இந்த செய்தியை
படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி
பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Join Our Telegram Channel
Join Our Whatsapp Group
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
உலகமே இன்று இணையத்தில்தான் இயங்கி
கொண்டிருக்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது. தற்போதைய சூழலில் இணையம் இன்றி
எதுவும் எல்லை என்றாகிவிட்டது.
முன்பெல்லாம் கடைக்கு சென்று, கூட்ட நெரிசலில்
ஆடைகளையும் மற்ற பொருட்களையும் பார்த்து பார்த்து வாங்குவர். ஆனால் தற்போது
எல்லாம் மாறிவிட்டது. ஒரு பட்டனை அழுத்தினால் போதும் எல்லாப் பொருட்களும் வீடு
வந்து சேரும்.
இதற்கு முக்கிய காரணம் தொழில்நுட்ப
வளர்ச்சியே. இன்று ஸ்மார்ட்போன் இருந்தாலே போதும் எல்லாம் நம் வசம்
என்றாகிவிட்டது. இதில் ஒன்றுதான் ஆன்லைன் ஷாப்பிங். பெரும்பாலானோர் ஆன்லைனில் புக்
செய்து தான் அதிகமாக பொருட்களை வாங்குகின்றனர்.
தற்போது இந்தியாவில் ஆன்லைன் வர்த்தகங்கள்
கொடிகட்டி பறக்கின்றன. ஒரு பொருளை வாங்குவதற்கு கடை கடையாக ஏறி அழைந்த காலமெல்லாம்
இப்போது இல்லை. மொபைலில் வீட்டில் உட்கார்ந்தபடியே வேண்டிய பொருட்களை ஆன்லைன்
ஷாப்பிங்கில் வாங்கிவிடுகிறோம்.
அப்படி ஆன்லைன் ஷாப்பிங்கில் முன்னணி
நிறுவனங்களில் ஒன்றாக இருக்கும் ஒரு கம்பெனி தான் பிளிப்கார்ட். இந்திய இளைஞர்கள்
இருவரால் உருவாக்கப்பட்டு, இந்தியா முழுவதும் பரவி இருக்கும் ஒரு நிறுவனம்தான்
இது.
'ஸ்டார்ட் ஆப்" நிறுவனமாக, பூஜ்யத்தில்
இருந்து உருவானதுதான் பிளிப்கார்ட் நிறுவனம். இரு இளைஞர்களின் அபாரத் திறமையால்
இந்திய ஆன்லைன் வர்த்தகத்தில் தனக்கென தனி முத்திரையை பதித்துள்ளது பிளிப்கார்ட்.
பிளிப்கார்ட் பெங்களுரை தலைமையிடமாக கொண்டு
இணையவழியாக பொருட்களை விற்பனை செய்யும் ஒரு வலைத்தளமாகும். இந்தியாவின் இணையவழி
பொருட்கள் விற்பனை நிறுவனங்களில் பிளிப்கார்ட் மிகப்பெரியதாகும்.
புத்தகம் முதல் எலக்ட்ரானிக் பொருட்கள் வரை
அனைத்து பொருட்களும் ஒரே இடத்தில் கிடைக்கும் வண்ணம் இந்த நிறுவனம்
உருவாக்கப்பட்டுள்ளது.
பெங்களுருவில் 2 பெட்ரூம் கொண்ட வீட்டில்
ஆரம்பிக்கப்பட்ட ஒரு சிறிய நிறுவனம், இன்று 8 லட்சம் சதுரடியில் ஒரு மிகப்பெரிய
நிறுவனமாக வளர்ந்துள்ளது. வெறும் 2 பேர் ஆரம்பித்த இந்த நிறுவனத்தில் இன்று
6,800க்கும் மேற்பட்டோர் பணிபுரிகின்றனர்.
ப்ளிப்கார்டின் அபார வெற்றிக்கு காரணமானவர்கள்
பின்னி பன்சால் மற்றும் சச்சின் பன்சால். இவர்கள் கடந்த வந்த பாதையை பற்றி
பார்க்கலாம்.
பின்னி பன்சால் இந்தியாவில் உள்ள சண்டிகரை
சேர்ந்தவர். இவருடைய தந்தை வங்கியில் ஓய்வுபெற்ற தலைமை மேலாளர். தாய் அரசாங்க
துறையில் பணியாற்றுபவர். இவர் டில்லியில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகத்தில்
கணினி பொறியியல் பட்டம் பெற்றவர். இவர் த்ரிஷா வாசுதேவ் என்பவரை திருமணம் செய்து
கொண்டார்.
சச்சின் பன்சால்..!!
சச்சின் பன்சால் இந்தியாவில் உள்ள சண்டிகரைச்
சேர்ந்தவர். இவர் செயின்ட் அன்னேஸ் கான்வென்ட் பள்ளியில் படித்தார். இவருடைய தந்தை
தொழிலதிபர் ஆவார். தாய் இல்லத்தரசி. இவர் டில்லியில் உள்ள இந்திய தொழில்நுட்பக்
கழகத்தில் கணினி பொறியியல் பட்டம் பெற்றவர். இவருடைய மனைவியின் பெயர் ப்ரியா
பன்சால்.
பின்னி பன்சால் மற்றும் சச்சின் பன்சால்..!!
பின்னி பன்சால் மற்றும் சச்சின் பன்சால்
இருவரும் 2004ஆம் வருடம் டெல்லி ஐஐடியில் படித்தனர். இவர்கள் இருவரின் கடைசி பெயர்
ஒன்றாக இருந்தாலும், இவர்கள் சகோதரர்களோ, உறவினர்களோ அல்ல. படிப்பை முடித்தவுடன்
பின்னி பன்சாலுக்கு அமேசானில் வேலை கிடைத்தது. இவர் அமெரிக்கா சென்று வேலையில்
சேர்ந்து பணிபுரிந்தார்.
அதற்குபின் 2-3 மாதங்கள் கழித்து சச்சின்
பன்சாலுக்கும் அமேசானில் வேலை கிடைத்தது. இவரும் அமேசானில் பணியில் இணைந்தார்.
அமேசானில் நல்ல வேலை, நல்ல சம்பளம் எல்லாம் நன்றாக போய்க்கொண்டிருந்தது.
இந்நிலையில் இருவருக்கும் ஒரு யோசனை
தோன்றியது. நாம் ஏன் அடுத்தவருக்காக வேலை செய்ய வேண்டும். நாமும் இதேபோல்
இந்தியாவில் ஒரு ஆன்லைன் ஸ்டோர் ஆரம்பித்தால் என்ன? என்பதுதான் அந்த யோசனை.
அதன்பின் இருவரும் அமேசானில் வேலையை விட்டு விட்டு இந்தியா திரும்பினர்.
சொந்தமாக நிறுவனம் ஆரம்பிக்க இந்தியாவில்
பெங்களுரு தான் சரியான இடம் என முடிவு செய்தனர். அதன்பின் ஆன்லைனில் புத்தகங்களை
விற்கலாம் என்ற யோசனையை முன் வைத்தனர்.
பெங்களுரில் 2 பெட்ரூம் கொண்ட
அப்பார்ட்மெண்ட்டை வாங்கி தங்களது நிறுவனத்தை தொடங்கினர். இணையத்தில் ப்ளிப்கார்ட்
என்ற வலைத்தளத்தை உருவாக்கி புத்தகங்களை விற்க ஆரம்பித்தனர்.
பின் பெங்களுருவில் இருக்கும் அனைத்து கடைகள்,
மால்கள், நூலகங்கள் போன்ற அனைத்து இடங்களுக்கும் சென்று 10% தள்ளுபடியில் அனைத்து
புத்தகங்களும் இங்கு கிடைக்கும். FREE Delivery செய்வதாகவும் விளம்பரம் செய்தனர்.
நிறுவனம் ஆரம்பித்து ஒருவாரம் ஆகியும் ஒரு
ஆர்டர்கூட இவர்களுக்கு வரவில்லை. ஒருவாரம் கழித்து ஆந்திரப் பிரதேசத்திலிருந்து
சந்திரன் என்பவர் Leaving Microsoft to Change the world என்ற புத்தகத்தை
ப்ளிப்கார்ட்டில் முதல் ஆர்டர் செய்தார். இருவரும் ஆர்டர் கிடைத்தவுடன்
சந்தோஷத்தில் ஆழ்ந்தனர்.
எனினும், எங்கு தேடியும் அந்த புத்தகம்
கிடைக்கவில்லை. இரண்டு நாட்கள் ஆகியும் அந்த புத்தகம் எங்கும் கிடைக்கவில்லை.
ஆகவே, பின்னி பன்சால் தனது முதல் வாடிக்கையாளருக்கு நாங்கள் எங்கு தேடியும் இந்த
புத்தகம் கிடைக்கவில்லை. இன்னும் மூன்று நாட்கள் கால அவகாசம் கொடுங்கள் இந்த
புத்தகத்தை எப்படியாவது வாங்கி கொடுக்கிறோம் என்று ஒரு மின்னஞ்சல் அனுப்பினர்.
வாடிக்கையாளரும் இதற்கு ஒப்புக்கொண்டார். பின்
பல கடைகளில் தேடி அலைந்து சப்னா புக்ஹவுஸ் என்ற ஒரு புத்தகக்கடையில் அந்த புத்தகம்
கிடைத்தது. அதை வாங்கலாம் என்றால் அன்று அவரது பணப்பையை எடுத்து வரவில்லை. எனவே,
தனது நண்பரிடம் கடன் வாங்கி அந்த புத்தகத்தை விலைக்கு வாங்கி அதை தனது முதல்
வாடிக்கையாளருக்கு Free Delivery செய்தார். அதன்மூலம் ப்ளிப்கார்ட்டிற்கு
நல்ல பெயர் கிடைத்தது.
2007ல் ஆரம்பித்த ப்ளிப்கார்ட் நிறுவனம்
அடுத்த ஒரு வருடத்தில் நல்ல வளர்ச்சியடைந்தது. ஆன்லைனில் புத்தகம் வாங்குவது
என்றால் அனைவரும் ப்ளிப்கார்ட்டை பரிந்துரைக்க ஆரம்பித்தனர். அதற்கு முக்கிய
காரணம் 10% தள்ளுபடி மற்றும் Free Door Delivery ஆகிய இரண்டும்தான்.
சில காலத்திற்கு பின் புத்தகங்கள்
மட்டுமல்லாமல் எலக்ட்ரானிக் பொருட்களையும் விற்றால் என்ன? என்ற யோசனையில் ஃபோன்,
பென்டிரைவ் போன்ற பொருட்களை விற்க முடிவு செய்தனர்.
ஆனால் அதற்கான பொருளாதாரம் அவர்களிடம்
இல்லாததால் உறவினர்களின் உதவியை நாடினர். அப்போது ஒரு முதலீட்டாளர் 1 மில்லியன்
டாலர் தொகையை ப்ளிப்கார்ட்டில் முதலீடு செய்தார்.
இதன்பின்னர் 2011-ல் பெங்களுரில் ஒரு
அலுவலகத்தை வாடகைக்கு எடுத்து பணிபுரிய ஆரம்பித்தனர். அதன்பின் இந்நிறுவனம்
400-500 பேர் பணிபுரியும் அளவிற்கு வளர்ச்சியடைந்தது.
ப்ளிப்கார்ட்டின் வளர்ச்சிக்கு மிக முக்கிய
காரணம் பொருளை வாங்கியபின் காசு கொடுக்கும் திட்டத்தை கொண்டுவந்ததால்தான்.
இந்தியர்களிடம் நம்பகத்தன்மையை
உருவாக்குவதற்கே பொருளை வாங்கியபின் காசு கொடுக்கும் திட்டம் கொண்டு வரப்பட்டது.
இதன்பின் ஆன்லைனில் பொருட்களை வாங்கும்
பழக்கம் மக்களிடையே அதிகரித்தது. இதனால் ப்ளிப்கார்ட் நிறுவனம் இந்தியா முழுவதும்
பரவ ஆரம்பித்தது.
ப்ளிப்கார்ட் நிறுவனம் 2014ஆம் ஆண்டு The Big
Billion Days என்ற ஒரு திட்டத்தை அறிமுகப்படுத்தியது. அந்நாளில் ஒவ்வொரு
பொருளுக்கும் குறைந்த விலையை நிர்ணயித்திருந்தனர். அன்று ப்ளிப்கார்ட்டில்
இருக்கும் ஒவ்வொரு பொருளுக்கும் ஒவ்வொரு சலுகைகள் மற்றும் ஆஃபர்கள்
கொடுக்கப்பட்டன.
இந்த நாளில் வீட்டு உபயோகப் பொருட்களுக்கான
சலுகைகளால் அனைவரும் ப்ளிப்கார்ட்டிலேயே பொருட்கள் வாங்கினர். அன்று ஒருநாள்
மட்டும் 5 லட்சம் போன்கள், 5 லட்சம் துணிமணிகள், 25 ஆயிரம் வீட்டு
உபயோகப்பொருட்களை விற்றனர்.
ப்ளிப்கார்ட்டின் இந்த வளர்ச்சியை கண்டு
சீனாவிலிருந்து Tencent என்ற கம்பெனியும், ஜப்பானிலிருந்து Soft Bank என்ற
கம்பெனியும் ப்ளிப்கார்ட்டில் 10 மில்லியன் டாலரை முதலீடு செய்தனர். இதன்மூலம்
ப்ளிப்கார்ட் நல்ல முன்னேற்றம் அடைந்தது மட்டுமல்லாமல் அதன் பங்கீடுகளும்
அதிகரித்தது.
சில ஆண்டுகளுக்கு முன்பு ஆன்லைன் வர்த்தகம்
இந்தியாவில் அதிகமாக பிரபலமடையாத சூழல், ஆன்லைனில் பொருட்களை வாங்க மக்களுக்கு
இருந்த அச்சம் என பல தடைகள் இருந்தன. இவற்றையெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக கடந்த
அவர்கள், தங்கள் வர்த்தகத்தை விரிவுப்படுத்தினர். அதிலும் எலெட்ரானிக்ஸ் பொருட்கள்
வர்த்தகம் அவர்களுக்கு பெரிய அளவில் கைகொடுத்தது.
குறிப்பாக மொபைல் போன் சந்தை பெரிய அளவில்
இந்தியாவில் விரிவடைய தொடங்கியது ப்ளிப்கார்ட்டுக்கு பெரிய உதவியாக அமைந்தது.
ஷோரூம் விலையை விட குறைவான விலையில் பொருட்களை விற்பனை செய்வது வாடிக்கையாளர்களை
பெரிதும் ஈர்த்தது.
ஆன்லைனில் பணம் செலுத்தினால் அது உரிய
முறையில் சென்றடையுமா? என்ற பயம் மக்களிடம் இருந்த நிலையில், கேஷ் ஆன் டெலிவரியை
அறிமுகம் செய்தது ப்ளிப்கார்ட்.
சரியான சேவையும், இருந்த இடத்தில் இருந்தே
பொருட்களை வாங்கும் வசதியும், இந்தியாவில் புதிதாக இருந்தாலும்,
வாடிக்கையாளர்களுக்கு அது வரப் பிரசாதமாக அமைந்தது. மக்கள் சிறிது சிறிதாக ஆன்லைன்
வர்த்தகத்திற்கு மாறத் தொடங்கினர். ப்ளிப்கார்ட் நிறுவனமும் வேகமாக வளரத்
தொடங்கியது.
ப்ளிப்கார்ட் நிறுவனத்தை முன்னணி ஆன்லைன்
வர்த்தக நிறுவனமாக வளர்த்த பின்னி பன்சால் மற்றும் சச்சின் பன்சால் ஆகிய
இருவருக்கும் நிறுவனத்தில் தலா 5 சதவீதம் என்ற அளவில் தான் பங்குகள் இருந்தன.
முதலீடு செய்ய அவர்களுக்கு அதிகமானோர் தேவைப்பட்டதால் மற்றவர்களின் முதலீட்டை
பெற்று நிறுவனத்தை நடத்தினர்.
சில ஆண்டுகளில் இந்திய ஆன்லைன் வர்த்தக
நிறுவனங்களில் முதலிடத்தை ப்ளிப்கார்ட் பிடித்தது. ஆன்லைனில் விற்காத பொருட்களே
இல்லை என்று சொல்லும் அளவிற்கு ஏராளமான பொருட்களை விற்கும் நிறுவனமாக ப்ளிப்கார்ட்
உயர்ந்தது.
விழா கால சலுகைகள், விலை குறைப்பு என சில்லறை
வர்த்தகத்தில் உள்ள வர்த்தக நுணுக்கங்களை இங்கும் பயன்படுத்தியதால்
ப்ளிப்கார்ட்டின் வளர்ச்சி அபாரமாக அமைந்தது.
இந்திய சந்தையை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு
வர வேண்டும் என கடும் முயற்சியில் இறங்கிய அமேசான் நிறுவனத்திற்கு, தனது முன்னாள்
ஊழியர்களால் தொடங்கப்பட்ட ப்ளிப்கார்ட்டே பெரும் போட்டி நிறுவனமானது. இதனால்
ப்ளிப்கார்ட்டை வளைக்கும் நடவடிக்கையில் அமேசான் நேரடியாக இறங்கியது.
ப்ளிப்கார்ட் நிறுவனத்தின் பெருமளவு பங்குகளை
வாங்க முன் வந்த அமேசான் நிறுவனம், அதற்காக பல கோடி ரூபாய் பணத்தை தருவதாக பேரம்
பேசியது. இந்த நிலையில் தான் மற்றொரு வர்த்தக அரசியல் அமேசானை தாக்கியது.
அமெரிக்காவின் முன்னணி ஆன்லைன் வர்த்தக
நிறுவனமும், அமேசானுக்கு பெரும் போட்டியாளராக விளங்கும் வால்மார்ட் களத்தில்
இறங்கியது. இந்திய சந்தையை அமேசான் பிடித்துக் கொண்டால் உலக அளவில் அதன் வர்த்தகம்
பெருகும் என்பதால் இதற்கு தடைபோட முன் வந்தது.
இறுதியாக இந்த போட்டியில் வென்றது வால்மார்ட்.
ப்ளிப்கார்ட்டின் 77 சதவீத பங்குகளை வாங்கியுள்ளது வால்மார்ட். அமேசான்
நிறுவனத்திற்கு சர்வதேச அளவில் போட்டியாக வால்மார்ட் நிறுவனம் விளங்குகிறது.
உலகின் மிகப்பெரிய வர்த்தக சந்தையான அமேசான்,
இந்தியாவில் கொடிகட்டி பறப்பதை விரும்பாத வால்மார்ட், ப்ளிப்கார்ட்டை வாங்க விலை
பேசியது.
அமேசான் தருவதாக அறிவித்த தொகையை விட கூடுதல்
தொகை, கூடுதல் பங்குகளை வாங்கவும் வால்மார்ட் முன் வந்தது. பூஜ்ஜியத்தில் இருந்து
தொடங்கி சுமார் பல லட்சம் கோடி ரூபாய் சொத்துக்களுடன் வளர்ந்துள்ள
ப்ளிப்கார்ட்டிற்கு இது பெரிய தொகை. எனவே வால்மார்ட்டிற்கு, ப்ளிப்கார்ட்
நிறுவனத்தின் 77 சதவீத பங்குகளை விற்கும் ஒப்பந்தம் போடப்பட்டது.
இருவரின் உழைப்பை நம்பி ப்ளிப்கார்ட்
நிறுவனத்தில் முதலீடு செய்த அவர்களது நண்பர்களுக்கும், வர்த்தக
பங்குதாரர்களுக்கும் எதிர்பாராத அளவிற்கு கூடுதல் லாபம் கிடைத்தது. அமெரிக்க
நிறுவனமான வால்மார்ட் இந்திய ஆன்லைன் வர்த்தகமான ப்ளிப்கார்ட்டின் 77% பங்குகளை
சுமார் 16 பில்லியன் டாலருக்கு வாங்கியது. அமெரிக்க நிறுவனம், இந்திய ஆன்லைன்
நிறுவனத்தினை இவ்வளவு விலை கொடுத்து வாங்கியிருப்பது இதுவே முதல்முறையாகும்.
அதைத் தொடர்ந்து ப்ளிப்கார்ட் நிறுவனர்களில்
ஒருவரான சச்சின் பன்சால் அந்நிறுவனத்தை விட்டு விலகினார்.
அதன்பின் ப்ளிப்கார்ட் நிறுவனத்தின் இணை
நிறுவனர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரியான பின்னி பன்சால் தனது பதவியை ராஜினாமா
செய்தார். மேலும், ப்ளிப்கார்டின் புதிய தலைமை செயல் அதிகாரியாக கல்யாண்
கிருஷ்ணமூர்த்தி நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர்கள் ப்ளிப்கார்ட்டை விட்டுச்சென்றாலும்,
ப்ளிப்கார்ட் எனும் மாபெரும் ஆன்லைன் வர்த்தகம் இந்தியாவில் உருவாக இவர்களே
காரணம். இவர்களின் தன்னம்பிக்கையும், விடாமுயற்சியும், சாமர்த்தியமுமே
ப்ளிப்கார்ட் உருவாக காரணமாக அமைந்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக