நம்முடைய கலாசாரம், பண்பாடு, சாஸ்திரம், சம்பிரதாயம், விரதங்கள், விசேஷங்கள், வழிபாடுகள், உற்சவங்கள் என பல விஷயங்களை உள்ளடக்கிய ஓர் வழிகாட்டி புத்தகமே பஞ்சாங்கம். இவற்றில் ஐந்து விஷயங்கள் மிக முக்கியமானவை. பஞ்ச என்றால் ஐந்து. இந்த ஐந்து விஷயங்களை மையமாக வைத்து அன்றைய தினத்தை பற்றி தெரிந்துகொள்வதுதான் பஞ்சாங்கம்.
(1) வாரம்: ஞாயிறு முதல் சனி வரை உள்ள கிழமைகளை அறிவது.
(2) திதி: சந்திரனுக்கும், சூரியனுக்கும் இடையே உள்ள தூரத்தை குறிப்பது. வளர்பிறை 15 திதி, தேய்பிறை 15 திதி மொத்தம் 30 திதிகள்.
(3) நட்சத்திரம்: குறிப்பிட்ட தினம் எந்த நட்சத்திரத்தின் ஆளுமையில் உள்ளது என்பதை தெரிந்துகொள்வது. அசுவினி முதல் ரேவதி வரை மொத்தம் 27.
(4) யோகம்: குறிப்பிட்ட இடத்திலிருந்து சூரியனும், சந்திரனும் செல்கின்ற மொத்த தூரம். விஷ்கம்பம் தொடங்கி வைதிருதி வரை மொத்தம் 27 யோகங்கள்.
(5) கரணம்: திதியில் பாதி தூரம் கரணம் எனப்படும். பவம் தொடங்கி கிம்ஸ்தக்னம் வரை மொத்தம் 11 கரணங்கள்.
நட்சத்திர பலன் :
பரணி, கிருத்திகை, திருவாதிரை, ஆயில்யம், மகம், பூரம், சித்திரை, சுவாதி, விசாகம், கேட்டை பூராடம், பூரட்டாதி ஆகிய 12 நட்சத்திரங்களில் கடன் வாங்குவது கொடுப்பது கூடாது. அந்த நாட்களில் கடன் வாங்கினால் திரும்ப செலுத்துவது மிகவும் கடினம். கடன் கொடுத்தால் திரும்பப் பெறுவதும் கடினம். எக்ஸ்ரே, ஸ்கேன், மருத்துவ பரிசோதனைகள், அறுவை சிகிச்சை போன்றவற்றை செய்யக்கூடாது. வெளிநாட்டுப் பயணம், வியாபார சம்பந்தமான பயணம், சுபவிஷயங்களை பேசுவதற்கான பயணங்களை செய்வது கூடாது.
கலைஞான பாதம் :
ஒருவர் பிறந்த நட்சத்திரத்திற்கு 16வது நட்சத்திரத்தின் நான்காவது பாதம், கலை ஞான பாதம் என்றழைக்கப்படுகிறது. பிறக்கும்போது ஒருவரின் ஜாதகத்தில் யோக கிரகங்கள் என்று சொல்லக்கூடிய சுபகிரகங்கள் இந்த கலைஞான பாதத்தில் அமைந்திருந்தால் மிகப்பெரிய விசேஷமான ராஜயோக பலன்களை அந்த ஜாதகர் அனுபவிப்பார். லக்னத்திற்கு மூன்றாம் வீட்டை சுபகிரகங்கள் பார்த்தால் சரஸ்வதி யோகம். சகல வித்தை, கல்வி, ஞானம் உண்டாகும். இயல், இசை, நாடகம், சினிமா, கலை போன்ற படைப்புத்துறையில் சாதனை படைப்பார்கள். புதன் மற்றும் ஏழாம் அதிபதி பார்த்தால் மாமனார் மூலம் சொத்து குவியும். அதிக உழைப்பின்றி செல்வம் சேரும். பிறருக்கு ஆலோசனை வழங்கி, பணம் சம்பாதிப்பார்கள்.
வியாழ வட்டம் :
ஜென்ம லக்னம், ராசி, எதுவாக இருந்தாலும் வியாழன் என்றழைக்கப்படும் குரு எந்த வீட்டிலிருக்கிறார் என்பதைப் பொறுத்து வியாழ வட்டம் ஏற்படுகிறது. ரிஷபம், சிம்மம், தனுசு, கும்பம் ஆகிய நான்கு ராசிகள் வியாழ வட்டம் என்றும் குருவளையம் என்றும் அழைக்கப்படுகிறது. ஆள்காட்டி விரலுக்கு கீழே உள்ள மேடு குருமேடு என்றழைக்கப்படுகிறது. இந்த குரு மேட்டை சுற்றி வளையம்போல் ஒரு ரேகை அமைப்பு தோன்றும். இதற்கும் குருவளையம் என்று பெயர். சாலமன் ரிங் என்றும் இதனை அழைப்பர். இத்தகைய அமைப்புடையவர்கள் உயர்ந்த அந்தஸ்து, நிறைந்த ஞானம், பெருந்தன்மை உடையவர்கள். நிதித்துறை, நீதித்துறை போன்றவற்றில் உயர்ந்த பதவி வகிப்பார்கள். சமூகத்தில் இவர்கள் பேச்சுக்கு மதிப்பு இருக்கும்.
சூரியனுடன் கேது சேர்ந்திருந்தால் சாஸ்திர ஞானம் உண்டாகும். பக்தி, கர்ம, யோக, ஞான மார்க்கத்தில் ஈடுபடுவார். மந்திர, தந்திர, சித்திகள் கைகூடும். ஜோதிடம், மருத்துவம், ரசவாதம் போன்றவற்றில் தேர்ச்சி, புகழ் கிடைக்கும் சூரியனுடன் ராகு சேர்ந்திருந்தால் சாஸ்திர தர்மங்கள், சமூக ஒழுக்கங்களை பற்றி கவலைப்படமாட்டார்கள். சட்ட விரோதமான காரியங்களில் ஈடுபடுவார்கள். தேடப்படுகின்ற குற்றவாளியாக அறிவிக்கப்படுவதற்கும் வாய்ப்பு உண்டு.
சந்திரனுடன் ராகு சேர்ந்திருந்தால் விதண்டாவாதம் செய்வார்கள். எதிர்மறையான எண்ணங்கள் தோன்றும். பிடிவாதத்தினால் பல நல்ல வாய்ப்புகளை இழப்பார்கள். பொய்ப் பிரசாரங்கள், ஒருவரைப்பற்றி இல்லாததை, பொல்லாததை பரப்பி விடுவார்கள். சந்திரனுடன் கேது சேர்ந்து இருந்தால் சொல் ஒன்று, செயல் வேறாக இருக்கும். கோபாவேசமாக கத்துவார்கள் அல்லது விரக்தி அடைவார்கள். சஞ்சல புத்தி, சித்த பிரமை ஏற்படும், தற்கொலை எண்ணம் தோன்றும்.
செவ்வாயுடன் ராகு சம்பந்தம் இருந்தால் ஜாதகரை சினிமா சம்பந்தப்பட்ட துறையில் ஈடுபட வைக்கும். செவ்வாய் கேது சம்பந்தம் மருத்துவத்துறையால் ஜீவனம் அமையலாம். சுக்கிரன் ராகு சம்பந்தம் இயல், இசை, நாட்டியம், சினிமா போன்ற கலைத்துறையில் பிரகாசிக்கும் யோகம் கிடைக்கும். தீயோர் நட்பு, கூடா பழக்க வழக்கங்கள் மூலம் கௌரவ பாதிப்பு, சொத்து, பொன், பொருள் இழப்பு ஏற்படும். மணவாழ்வில் குருதிருமண வாழ்க்கைக்கு இரண்டு கிரகங்களைப் பற்றி முக்கியமாக பார்க்க வேண்டும். ஒருவர் தேவகுரு, மற்றொருவர் அசுரகுரு. தேவகுரு வியாழன், அசுர குரு சுக்கிரன். வியாழன், திருமண விஷயத்தில் முக்கிய பங்கு வகிக்கிறார். கல்யாணம் என்றவுடன் குருபயம், வியாழ நோக்கம் இருக்கிறதா என்பதைத்தான் எல்லா பெற்றோர்களும் பார்க்கிறார்கள். அந்தளவிற்கு இந்த ஜோதிட சொல் மிகவும் பிரசித்தம். குருபலம் என்பது கோச்சார நிலையில் ஒரு ராசியை விட்டு அடுத்த ராசிக்கு பெயர்ச்சி, அவரவர் பிறந்த ராசிக்கு 2, 4, 5, 7, 9, 10, 11 போன்ற வீடுகளில் குரு வரும்போது குருபலம் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.
இதில் ஆண் அல்லது பெண் யாராவது ஒருவருக்கு இருந்தாலும் போதும் என்பதும் வழக்கத்தில் உள்ளது. குருவிற்கு இவ்வளவு முக்கியத்துவம் உள்ளதற்கு காரணம், அவர் தனம், புத்திரப்பேறு என்ற முக்கியமான இரண்டு அதிகாரங்களை பெற்றுள்ளார். பொன், பொருள், பக்தி, சமூக அந்தஸ்து, நல்ல சிந்தனைகள், பெருந்தன்மை, ஞானம், ஒழுக்கம் போன்றவற்றை அருள்பவரும் குருவே. பெண்கள் ஜாதகத்தில் குருவிற்கு மேலும் ஒரு சிறப்பு உள்ளது. அதாவது குரு பாத்ருகாரகன், கணவனை குறிக்கும் கிரகம். குரு யோகஸ்தானங்களில் தமது அருள்பார்வையால் தீர்க்க சுமங்கலி பாக்கியத்தை தருகிறார். குருபலம் இருப்பதால் மட்டுமே ஒருவருக்கு திருமணம் கூடிவராது. பல்வேறு சாஸ்திர அம்சங்களில் இதுவும் ஒன்று. உதாரணமாக ஜென்ம குரு என்ற இடத்தில் இருந்து குரு பார்வை பலம் சிறப்பாக அமையும். களத்திர ஸ்தானமான ஏழாம் இடத்தை பார்ப்பார்.
அதேபோல் அஷ்டம குரு எனப்படும் எட்டாம் வீட்டில் உள்ள குரு நேராக குடும்பஸ்தானமான இரண்டாம் வீட்டைப் பார்ப்பார். ஆகையால் இந்த பார்வை விசேஷம் காரணமாக சுபகாரியங்கள் கூடி வருவது அனுபவத்தில் கண்ட உண்மை. ஜனன லக்னத்திற்கு 5 அல்லது 12ம் இடத்தில் கேது அமையப் பெற்றவர்களுக்கு மோட்ச கதி உண்டு. கேது திசையில் மரணம் அடைந்தாலும் மறுபிறவி கிடையாது. லக்னாதிபதி எந்த வீட்டில் இருக்கிறாரோ அந்த வீட்டிற்குரிய கிரகம் பலம் பெற்றிருந்தால் பெருந்தன்மை, விட்டுக்கொடுக்கும் பரந்தமனம் இருக்கும். ஞானநிலை ஏற்படும். 5ல் சனி இருந்தால் ஞானத்தேடல் அமையும். 5ல் குரு இருந்தால் வேதாந்த விஷயங்களில் ஈடுபாடு ஏற்படும். லக்னத்திற்கு இரண்டாம் இடத்தில் தேய்பிறை சந்திரன் இருந்தாலும், இரண்டாம் இடத்தை தேய்பிறை சந்திரன் பார்த்தாலும் மனஅமைதி இருக்காது. பணத்தட்டுப்பாடு இருக்கும். கையில் காசு இருந்தால் உடனே அதற்கு செலவு வரும்.
பேச்சில் முரண்பாடு இருக்கும். திக்குவாய் குறைபாடு இருக்கும். தண்ணீரில் கண்டம் உண்டு. ஜாதகத்தில் சூரியன் இருக்கும் ராசிக்கு, மூன்றாம் இடத்தில் சந்திரன் இருக்கப் பிறந்தவர்கள், பாக்கியசாலிகள். இவர்களுக்கு ஏதாவது ஒரு வழியில் வாழ்க்கையில் யோகம் அமையும். குறிப்பாக பெண்களால் இவர்களுக்கு சௌபாக்கிய யோகம் உண்டு. ஜாதக கட்டத்தில் அயன, சயன, போக ஸ்தானத்தில் ராகு இடம் பெற்று இருந்தால் ஜாதகரின் நடவடிக்கைகள் மிகவும் ரகசியமாக இருக்கும். கெட்ட சகவாசம், முறை தவறிய வாழ்க்கை, சூதாட்ட குணம், வீண் ஜம்பம், ஆடம்பரம் போன்றவை இருக்கும். லக்னத்திற்கு மூன்றாம் இடமான திட, தைரிய, வீரிய ஸ்தானத்தில் சூரியன், செவ்வாய், ராகு போன்ற கிரகங்கள் இருந்தால் எளிதில் உணர்ச்சிவசப்படுவர். கண்டதே காட்சி, கொண்டதே கோலம் என்று செயல்படுவார். தன் கருத்துகளை பிறர் மீது திணிப்பார். பிறர் மனத்தை புண்படுத்துவதில் இவர்களுக்கு அலாதி பிரியம் இருக்கும்.
ஜாதக கட்டத்தில் மாதுர் ஸ்தானமான 4ம் வீட்டிலோ, மனைவி ஸ்தானமான 7ம் வீட்டிலோ வளர்பிறை சந்திரன் இருந்தால் சகல சம்பத்து உடையவராவார். தாயார் மூலம் சொத்து சேரும். பானை பிடித்தவள் பாக்கியசாலி என்பதற்கேற்ப திருமணமானவுடன் சுபயோகம் கூடிவரும். பெண்களால் இன்பம், லாபம் அடையக்கூடியவர். உயில் சொத்து சேரும் யோகம் உண்டு. லக்னத்திற்கு நான்காம் வீடாகிய சுகஸ்தானத்தில் ராகு இருந்தாலும், சனி பார்த்தாலும் ஜாதகர் ஜீரண கோளாறினால் பாதிக்கப்படுவார். அடிக்கடி வயிற்று உபாதைகள் வரும். மூலநோய் தாக்கும். பெண் ஜாதகமாக இருந்தால் மாதவிடாய் கோளாறுகள், கர்ப்பப்பை கோளாறுகள், கருச்சிதைவு உண்டாகும். ஜீவனத்திற்குரிய இடமான பத்தாம் அதிபதி வலுவாக அமர்ந்த சுபகிரகங்கள் பார்த்தால் அல்லது உத்தியோககாரகன் எனப்படும் செவ்வாய் பலமாக இருந்து லக்னத்திற்கு 3, 4, 9, 10, 11 ஆகிய வீடுகளில் இருந்தால் நிச்சயம் அரசாங்க உத்தியோகம் கிடைக்கும்.
அமாவாசை :
வழிபாடுகள் மற்றும் சாஸ்திர விஷயங்கள் மக்களிடையே தவறாக பரப்பப்பட்டு விட்டது. பெரும்பாலான மக்கள் கண்டும், கேட்டும், வழக்கத்திலும் அமாவாசை திதியை ஒரு நிறைந்த நாள் என்று தவறாக நினைத்துக்கொண்டு பல முக்கியமான காரியங்களை செய்கிறார்கள். முக்கியமாக வாகனம் வாங்குவது, ஒப்பந்தம் போடுவது, புதிய பணிகளை துவக்குவது, அட்வான்ஸ் கொடுப்பது போன்ற சுபகாரியங்களை ஆரம்பிக்கிறார்கள். அமாவாசை திதி என்பதே ஒரு சூன்ய திதியாகும். (இருள் நிறைந்த நாள்) எனவே இதில் சுபவிஷயங்களை தொடங்கக் கூடாது. மறைந்த நம் முன்னோர்கள், தாய், தந்தையர், உடன்பிறந்தவர்களை நினைத்து திதி கொடுக்கும் தினம். முன்னோர்களை நினைத்து தானதர்மம் செய்ய சிறந்த நாள். திருஷ்டி கழிக்க ஏற்ற நாள், காளி, நீலி, சூலி, பிரத்தியங்கரா, முனீஸ்வரர், கருப்பண்ணசாமி போன்ற உக்கிர, காவல் தெய்வங்களை வழிபடக்கூடிய நாள். அதேபோல் பௌர்ணமி அன்று சூரிய சந்திர சக்திகளின் மின்காந்த அலை அதிகம் உள்ள நாள். இன்றைய தினம் அறுவை சிகிச்சைகளை செய்யக்கூடாது. குறிப்பாக சிசேரியன் முறையில் குழந்தை பிறப்பு கூடாது.
மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்து கொள்ளுங்கள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக