Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வியாழன், 27 செப்டம்பர், 2018

ஏழாவது அத்தியாயம் (ஞான விஞ்ஞான யோகம்) - ஸ்ரீமத் பகவத்கீதை


Sri Math Bhagavad Gita

॥ ஓம் ஸ்ரீ பரமாத்மநே நம:॥

அத ஸப்தமோ அத்ய।

ஞான விஞ்ஞான யோகம்


(எங்கும் இறைவன்)



ஸ்ரீபகவாநுவாச।
மய்யாஸக்தமநா: பார்த யோகம் யுஞ்ஜந்மதாஷ்ரய:।
அஸம்ஷயம் ஸமக்ரம் மாம் யதா ஜ்ஞாஸ்யஸி தச்ச்ருணு॥ 7.1 ॥

ஸ்ரீ பகவான் கூறினார்: அர்ஜுனா ! என்னிடம் மனத்தை வைத்து என்னை சார்ந்து, யோகத்தில் ஈடுபட்டு, என்னை சந்தேகத்திற்கு இடமின்றி எப்படி முற்றிலுமாக அறிவது என்பதை சொல்கிறேன் கேள். 

ஜ்ஞாநம் தே அஹம் ஸவிஜ்ஞாநமிதம் வக்ஷ்யாம்யஷேஷத:।
யஜ்ஜ்ஞாத்வா நேஹ பூயோ அந்யஜ்ஜ்ஞாதவ்யமவஷிஷ்யதே॥ 7.2 ॥

விஞ்ஞானத்துடன் கூடிய இந்த ஞானத்தை நான் உனக்கு முழுமையாக கூறுகிறேன். இதை அறிந்தால் மேலும் அறிவதற்கு எதுவும் பாக்கியிருக்கிறது. 

மநுஷ்யாணாம் ஸஹஸ்ரேஷு கஷ்சித்யததி ஸித்தயே।
யததாமபி ஸித்தாநாம் கஷ்சிந்மாம் வேத்தி தத்த்வத:॥ 7.3 ॥

ஆயிரக்கணக்கான மனிதர்களுள் யாரோ ஒருவன் இறை நிலைக்காக முயல்கிறான். அவர்களிலும் யாரோ ஒருவன் தான் என்னை உள்ளது உள்ளபடி அறிகிறான். 

பூமிராபோ அநலோ வாயு: கம் மநோ புத்திரேவ ச।
அஹம்கார இதீயம் மே பிந்நா ப்ரக்ருதிரஷ்டதா॥ 7.4 ॥

மண், நீர், தீ, காற்று, ஆகாசம், மனம், புத்தி, அகங்காரம் என்று இந்த எட்டு விதமாக பிரித்திக்கின்ற சக்தி என்னுடையதே. 

அபரேயமிதஸ்த்வந்யாம் ப்ரக்ருதிம் வித்தி மே பராம்।
ஜீவபூதாம் மஹாபாஹோ யயேதம் தார்யதே ஜகத்॥ 7.5 ॥

ஆனால், பெருந்தோள் உடையவனே ! இது சாதாரண சக்தி இதிலிருந்து வேறானதும் வாழ்க்கைக்கு ஆதாரமானதுமான எனது மேலான சக்தியை அறிவாயாக . அதனால் தான் இந்த உலகம் தாங்கபடுகிறது. 

ஏதத்யோநீநி பூதாநி ஸர்வாணீத்யுபதாரய।
அஹம் க்ருத்ஸ்நஸ்ய ஜகத: ப்ரபவ: ப்ரலயஸ்ததா॥ 7.6 ॥

எல்லா உயிர்களும் இந்த இரண்டு சக்தியிலிருந்தும் தோன்றியவை என்று அறிந்துகொள். பிரபஞ்சம் முழுவதின் தோற்றத்திற்கும், அதுபோலேவே ஒடுக்கத்திற்கும் நானே காரணம். 

மத்த: பரதரம் நாந்யத்கிம்சிதஸ்தி தநம்ஜய।
மயி ஸர்வமிதம் ப்ரோதம் ஸூத்ரே மணிகணா இவ॥ 7.7 ॥

அர்ஜுனா ! எனக்கு மேலானது எதுவும் இல்லை. இருப்பவை எல்லாம் நூலில் மணிகள் போல் என்னில் கோர்க்கபட்டிருக்கின்றன. 

ரஸோ அஹமப்ஸு கௌந்தேய ப்ரபாஸ்மி ஷஷிஸூர்யயோ:।
ப்ரணவ: ஸர்வவேதேஷு ஷப்த: கே பௌருஷம் ந்ருஷு॥ 7.8 ॥

அர்ஜுனா ! நான் தண்ணீரில் தண்ணீர்த்தன்மையாகவும், சந்திர சூரியர்களில் ஒளியாகவும், வேதங்களில் ஓங்காரமாகவும், ஆகாசத்தில் ஒளியாகவும், உயிரினங்களில் உயிர்தன்மையாகவும் இருக்கிறேன். 

புண்யோ கந்த: ப்ருதிவ்யாம் ச தேஜஷ்சாஸ்மி விபாவஸௌ।
ஜீவநம் ஸர்வபூதேஷு தபஷ்சாஸ்மி தபஸ்விஷு॥ 7.9 ॥

மண்ணில் நறுமனமாகவும், தீயில் தேஜசாகவும் இருக்கிறேன், உயிரினங்களின் வாழ்க்கையாகவும், தபஷ்விகளின் தவமாகவும் இருக்கிறேன். 

பீஜம் மாம் ஸர்வபூதாநாம் வித்தி பார்த ஸநாதநம்।
புத்திர்புத்திமதாமஸ்மி தேஜஸ்தேஜஸ்விநாமஹம்॥ 7.10 ॥

அர்ஜுனா ! உயிர்கள் அனைத்தின் நிலையான பிறப்பிடம் நான் என்று அறிந்துகொள். நான் அறிவாளிகளில் அறிவாகவும் மேலோரில் மேன்மையாகவும் இருக்கிறேன். 

பலம் பலவதாம் சாஹம் காமராகவிவர்ஜிதம்।
தர்மாவிருத்தோ பூதேஷு காமோ அஸ்மி பரதர்ஷப॥ 7.11 ।

பரத குலத்தில் சிறந்தவனே ! நான் பலசாலிகளில் விருப்பு வெறுப்பு அற்ற வலிமையாகவும், உயிர்களில் தர்மத்திற்கு முரண்படாத ஆசையாகவும் இருக்கிறேன். 

யே சைவ ஸாத்த்விகா பாவா ராஜஸாஸ்தாமஸாஷ்ச யே।
மத்த ஏவேதி தாந்வித்தி ந த்வஹம் தேஷு தே மயி॥ 7.12 ॥

எவை சத்வகுண பொருட்களோ, எவை ரஜோகுண மற்றும் தமோகுண பொருட்களோ அவை அனைத்தும் என்னிடமிருந்தே தோன்றியவை . அவை என்னிடம் உள்ளன. ஆனால் நான் அவற்றில் இல்லை. 

த்ரிபிர்குணமயைர்பாவைரேபி: ஸர்வமிதம் ஜகத்।
மோஹிதம் நாபிஜாநாதி மாமேப்ய: பரமவ்யயம்॥ 7.13 ॥

இந்த எல்லா உலகமும் மூன்று குணங்களாகிய பொருட்களால் மதிமயங்கி, இவற்றிக்கு மேலானவனாகவும் அழிவற்றவனாகவும் இருக்கின்ற என்னை அறிவதில்லை. 

தைவீ ஹ்யேஷா குணமயீ மம மாயா துரத்யயா।
மாமேவ யே ப்ரபத்யந்தே மாயாமேதாம் தரந்தி தே॥ 7.14 ॥

குணங்களால் ஆன இந்த எனது மாயை தெய்வீகமானது. கடக்க முடியாதது. ஆனால் யார் என்னையே சரணடைகிறார்களோ அவர்கள் இந்த மாயையை கடக்கிறார்கள். 

ந மாம் துஷ்க்ருதிநோ மூடா: ப்ரபத்யந்தே நராதமா:।
மாயயாபஹ்ருதஜ்ஞாநா ஆஸுரம் பாவமாஷ்ரிதா:॥ 7.15 ॥

தீயவர், மூடர், இழிந்தவர், மனமயக்கத்தால் அறிவிழந்தவர், அசுர இயல்பினர் ஆகியோர் என்னை நாடுவதில்லை. 

சதுர்விதா பஜந்தே மாம் ஜநா: ஸுக்ருதிநோ அர்ஜுன।
ஆர்தோ ஜிஜ்ஞாஸுரர்தார்தீ ஜ்ஞாநீ ச பரதர்ஷப॥ 7.16 ॥

பரத குலத்தில் சிறந்தவனான அர்ஜுனா ! துன்பத்தில் வாடுபவன், அறிவை நாடுபவன், பொருளை தேடுபவன், உண்மையை அறிந்தவன் என்று நான்கு விதமான நல்லவர்கள் என்னை வழிபடுகிறார்கள் . 

தேஷாம் ஜ்ஞாநீ நித்யயுக்த ஏகபக்திர்விஷிஷ்யதே।
ப்ரியோ ஹி ஜ்ஞாநிநோ அத்யர்தமஹம் ஸ ச மம ப்ரிய:॥ 7.17 ॥

அவர்களுள், என்றென்றும் என்னை நாடி ஒருமனதாக பக்தி செய்கின்ற ஞானி சிறந்தவன். ஏனெனில் உண்மையை அறிந்த அவனுக்கு நான் மிகவும் பிரியமானவன், அவனும் எனக்கு பிரியமானவன். 

உதாரா: ஸர்வ ஏவைதே ஜ்ஞாநீ த்வாத்மைவ மே மதம்।
ஆஸ்தித: ஸ ஹி யுக்தாத்மா மாமேவாநுத்தமாம் கதிம்॥ 7.18 ॥

இவர்கள் எல்லோரும் நல்லவர்களே . ஆனால் உண்மையை அறிந்தவனும் நானும் சமமே. இது எனது கருத்து. ஏனெனில் மனம் நிலைபெற்ற அவன் மிக மேலான கதியாகிய என்னையே சார்ந்து இருக்கிறான். 

பஹூநாம் ஜந்மநாமந்தே ஜ்ஞாநவாந்மாம் ப்ரபத்யதே।
வாஸுதேவ: ஸர்வமிதி ஸ மஹாத்மா ஸுதுர்லப:॥ 7.19 ॥

பல பிறவிகளின் முடிவில் ஞானி, எல்லாம் இறை வடிவமே என்று கண்டு என்னை வந்தடைகிறான். அத்தகைய மகானை காண்பது மிகவும் அரிது. 

காமைஸ்தைஸ்தைர்ஹ்ருதஜ்ஞாநா: ப்ரபத்யந்தே அந்யதேவதா:।
தம் தம் நியமமாஸ்தாய ப்ரக்ருத்யா நியதா: ஸ்வயா॥ 7.20 ॥

இயற்கையான மனபோக்கினால் தூண்டப்பட்டு, வெவ்வேறு ஆசைகளால் மதிமயங்கியவர்கள் அந்தந்த ஆசைகளுக்கு ஏற்ப பல தேவதைகளை வழிபடுகின்றனர். 

யோ யோ யாம் யாம் தநும் பக்த: ஷ்ரத்தயார்சிதுமிச்சதி।
தஸ்ய தஸ்யாசலாம் ஷ்ரத்தாம் தாமேவ விததாம்யஹம்॥ 7.21 ॥

எந்தெந்த பக்தன் எந்தெந்த தேவதையை நம்பிக்கையுடன் வழிபட விரும்புகிறானோ, அவர்களின் அந்த நம்பிக்கையை நான் உறுதி உடையதாக செய்கிறேன். 

ஸ தயா ஷ்ரத்தயா யுக்தஸ்தஸ்யாராதநமீஹதே।
லபதே ச தத: காமாந்மயைவ: விஹிதாந்ஹிதாந்॥ 7.22 ॥

அந்த பக்தன் நம்பிக்கையுடன் அந்த தேவதையை வழிபடுகிறேன். அந்த தேவதையின் மூலம் தன் ஆசைகள் நிறைவேற பெறுகிறான். எனினும் அந்த ஆசைகளை நிறைவேற்றுபவன் நானே. 

அந்தவத்து பலம் தேஷாம் தத்பவத்யல்பமேதஸாம்।
தேவாந்தேவயஜோ யாந்தி மத்பக்தா யாந்தி மாமபி॥ 7.23 ॥

அறிவு குறைந்தவர்களாகிய அவர்கள் பெறுகின்ற பலன் எல்லைக்கு உட்பட்டது. தேவதைகளை வழிபடுபவர்கள் தேவதையை அடைகிறார்கள். என் பக்தர்கள் என்னையே அடைகிறார்கள். 

அவ்யக்தம் வ்யக்திமாபந்நம் மந்யந்தே மாமபுத்தய:।
பரம் பாவமஜாநந்தோ மமாவ்யயமநுத்தமம்॥ 7.24 ॥

அழிவற்றதும், இணையற்றதுமான எனது மேலான நிலையை அறியாத மூடர்கள் வெளிப்பட்டு தோன்றாத என்னை புலன்களுக்கு தென்படும் இயல்பை அடைந்ததாக நினைக்கின்றனர். 
நாஹம் ப்ரகாஷ: ஸர்வஸ்ய யோகமாயாஸமாவ்ருத:।
மூடோ அயம் நாபிஜாநாதி லோகோ மாமஜமவ்யயம்॥ 7.25 ॥

யோக மாயையால் நன்றாக மறைக்கப்பட்டுள்ள நான் எல்லோருக்கும் தெரிவதில்லை. நான் பிறப்பற்றவன், நான் அழிவற்றவன் என்பதை அறிவற்ற இந்த உலகம் தெரிந்துகொல்வதில்லை. 

வேதாஹம் ஸமதீதாநி வர்தமாநாநி சார்ஜுந।
பவிஷ்யாணி ச பூதாநி மாம் து வேத ந கஷ்சந॥ 7.26 ॥

அர்ஜுனா ! சென்றவை, இருப்பவை, வருபவை ஆகிய உயிர்கள் அனைத்தையும் நான் அறிவேன், ஆனால் என்னை யாரும் அறிவதில்லை. 

இச்சாத்வேஷஸமுத்தேந த்வந்த்வமோஹேந பாரத।
ஸர்வபூதாநி ஸம்மோஹம் ஸர்கே யாந்தி பரம்தப॥ 7.27 ॥

எதிரிகளை வாட்டுகின்ற அர்ஜுனா ! விருப்பு வெறுப்பினால் தோன்றுகின்ற இருமை மயக்கத்தால் எல்லா உயிர்களும் பிறக்கும் போதே பெரும் மயக்கத்தில் ஆழ்ந்துள்ளன. 

யேஷாம் த்வந்தகதம் பாபம் ஜநாநாம் புண்யகர்மணாம்।
தே த்வந்த்வமோஹநிர்முக்தா பஜந்தே மாம் த்ருடவ்ரதா:॥ 7.28 ॥

எந்த புண்ணியசாலிகளுக்கு பாவம் தீர்ந்துவிட்டதோ, அவர்கள் இருமை மயக்கத்திலிருந்து விடுபட்டு, மன உறுதியுடன் என்னை வழிபடுகின்றனர். 

ஜராமரணமோக்ஷாய மாமாஷ்ரித்ய யதந்தி யே।
தே ப்ரஹ்ம தத்விது: க்ருத்ஸ்நமத்யாத்மம் கர்ம சாகிலம்॥ 7.29 ॥

மூப்பு மற்றும் மரணத்திலிருந்து விடுபடுவதற்காக என்னை சரணடைந்து யார் முயற்சி செய்கிறார்களோ அவர்கள் இறைவனையும் ஆன்மா மற்றும் கர்மம் பற்றிய அனைத்தையும் அறிகிறார்கள். 

ஸாதிபூதாதிதைவம் மாம் ஸாதியஜ்ஞம் ச யே விது:।
ப்ரயாணகாலே அபி ச மாம் தே விதுர்யுக்தசேதஸ:॥ 7.30 ॥

யார் என்னை அதிபூதம், அதிதெய்வம், அதியஜ்ஞம் இவற்றுடன் சேர்ந்தவனாக அறிகிறார்களோ, நிலைபெற்ற மனத்தை உடைய அவர்கள், மரண வேளையிலும் என்னை அடைகிறார்கள். 

ஓம் தத்ஸதிதி ஸ்ரீமத் பகவத்கீதாஸூபநிஷத்ஸு
ப்ரஹ்மவித்யாயாம் யோகஷாஸ்த்ரே ஸ்ரீக்ருஷ்ணார்ஜுநஸம்வாதே
ஜ்ஞாநவிஜ்ஞாநயோகோ நாம ஸப்தமோ அத்யாய:॥ 7 ॥

ஓம் தத் ஸத் - ப்ரம்ம வித்யை, யோக ஸாஸ்த்ரம், உபநிஷத்து எனப்படும் ஸ்ரீமத்பகவத்கீதையாகிய ஸ்ரீக்ருஷ்ணனுக்கும் அர்ஜூனனுக்கும் இடையே நிகழ்ந்த உரையாடலில் 'ஞான விஞ்ஞான யோகம்' எனப் பெயர் படைத்த ஏழாவது அத்தியாயம் நிறைவுற்றது. 

விளக்கம்: 
மண், நீர், தீ, காற்று, ஆகாசம், மனம், புத்தி, அகங்காரம் இந்த எட்டு சக்திகளும் இறைவனிடமிருந்து வந்ததே. இது மிகவும் சாதாரண சக்தி. இதை விட மேலான சக்தி ஒன்று இறைவனிடமிருக்கிறது. அதனால் தான் அனைத்து உயிரையும் அவர் தாங்குகிறார். அனைத்தும் இறைவனிடத்திலேயே இருக்கிறது. எல்லாமே இறைவன் தான். அவர்

தண்ணீரில் -- தண்ணீர் தன்மையாகவும்,
சந்திர சூரியர்களில் – ஒளியாகவும்,
வேதங்களில் – ஓங்காரமாகவும்,
ஆகாசத்தில் –- ஒளியாகவும்,
உயிரினங்களில் -- உயிர் தன்மையாகவும், வாழ்க்கையாகவும்,
மண்ணில் –- நறுமணமாகவும்,
தீயில் – தேஜசாகவும்,
தபஷ்விகளில் – தவமாகவும்,
அறிவாளிகளில் – அறிவாகவும்,
மேலோரில் – மேன்மையாகவும்,
பலசாலிகளில் -- வலிமையாகவும்,
உயிர்களில் – முரண்படாத ஆசையாகவும் இருக்கிறார். 

இப்படி இருந்தும் இறைவனை நாம் அறியாமல் மதிமயங்கி போகிறோம். இதற்கு காரணம் மூன்று குணங்கள் சத்வம், ராஜசம், தாமசம். இவைகளால் தான் நாம் மதி மயங்குகிறோம். இந்த குணங்களினால் பாதிக்கப்படாமல் இருந்துகொண்டு இறைவனையே கதி என்று சரணடைந்தால் இறைவனை அடையலாம். சத்வ குணம் சுகத்தை தேடி அலைய வைக்கும். அவற்றிக்கு இடம் கொடுக்க கூடாது. ராஜசம் கர்மத்தை / பேராசையால் தூண்டப்பட்ட வேலையை செய்ய தூண்டும். இவற்றிக்கு இடம் கொடுக்க கூடாது. தாமச குணம் சோம்பேறி தனத்தை ஏற்படுத்தும் இவற்றிக்கு இடம் கொடுக்க கூடாது. இப்படி குணங்களுக்கு உட்படாமல் இறைவனை எப்போதும் நினைத்து அவரை சரணடைந்தால் இறைவனை அடையலாம். அவரை அடைந்து விட்டால் மீண்டும் பிறவி எடுக்காமல் நிரந்தரமான இறைலோகத்தில் சுகமாக இருக்கலாம். இது தான் அனைத்து உயிரினத்தின் உயர்ந்த நோக்கமாக இருக்க வேண்டும். உண்மையான அறிவு (அல்லது ) ஞானம் என்பது என்ன ? 

உள்ளதை உள்ளபடி அறிந்து கொல்வது தான். இங்கு இருப்பது அனைத்தும் இறைவனின் வடிவம் என்பதை தெரிந்துகொள்ள வேண்டும். நண்பன், பகைவன், ஆடு, மாடு, மிருகம், மலை, மரம் அனைத்துமே இறைவனின் வடிவமே என்பதை புரிந்து கொண்டால் நமக்கு எதன் மீதும் விருப்பு வெறுப்பு ஏற்படாது. ஆனால் மாயை என்ற திரையினால் உண்மை மறைக்கபட்டிருப்பதால் நாம் உண்மையை காண முடியாமல் போகிறது. இதை பக்தியின் மூலம் உணரலாம். இங்கே காணும் அனைத்தும் அழியும் தன்மை உடையது. அதன் உள்ளே இருக்கும் ஆத்மா நிரந்தரமாக இருக்கும். அவர் தான் இறைவன். ஞானம் பெற்ற மனிதனின் கண்களுக்கு எங்கும் இறைவன் காணபடுவார். ஞானத்தால் மட்டுமே இதை அறியமுடியும். மேலும் இந்த உலகில் பல கடவுள் பல தெய்வம் இருப்பதாக எண்ணி அவரவர் இஷ்டபடி பல தெய்வங்களை பல முறைகளில் வழிபடுகிறார்கள். இதில் எந்த தவறும் இல்லை. ஆனால் அவர்கள் செய்யும் அனைத்து வழிபாடும் இறைவனையே ( நாராயணனையே ) அடைகிறது. ஞானம் இல்லாததால் அவர்கள் பல தெய்வம் இருப்பதாக நினைக்கிறார்கள். பல உருவங்களில் காணபட்டாலும் பிளவுபட்டது போல் பல இடங்களில் காணபட்டாலும் அவர் முழுமையானவர். மேலும் பக்தர்களின் தேவைகளை நிறைவேற்றுபவரும் அவரே. உப தெய்வங்களை வழிபடுபவர்கள் உபதெய்வங்களை அடைவார்கள். பரம்பொருளை வழிபட்டால் அவர்கள் அந்த நாராயணனையே அடைவார்கள். இவரை அடைந்தால் பிறப்பு இறப்பு என்ற சுழற்சி முடிவு பெரும். 



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக