Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

செவ்வாய், 29 மே, 2018

கலிங்கம் காண்போம் - பகுதி 52 - பரவசமூட்டும் பயணத்தொடர்

கலிங்கம் காண்போம் - பகுதி 52 - பரவசமூட்டும் பயணத்தொடர்


இராணி கும்பாக் குகைகளின் அமைப்பு ப வடிவத்தில் இருக்கிறது. நடுவிலுள்ள பகுதிதான் பெரியது. வலப்புறமும் இடப்புறமும் இரண்டு கைகளைப்போல் நீள்கின்ற அமைப்பு. இன்றைக்குக் கட்டப்படும் பள்ளிகளும் கல்லூரிகளும் இத்தகைய அமைப்பில்தான் இருக்கின்றன. முப்புறமும் கட்டுமானத்தை எழுப்பி ஒருபுறத்தைத் திறப்பாக வைத்திருக்கும் அமைப்பு. அக்கட்டட வடிவத்திற்கு நம் நாட்டில் கிடைத்திருக்கும் தொன்மைச் சான்று உதயகிரியின் இராணி கும்பாக் குகைகள்தாம். இன்றைக்கும் பெருந்திரளானவர்கள் கூடும்படி கட்டப்படுகின்ற எல்லாக் கட்டடங்களும் இவ்வமைப்பின்படியே கட்டப்படுகின்றன.
அந்தப் பெருங்குடைவுகளின் கீழ் நடுப்புறத்தில் ஏழு அறைகளும் மேல் நடுப்புறத்தில் ஒன்பது அறைகளுமாய்ப் பிரிக்கப்பட்டிருக்கின்றன. பக்கவாட்டில் கீழும் மேலும் இரண்டோ மூன்றோ அறைப்பிரிவுகள். அறைகள் என்று சொல்லத்தக்கவாறு சிலவற்றில் காற்றுப் போக்குக்கான காலதர் அமைப்பும் இருக்கிறது. கீழடுக்கு முழுக்க “தியானம்” எனப்படும் அறிதுயில் கொள்வதற்கான குடைவுகள். மேலடுக்குகள் ஓய்வறைகளாகவும் தங்குமிடங்களாகவும் பயன்படுத்தப்பட்டிருக்க வேண்டும்.
Exploring Odissa Kalingam
ஒவ்வொரு குடைவின் நுழைவாயிலிலும் மரக்கதவுகள் இருந்திருக்கலாம். இன்று அவை இற்றழிந்துவிட்டன. வெறும் கல்மீதங்களே காணப்படுகின்றன. வாயிலின் இருபுறமும் வரவேற்கும் தேவர்களும் தேவதைகளும் பொறிக்கப்பட்டுள்ளனர். வாயில் நெற்றி நெடுக அக்காலத்து அரசர்களின் போர்ப்படையெடுப்புகள், திருவூர்வலங்கள், ஆடல் பாடல் கொண்டாங்களைக் குறிக்கும் செதுக்கங்கள்.
Exploring Odissa Kalingam
சிற்பங்களில் பெரும்பாலானவை சிதைந்திருந்தாலும் அவற்றின் பேரழகு குறையவில்லை. பூங்கொடிகளை உடலில் சுற்றிய மகளிரும், போர்க்கருவிகளை ஏந்தி நடக்கும் மறவர்களும், நடன அடவொன்றின் நிலையில் நிற்கும் ஆடலரும், மரந்தாவும் மந்திகளும், மருண்டு நோக்கும் மான்களும், தோள்தொற்றிக் கொஞ்சும் கிளிகளும், மான்வேட்டைக்குக் குறிபார்க்கும் வேடர்களுமாய் நூற்றுக்கணக்கான சிற்பங்களின் தொடர்வரிசையைக் கண்டேன்.
Exploring Odissa Kalingam
நடுப்பகுதியிலிருந்து பார்க்கையில் உதயகிரிக் குன்றிலிருந்து கண்ணுக்கெட்டிய தொலைவு வரைக்குமான இயற்கைக் காட்சி தெரிகிறது. இவ்விடம் முழுக்க முழுக்க சமணர்களின் வாழ்விடமாக விளங்கியிருக்கிறது. இராணி கும்பாக் குகைகளில் ஐம்பதுக்கும் மேற்பட்ட அண்ணல்பெருமக்கள் தங்மித் தவமியற்றினர் என்று கருதலாம்.
Exploring Odissa Kalingam
கீழ்ப்பகுதி அடுக்குகளைப் பார்த்துவிட்டு ஓரத்துக் குகைவாயிலில் அமர்ந்துவிட்டேன். கையில் வைத்திருந்த கைப்பேசி நழுவி அதன் காண்திரை உடைந்தது. அந்த உடைவு எனக்கு எதையோ உணர்த்த முயன்றதோ என்னவோ…! நீ இங்கே வருவதற்குக் காலந்தாழ்த்தினாயா என்ற ஒறுப்போ..! அந்த உடைவினால் மனமுடைந்து அமர்ந்துவிட்டேன். கைப்பொருள் ஒன்றை இரண்டு திங்கள்களுக்குக் காப்பாற்ற முடியாதவர்கள் நாம். இரண்டாயிரத்து இருநூறு ஆண்டுகளுக்கு முன்செய்த கற்குடைவுகள் காலக்களிம்பேறினாலும் எப்படியோ உடையாமல் காப்பாற்றப்பட்டிருப்பதை எண்ணி நெகிழ்ந்தேன்.
அழிவதற்கும் அழிப்பதற்கும் காலத்தின் சிறுதுகள் போதுமானது. வாழ்வதற்கும் நிலைப்பதற்குமே நெடுங்காலம் வேண்டியிருக்கிறது. ஒவ்வொரு நிலைப்புச் சின்னங்களும் உனக்காகக் காத்திருக்கின்றன. அவற்றுக்கு இடம்பெயரும் தன்மையில்லை என்பதால் இருக்கின்ற இடத்திலேயே இருக்கின்றன. இடப்பெயர்ச்சிக்கென்றே பிறந்தவை விலங்குகளும் பறவைகளும். நாமே ஒவ்வோரிடமாக ஓடிச் சென்று காண வேண்டும். கைப்பேசி உடைவிலிருந்து ஒருவாறு மனந்தேற்றிக்கொண்டு குகையின் மேலடுக்குக்குச் சென்றேன்.
Exploring Odissa Kalingam
அங்கிருக்கும் குகைகள் படுக்கைக் குகைகளாகவே செதுக்கப்பட்டிருந்தன. மட்டத்தளமும் தலைப்பகுதியில் தலையணைபோன்ற புடைப்புமாக அவை கற்படுக்கைகளாகவே இருந்தன. தென்மேற்குத் திக்கிலிருந்த ஒரு கற்படுக்கையில் என்னைக் கிடத்திக்கொண்டேன். சற்று நேரம் எதுவும் தோன்றாத அமைதி. கண்மூடித் தூங்கினாலும் பழுதில்லை என்று தூங்க முயன்றால் தூக்கம் வரவில்லை. இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்னர் இப்படுக்கையில் துயில்கொண்ட பெருந்தவத்தோன் யாரென்று தெரியவில்லை. இன்று அந்தப் படுக்கையில் நான் படுத்திருக்க வாய்த்தது. அந்தத் தவப்பலனின் குளிர்ச்சியே அந்தக் கற்படுக்கையில் சில்லென்று பரவிக்கிடந்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக