பார்த்ததில் பிடித்தது
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் - தி ஃபர்காட்டன் ஹீரோ
இந்தப் படத்தை ஏற்கனவே நான் பார்த்திருந்தாலும் நெட் ஃபிலிக்சில் மீண்டும் கண்ணில் தட்டுப்பட்டதால் கிறிஸ்துமஸ் விடுமுறை காலத்தில் உட்கார்ந்து பார்த்து முடித்தேன். சிறிது நீளமான திரைப்படம் என்றாலும் அவசியமாய் அனைவரும் பார்க்க வேண்டிய படம். சப் ஹெட்டிங் அல்லது குளோஸ்டு கேப்ஷன் (CC) இருப்பதால் இந்தி தெரியாதவர்களும் பார்க்கலாம்.
நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ் அவர்கள் இந்திய விடுதலைக்காக தான் வகுத்துக் கொண்ட பாதையில் தளராது நடைபோட்டு இறுதிவரை போராடிய மாவீரர். அவர் பெயரைச் சொன்னாலே பிரிட்டிஷ் அரசாங்கம் நடுங்கியது. இந்திய நாடெங்கும் மட்டுமல்ல, ரஷ்யா, ஜெர்மனி, ஜப்பான் என்று பல நாடுகளில் அறியப்பட்டவராக இருந்தார். அவர் பெயர் சிலருக்கு அச்சத்தையும் பலருக்கு மரியாதையையும் ஊட்டியது.
காங்கிரஸ் கட்சியின் மீதும் காந்தி நேரு ஆகியோரின் மீதும் பெரும் மதிப்பு வைத்திருந்தார். கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் அவர்களையோ காங்கிரஸ் பெரியக்கத்தையே அவர் ஒருபோதும் தரக்குறைவாகப் பேசியதுமில்லை. விமர்சித்ததும் இல்லை. தன்னுடைய படைப்பிரிவுகளுக்கு காந்தி நேரு எனப் பெயர் சூட்டியதிலிருந்து அதனை அறிந்து கொள்ளலாம் ஆனால் அவர்களின் மிதவாத கொள்கைகளினால் சுதந்திரம் தள்ளிப்போகிறது. அதனை பிரிட்டிஷார் பலவீனமாக நினைத்துக்கொண்டு சுதந்திரம் தரமறுக்கிறார்கள் என்று நினைத்தார். போர் தொடுத்து விரட்டினால் மட்டுமே பிரிட்டிஷாரை துரத்த முடியும் என நம்பினார். அதற்கான காரியங்களை தன் உயிரைப்பணயம் வைத்து நிறைவேற்ற முயன்று, அதே முயற்சியில் தன் இன்னுயிரையும் துறந்த உன்னதத்தலைவர் அவர். அவர் எடுத்த சில தவறான முடிவுகளாலும், உலகப் போரின் திசை மாறிப்போனதாலும் அவர் எடுத்த முயற்சி பலிக்கவில்லை.
பிரிட்டனுக்கும் ரஷ்யாவுக்கும் ஒரு கோல்டு வார் இருந்தது. ஆனால் எதிரிக்கு எதிரி நண்பன் என்ற வகையில் பிரிட்டன், பிரான்ஸ் ரஷ்யா ஆகிய நாடுகள் ஒன்று சேர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
நேதாஜிக்கு வேறு வழியின்றி ஜெர்மனியிடம் செல்ல வேண்டிய நிலைமை. ஆனால் ஜெர்மனி ஒரு பைத்தியக்கார சர்வாதிகாரியான ஹிட்லர் கையில் இருந்தது. போஸ் அவர்கள் ஹிட்லரைப் பார்த்தும் அதனால் எந்த பிரயோஜனமும் இல்லை.
போஸ் சற்றும் எதிர்பாராத விதமாக ஜெர்மனி ரஷ்யாவைத் தாக்கியது. அதற்கு ஜெர்மனியில் இருந்த இந்திய போர்க்கைதிகள் சுபாஷின் தலைமையில் உதவ வேண்டும் என்றும் எதிரிபார்த்தது. நல்லவேளை அப்படி ஒரு தவறை அவர் செய்யவில்லை.
ஜெர்மனியின் உதவி கிடைக்காது என்று தெரிந்தவுடன் அவர் பர்மாவுக்குக் கிளம்பினார். நல்லவேளை ஹிட்லர் அவரைச் சிறைப்படுத்தவில்லை. ஆனால் அங்கிருந்த இந்திய போர்க்கைதிகள் 5000 பேரை அப்படியே விட்டுவிட்டு வரவேண்டிய நிலைமை.
ஆனால் ஜப்பானின் உதவி கிடைத்தது. எனவே இந்தியா தேசிய ராணுவம்,பர்மா சிங்கப்பூர் பகுதிகளில் ஜப்பானின் உதவியோடு பல பிரிட்டிஸ் பகுதிகளில் முன்னேறியது.
இதற்கிடையில் ஜப்பான் முட்டாள்தனமான ஒரு காரியம் செய்தது. அது அதிகபட்ச திமிர்த்தனத்துடன் அமெரிக்காவின் பேர்ல் ஹார்பரைத் தாக்கியது. அது சிங்கத்தின் பிடரியை உலுப்பிய கதையாகிவிட்டது. அது வரை நடுநிலை காத்த அமெரிக்காவும் போரில் குதித்தது. அது பிரிட்டனுக்கு பெரும் சாதகமாக அமைந்தது.
ஜப்பானில் நாகசாகி, ஹிரோஷிமாவில் அணுகுண்டைப் போட்டதோடு ஜப்பானின் பெருமை முற்றிலுமாக அழிந்து போக அவர்கள் சரண்டர் ஆகி எல்லா நிலைகளிலுமிருந்தும் பின்வாங்கி தங்கள் நாட்டுக்குள் முடங்கினர். இன்றுவரை அவர்கள் ராணுவத்தை முற்றிலும் குறைத்துக் கொண்டு தங்களுடைய உள்நாட்டு வளர்ச்சியில் மட்டுமே கருத்தில் கொண்டு வெகு சீக்கிரம் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் ஆட்டோமொபைலில் உலகத்தில் தலைசிறந்து விளங்குகிறார்கள்.
திடீரென்று முற்றிலும் மாறிப்போன சூழ்நிலையில் இந்திய தேசிய ராணுவம் வேறுவழியின்றி பின்வாங்கி சரண்டராக, போஸ் அவர்களின் முயற்சி வெறும் கனவாக முடிந்தது.
ஜப்பானின் விமானத்தில் சென்ற அவர் விபத்தில் இறந்துபோனதாக அறிவிக்கப்பட்டது. அவருடைய முடிவு இன்றைய நாள்வரை ஒரு மர்மமாகவே இருக்கிறது.
ஆனாலும் போஸ் அவர்களின் பெருமுயற்சியும் நம் நாட்டின் விடுதலைக்கு ஒரு பெரும் காரணமாக இருந்தது என்பதை யாராலும் மறுக்க முடியாது. அதுவும் அவர் மறைந்த இரண்டு வருடங்களுக்குள் கிடைத்தது.
இயக்குநர் ஷியாம் பெனகலின் உன்னத வரலாற்றுப் படைப்பு இது. ஆனால் வழக்கம்போல இந்தப் படத்திற்கும் எதிர்ப்பு வந்தது. குறிப்பாக தன் தலைவர் ஒரு ஆஸ்திரியப் பெண்ணை மணந்தது போல் காட்டப்பட்டதற்கும், அவர் தைவானில் விமான விபத்தில் இறந்ததுபோல் காட்டப்பட்டதற்கும் கல்கத்தாவில் செயல்பட்ட ஃபார்வர்டு பிளாக் கட்சியிலிருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது. எல்லாக் கட்சியினரும் தங்கள் தலைவரை ஆதர்ஷ தலைவராக ஏற்றுக் கொள்ளும்போது அவரும் எல்லா ஆசாபாசங்களும் உள்ள ரத்தமும் சதையிலுமான மனிதர் என்பதை ஏனோ ஏற்றுக் கொள்ள மறுக்கிறார்கள். எனவே போஸ் அவர்களின் சொந்த ஊரான கல்கத்தாவில் திரையிடப்படவில்லை.
Shyam Benegal |
அதோடு படத்திற்கு இன்னொரு முக்கியமான ஒன்று A.R. ரகுமானின் இசை. படத்தின் தரத்தை வெகுவாக கூட்டுவதில் இசை பெரிதும் உதவுகிறது.
2004ல் லண்டன் திரைப்பட விழாவில் வெளியிடப்பட்ட இந்தப்படம் சிறந்த தேசிய ஒருமைப்பாட்டுப் படம் என்ற நர்கிஸ் தத் விருதையும், சிறந்த கலை அமைப்புக்கான தேசிய திரைப்பட விருதையும் பெற்றது.
Sachin Kedetkar |
சச்சின் கெடெக்கர் சுபாஷ் ஆக தன் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். ஆனால் ஏதோ ஒன்று குறைவாகவே தெரிந்தது.
30 கோடி செலவில் எடுக்கப்பட்ட இந்தப்படம் கிட்டத்தட்ட 2 1/2 மில்லியன் ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்தது.
இந்தியர் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய வரலாறு நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் இந்திய தேசிய ராணுவத்தின் வரலாறு. படத்தின் தலைப்பில் மறந்து போன நாயகன் (Forgotten Hero) என்று வருகிறது. மறக்கக்கூடிய மனிதரா அவர்?
-முற்றும்.
என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும் உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக