Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

செவ்வாய், 29 மே, 2018

கலிங்கம் காண்போம் - பகுதி 53 - பரவசமூட்டும் பயணத்தொடர்

கலிங்கம் காண்போம் - பகுதி 53 - பரவசமூட்டும் பயணத்தொடர்


குகைக்குள் படுத்திருந்துவிட்டு வெளியே வந்தேன். வெய்யில் நன்கு ஏறியிருந்தது. புவனேசுவரத்தின் குளிர்காலப் பகல்கள் உறுத்தாத வெய்யிலில் இளமஞ்சளாக இருப்பவை. சுற்றிலும் பசுமை அடர்ந்திருந்தால் சூரியனின் கதிர்கள் குழந்தைக்கைகளாக மாறிவிடுகின்றன. அது தட்டிவிட்டாலும் தடவிவிட்டதைப்போன்ற உணர்ச்சிதான்.
நாம் குகையை விட்டு வெளிவந்தபோது சிட்டுக்கூட்டங்களாய்ப் பள்ளிப் பிள்ளைகள் வந்தனர். மாநிலத்தின் ஏதோ ஒரு மூலையிலிருந்து வரலாற்றிடங்களுக்குக் கல்விச் சுற்றுலா வந்தவர்களாக இருக்க வேண்டும். குழந்தைகள் குகைவாயிலில் அங்கும் இங்குமாக ஏறியாடின. அவர்களை அன்போடு மிரட்டிய ஆசிரியர்கள் குழுப்படமெடுக்க அழைத்துக்கொண்டிருந்தார்கள். அவர்களில் ஒருவர் ஊதி (Whistle) வைத்திருந்தார். அவர் ஊதியவுடன் குகைப்பகுதிகளில் ஓடியாடித் திரிந்த மாணாக்கர்கள் அவரருகே வந்து சேர்ந்தனர். கட்டளைக்குக் கீழ்ப்படிந்ததுபோல் வந்தாலும் அவர்களுடைய அளவளாவல் ஓயவில்லை.
exploring odissa kalingam
மாணாக்கர்களை அழைத்து வரிசையாக அமரவைத்தனர். அந்த அணிவரிசையின் பின்னே இராணி கும்பாக் குகையழகு தெரிய, முன்னிலையில் பள்ளி மாணாக்கர்களும் ஆசிரியர்களும் மேல்கீழ் வரிசையாகினர். மேல் வரிசையில் நிற்பவர்களும் கீழ் வரிசையில் அமர்ந்தவர்களுமாக இருந்தவர்களின்மீது கதிரவனே விளக்கொளி பாய்ச்சியதுபோல் ஒளிர்ந்தான். காலைக்குளிராலும் தொலைவுப் பயணத்தாலும் பலருடைய முகங்களில் உறக்கக்கலக்கம். அவர்கள் வரிசைப்பட அமர்ந்தவுடன் பொறுப்பில் இருந்தவர் தம் கைப்பேசியில் படங்களை எடுத்துக்கொண்டார். படமெடுத்தவர் சென்று அமர்ந்துகொள்ள வேறொருவர் அவரை உள்ளடக்கிய படங்களை எடுத்தார்.
அது ஓர் ஒடியப் பள்ளியின் சிறு திரள். அந்தப் பிஞ்சு முகங்களில் தென்பட்ட அறியாமையும் எளிமையும் ஏதுமறியாத மருட்சியும் என்னை ஈர்த்தன. என் நண்பர்களின் ஒருவர் பெருநிறுவனத்தின் பணிவளத்துறையில் இருந்தார். அவர் நிறுவனத்துக்கு வந்து சேர்ந்த ஒடியத் தொழிலாளர்கள் அவரைக் கடவுளுக்கு நிகரானவராக மதித்ததாகக் கூறினார். கால்தொட்டு வணங்குவதும் அடங்கி நிற்றலும் என அவர்களுடைய பண்புகள் வேறு தரத்தவை என்றார். அவர் சொன்னவை யாவும் அப்பிள்ளைகளைப் பார்த்தவுடன் என் நினைவுக்கு வந்தன.
ஆசிரியையர் புடைவையில் இருந்தனர். ஆசிரியர்களும் மாணாக்கர்களுமாய்க் குழுமி நின்ற அவ்விடத்தில்தான் பன்னூற்றாண்டுகளுக்கு முன்னர் பெரும்பள்ளியொன்று செயல்பட்டிருக்கும். படங்களை எடுத்து முடித்தவுடன் அவர்கள் அடுத்த பகுதிகளுக்குச் சென்றனர். அவர்கள் சென்றதும் அவ்விடத்தைத் திடுமென்று தனிமை சூழ்ந்துகொண்டது. குஞ்சும் குட்டியும் ஆணும் பெண்ணுமாகக் கூடும்போதுதான் அவ்விடத்தின் பேரழகு ஒளிபெறுகிறது. வகைக்குப் பத்துப்பேராகக் கூடினால் ஓரிடத்தின் உயிர்ப்பு ஆயிரம் மலர்களைத் திரட்டிக்கட்டிய பூங்கொத்துபோல் ஆகிறது.
அவர்கள் அகன்றதும் நிலவிய தனிமையைக் கொஞ்சமும் செரிக்க முடியவில்லை. மீண்டும் ஆளற்ற வனத்தினில் நிற்பதைப்போன்ற கற்பனை. இராணி கும்பாக் குகைகளின் மேல்தளத்திற்கு ஏறிச் சென்று பார்த்தேன். அது பாறையின் வழுக்குதளம். விளையாட்டாகக் கருதி குகையின் விளிம்புக்கு வந்து பார்ப்பது கூடாது. மேலிருந்து பார்க்கையில் பிள்ளைகள் நின்று படமெடுத்துக்கொண்ட தளத்தின் வெறுமையால் கண்கூசியது.
குகைப் பாறைக்கு அப்பால் சென்றால் காடு தொடங்குகிறது. அங்கிருந்து இறங்கினால் அடர்ந்த வனத்துக்குள் செல்லலாம். அக்காடுகள் காப்பிடப்பட்டுள்ளன. உதயகிரி – கந்தகிரிக் குகைகள் முழுமையாய்க் காடுகளால் சூழப்பட்டிருந்தவைதாம். புவனேசுவரத்தின் வளர்ச்சியால் குகையை நோக்கி வரும் பாதை நகர்மயமாகிவிட்டது. அந்த வளர்ச்சி உதயகிரிக் குன்றுகளோடு நின்றுவிட்டதை நினைத்து ஆறுதல் அடையலாம்.
குன்றுகளுக்குப் பின்னுள்ள காடுகள் இன்றும் பழைய வளத்தோடு நிற்கின்றன. மழைப்பொழிவுக்குக் குறையில்லாத நிலப்பகுதி என்பதால் காட்டின் செழிப்பைப் பற்றிக் கூறவேண்டியதில்லை. வங்கக் கடலில் நிலைகொள்ளும் ஒவ்வொரு புயலும் ஒடிய மாநிலத்தை உழுசேற்று நிலமாக ஆக்கிவிட்டுத்தான் ஓய்கிறது. ஒடியத்தைப் பொறுத்தவரையில் புயல்தொடாத ஆண்டுகளே இல்லை எனலாம்.
-தொடரும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக