Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

சனி, 29 செப்டம்பர், 2018

ரமணா பட பாணி.. செத்தவருக்கு 3 நாள் சிகிச்சை அளித்த தஞ்சை மருத்துவமனை

நாட்டில் நடப்பதைதான் சினிமாவாக எடுக்கிறார்களா... இல்லை சினிமாவில் எடுப்பதுதான் நாட்டில் நடந்து கொண்டிருப்பதா என தெரியவில்லை. தஞ்சையில் ரமணா பட பாணியில் ஒரு சம்பவம் நடந்து அனைவரையுமே அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.

நாகை மாவட்டம் கீழஈசனூரை சேர்ந்தவர் சேகர். இவருக்கு வயது 55. அரசு டிரைவராக வேலை பார்த்து வந்தார். திலகவதி என்ற மனைவியும், 2 மகனும் ஒரு மகளும் இருக்கிறார்கள்.

இவருக்கு அடிக்கடி வயிற்று வலி வந்திருக்கிறது. இதனால் நாகையிலேயே ஒரு தனியார் மருத்துவமனைக்கு சென்றார். அங்கு அவருக்கு குடல் இறக்க நோய்க்கான கடந்த 7-ம் தேதி ஆபரேஷன் ஒன்று செய்யப்பட்டது. சேகருக்கு ஆபரேஷன் சக்சஸ்தான். இருந்தாலும் தஞ்சாவூரில் உள்ள கே.ஜி., என்ற தனியார் மருத்துவமனைக்கு சென்று மேல் சிகிச்சை எடுத்து கொள்ளுங்கள் என்று ஆபரேஷன் செய்த டாக்டரே பரிந்துரை செய்தார்.
இதனால் டாக்டர் சொன்ன அதே தஞ்சை தனியார் மருத்துவமனையில் கடந்த 11-ம் தேதி சேகர் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சையும் அங்கு அளிக்கப்பட்டது. ரத்தக்கசிவு மட்டும் நிற்கவேயில்லை. ஆனாலும் தினமும் பணத்தை மருத்துவமனை நிர்வாகம் பிடுங்கிக் கொண்டே இருந்திருக்கிறார்கள். கிட்டத்தட்ட ஐந்தரை லட்சம் ரூபாய் செலவு இழுத்து கொண்டே போய் இருக்கிறது.
குடும்பத்தாருக்கோ, இவ்வளவு செலவு ஆகிறதே, சமாளிக்கவே முடியவில்லை என்ன செய்யலாம் என்று ஒருவருக்கொருவர் கலந்து பேசியுள்ளனர். பிறகு ஒருவழியாக, இங்க இருக்க கூடிய தஞ்சை மருத்துவமனையிலேயே கொண்டு சென்று இப் போது கொடுத்து கொண்டிருக்கிற சிகிச்சையை தொடரலாம் என முடிவுக்கு வந்திருக்கிறார்கள். அதற்காக டாக்டர்களிடம் சென்று, "நாங்கள் அரசு மருத்துவமனைக்கு போகிறோம், எங்களிடம் இனியும் செலவழிக்க பணம் இல்லை. எங்களுக்கு அரசு ஆஸ்பத்திரிக்கு பரிந்துரை செய்து கொடுங்கள்" என்று கேட்டிருக்கிறார்கள்.
அதற்கு தனியார் மருத்துவமனை நிர்வாகமோ, " இன்னும் இரண்டரை லட்ச ரூபாய் பாக்கி உள்ளது, அதை உடனடியாக கட்டி விட்டு அப்புறம் சேகரை கூட்டி செல்லுங்கள்" என்று சொல்லி விட்டார்கள். இதனால் குடும்பத்தார் ரொம்பவே சோர்ந்து போய்விட்டனர். சொந்தக்காரர்கள், நண்பர்கள், தெரிந்தவர்கள் என அனைவரிடமும் ஆயிரம், இரண்டாயிரம் என ரூபாய் கடன் வாங்கி 50 ஆயிரத்தை கொண்டு வந்து கட்டிவிட்டு, மீதிப்பணத்தை கூடிய சீக்கிரம் கட்டிவிடுகிறோம் என்று கெஞ்சி கேட்டிருக்கிறார்கள். பின்னர் அந்த பணத்தை வாங்கி கொண்ட பின்னர்தான் அரசு மருத்துவமனைக்கு அந்த டாக்டர்கள் பரிந்துரையே செய்திருக்கிறார்கள்.
இதையடுத்து சேகரை நேற்று மதியம் தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்ததனர். ஆனால் சேகரை பரிசோதித்த டாக்டர்கள், "இவர் இறந்து 3 நாளாகி விட்டதே" என்று சொன்னார்கள். இதனை கேட்டு குடும்பத்தார் கடுமையான அதிர்ச்சி அடைந்தனர். அப்படியென்றால் இறந்தவரை வைத்து கொண்டு எங்களிடம் அந்த தனியார் மருத்துவமனை பணத்தை பிடுங்கி கொண்டதே என்று தலையில் அடித்து கொண்டு அழுதார்கள்.இதுகுறித்து அந்த தனியார் மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்க கோரி சேகரின் மகன் சுபாஷ், தஞ்சை மேற்கு போலீசில் புகாரும் அளித்தார். இறந்த சேகர், திருத்துறைப்பூண்டி இந்திய, கம்யூ., முன்னாள், எம்.எல்.ஏ., பழனிசாமியின் நெருங்கிய உறவினர் என்றும் கூறப்படுகிறது. இறந்த சேகரின் உடல் பிரேத பரிசோதனைக்காக தஞ்சை அரசு மருத்துவமனையிலேயே வைக்கப்பட்டுள்ளது.
எப்போது டிஸ்சார்ஜ் செய்து விடுங்கள் என்று குடும்பத்தார்கள் கேட்டார்களோ, அப்போது முதல், கே.ஜி. மருத்துவமனை சுறுசுறுப்பாகி இருக்கிறது. இறந்த சேகருக்கு நிறைய சோதனை செய்வது போல பாவ்லா காட்டியுள்ளது. ஏதேதோ மருத்துவ உபகரணங்களை சேகர் இருக்கும் அறைக்கு குடும்பத்தார் பார்க்கும்படி கொண்டு சென்றுள்ளது. இதைத்தான் அந்த குடும்பத்தினரால் ஜீரணிக்கவே முடியவில்லை என்று கூறுகிறார்கள்.
கே.ஜி. மருத்துவமனைமீது துறை ரீதியான நடவடிக்கை மட்டும் எடுக்கக்கூடாது என்பதே அனைவரது எதிர்பார்ப்பாக உள்ளது. இந்த சம்பவத்தை பார்க்கும்போது, "இந்தியன்" படத்தில் ஒரு வசனம் வருமே.. அதுதான் நினைவுக்கு வந்து போகிறது "காசுக்காக பிணத்த கூட தோண்டி தோண்டி திம்பீங்க"-ன்னு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக