இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Join Our Telegram Channel
Join Our Whatsapp Group
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
இன்றைய உலகம் தொழில் நுட்பத்தை நோக்கித்தான் சென்று கொண்டிருக்கிறது. இன்றைய தலைமுறையினர் படிக்கும்போதும், படித்து முடித்தப்பிறகும் நாடிச்செல்லும் ஒரு விஷயம் கம்ப்யூட்டர் தான்.
இன்று பெரும்பாலும் இளைஞர்கள் தேர்ந்தெடுக்கும் ஒரு துறை ஐடி துறைதான். இன்று ஐடி துறை இவரால் பெரும் முன்னேற்றம் அடைந்துள்ளது.
இந்தியாவின் தகவல் தொழில்நுட்பத்தில் ஒரு பெரும் மாற்றத்தை உருவாக்கிய மாபெரும் தொழிலதிபர் இவர்.
தமிழகத்தில் உள்ள ஒரு சிறு கிராமத்தில் பிறந்து வளர்ந்த ஓர் பொறியியல் மாணவன், இன்று ஒரு பெரும் பன்னாட்டு நிறுவனத்தின் தலைவர். இன்று தொழில்நுட்பம் மற்றும் கணினி அறிவியல் துறையில் பெரும் சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கி இருக்கும் ஒரு மாபெரும் மனிதரை பற்றித்தான் நாம் இங்கு பார்க்கப்போகிறோம்.
இந்திய தகவல் தொழில்நுட்பத் துறையில், மாபெரும் சாதனைப் படைத்துவரும் 'ஷிவ் நாடார்", ஒரு மிகப்பெரிய தொழிலதிபர் ஆவார். இந்தியாவின் மிகப் பெரிய நிறுவனமான 'இந்துஸ்தான் பொறியியல் லிமிடெட்" (HCL)ன் தலைமை செயல் அதிகாரி மற்றும் 'ஷிவ் நாடார் அறக்கட்டளையின்" தலைவரும் ஆவார்.
தகவல் தொழில்நுட்பத் துறையைச் சேர்ந்த உலகின் முதல் 20 பணக்காரர்களின் பட்டியலில் தமிழகத்தைச் சேர்ந்த இவர் 14-வது இடத்தைப் பிடித்துள்ளார்.
சாதாரணமாக தன்னுடைய வாழ்க்கையை தொடங்கி, இந்தியாவில் விரல் விட்டு எண்ணக்கூடிய மிகப்பெரிய பணக்காரர்களுள் ஒருவராக வளர்ச்சியடைந்த ஷிவ் நாடார் அவர்களின் வாழ்க்கை வரலாறு மற்றும் சாதனைகளை பற்றி காண்போம்...
பிறப்பு :
ஷிவ் நாடார் அவர்கள், 1945 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 14ஆம் தேதி, தமிழ்நாட்டிலுள்ள தூத்துக்குடி மாவட்டம் 'மூலைப்பொழி" என்ற கிராமத்தில் சிவசுப்ரமணி நாடாருக்கும், வாமசுந்தரி தேவிக்கும் மகனாகப் பிறந்தார்.
ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி :
கும்பகோணத்திலுள்ள நகராட்சி மேல்நிலைப்பள்ளியில், தன்னுடைய பள்ளிப்படிப்பை தொடங்கிய ஷிவ் நாடார், மதுரையில் உள்ள அமெரிக்கன் கல்லூரியில் தனது உயர்நிலைப் பள்ளிப்படிப்பை முடித்தார். பிறகு கோவையில் உள்ள பி.எஸ்.ஜி. தொழில்நுட்பக் கல்லூரியில், மின் மற்றும் மின்னணு பொறியியல் துறையில் பட்டம் பெற்றார்.
பட்டம் பெற்ற ஷிவ் நாடார், பிறகு டெல்லி சென்று அங்கு டி.சி.எம் லிமிடெட் என்ற நிறுவனத்தில் ஒரு பொறியாளராக வேலைக்குச் சேர்ந்தார். ஆனால், சுயமாகத் தொழில் தொடங்க வேண்டும் என்ற ஆர்வம் ஷிவ் நாடாருக்கு அதிகரித்துக்கொண்டே இருந்தது.
பின்னர் அங்கு சொந்தமாக ஒரு வணிகத்தை எடுத்து நடத்தும் அளவிற்கான அனுபவத்தைப் பெற்ற பிறகு வெளியில் வந்த ஷிவ் நாடார், தனது நண்பர் மற்றும் பிற வணிகக் கூட்டாளிகளுடன் சேர்ந்து சொந்தமாக வியாபாரத்தைத் துவங்கினார். அதுவே இவ்வளவு பெரிய நிறுவனத்தை உருவாக்க காரணமாக இருந்தது.
முதல் வியாபாரம் :
மைக்ரோகாம்ப் என்ற பெயரில் முதன் முதலாக ஒரு நிறுவனத்தைத் துவங்கி அதன் மூலம் டிஜிட்டல் கால்க்குலேட்டர்களை விற்று வந்தார்.
ஏற்கனவே தொழில்நுட்பத்தில் அனுபவம் பெற்றதாலும், சிறந்த துணை நிறுவனர்கள் கிடைத்ததாலும் ஷிவ் நாடார் நினைத்தது போலவே நிறுவனத்தின் வளர்ச்சி நன்றாக அமைந்தது.
மைக்ரோகாம்ப் மூலம் கிடைத்த வருவாயை வைத்து அவர்களுடைய நண்பர்களும் இணைந்து, தன் கனவு நிறுவனமான HCL-ஐ நிறுவினார் ஷிவ் நாடார்.
அப்பொழுது நன்கு வளர்ச்சியில் இருந்த IBM சில காரணங்களால் இந்தியாவில் இருந்து வெளியேறியதால் HCL நிறுவனம் தங்கள் மைக்ரோ கணினியை இந்திய சந்தையில் பிரபலப்படுத்த ஓர் வாய்ப்பாய் அமைந்தது.
HCL உருவாக்கம் :
பின்னர் 1976-ம் ஆம் ஆண்டு HCL நிறுவனத்தைத் துவங்கினார். அதன் மதிப்பு இன்று பல நூறு கோடிகளைத் தாண்டும் அளவிற்கு இருக்கிறது.
இந்திய அரசு கணினி துறையை மாற்றி அமைக்கும் சில திட்டங்களை அறிவித்தது. அதாவது, அரசு கணினிக்கென தனி சந்தையை உருவாக்கி, தொழில்நுட்பங்களையும் இறக்குமதி செய்ய அனுமதித்தது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி HCL சொந்த பர்சனல் கணினியை தயாரித்து வெளியிட்டது.
அப்பொழுது இந்தியாவில் பர்சனல் கணினிக்கான தேவை அதிகரிக்கத் துவங்கியது. பல நாடுகளில் இருந்து கணினிக்கு தேவையானவற்றை படித்து அறிந்து பல ஆய்வுகளுக்கு பிறகு, மூன்றே வாரத்திற்குள் அவர்கள் முதல் கணினியை அறிமுகப்படுத்தினர். அதற்கு Busybee என்று பெயரிட்டு வெளியிட்டார்கள்.
உலக அளவில் கால் பதித்த ஷிவ் நாடார், HCL நிறுவனத்தை அமெரிக்காவிலும் நிறுவினார். ஆனால், அது எதிர்பார்த்த அளவு நிலைக்காமல் சற்று சறுக்கியது. ஷிவ் நாடார் மற்றும் அவரது நண்பர்கள் தங்களுக்கு ஏற்பட்ட தோல்வியால் துவண்டு போகாமல், அதிலிருந்து அனுபவத்தை மட்டும் எடுத்துக்கொண்டு அடுத்த கட்டத்திற்கு நகர்ந்தார்கள்.
1991ல் HP நிறுவனத்துடன் இணைந்தது HCL. மேலும், கணினியில் மட்டும் கவனம் செலுத்தி வந்த HCL, கணினியை தாண்டி மற்ற தொழில்நுட்பங்களான நோக்கியா மற்றும் எரிக்சன் சிவிட்சஸ் உடனும் கைக்கோர்த்தது.
முதலீடு :
HCL நிறுவனத்தை முதன்முதலாக ஷிவ் நாடார் துவங்கும்போது வெறும் 1,87,000 ரூபாய் முதலீட்டில் தான் துவங்கினார். இப்போது இந்த நிறுவனம் உலகம் முழுவதும் தனது வர்த்தகத்தைச் செய்து வருகின்றது.
பின் HCL, ஐ.டி மென்பொருட்களை விற்கவும், சிங்கப்பூர் தூரக் கிழக்குக் கணினி நிறுவனத்தை திறக்கவும் சர்வதேச சந்தையில் முதலீடு செய்தது.
வெளிநாடுகளில் நுழைவு :
வெளிநாடுகளில் தனது வணிகத்தைச் செய்ய விரும்பிய ஷிவ் நாடாருக்கு தகவல் தொழில்நுட்பத்துறை மிகப் பெரிய வாய்ப்புகளை அளித்தது. அவற்றையெல்லாம் திறம்பட கையாண்டு மிகப் பெரிய வெற்றிகளை எல்லாம் பெற்றார்.
தற்பொழுது HCL, 32 நாடுகளில் தங்கள் நிறுவனத்தை நிறுவி வெற்றிகரமாக நடத்தி வருகிறது. இது விண்வெளி மற்றும் பாதுகாப்பு துறைகளில் செயல்படுகிறது. வாகனம், நுகர்வோர் மின்னணு, ஆற்றல் மற்றும் பயன்பாடுகள், நிதி சேவைகள், தொழில்துறை உற்பத்தி, சுரங்கம் மற்றும் இயற்கை வளங்கள், வாழ்க்கை அறிவியல் மற்றும் சுகாதாரம், ஊடக மற்றும் பொழுதுபோக்கு, சில்லறை மற்றும் நுகர்வோர், எண்ணெய் மற்றும் எரிவாயு, தொலைத்தொடர்பு, பொது சேவைகள் போன்ற பல துறையில் தங்கள் பங்களிப்பை அளித்து வருகிறது இந்நிறுவனம். இப்போது நிறுவனத்தின் பெரும் பகுதியான பங்குகள் இவரிடம் இருக்கும் போதிலும் தனது நிர்வாகத்தை இப்போது இவர் வழிநடத்துவதில்லை.
தகவல் தொழில்நுட்பத்துறையில் ஆசிய அளவில் முதன்மை நிறுவனமாக உள்ள HCL நிறுவனத்தின் தலைவரான ஷிவ் நாடார் தனது ஊழியர்களுடன் இயல்பாகப் பழகக்கூடியவர்.
இவரது நிறுவனத்தில் பணிபுரியும் சிறந்த ஊழியர்களுக்கு மெர்சிடிஸ் பென்ஸ் கார், சம்பளத்துடன் விடுமுறை எனப் பல சலுகைகளை இவர் அளிப்பதினால், தகவல் தொழில்நுட்ப உலகில் மிகப்பெரிய அளவில் பேசக்கூடிய பெரிய ஜாம்பவானாக திகழ்ந்தார்.
ஷிவ் நாடார் அவர்களை இந்திய தகவல் தொழில்நுட்பத்தின் தந்தை என்றும் அழைக்கும் அளவிற்குத் தொழில்நுட்பத்துறையில் பல சாதனைகளை இவர் புரிந்துள்ளார்.
வருவாய் :
HCL நிறுவனம் மொத்த வருவாயான 5.4 பில்லியன் டாலரில் ஆண்டுக்கு 1 பில்லியன் டாலரை நிகர லாபமாகப் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
தந்தையின் மரபை பின்பற்றும் மகள் :
ஷிவ் நாடாரின் மனைவியின் பெயர் கிரண் நாடார். இத்தம்பதியருக்கு ஒரு பெண் பிள்ளை உண்டு. அவரின் பெயர் ரோஷினி நாடார். இப்போது HCL நிறுவனம் இவரது பொறுப்பில் தான் இயங்கி வருகின்றது.
கைவிட்டு எண்ண முடியாத அளவு ஓர் சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கிய ஷிவ் நாடார் HCL நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பொறுப்பை தன் ஒரே மகளான ரோஷினி நாடார் மல்ஹோத்ராவிடம் ஒப்படைத்தார். பொறுப்பை ஏற்ற ரோஷினி நாடார் தனது தந்தையை போலவே சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.
கல்வி நிறுவனம் :
ஷிவ் நாடார் தனது தந்தையின் நினைவாக சிவ சுப்பிரமணிய நாடார் பெயரில் தான் சென்னையில் உள்ள எஸ்எஸ்என் பொறியியல் கல்லூரியை நடத்தி வருகின்றார்.
விதியா கயான் பள்ளி :
ஷிவ் நாடார் மாணவ, மாணவிகளுக்கு இலவச கல்வி மற்றும் உதவித் தொகையை விதியா கயான் பள்ளி நிறுவனம் பெயரில் வழங்கி வருகிறார்.
ஷிவ் நாடார் அறக்கட்டளை :
தொழில்துறையில் மட்டும் தன்னை ஈடுபடுத்தி கொள்ளாமல், பொதுப்பணியிலும் தன்னால் முடிந்த பணிகளை செய்துவருகிறார். 2008ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஷிவ் நாடார் அறக்கட்டளை ஒன்றை நிறுவி, அதன் மூலம் பொருளாதாரத்தில் பின்தங்கிய ஏழை, எளிய மாணவ, மாணவிகளுக்கு கல்விக் கற்க உதவிகள் செய்து வருகிறார்.
ஷிவ் நாடார் அறக்கட்டளை வழங்கிய நன்கொடை :
நாட்டிற்காகவும், மக்களுக்காகவும், அறப்பணிகளுக்காகவும் நன்கொடை வழங்கிய தொழிலதிபர்கள் குறித்து மனித உரிமைகள் அமைப்பு ஒன்று ஆய்வு நடத்தியுள்ளது. இதில் தமிழகத்தின் ஷிவ் நாடார் முதலிடத்தை பிடித்துள்ளார். 73 ஆயிரம் கோடி சொத்துக்களை கொண்டுள்ள அவர் நாட்டின் பெரும் பணக்காரர்களில் 5வது இடத்தை பிடித்துள்ளார்.
மக்களுக்காகவும், நாட்டு நலப்பணிகளுக்காகவும் தனது அறக்கட்டளைகள் மூலம் 630 கோடி ரூபாய் வரை செலவிட்டுள்ளார். எஸ்.எஸ்.என் கல்லூரி, எஸ்.எஸ்.என் அறக்கட்டளை ஆகியவற்றின் மூலம் ஏழை எளிய மக்களுக்காக சுகாதாரத்துறையில் அதிக முதலீடுகளை ஒதுக்கி அறப்பணியாற்றி வருகிறார்.
ஷிவ் நாடாருக்கு கிடைத்த விருதுகள் :
2005ஆம் ஆண்டு CNBC, வணிகத்துறையில் சிறப்பாக செயல்பட்டதற்காக, பிசினஸ் எக்ஸலன்ஸ் விருது வழங்கி கௌரவித்தது.
2007ல் சென்னை பல்கலைக்கழகம், மென்பொருள் தொழில்நுட்பத்தில் இவரின் வளர்ச்சிக்காக இவருக்கு 'டாக்டர் பட்டம்" கொடுத்து கௌரவித்தது.
2008ஆம் ஆண்டில் இந்திய அரசு தகவல் தொழில்நுட்பத் துறையில் இவரின் மகத்தான பங்களிப்பிற்காக இந்தியாவின் மிக உயரிய விருதான 'பத்ம பூஷண் விருதை" அளித்து கௌரவித்தது.
2009ஆம் ஆண்டு, ஃபோர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிட்ட, ஆசிய அளவில் மனிதநேயம் மிக்கவர்கள் பட்டியலில் ஷிவ் நாடார் இடம் பெற்றார்.
2010ஆம் ஆண்டு டேட்டாக்விஸ்ட் பத்திரிக்கை இவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கௌரவித்தது.
2011ல் கரக்பூரில் உள்ள 'இந்திய தொழில்நுட்ப கழக" குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டார்.
தன்னுடைய வாழ்க்கையில் சரியான பாதையை தேர்ந்தெடுத்து, மிக விரைவில் இலக்கினை அடைந்து, குறுகிய காலத்திற்குள் ஷிவ் நாடார் தனது கடின உழைப்பால் புகழின் உச்சியை அடைந்துள்ளார் என்று சொன்னால் அது மிகையாகாது.
ஷிவ் நாடாருக்கு தன் வேலையில் ஏற்பட்ட அதிருப்தியே இந்நிறுவனம் தொடங்கக் காரணம். அதன்பின் ஒவ்வொரு வெற்றியை அடைந்த பிறகும் மேலும் மேலும் சாதிக்க முயன்றதே தற்பொழுது இவ்வளவு தூரம் வளர்ந்திருக்க ஓர் முக்கியக் காரணம்.
சாதாரண குடும்பத்தில் பிறந்து, 22 வயது வரை ஆங்கிலம் கூட பேச முடியாமல் இருந்த ஷிவ் நாடாரின் இந்த வளர்ச்சிக்கு காரணம் இவரின் தன்னம்பிக்கையும், விடாமுயற்சியுமே...!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக