Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

புதன், 8 ஆகஸ்ட், 2018

USB Drive : கொஞ்சம் தெரிஞ்சுக்கலாமா ?


Image result for USB

‘ஃபிளாப்பி டிஸ்ட்’ பார்த்திருக்கிறீர்களா ? நீங்கள் ‘இல்லை’ என்று சொன்னாலும் நான் ஆச்சரியப் படப் போவதில்லை. காரணம் இன்றைக்கு அது அருங்காட்சியகத்தில் ஆதிமனிதனைப் போல போல சைலன்டாகப் போய் அமர்ந்து விட்டது. ஆனால் ஒரு பத்து இருபது ஆண்டுகளுக்கு முன்பு நிலமை இப்படி அல்ல. ஃப்ளாப்பி டிஸ்க் ஒன்றைக் கையில் வைத்துக் கொண்டு சுற்றுவதை ஒரு கௌரவமாகவே பார்த்த தலைமுறை அது ! அதன் சேமிப்பு அளவே 1.44 மெகா பைட் தான் என்பதை நினைத்தால் வியப்பாக இருக்கும்.
இப்போது ஃப்ளாப்பி டிஸ்க் முற்றிலுமாக வழக்கொழிந்து போய்விட்டது. கணினி நிறுவனங்களும் தங்கள் கணினிகளை ஃப்ளாப்பியைப் பயன்படுத்தும் வகையில் உருவாக்குவதை நிறுத்தி விட்டார்கள். அதற்கு ஒரு காரணம் அதி விரைவாகவும், திறமாகவும், சக்தியுடனும் இருக்கும் யு.எஸ்.பி டிரைவ்கள் தான்.
எம்.சிஸ்டம்ஸ் எனும் இஸ்ரேல் நிறுவனத்தைச் சேர்ந்த அமிர் பார், டோவ் மோரான் மற்றும் ஓரோன் ஓக்டான் ஆகியோர் இணைந்து தான் இந்த யூ.எஸ்.பி ஃப்ளாஷ் டிரைவுக்கான முதல் முயற்சியின் வெற்றியைப் பகிர்ந்து கொண்டார்கள். ஏப்ரல் 1999ம் ஆண்டு அவர்கள் இதற்கான காப்புரிமையை வாங்கினார்கள். உலகம் 2000 எனும் மைல் கல்லை எட்டிய ஆண்டின் செப்டம்பர் மாதம் டிஸ்க்-ஆன் – கீ (Disk On Key ) எனும் பெயரில் முதல் தயாரிப்பையும் வெளியிட்டார்கள். சிங்கப்பூரிலுள்ள டிரெக் டெக்னாலஜி, நெட்டாக் டெக்னாலஜி போன்ற நிறுவனங்களெல்லாம் தாங்கள் தான் இதன் உண்மைச் சொந்தக்காரர்கள் என கேஸ் போட்டதும், மல்லுக்கு நின்றதும் இங்கே விவரிக்காத தனிக்கதை.
டிரக் டெக்னாலஜி, ஐபிஎம் போன்ற நிறுவனங்கள் 2000 ஆண்டில் தங்களது தயாரிப்பையும் சந்தையில் கொண்டு வந்தார்கள். இதில் டிரக் டெக்னாலஜி தனது தயாரிப்பை “தம்ப் டிரைவ்” (Thumb Drive) என்று பெயரிட்டு அழைத்தது. ஐபிஎம் தனது தயாரிப்பை டிஸ்க் ஆன் கீ என பெயரிட்டழைத்தது. முதலில் அது வெளியிட்ட தயாரிப்பில் சேமிப்பு அளவு 8 எம்பி தான். ஃப்ளாப்பி டிஸ்களை விட ஐந்து மடங்கு அதிக சேமிப்புத் திறன் என அப்போது கொட்டமடித்து அதை விற்றார்கள்.
இந்த சேமிப்பு கருவியின் சிறப்பு அம்சம் என்னவென்றால் இதிலுள்ள மெமரி பகுதிகளை மின் முறைப்படி அழிக்கலாம், மீண்டும் எழுதலாம் என்பது தான். EEPROM (Electrically Erasable Programmable read-only memory )  எனும் பழைய முறை தான் இதன் அடிப்படையில் இயங்கும் தொழில் நுட்பம். இந்த பழைய நுட்பம் பெரிய பெரிய மெமரி பகுதிகளை அழிக்கும் விதமாக உருவாக்கப்பட்டிருந்தது. புது யூ.எஸ்.பி டிஸ்க் களில் குட்டிக் குட்டி நினைவிடங்களைக் கூட துல்லியமாக அழிக்க முடியும். கூடவே பெரிய பிளாக் களை அழிப்பதும் மிக சுலபம். இதன் வேகம் அதிகமாய் இருக்க இவை தான் காரணம்.
நாம் இப்போதெல்லாம் கையில் வைத்திருக்கும் யு.எஸ்.பி ஃப்ளாஷ் டிரைவ்களில் பழைய காலத்தோடு ஒப்பிடும்போது பல ஆயிரம் மடங்கு அதிக தகவலைச் சேமிக்க முடியும். ஒரு சுண்டுவிரல் அளவுள்ள டிரைவ்கள் 256 ஜிபி கொள்ளளவு என்றெல்லாம் வியக்க வைக்கின்றன. நாளை இது பல டெராஃபைட், ஸீட்டா பைட் என எகிறிக் குதித்து ஓடும் என்பதிலும் எந்த சந்தேகமும் இல்லை. காரணம் 2 டெர்ரா பைட் அளவுள்ள பென் டிரைவ்களை உருவாக்கும் முயற்சி இப்போது நடந்து கொண்டிருக்கிறது
இந்த யூ.எஸ்.பி டிரைவ்களில் பெயரில் தான் ‘டிரைவ்’ இருக்கும். ஆனால் எதுவுமே நகராது என்பது இதன் பிளஸ் பாயின்ட் ! பழங்கால ப்ளாப்பி டிரைவ்கள், டிஸ்க்கள், சிடி ரோம்கள் போன்ற ஒட்டு மொத்த சங்கதிகளையும் தூக்கிச் சாப்பிட்டு ஏப்பம் போட்டுவிட்டது இந்த யூ.எஸ்.பி டிரைவ்.
இந்த யூ.எஸ்.பி டிரைவ்கள் சர்வதேச “யூ.எஸ்.பி மாஸ் ஸ்டோரேஜ்” தரத்தையே அடிப்படையாகக் கொண்டு செயல்படுகின்றன. இன்றைய பெரும்பாலான செயலிகளில் இயங்கக் கூடிய வகையில் அந்த தரநிர்ணயம் இருப்பது சிறப்பம்சம். வின்டோஸ் தவிர, லினெக்ஸ், மேக்,யுனிக்ஸ் போன்ற பல செயலிகளில் எந்தச் சிக்கலும் இல்லாமல் இது இயங்கும்.
ஒரு பிரிண்டட் சர்க்கியூட் போர்ட் இதனுள் இருக்கும் கூடவே ஒரு கனெக்டர். இந்த யூ.எஸ்.பி டிரைவ் வேலை செய்ய வேண்டுமென்றால் சக்தி தேவைப்படும். அந்த சக்தியை டிரைவ் ஆனது இணைக்கப்பட்டுள்ள கணினியிலிருந்தோ அல்லது வேறு மின் கருவிகளிலிருந்தோ தான் பெற்றுக் கொள்கிறது.
USB2.0 தான் மிகவும் பிரபலமான இரண்டாவது தலைமுறை யூ.எஸ்..பி இணைப்பு தொழில் நுட்பம். அதிகபட்சமாய் வினாடிக்கு 60 மெகா பைட் அளவுக்கு தகவல்களை இது எழுதவும், வாசிக்கவும் செய்யும். இதற்கு முந்தைய முதலைமுறை யூ.எஸ்.பி இணைப்பான USB 1.1 ன் சக்தி என்பது வினாடிக்கு 1.5 மெகா பைட் எனுமளவில் தகவல் பரிமாற்றத்தைச் செய்தது என்பது சுவாரஸ்யமான ஒப்பீட்டுச் செய்தி !
2008ம் ஆண்டு இதன் அடுத்த படியான USB 3.0 தயாரானது. வினாடிக்கு 625 மெகா பைட் என்பது இதன் அளவு. 2008ல் அறிமுகமானாலும் அது உடனே பயன்பாட்டில் வரவில்லை. 2010 ம் ஆண்டு முதல் இது பயன்பாட்டுக்கு வந்தது. இருந்தாலும் பழைய முறை முழுமையாக நிறுத்தப்படாமல் இன்னும் தொடர்கிறது.  இன்றைய கணினிகளை கவனித்தால் உங்களுக்கே தெரியும், அவையெல்லாம் USB 2.0 மற்றும் USB 3.0 எனும் இரண்டு வகை போர்ட் களுடனும் தான் தயாராகின்றன.
யூ.எஸ்.பி களில் முக்கியமாக நான்கு பாகங்கள் உண்டு. முதலாவது கணினிக்கும், ஃப்ளாஷ் டிரைவ்க்கும் இடையேயான தகவல் பரிமாற்றத்துக்கு உதவும் பிளக். இதை ஸ்டான்டர்ட் A யூ.எஸ்.பி பிளக் ( Standard A USB Plug) என்கிறார்கள். இரண்டாவது NAND ஃப்ளாஷ் மெமரி சிப். சாதாரண டிஜிடல் கேமராக்களில் பயன்படுத்தப்படுவது இந்தப் பகுதி மட்டும் தான். யூ.எஸ்பி மாஸ் ஸ்டோரேஜ் கன்ட்ரோலர். இதில் ஒரு சின்ன மைக்ரோ கன்ட்ரோலரும் இருக்கும். இது தான் யூ.எஸ்.பியின் செயல்பாடுகளை நெறிப்படுத்தும் பகுதி. இவற்றையெல்லாம் ஒரு பிளாஸ்டிக் அல்லது மெல்லிய உலோக ஆடைக்குள் அடைத்து விட்டால் நம் கையில் இருக்கும் ஃப்ளாஷ் டிரைவ் ரெடி !
ஃப்ளாஷ் டிரைவ்களில் இரண்டு விதமான தொழில் நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. இதை மல்டி லெவல் செல் (Multi Level Cell) மற்றும் சிங்கில் லெவல் செல் (Single Level Cell) என்று அழைக்கிறார்கள். பெரும்பாலான மெமரி கார்ட்கள் மல்டி லெவல் செல் அதாவது பல அடுக்கு சேமிப்பு எனும் நுட்பத்தின் அடிப்படையிலானவையே. மிகச் சுருக்கமாகச் சொல்ல வேண்டுமெனில் ஒரு நினைவிட துணுக்கில் ஒன்றுக்கு மேற்பட்ட தகவல்களைச் சேமிக்க முடிந்தால் அது மல்டி லெவல் சேமிப்பு. ஒரு தகவல் மட்டும் சேமிக்க முடிந்தால் அது சிங்கிள் லெவல் செல். மல்டி லெவல் செல்லில் நீங்கள் சுமார் 10 ஆயிரம் முறை தகவல்களை அழித்து அழித்து எழுதலாம். அதுவரை தாக்குப் பிடிக்கும். அதுவே சிங்கிள் எனில் ஒரு இலட்சம் தடவை நீங்கள் அழித்து எழுதினாலும் பாழாகாது என்பது வியப்பூட்டும் அம்சம்.
இன்றைக்கு இவை ரொம்பவே குட்டி வடிவத்துக்கு வந்து விட்டதால் பல வடிவங்களில் விற்பனைக்கு வந்துவிட்டது. பேனா, வாட்ச்கள், கத்தி, விளையாட்டுப் பொருட்கள், கீ செயின் என பலவற்றிலும் இந்த ஃப்ளாஷ் டிரைவ்கள் வந்து விட்டன.  இதில் ஏகப்பட்ட மேட் இன் டுபாக்கூர்கள் உண்டு என்பதை எப்போதும் நினைவில் கொள்ளுங்கள். எட்டு ஜிபி என கூவி விற்பார்கள். வாங்கி கணினியில் போட்டால் அது எட்டு ஜிபி என காட்டும். ஆனால் நீங்கள் சேமிக்கத் துவங்கும் போது கொஞ்சம் சேமித்த உடனே, “நான் ஃபுல் ஆயிட்டேம்”பா என கை விரிக்கும் ! எனவே இந்த டிரைவ் விஷயத்தில் நம்பிக்கையான தயாரிப்புகளை வாங்குவதே ரொம்ப நல்லது !
சரி இதை எதற்குப் பயன்படுத்தலாம் என்று கேட்டால் அடிக்க வருவீர்கள். இருந்தாலும் சொல்கிறேன். நமக்குத் தெரிந்ததெல்லாம் தகவல் சேமிப்பு தான். கொஞ்சம் எம்பி3 பாடல்கள், கொஞ்சம் திருட்டு வீடியோக்கள், அல்லது கொஞ்சம் டேட்டா ஃபைல்கள். இதைத் தாண்டிய பயன்பாடு ரொம்பவே குறைவு. ஆனால் தொழில்நுட்பம் இதை பல வேறு பயன்பாடுகளுக்குள்ளும் இட்டுச் செல்கிறது. சில மென்பொருட்கள் ஃப்ளாஷ் டிரைவகளில் வருகின்றன. அவை அங்கிருந்தே இயங்கவும் செய்கின்றன. கணினியில் மென்பொருட்களை நிறுவவேண்டும் எனும் தேவை இதன் மூலம் இல்லாமல் போய்விடுகிறது. இதை சாஃப்ட்வேர் விர்சுவலைசேஷன் (Software Virtualization) என்கிறார்கள்.
ஆப்பிள் இங்க். போன்ற சில நிறுவனங்கள் தங்கள் கணினியின் முழு ரீஸ்டோர் ஃபைல்களையும் இத்தகைய ஃப்ளாஷ் டிரைவ்களில் தந்து விடுகிறார்கள். ஒருவேளை கணினி பழுதாகிப் போனால் இந்த டிரைவைப் போட்டு இயக்க வேண்டியது தான் பாக்கி ! பழைய முறைகளான சிடி, டிவிடி போன்ற சமாச்சாரங்களெல்லாம் இதன் மூலம் ஓரங்கட்டப்பட்டு விட்டன.
இன்னொரு சுவாரஸ்யமான அம்சமாக இதில் காஃபியை ஊற்றி கணினியை உளவு பாக்கும் வேலையையும் செய்யலாம். நான் காஃபி (COFFEE) என்று சொன்னது Computer Online Forensic Evidence Extractor எனும் மென்பொருளை என முதலிலேயே சொல்லி விடுகிறேன். இதற்கு மேலும் நீங்கள் மெமரி கார்டில் காஃபி கொட்டினால் அதற்கு நான் பொறுப்பல்ல. இந்த மென்பொருள் டிரைவில் அமர்ந்து கொண்டு கணினியை முழுக்க வேவு பார்த்து சொல்லி விடும். கணினியிலுள்ள எந்த ஒரு அமைப்பையும் மாற்றாது !
அதே போல வின்டோஸ் தனது செயலியை ஒரு சின்ன டிரைவில் போட்டு “வின்டோஸ் டு கோ” என விற்பனை செய்வது இன்னொரு விஷயம். இவையெல்லாம் ஒரு சில சாம்பிள்களே, இத்தகைய பயன்கள் இன்னும் பல உண்டு.
இப்போது இத்தகைய பிளாஷ் டிரைவ் களிலும் பல அடுக்குப் பாதுகாப்புகள் வந்து விட்டன.. உங்கள் கைரேகை கொடுத்தால் தான் வேலை செய்ய ஆரம்பிப்பேன் என அடம்பிடிக்கும் பயோ மெட்ரிக் (Biometric) தொழில் நுட்பம் முதல், சொன்னதை குண்டக்க மண்டக்க என எழுதி மற்றவர்களைக் குழப்பும் என்கிரிப்ஷன்(Encryption) வரை எல்லாம் இதில் உண்டு. பயன்பாடு அதிகரிக்கும் போது பாதுகாப்பும் அதிகரிக்க வேண்டியது காலத்தின் தேவையல்லவா !
இன்றைக்கு யூ.எஸ்.பி டிரைவ் இல்லாத கணினிகளே கிடையாது. இதற்காக தனியே டிரைவர் மென்பொருட்களை நிறுவவேண்டும் எனும் காலமும் மலையேறிப் போய்விட்டது. எங்கும் எளிதில் தூக்கிச் செல்லலாம், கனம் குறைவு, பயன்பாடு அதிகம், சேதமாகும் வாய்ப்பு குறைவு போன்ற பல்வேறு நன்மைகள் இந்த டிரைவ்களின் பயன்பாட்டை வானளாவ உயர்த்தியிருக்கின்றன.
நீங்கள் அலட்சியமாய் பாக்கெட்டில் தூக்கிப் போட்டுத் திரியும் யூ.எஸ்.பி டிரைவ்க்குப் பின்னால் இத்தனை விஷயம் இருப்பதே வியப்பு தான் இல்லையா ? அடுத்த முறை கடைக்குப் போகும் போது  ‘யூனிவர்சல் சீரியல் பஸ் டிரைவ்” ஒண்ணு குடுங்க என கேட்டுப் பாருங்கள். புரியலையா ? யூ.எஸ்.பி யின் விரிவாக்கம் தான் “யூனிவர்சல் சீரியல் பஸ்” (Universal Serial Bus) என்பது ! உங்கள் மெமரியில் சேமித்து வைத்துக் கொள்ளுங்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக