Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வெள்ளி, 15 மார்ச், 2019

21ஆவது சர்க்கம் - ராவணனின் கோரிக்கையை நிராகரித்தார் சீதை

 Image result for ராவணனின் கோரிக்கையை நிராகரித்தார் சீதை

அரக்கர்கோனின் இந்த வார்த்தைகளைக் கேட்டு சீதை துக்கமும்,  பயமும் கொண்டார். அவனுக்கு புத்தி சொல்லும் விதத்தில் மெல்லிய, நடுங்கிய குரலில் பேசத் தொடங்கினார்.

பேரழகு படைத்தவரும், கற்புக்கரசியும், தன் கணவனிடம் உறுதியான அன்பு கொண்டவரும், எப்போதும் கணவனையே நினைத்தபடி துறவு நிலையில் வாழ்ந்து வந்தவரும், துயரத்தினால் விளைந்த கண்ணீருடனேயே எப்போதும் காணப்பட்டவருமான சீதை மனதுக்குள் பயம் நிறைந்திருந்தாலும், முகத்தில் புன்னகையுடன், கற்புடைய பெண்ணான தான் இன்னொரு ஆடவனுடன் நேரடியாகப் பேசக்கூடாது என்பதைக் காட்டும் விதத்தில்  ஒரு புல்லைப்  பிடுங்கித் தனக்கும் ராவணனுக்கும் இடையே போட்டு விட்டு, அவனிடம் பேசத்  தொடங்கினார்.

"உன் மனதை என்னிடமிருந்து விலக்கிக்கொள்.உன் ஆசையை உன்னைச் சேர்ந்தவர்களிடம் மட்டும் வை. பாவம் செய்தவன் எப்படி மோட்சத்தை வேண்ட முடியாதோ அதுபோல், இது போன்ற கோரிக்கையை நீ என்னிடம் வைக்க முடியாது. உயர்ந்த குடும்பத்தில் பிறந்து, உயர்ந்த குடும்பத்தில் வாழ்க்கைப்பட்ட என்னால்  கற்புடைய பெண்கள் செய்யக்கூடாத இந்த இழிவான செயலை ஒருபோதும் ஏற்க முடியாது."

இந்த வார்த்தைகளைச் சொன்ன பிறகு, விதேஹ நாட்டு இளவரசியான சீதை ராவணனை அலட்சியம் செய்யும் விதத்தில் தன் முகத்தை வேறு புறம் திருப்பிக்கொண்டு, அவனுக்கு ஒரு விரிவான அறிவுரை வழங்கினார்.

"இன்னொருவரின் மனைவியான, கற்பு நிலையிலிருந்து வழுவாத என்னிடம் நீ இவ்வாறு பேசுவது முறையற்றது. நான் உன் மனைவியாக ஆவது என்பது நடக்க முடியாத விஷயம். நல்லோர்களால் வரையறுக்கப்பட்ட ஒழுக்க நெறிகளைப் பின்பற்றி நடந்து கொள்.

"இரவில் திரியும் அரக்கனே! உன் மனைவிகள் எவ்வாறு பாதுகாக்கப்பட வேண்டியவர்களோ, அவ்வாறேதான் மற்றவர்களின் மனைவிகளும். உனக்கு என்ன செய்யப்பட வேண்டுமென்று விரும்புகிறாயோ அதை நீ மற்றவர்களுக்குச் செய்ய வேண்டும். ஆகையால், உனக்கு ஏற்கெனவே உள்ள மனைவிகளுடன் திருப்தி அடை.

"ஒருவன் தன மனதைக் கட்டுப்படுத்த முடியாதவனாக, தனக்கு ஏற்கெனவே இருக்கும் மனைவிகள் போதாதென்று மற்றவர்களின் மனைவிகளை  நாடிச் சென்றால், அந்தப் பெண்களே அவன் அழிவுக்குக் காரணமாக அமைவார்கள். நல்லொழுக்கத்தைப் பற்றி உனக்கு எடுத்துச் சொல்லக்கூடிய பெரியோர்கள் யாருமே இல்லையா அல்லது ஒழுக்க நெறிகளை நீ தெரிந்தே மீறுகிறாயா? உன் நடத்தை நல்லோர்களின் நடத்தைக்கு முரணாக இருக்கிறது.

"தீய செயல்களைப் புரிவதென்று கங்கணம் கட்டிக்கொண்டவனாக, தீய செயல்கள் விளைவிக்கும் அழிவை உணர்ந்த பெரியோர்களின் அறிவுரையை மதிக்காமல் நடந்து கொள்ளும் நீ அரக்கர் குலத்தின் அழிவுக்குக் காரணமாக அமையப் போகிறாய்.

தவறான செயல்களில் ஈடுபடும் முட்டாள்களான அரசர்களால் ஆளப்பட்டால், வளம் கொழிக்கும் நாடுகளும், செல்வச் செழிப்புடன் விளங்கும் நகரங்களும் கூட அடியோடு அழிந்து போகும்.

பாவச் செயல்களைப் புரியும் உன் கையில் சிக்கிக் கொண்டிருக்கும் செல்வம் கொழிக்கும் நாடான இலங்கை கூட அழிந்துதான் போகப் போகிறது.

"ராவணா! தாங்கள் செய்யும் தீய செயல்களின் ஆபத்தான விளைவுகளை உணராமல் பாவச் செயல்களைப் புரிபவர்களின் அழிவு எல்லா உயிர்களுக்கும் மகிழ்ச்சி அளிக்கிறது. நீ அழிந்து போனபின், உன்னுடைய குடிமக்கள் தங்கள் விசுவாசத்தை மாற்றிக்கொண்டு "பாவச் செயல்களில் ஈடுபட்ட இவன் கடவுளின் செயலினால் அழிவைச் சந்தித்தான்" என்று சொல்வார்கள்.

"செல்வம், அரசி என்ற அந்தஸ்து போன்றவற்றால் நான் செல்லும் நேர்மையான பாதையிலிருந்து என்னைத் திருப்ப முடியாது. சூரியனின் கிரணங்களை சூரியனிடமிருந்து பிரிக்க முடியாதது போல் என்னையும் ராமனிடமிருந்து பிரிக்க முடியாது.

"உலகம் முழுவதும் போற்றும் ராமனின் கைகளில் சாய்ந்திருந்த என்னால் எப்படி இன்னொருவரிடம் பாதுகாப்பைத் தேட முடியும்? தன்னை அறிந்தவரும், கடுமையான விரதங்களை மேற்கொண்டவருமான ஒரு துறவியிடம் ஞானம் இருப்பது எப்படிப் பொருத்தமாக இருக்குமோ, அதுபோல் ராமனுக்குப் பொருத்தமாக இருப்பவள் நான்.

"ஆண் யானையிடம் செல்ல முடியாமல் சங்கிலியால் கட்டப்பட்டுள்ள பெண் யானை போல் வருந்திக் கொண்டிருக்கும் என்னை ராமனிடம் சேர அனுமதிப்பதுதான் உனக்கு நல்லது. அந்த ராமன் மனிதர்களுக்குள் உயர்ந்தவர். தர்மம் எது என்பதை அறிந்தவர். தன்னை அடைக்கலம் புகுந்தவர்களிடம் கருணை காட்டக்கூடியவர் அவர் என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்று.

"நீ உயிருடன் இருக்க விரும்பினால், நீ அவருடைய நட்பை நாட வேண்டும். தன்னிடம் சரண் புகுந்தவர்களின் மீது அன்பு காட்டும் அவரிடம் சென்று அவரைத் திருப்தி செய்.

நீ மரணத்திலிருந்து தப்பிக்க விரும்பினால், நீ உயிர் வாழ விரும்பினால், நீ உனக்கும் நன்மை செய்து கொண்டு அவருக்கும் நன்மை செய்ய ஒரு வழிதான் இருக்கிறது.  உன் காம சிந்தனையைக்  கட்டுப்படுத்திக்கொண்டு, இப்போதே என்னை அவரிடம் கொண்டு சேர்த்து விட்டு. இப்படிச் செய்வதாக உறுதி செய்து கொள்.

"ராவணா! நீ என்னை ராமரிடம் அழைத்துச் சென்று அவரை மகிழ்ச்சி அடையச் செய்தால்தான் உன்னால் மகிழ்ச்சியாக இருக்க முடியும். வேறு விதமாகச் செயல்பட்டால், நீ அழிந்து போவது உறுதி.

இடியைக் கூட விழாமல் நிறுத்தி வைக்கலாம். யமன் கூட நீண்ட காலம் உன்னிடமிருந்து விலகி நிற்கலாம். ஆனால் இந்த உலகத்துக்கு அரசரான ராமர் கோபம் கொண்டால், உன் போன்றவர்களால் தப்பிக்க முடியாது.

"இந்திரனின் வஜ்ராயுதம் போல் இடி முழக்கம் செய்யும் ராமரின் வில்லின் ஓசையை நீ விரைவில் கேட்பாய். விஷ நாகங்களைப் போல் வீரியம் படைத்த, கூறமையும், வேகமம் கொண்ட அம்புகள் உன்னை விரைவிலேயே வந்து தாக்கும்.

இந்த நகரம் முழுவதும் ராமரின் அம்புகளாலும் இறக்கை முளைத்த ஈட்டிகளாலும் வீழ்த்தப்பட்ட அரக்கர்களின் பிணங்களால் நிரப்பப்படப் போகிறது. மூன்று அடிகள் வைத்து இந்த உலகத்தையும் அதன் செல்வங்களையும் மகாவிஷ்ணு மீட்டது போல், ராமர் என்னை உன்னிடமிருந்து மீட்கப் போகிறார்.

"அரக்கனே! ஜனஸ்தானத்தில் அரக்கர் சேனை அழிக்கப்பட்டதற்கு பதிலடி கொடுக்க முடியாத நீ இந்த இழிய செயலைச் செய்திருக்கிறாய்.

கீழ்த்தரமான சிந்தனை கொண்டவனே! இரு வீர சகோதரர்களும் எங்கள் ஆசிரமத்திலிருந்து சற்று தூரம் சென்றிருந்த சமயம், யாருமே இல்லாதபோதுதானே என்னைத் திருட்டுத்தனமாக என்னைக் கடத்தினாய் நீ!

இரண்டு புலிகள் மோப்பம் பிடிக்கும் தூரத்தில் ஒரு நாய் எப்படி நிற்க முடியாதோ, அதுபோல் உன்னால் ராமரையும், லக்ஷ்மணரையும் எதிர்த்து நிற்க முடியாது.

ஒரு கை வெட்டப்பட்ட விருத்தாசுரன் போரில் இரு கரங்கள் கொண்ட இந்திரன் முன்னாள் எப்படி நிற்க முடியவில்லையோ, அதுபோல் உன்னால் ராமர், லக்ஷ்மணர்களுக்கு எதிரே நிற்க முடியாது.

நீ வெற்றி பெறுவது என்பது நடக்க முடியாத விஷயம். விரைவிலேயே நீ ராமருடனும் லக்ஷ்மணருடனும் போரிடும்போது, ஒரு சிறிய குளத்தில் உள்ள நீரை சூரியன் தன்  வெப்பத்தால் உறிஞ்சுவது போல், என் கணவர் ராமர்,  தன அம்புகளால் உன் உயிரை எடுத்து விடுவார்.

குபேரனின் மலை வாசஸ்தலத்திலோ, வருணனின் மாளிகையிலோ, இந்திரனின் சபையிலோ நீ அடைக்கலம் புகலாம். ஆனால் ஒரு வயது முதிர்ந்த மரம் மின்னலிலிருந்து எப்படித் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள முடியாதோ அதுபோல், ஆயுட்காலம் முடியும் தருவாயில் உள்ள நீ  தசரத குமாரனிடமிருந்து உன்னைக் காப்பாற்றிக் கொள்ள முடியாது. 


என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும் உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக