Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வியாழன், 21 பிப்ரவரி, 2019

10. ஏழாவது ஸர்க்கம் - புஷ்பக விமானம்

Related image

வைடூர்யம் பதிக்கப்பட்ட, தங்கத்தால் ஆன ஜன்னல் கதவுகளைக் கொண்ட மூன்று கட்டிடங்களை ஹனுமான் பார்த்தார்.அவை மின்னல் கீற்றுகளால் ஒளியூட்டப்பட்ட பெரும் மழை மேகங்கள் போல் காட்சியளித்தன. நிலவைக் கண்டு களிப்பதற்காக அந்தக் கட்டிடங்களில் திறந்த வெளி மேல் மாடங்கள் அமைக்கப் பட்டிருந்தன. அந்தக் கட்டிடங்களில் இருந்த அறைகளுக்குள் சங்குகளும், விற்கள் முதலான ஆயுதங்களும் இருந்தன.

தேவர்களையும் அசுரர்களையும் ஒருங்கே கவர்ந்த பல கட்டிடங்களை ஹனுமான் பார்த்தார். எந்த விதக் குறையும் இல்லாமல் அமைக்கப்பட்டிருந்த அந்தக் கட்டிடங்கள் செல்வச் செழிப்பின் அடையாளங்களாக விளங்கின. அவை யாவும் ராவணனனின் திறமையால்  உருவாக்கப்பட்டிருந்தன.

ஹனுமான் அங்கே பார்த்த வீடுகள் யாவையும் கடும் உழைப்பினால் உருவாக்கப் பாட்டிருந்தன. எல்லா வசதிகளும் கொண்ட அக்கட்டிடங்கள் மயனால் உருவாகாப் பட்டவை போல் தோற்றமளித்தன. அவற்றுள் ஒரு கட்டிடம் மற்ற எல்லாவற்றையும் விட உயரமாக இருந்தது. தங்க நிற மேகக் கூட்டம் போல் காட்சியளித்த அந்தக் கட்டிடம் அதன் அழகான தோற்றத்தாலும், கலைச் சிறப்பாலும், ராவணனின் மேன்மையை ஒத்திருந்தது.

அங்கே அவர் ஒரு மாளிகை போல் தோற்றமளித்த புஷ்பக விமானத்தைப் பார்த்தார். அதன் அற்புதமான தோற்றம்,  வானுலகமே பூமியில் வந்து இறங்கியது போன்ற பிரமையை ஏற்படுத்தியது. பல மரங்களிலிருந்து வந்து படிந்திருந்த மகரந்தங்களால்  மூடப்பட்ட மலைச் சிகரம் போல் அது காட்சியளித்தது.

பல உயர் குலப் பெண்கள் அந்த விமானத்துக்குள் அமர்ந்திருந்தனர்.  அன்னப் பறவைகளால் அது வானில் செலுத்தப்பட்டது. பல மேகஙளை ஒன்று சேர்த்து அமைக்கப்பட்டதுபோல் தோன்றிய அந்த விமானம் சந்திரன் உள்ளிட்ட கிரகங்களால் சூழப்பட்ட மலைச் சிகரம் போல் காட்சி அளித்தது. அந்த விமானத்தின் உட்புறத்தில் மலைகள், மலர்கள் பூத்துக் குலுங்கும் மரங்கள், தாமரை போன்ற மலர்களால் நிரம்பிய ஏரிகள், அடர்ந்த காடுகள் ஆகியவை ஓவியங்களாகத் தீட்டப் பாட்டிருந்தன.

அதன்மீது  பதிக்கப்பட்டிருந்த நவரத்தினக் கற்களின் ஒளியால், புஷ்பக விமானம், கலையழகுடன் உருவாக்கப்பட்டிருந்த கட்டடங்களிலிருந்து வேறுபட்டுத் தெரிந்தது. (இல்லாவிட்டால், பார்ப்பதற்கு அதுவும் ஒரு பெரிய கட்டிடம்போல்தான் தோன்றியிருக்கும்!)

வெள்ளியாலும், பவழத்தாலும்  செய்யப்பட்டு, வைடூரியம் பதிக்கப்பட்ட பறவைகளின் உருவங்கள் விமானத்திலிருந்து தொங்கிக்கொண்டிருந்தன. விமானம் வானில் பறக்கும்போது இந்தப் பறவைகளும் விமானத்துக்குக் கீழே பறந்து செல்வது போன்ற தோற்றத்தை இது ஏற்படுத்தியது.

இவை தவிர உயர் ஜாதிக் குதிரைகளின் உருவங்களும், நவரத்தினங்களால் செய்யப்பட்ட பலவகைப் பாம்புகளும் அந்த விமானத்தில் அமைக்கப்பட்டிருந்தன. மன்மதனின் உதவியாளர்கள்போல் வளைந்த சிறகுகளுடன் அழகான தோற்றத்துடன் விளங்கிய பல அழகிய பறவைகளின் உருவங்களும் அங்கே இருந்தன. நீலத் தாமரைப் பூக்களைத் துதிக்கைகளில் ஏந்தியபடி தாமரைத் தடாகங்களில் விளையாடிக்கொண்டிருந்த யானைகள், கையில் ஒரு தாமரையுடன் மங்களகரமாகத் தோன்றும் லக்ஷ்மி ஆகிய உருவங்களும் இருந்தன. மணம் வீசும் மலர்கள் பூத்துக் குலுங்கும் வசந்த கால மரங்கள் போலவும், அழகிய குகைகளைக்கொண்ட ஒரு மலையைப்போலவும் விளங்கியது அந்த விமானம்.

அந்த அழகிய நகரம் முழுவதும் அலைந்து திரிந்த பிறகும் சீதையைக் காணமுடியவில்லையே என்று வருந்தினார் ஹனுமான். 
என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும் உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக