Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வெள்ளி, 26 ஏப்ரல், 2019

ஜி.டி.நாயுடு



இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..

எங்கள் வாட்ஸ்சாப் குழுவில் இணைந்து கொள்ள இங்கே சொடுக்கவும்..
இப்பொழுதே இணைந்துகொள்



‘இந்தியாவின் எடிசன்’ என்று போற்றப்பட்ட மகத்தான கண்டுபிடிப்பாளர் ஜி.டி.நாயுடு. கோவை மாநகரம் இன்றும் தொழில்​முனைப்புக்கு முன்னுதாரணமாக விளங்குகிறது என்றால், அதற்கான விதைகளைப் போட்டவர்களில் முக்கியமானவர் ஜி.டி.நாயுடு. மோட்டார் வாகன மேம்பாடு, கேமரா, வானொலி, விவசாயம் எனப் பல துறைகளில் பிரமிக்கத்தக்கக் கண்டுபிடிப்புகளை உருவாக்கியவர் அவர். 
ஆரம்பப் பள்ளி மட்டுமே படித்திருந்த ஜி.டி.நாயுடு, பல தோல்விகளைத் தாண்டி இந்தியாவின் மிகச் சிறந்த கண்டுபிடிப்​பாளராகப் பரிணமித்தார். அவரைப் போன்ற ஒரு கண்டுபிடிப்பாளர் மேலை நாடு​களில் பிறந்திருந்தால், அரசுத் தலைவர்களுக்கு இணையான மரியாதையும், ஆதரவும் கிடைத்திருக்கும். ஆனால், தகுதியற்ற நடிகர்களைத் தலையில்வைத்துக் கொண்டாடும் நமது நாட்டில், அவரைப் போன்ற நிஜமான கதாநாயகர்களுக்கு  அவமரியாதையும், புறக்கணிப்பும்தான் பரிசாகக் கிடைத்தது.   

ஜி.டி.நாயுடு என்று அழைக்கப்படும் கோபால்சாமி துரைசாமி நாயுடு, 1893-ம் ஆண்டில் கோயம்புத்தூர் மாவட்டம், கலங்கல் கிராமத்தில் ஒரு விவசாயியின் மகனாகப் பிறந்தார். ஆரம்பப் பள்ளிக்கு சிறிதுகாலமே சென்று வந்தார். எழுதப் படிக்க கற்றுக்கொண்ட பின்னர், அவர் தனக்கு விருப்பமான நூல்களைத் தானே வாங்கிப் படித்து, தன் அறிவுத்திறனை வளர்த்துக்கொண்டார்.
இளம் வயதில், தன் கிராமத்திலுள்ள விவசாயக் கூலித் தொழிலாளர்கள் சிரமப்படுவதைப் பார்த்த அவர், அதிகக் கூலி கேட்டு வேலை நிறுத்தப் போராட்டம் செய்ய வழிகாட்டினார். கோவையிலிருந்த ஒரு தொழிற்சாலையில் சிறிது காலம் வேலைபார்த்தார் ஜி.டி.நாயுடு. அதன்பிறகு, நண்பர்களிடம் கடன் பெற்று, திருப்பூரில் பருத்தித் தொழிலில் இறங்கினார். விரைவில் லட்சாதிபதி ஆனார். பின்னர், தான் சம்பாதித்த பணத்தை பம்பாய்க்குக் கொண்டுசென்று, பெரிய அளவில் பருத்தி வியாபாரம் தொடங்கினார். அங்கிருந்த பருத்தித் தரகர்களுடன் போட்டிபோட முடியாமல் முதல் மொத்தத்தையும் இழந்து, வெறுங்கையுடன் ஊர் திரும்பினார்.

தோல்வியிலும் மனந்தளராத ஜி.டி.நாயுடு, அப்போது லாரி, பேருந்து போக்குவரத்தில் ஈடுபட்டிருந்த ஸ்டேன்ஸ் துரை என்ற வெள்ளைக்காரரிடம் வேலைக்குச் சேர்ந்தார். ஜி.டி.நாயுடுவின் திறமையையும், அர்ப்​பணிப்பையும் பார்த்து வியந்த ஸ்டேன்ஸ் துரை, அவரிடம் ஒரு பேருந்தைக் கடனாகக் கொடுத்து உதவினார். தானே முதலாளியாகவும் தொழிலாளியுமாக இருந்து முதன் முதலில் பொள்ளாச்சிக்கும் பழனிக்கும் பேருந்தை இயக்கினார் ஜி.டி.நாயுடு. பயணச்சீட்டு வழங்கும் இயந்திரத்தைத் தயாரித்து, பயன்படுத்தினார்.
 
இந்தியாவிலேயே முதன் முதலாக மின்சார மோட்டார் உற்பத்தி செய்தது, கோவை பீளமேட்டில் உள்ள அவரது நேஷனல் எலெக்ட்ரிக் ஒர்க்ஸ் என்ற தொழிற்சாலைதான். தொழில் துறையில் அவர் படைத்த சாதனைகள் ஏராளம். மோட்டார் ரேடியேட்டருக்கு இணையான ஓர் இயந்திரத்தைக் கண்டுபிடித்தார். அதனால், அவருடைய பேருந்துகளின் ரேடியேட்டருக்கு அடிக்கடி தண்ணீர் ஊற்ற வேண்டிய அவசியம் இல்லை. எஞ்சின் ஓடிக்கொண்டு இருக்கும்போதே அதன் அதிர்வுகளைச் சோதித்து அறிவிக்கும் இயந்திரத்தைக் கண்டுபிடித்தார்.
 

புகைப்படக் கலைஞர்களின் பாராட்டைப் பெற்ற டிஸ்டன்ஸ் அட்ஜஸ்டர் என்ற கருவி, பழச்சாறு பிழிந்தெடுக்க உதவும் ஒரு கருவி, உலகத் தரம் வாய்ந்த முதல் மின்சவரக் கத்தி, வெறும் 70 ரூபாய் விலையில் ஐந்து வால்வுகள் கொண்ட ரேடியோ, ஓட்டுப்பதிவு எந்திரம், மண்ணெண்ணெயால் இயக்கப்படும் காற்றாடி, இரும்புச் சட்டத்தில் உள்ள வெடிப்புகளைக் கண்டறியும் கருவி, விநோத உருவம் காட்டும் கண்ணாடி பிளேட்கள், காசைப் போட்டதும் பாடும் தானியங்கி இயந்திரம் என ஏராளமான கண்டுபிடிப்புகளைச் செய்த மேதை அவர்.
 
ஜி.டி.நாயுடு போட்டோ கலையிலும் அதிக விருப்பம் உள்ளவர். காந்தி, நேரு, சுபாஷ் சந்திரபோஸ், அம்பேத்கர், காமராஜர்
  போன்ற தலைவர்களை அரிய புகைப்படங்களாக அவரே எடுத்தார். 

1936-ம் ஆண்டு ஜெர்மனியில் நடைபெற்ற பொருட்காட்சியில் அவருடைய கண்டுபிடிப்புகளில் ஒன்றான சவரக் கத்தி, பிளேடு ஆகியவற்றுக்கு முறையே முதல் பரிசும், மூன்றாவது பரிசும் கிடைத்தன. தமிழகத்தில் பிளேடு ஆலையை அமைக்க அவர் முயற்சி எடுத்தார். அதற்குத் தேவையான எஃகை நார்வே நாட்டிலிருந்து இறக்குமதி செய்ய அவர் பெரும் பாடுபட்டார். ஆனால், பிரிட்டிஷ் அதிகாரிகள் ஏற்படுத்திய கெடுபிடிகளால் அந்த முயற்சி தோல்வியில் முடிந்தது.
 தனது கண்டுபிடிப்புக்கு 10 லட்சம் ரூபாய் கொடுக்க ஓர் அமெரிக்க நிறுவனம் முன்வந்த​போதும், பணத்தை வாங்கிக் கொள்ளாமல் தனது கண்டுபிடிப்புக்கான உரிமையை இலவசமாகவே வழங்கிவிட்டார் அவர். ‘‘அமெரிக்க நிறுவனத்தி​டமிருந்து 10 லட்சம் ரூபாயை வாங்கி,  இங்கிருக்கும் ஆங்கிலேய அரசுக்கு ஒன்பது லட்சம் ரூபாய் வரி செலுத்துவதைவிட, அதனை இலவசமாகக் கொடுப்பதே மேல்’’ என்று விளக்கம் கூறினார் ஜி.டி.நாயுடு. 

அன்றைய சூழலில் நாட்டிலேயே அதிக வரி செலுத்தியவர்களில் ஒருவராக ஜி.டி.நாயுடு இருந்தபோதும், அவரது சொத்தில் 90 சதவிகிதத்தை வரியாகச் செலுத்துமாறு பிரிட்டிஷ் அரசு நிர்பந்தம் செய்தது. அவர்மேல் வரி ஏய்ப்பு செய்பவர் என்ற அவப்பெயரும் சுமத்தப்பட்டது. 

கோபமுற்ற  ஜி.டி.நாயுடு, “நன்றியில்லாத அரசாங்கத்துக்குக் கொடுப்பதைக் காட்டிலும் எதுவுமே செய்யாமல் வெறுமனே இருந்துவிட்டு போய்விடுவேன்” என்று சபதமெடுத்தார். 1938-ம் ஆண்டு 18 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தன்னுடைய போக்குவரத்து நிறுவனத்துக்குச் சொந்தமான பேருந்துகளைக் கோவை வட்டார கழகத்தாரிடம் இலவசமாக ஒப்படைத்தார். 

சுதந்திரத்துக்குப் பிறகும், ஜி.டி.நாயுடுவின் கண்டுபிடிப்புகளுக்கு மத்திய அரசு ஊக்கம் அளிக்கவில்லை. இந்தியர்கள் யாராயிருந்தாலும் தனது கண்டுபிடிப்புகளை இலவசமாகப் பயன்படுத்திக்​கொள்ளலாம் என்று அவர் பகிரங்க அறிக்கைவிட்டார். இருப்பினும், அவரது உயர்ந்த நோக்கத்தை மத்திய, மாநில அரசுகள் மதிக்கவில்லை. அவரது தொழில் முயற்சிகளுக்குக் கெடுபிடிகள் தொடர்ந்தன. வெறுத்துப்போன ஜி.டி.நாயுடு, 1953-ல் சென்னைக் கடற்கரையில் மாபெரும் பொதுக்கூட்டத்தை நடத்தி, பெரியார், அண்ணா போன்ற தலைவர்கள்
  முன்னிலையில் ரேடியோக்​களையும் பல விஞ்ஞான கருவிகளையும் உடைத்து பர​பரப்பை உண்டாக்கினார்.

தொழில் மேதையான ஜி.டி.நாயுடு, விவசாயத் துறை ஆராய்ச்சியிலும் வல்லவர். போத்தனூரில் 40 ஏக்கர் பரப்பளவில் விவசாய ஆய்வுப் பண்ணை ஒன்றை அமைத்தார். நோபல் பரிசு பெற்ற சர்.சி.வி.ராமன், பொறியியல் மாமேதை
  விஸ்வேஸ்வரய்யா உள்பட பல அறிஞர்கள் அங்கு வந்திருந்தனர். பூசணிக்காய் அளவுக்குப் பெரிதாகக் காய்க்கும் பப்பாளி, 1,000 காய்கள் கொண்ட வாழைத்தார், 
விதைகளில்லா நார்த்தங்காய், விதைகளில்லா ஆரஞ்சுப் பழம் ஆகியவை இவருடைய கண்டுபிடிப்புகளில் சில. சோளச்செடிகளுக்கு ஊசிமூலம் மருந்து செலுத்தி, நட்ட சிறிதுகாலத்திலேயே 26 கிளைகளுடனும், 39 கதிர்களுடனும், 18 அடி உயரத்துக்கு வளரச் செய்தார். 11 அடி உயரம் வளர்ந்து காய்த்துக் குலுங்கிய அவரது அதிசய பருத்திச் செடிக்கு ‘நாயுடு காட்டன்’ என்று ஜெர்மானியர்கள் பெயர் சூட்டி கெளரவித்தனர். ஆயினும், இந்திய அரசாங்கம் அவரைக் கண்டுகொள்ளவேயில்லை.

‘‘வெறும் 2,500 ரூபாய்க்கு ஒரு சிறிய காரை தயாரிக்க முடியும்’’ (அந்தக் காலத்தில்!) என்றார் ஜி.டி.நாயுடு. அதற்கான புளூ பிரிண்டை மத்திய அரசுக்கு அனுப்பினார். அது மட்டும் நடந்திருந்தால், இந்திய கார்கள் உலகச் சந்தையைக் கலக்கியிருக்கும். குறைந்த செலவில் குறுகிய நேரத்தில் வீடு கட்டும் திட்டம் ஒன்றையும் நாயுடு தயாரித்தார்.   தொழிற்கல்வி மட்டுமே இன்றைய இந்தியாவுக்குத் தேவை என்று, பலமுறை வலியுறுத்தினார். 1945-ல் ஆர்தர் ஹோப் காலேஜ் ஆஃப் டெக்னாலஜியைத் தொடங்கி, 1949-ல் அதை அரசாங்கத்துக்குத் தானமாகத் தந்தார். சாதனைமேல் சாதனைகள் படைத்த ஜி.டி.நாயுடு, தனது 80-வது வயதில் காலமானார். 

ஒரு நாட்டின் எதிர்கால முன்னேற்றம் அந்த நாட்டு இளைஞர்களின் தரத்தைப் பொறுத்தே அமைகிறது என்று ஜி.டி.நாயுடு நம்பினார். ‘‘இன்றுவரை நான் படித்துள்ள புத்தகங்களின் எண்ணிக்கையைப் பற்றி மட்டும் உங்களுக்குக் கூற விரும்புகிறேன். விஞ்ஞானம்,பொறியியல் ஆகிய துறைகளைப் பற்றிய 18 ஆயிரம் புத்தகங்களும், உளவியல் தொடர்புடைய 3 ஆயிரம் நூல்களும் எனது நூலக அறையில் இருக்கின்றன. அவற்றை ஆழ்ந்து படித்ததின் மூலம்தான் ஓரளவுக்கு நான் அறிவு பெற்றேன். நீங்களும் இளம் வயதிலேயே அறிவு வேட்கையை வளர்த்துக்கொள்ளுங்கள்’’ என்று மாணவர்களுக்கு அறிவுரை கூறினார்.

1953-ம் ஆண்டு மதுரைக் கல்லூரியில் உரையாற்றியபோது அவர் இளைஞர்களுக்குக் கூறினார். ‘‘நம்பிக்கை, தைரியம், நேர்மைக்காகப் போராடும் குணம் ஆகியவற்றை வளர்த்துக் கொள்ளுங்கள். உயர்வான குறிக்கோளும், அறிவுத் தாகமும், அதற்கேற்ற உழைப்பும் இருந்தால் உங்களால் எதை வேண்டுமானாலும் சாதிக்க முடியும்.’’

என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும் உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள். 

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்..

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.

2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ இணைவோம் தமிழால்  குழுவிற்கு   முழு உரிமை உண்டு.

3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.

4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-இணைவோம் தமிழால்...

  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக