒன்று புவனேசுவரம். கோவில்கள் அடர்ந்த பழைய புவனேசுவரத்தை அடுத்து புதிதாய் அமைக்கப்பட்ட நகரம். இன்றுள்ள புவனேசுவரத்தை வடிவமைத்தவர் ஓட்டோ கோனிக்ஸ்பெர்கர் என்னும் செருமானியர். புவனேசுவரம் ஓர் ஐரோப்பிய நகரத்தின் அழகோடு விளங்குவது ஏனென்று இப்போது தெரிகிறது.
- தொடரும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக