பிலிப்பைன்ஸ் தேசம் நூறாண்டுகள்
ஸ்பெயினிடம் அடிமைப்பட்டு இருந்தது. இங்கிலாந்துக்கு அடுத்த படியாக அதிக
காலனிகளைக் கொண்டது ஸ்பெயின். அமெரிக்கா, கனடா தவிர பல வட அமெரிக்க
தென் அமெரிக்க நாடுகளை ஸ்பெயின் பிடித்து வைத்து ஆண்டு கொண்டிருந்தது. அந்த
ஸ்பானிய கலோனிய ஆட்சியை எதிர்த்து பிலிப்பைன்சின் புரட்சிப்படை 1896ல்
தன் கலகத்தை ஆரம்பித்தது.
போர்ட்டரிக்கோவை
ஆக்கிரமித்திருந்த ஸ்பானிய ஆட்சியை முறியடித்து அமெரிக்கா அதனைப் பிடித்துக்
கொண்டது. எனவே ஸ்பானிய அமெரிக்க சண்டை ஆரம்பித்தது. பிலிப்பைன்சிலும்
அமெரிக்கப்படை, ஸ்பானிய
ஆதிக்கத்தை எதிர்க்க,பிலிப்பைன்சின்
புரட்சிப் படை அமெரிக்கப் படையோடு கைகோர்த்தது. இந்தக் கூட்டு எதிர்ப்பை சமாளிக்க
முடியாத ஸ்பெயின் 1897ல் சமாதான
உடன்படிக்கையைச் செய்து கொண்டது. இதற்கு முன்னர் சண்டை உச்சக்கட்டத்தில்
இருக்கும்போது புரட்சிப் படைக்கு ஆயுதங்கள் கடத்தப்படுவதைத் தடுக்க லூட்டினன்ட்
யோசே மோட்டாவின் தலைமையில் 50 காசோடர்களை ‘பேலர்’ என்ற இடத்திற்கு அனுப்பியது. இது நடந்தது செப்டம்பர் 1897ல்.
‘பேலர்’ என்ற இந்த இடம் லஜான் என்ற இடத்தின் கிழக்குக் கடற்கரையில் மணிலாவிலிருந்து சுமார் 225 கி.மீ தொலைவில் உள்ள கடற்கரை நகரம். இந்த நகரத்தை கடல்வழி அணுகுவதுதான் சுலபம். நிலவழி மிகவும் ஆபத்தான காடுகள் சூழ்ந்த பகுதி.
இந்த 50 பேர் கண்காணிப்புத் தளங்கள் அமைத்து அந்த வழியே யாரும் புகுந்துவிடாதபடி பாதுகாத்தார்கள். ஆனால் அக்டோபரில் அவர்களுடைய நிலைகள் புரட்சிப்படையால் தாக்கப்பட்டு அதில் லூட்டினன்ட் மோட்டா உட்பட ஏழுபேர் உயிரிழக்க, பலபேர் காயமுற்றனர்.
பின் வாங்கிய மீதப்பேர் பாலரில் இருந்த ஒரு கத்தோலிக்க ஆலயத்தில் நுழைந்து அதையே கோட்டைபோல் அமைத்துக் கொண்டனர். சுற்றிலும் குழி வெட்டி அரணமைத்து இரவும் பகலும் விழிப்புடன் காவல் காத்தனர். புரட்சிப் படை அவர்களை முற்றுகையிட்டது. இது ஜூலை 1 1898ல் ஆரம்பித்து ஜூன் 1899 வரை ஒரு வருடகாலம் நீடித்தது.
ஸ்பானிய படை அமெரிக்கப்படையுடன் சமாதானம் செய்து கொண்டு தன் படைகளை பிலிப்பைன் நாட்டிலிருந்து விலக்கிக் கொண்டனர். புரட்சிப் படைகளுக்கு உதவி செய்ய வந்த அமெரிக்கப்படை பிலிப்பைன் நாட்டை ஆக்ரமித்துக் கொண்டது. அதனால் பிலிப்பைன் நாட்டுப் புரட்சிப் படைக்கும் அமெரிக்க ஆக்கிரமிப்பு படைகளுக்கும் சண்டை ஆரம்பித்தது.
இது எதுவுமே தெரியாமல் வெளியுலகிலிருந்து முற்றிலுமாக வெட்டப்பட்ட நிலையில் பாலரில் உள்ளே ஸ்பானியர் இருந்தனர்.
பலமுறை பல பேர் எடுத்துச் சொல்லியும், பத்திரிகைகளை அனுப்பியும், உள்ளே நோயால் உணவின்மையால் வாடி பலபேர் மடிந்தும் சரணடையாமல், எஞ்சிய ஸ்பானியப் படை உள்ளே தாக்குப் பிடித்தது. ஏனென்றால் உள்ளே பொறுப்பில் இருந்த மார்ட்டின் செரெசோ (Martin Cerezo) எதையும் நம்பத்தயாரில்லை. ஒரு கட்டத்தில் உணவு சேமிப்பும் தீர்ந்துவிட ஆலய வளாகத்தில் பயிரிட்டுக்கிடைக்கும்,பூசணிக்காய், இலை, ஆரஞ்சுகள், வாழைத்தண்டு, பெப்பர், தக்காளி ஆகியவற்றை உண்டு சமாளித்தனர். அதன்பின் அதுவும் முடிந்து போய் நீர் எருமைகளைக் கொன்று சாப்பிட்டனர். தோலை காலணி யாக்கிப் பயன்படுத்தினர். பின்னர், தெருநாய்கள்,பூனைகள், ஊர்வன காக்கைகள் ஆகியவற்றையும் உண்ண ஆரம்பித்தனர்.
Martin Cerezo) |
கடைசியில் மார்ட்டினின் நெருங்கிய நண்பன் பத்திரிக்கையில் கொடுத்த விளம்பரத்தைப் பார்த்துத்தான் சரணடைய ஒப்புக் கொண்டான். ஆலயத்தில் நுழைந்த போது 50 பேர் இருந்தனர். 11 மாத முற்றுகையில் 14 பேர் வியாதியால் இறந்தனர். 2பேர் காயங்களால் இறந்தனர். நான்கு பேர் தப்பித்து ஓடிவிட்டனர். அதில் 2 பேர் பிடிக்கப்பட்டு எதிர் அணிக்கு உதவியதால் உள்ளேயே தூக்கிலிடப்பட்டார்கள். வெளியே வரும்போது 30 பேர் தன் இருந்தனர்.
அப்போதிருந்த பிலிப்பைன் நாட்டின் முதல் ஜெனரல் எமிலியோ அகினல்டோ அவர்களை குற்றவாளிகளாகக் கருதாமல் நண்பர்களாக கருதவேண்டும் என்று சொன்னதால் அவர்கள் வெளியே வரும்போது மரியாதை செலுத்தப்பட்டது.
மூன்று மாதம் கழித்து அவர்கள் பார்செலோனா வந்து சேர்ந்தபோது வெற்றி வீரர்களாக அவர்களுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் மார்ட்டின் இதனை புத்தகமாக வெளியிட்டார். அந்தப் புத்தகத்தின் அடிப்படையில் உருவான திரைப்படம்தான் இது. 2016 டிசம்பரில் வெளிவந்த இந்தத் திரைப்படத்தின் திரைக்கதையை எழுதியவர் அலெயாண்ரோ ஹெர்னன்டலே, இயக்கியவர் சால்வடோர் கேல்வோ. மார்டினாக லுயிஸ் டோசர் அற்புதமாக நடித்திருக்கிறார்.
பீரியட் சினிமாக்கள் மற்றும் வரலாற்றை ரசிப்பவர்களுக்கு இந்த ஸ்பானிய மொழித் திரைப்படம் பிடிக்கும் என்பதில் சந்தேகமில்லை.
-முற்றும்.
என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும் உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக