இந்த செய்தியை
படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி
பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
பெருந்தவம் இருந்து அரிய வரம் பெற்றது
எல்லாம் புராணக்காலம். வேண்டியவற்றை சிங்கிள் க்ளிக்கில் மைக்ரோ நொடிகளில் கண்டு அடைதல்தான்
கூகுள் காலம்.
இணைய ஜாம்பவானான கூகுள் இன்று உலகின்
தலைசிறந்த தேடுபொறி இயந்திரமாக செயல்பட்டு வருகிறது.
தற்போதைய காலத்தில் ஏதேனும் ஒன்றை தேடுவது
என்பது மிகவும் எளிதான விஷயமாகிவிட்டது. கூகுளில் ஏதேனும் ஒன்றை தேடினால் அதற்கான பதில்
ஒரு சில நொடிகளிலேயே கிடைத்துவிடுகிறது. நமது பெற்றோருக்கு தெரியாத விஷயங்கள் கூட கூகுளில்
உள்ளது.
கூகுளை விட என்னை புரிந்தவர் யாருமில்லை
என்று புதுமொழிகளும் கூட வந்துவிட்டது. இந்த புதுமொழிக்கு ஏற்றாற்போல் நாம் தேடும்
சொற்களை தவறாக உள்ளீடு செய்தாலும் அதை சரியாக புரிந்துக்கொண்டு அதற்கான பதிலை நமக்கு
கொடுத்துவிடும்.
கூகுளில் வரைபடங்கள், புகைப்படங்கள், வீடியோக்கள்,
செய்திகள் போன்ற எண்ணற்ற செயலிகளும் அடங்கியுள்ளன. இதன்மூலம் நம் தேடலுக்கான தெளிவான
பதில்கள் எளிதில் கிடைத்துவிடுகிறது.
இதுமட்டுமின்றி Playstore ,Drive ,
Translater என இன்னும் எண்ணிலடங்கா செயல்பாடுகளையும் கொண்டுள்ளது.
தேடுபொறிகள் பல இருந்தாலும் அனைவரும் எளிதாக
பயன்படுத்துவது கூகுள் தேடுபொறிதான். மற்ற தேடுபொறிகளை விட துல்லியமான, தெளிவான பதில்களை
உடனுக்குடன் கொடுக்கிறது இந்த கூகுள்.
மற்ற தேடுபொறிகளில் தேடலுக்கான பதில்கள்
துல்லியமாக கிடைக்காததால் அதற்கெனவே பிரத்யேகமாக உருவாக்கப்பட்டதுதான் கூகுள்.
'புதிதாக எதையாவது கண்டுபிடிக்க வேண்டும்.
அது இந்த உலகையே புரட்டிப்போட வேண்டும்" என்று மனதில் உருவான தேடல்தான், இன்று
மாபெரும் தேடுபொறியாக உருவெடுத்துள்ளது. அந்தத் தேடலின் நாயகன்... லாரி பேஜ்!
லாரி பேஜ், 1973ஆம் ஆண்டு மார்ச் 26ஆம்
தேதி அமெரிக்காவின் மிச்சிகனில் பிறந்தார். இவருடைய தந்தை கார்ல், மிச்சிகன் பல்கலைக்கழகத்தில்
கம்ப்யூட்டர் சயின்ஸ் பேராசிரியராக பணியாற்றினார். மேலும், இவருடைய தாய் குளோரியாவும்
கம்ப்யூட்டர் புரோகிராமிங் கற்றுக்கொடுக்கும் பணியில் இருந்தார்.
எனவே, லாரி பேஜ் சிறுவயதிலேயே கணினி ஞானம்
பெற்றிருந்தார். நடுநிலைப் பள்ளியில் படிக்கும்போதே, ஹோம்வொர்க்கை வேர்டு புரௌசரில்
டைப்செய்து பிரிண்ட் எடுத்துச் சென்று ஆசிரியரைத் திகைக்கச்செய்தார், லாரி பேஜ்.
கம்ப்யூட்டரையும் வீட்டில் இருக்கும் மற்ற
கருவிகளையும் பிரித்து ஆராய்ந்து, பின்பு அவற்றை ஒன்றுசேர்த்து சீர்செய்வது தான் அவரது
பொழுதுபோக்கு.
லாரி பேஜுக்கு சிறுவயதில், சரளமாக பேசுவதில்
தயக்கம் இருந்தது. இவரது தந்தை கார்ல், இதை களைய நினைத்தார். ஓய்வு நேரங்களில் மகனோடு
பல விஷயங்களில் விவாதங்கள் நடத்தினார். அந்தப் பயிற்சியால் பேசக் கற்றுக்கொண்டார் லாரி
பேஜ். இவரின் எட்டாவது வயதில், பெற்றோரின் விவாகரத்து நிகழ்ந்தது.
லாரி பேஜ் தனது 12-வது வயதில் கடந்த இரு
நூற்றாண்டுகளில் அசாத்தியக் கண்டுபிடிப்புகளை நிகழ்த்திய நிகோலா டெஸ்லாவின் வாழ்க்கைப்
புத்தகத்தை படித்தார். இயற்பியல், மின்சாரவியல், இயந்திரவியல் துறைகளின் அற்புத மேதை
டெஸ்லா. மாறுதிசை மின்னோட்டத்தைக் (யுஊ) கண்டறிந்தவர். ஆனால், டெஸ்லாவால் எடிசன் போல
வணிகரீதியாக வெற்றிபெற முடியவில்லை. தொழிலில் பல நஷ்டங்களைச் சந்தித்து, வறுமையில்
உழன்று தன் 87வது வயதில் ஒரு தோல்வியாளராகவே இறந்துபோனார்.
இவரது புத்தகத்தைப் படித்து முடித்து மனம்
உடைந்தார் லாரி பேஜ். கூடவே ஒரு விஷயமும் மனதில் பதிந்தது. 'கண்டுபிடிப்புகளை நிகழ்த்துபவன்
வெற்றியாளன் அல்ல, அதை உரிய முறையில் மக்களிடம் கொண்டுசேர்த்து சாதிப்பவனே உண்மையான
வெற்றியாளன்!"
பள்ளிப் படிப்புக்கு பின் லாரி பேஜ், மிச்சிகன்
பல்கலைக்கழகத்தில் பொறியியல் மாணவனாகச் சேர்ந்தார். அங்கே தலைமைப் பண்புடன் நிர்வாகத்தை
கற்றுக்கொள்வதற்கான வாய்ப்புகள் அவருக்கு அமைந்தன. கற்பனையாக ஒரு நிறுவனம் தொடங்கி,
அதில் கண்டுபிடிப்புகளை நிகழ்த்தி, அதைச் சந்தைப்படுத்தும் போட்டிகள் சிலவற்றில் தன்
நண்பர்களுடன் கலந்துகொண்டார்.
இதன்மூலம் லாரி பேஜ்-க்கு நிறைய அனுபவம்
கிடைத்தது. படிப்பு முடிந்ததும் கலிஃபோர்னியாவின் ஸ்டான்ஃபோர்டில் பிஹெச்.டி படிக்கும்
வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. இந்த இடத்தில் படிக்கலாமா? வேண்டாமா? என மாணவர்கள் கல்வி
வளாகத்தை சுற்றிப்பார்த்த பின் முடிவெடுக்கும் வசதி அமெரிக்காவில் உண்டு.
செர்ஜி பிரின் :
ஸ்டான்ஃபோர்டை சுற்றிவர லாரி பேஜுக்கு
உதவியாக உடன் வந்த சீனியர் மாணவர் செர்ஜி பிரின். இவர் ரஷ்யாவில் பிறந்து வளர்ந்தவர்.
யூத இனத்தைச் சேர்ந்த இவரது குடும்பம், பல அரசுக் கட்டுப்பாடுகளையும், சமுதாயக் கொடுமைகளையும்
சந்தித்தது.
செர்ஜியின் ஆறாம் வயதில் பெற்றோருடன் அமெரிக்காவுக்குப்
புலம் பெயர்ந்தார். அப்பா மேரிலாண்ட் பல்கலைக்கழகத்தில் கணிதப் பேராசிரியராகவும், அம்மா
நாசா விண்வெளி நிலையத்தில் விஞ்ஞானியாகவும் பணியில் சேர்ந்தார்கள்.
சிறுவயது முதலே செர்ஜிக்கு கணக்கு போடுவது
மிகவும் பிடிக்கும். இவரது ஒன்பதாவது வயதில் அப்பா ஹோம் கம்ப்யூட்டர் வாங்கித் தந்தார்.
இதற்குப் பிறகு, எப்போதும் கம்ப்யூட்டரோடுதான் இருப்பார். மேரிலாண்ட் பல்கலைக்கழகத்தில்
கணிதம், கம்ப்யூட்டர் இரண்டையும் விசேஷ பாடங்களாக எடுத்தார்.
இவர் எப்போதும் முதல் மதிப்பெண் தான் எடுப்பார்.
வகுப்பில் முதல் வரிசையிலேயே அமர்ந்திருப்பார். ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் கம்ப்யூட்டரில்
முதுகலைப் பட்டம் வாங்கியபின், பிஹெச்.டி படிப்பில் சேர்ந்தார். லாரி பேஜ்-யை இப்போதுதான்
முதன்முதலாக சந்திக்கிறார்.
லாரி பேஜுக்கும், செர்ஜி பிரினுக்கும்
தாங்கள் அறிவாளி என்னும் தன்முனைப்பு அதிகம். ஆகவே, இருவருக்கும் ஆரம்பத்திலேயே ஆகவில்லை.
கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டன. ஏட்டிக்குப்போட்டி போட்டனர். விவாதங்கள் பல புரிந்தனர்.
லாரி பேஜுக்கு, செர்ஜி பிரினை சுத்தமாகப் பிடிக்கவில்லை. ஆனால், ஸ்டான்ஃபோர்டு பிடித்திருந்தது.
அதனால் அங்கேயே சேர்ந்தார்.
பிஹெச்.டி-க்காக இணையம் சார்ந்த ஆராய்ச்சி
செய்ய, லாரி பேஜ் ஆசைப்பட்டார். 90-களின் பிற்பகுதியில்தான் இணையம் புகழ்பெற்று வந்தது.
தினமும் எண்ணற்ற இணையதளங்கள் முளைத்துக்கொண்டிருந்தன. சுவாரஸ்யம் இல்லாமல் இணையத்தில்
மேய்ந்துகொண்டிருந்த ஒரு பொழுதில் லாரியின் மூளைக்குள் ஒரு யோசனை பிரகாசித்தது.
யோசனை இதுதான் :
ஏபிசிடி.காம் என்ற இணையதளத்திற்கான இணைப்பு
(Link), வெவ்வேறு இணையதளங்களில் குறிப்பிடப்பட்டிருக்கலாம். அப்படி எத்தனை இணையதளங்களில்
ஏபிசிடி.காம் லிங்க் ஆகியிருக்கிறது எனக் கண்டறிவதன் மூலம் அந்த தளத்தின் 'புகழ் அளவை"
கணக்கிடுவதே லாரி பேஜின் அடிப்படை யோசனை.
'Backrub" என அந்த ஆய்வுக்கு பெயரிட்ட
லாரி பேஜ், அதற்கு Crawler என்ற புரோகிராமையும் எழுதினார். அது, குறிப்பிட்ட
இணையதளத்திற்கு இணையப்பக்கத்திற்கு எத்தனை பேர் லிங்க் கொடுத்திருக்கிறார்கள் என்ற
பட்டியலை சில நிமிடங்களில் கொட்டியது.
ஆனால், அந்த பட்டியலில் உள்ள எத்தனை இணையப்பக்கங்கள்
நிஜமாகவே தகவல்கள் உடையவை எனக் கண்டறிய வேண்டிய சவால் இருந்தது. அப்படி கண்டறிவதன்
மூலம், தகவல் செறிவு உள்ள பக்கங்களை பட்டியலின் முதல் வரிசையிலும், செறிவற்ற பக்கங்களை
பின்வரிசையிலும் தள்ளிவிடலாம் என நினைத்தார். இதற்காக, லாரி பேஜுக்கு அவரது எதிரியின்
உதவி தேவைப்பட்டது. அவர்தான் செர்ஜி பிரின்.
இணையம் என்ற பிரம்மாண்ட சமுத்திரத்தில்
எது தேவை, எது தேவையற்றது? எனத் தகவல்களை தரம் பிரிக்கும் ஆய்வு ஒன்றில்தான் செர்ஜி
அப்போது ஈடுபட்டிருந்தார்.
லாரி பேஜ், தன் ஆய்வு பற்றி சொன்ன யோசனை
செர்ஜிக்கு பிடித்திருந்தது. ஆகவே, 1996ஆம் ஆண்டு டாம் ரூ ஜெர்ரி போல் இருந்தவர்கள் Bsckrub ஆய்வுக்காக
நண்பர்கள் ஆனார்கள். இந்த தருணத்தில் லாரி பேஜின் தந்தை இறந்துபோக, துக்கத்தில் துவண்ட
நண்பனை, ஆய்வில் கவனம் செலுத்துமாறு மீட்டுவந்தார் செர்ஜி.
இணையத்தில் கொட்டிக்கிடக்கும் தகவல்களை
எல்லாம் எடுத்துச் சேமிக்க வேண்டும் என்றால் ஏகப்பட்ட கணினி சக்தி தேவைப்படும். அதனால்
அக்கம்பக்க உறவினர்கள், நண்பர்கள் என அனைவரிடமும் உள்ள கம்ப்யூட்டர்களை ஆய்வு முடியும்
வரை கடனாக கொடுங்கள் என கெஞ்சி கம்ப்யூட்டர்களை பெற்றனர்.
லாரி பேஜ், சுமார் ஏழரைக் கோடி இணையப்பக்கங்களை,
Page rank என்ற சூத்திரத்தின் அடிப்படையில் தரவரிசைப்படுத்தும் நுட்பத்தை உருவாக்கினார்.
செர்ஜி, ஒவ்வோர் இணையதளத்தின் தகவல்களை ஆராய்ந்து 'சூப்பர்", 'ஓ.கே", 'குப்பை"
எனச் சீர்தூக்கித் தரம் பிரிக்கும் சூட்சுமத்தை உருவாக்கினார். இருவரது கடுமையான உழைப்பில் Backrub வடிவம்
பெற்றது.
அதை இயக்கிப்பார்த்த ஸ்டான்ஃபோர்டின் பேராசிரியர்
ராஜீவ் மோட்வானி மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தார். 'நீங்கள் உருவாக்கி இருக்கின்ற
தொழில்நுட்பம் சாதாரணமானது அல்ல அட்சயப்பாத்திரம்"! என்று வியந்து கூறினார்.
அப்போது வரை, இணையத்தில் தேவையானதை துல்லியமாக
தேடி எடுக்கும் உபயோகமான ஒரு தேடல் இயந்திரம் (Search engine) இல்லை. வெறும் வார்த்தைகளைக்
கொண்டு தேடி, தேவையற்ற குப்பைகளை எல்லாம் தேடிக் கொட்டும் தெளிவற்ற தேடல் இயந்திரங்களே
இருந்தன.
உதாரணத்திற்கு, 'காந்தி" எனத் தேடினால்
வெறுமனே, 'காந்தி காந்தி காந்தி" என்ற வார்த்தை ஓர் இணையப்பக்கம் முழுவதும் நிரப்பப்பட்டு
இருந்தால், அது முதலில் பட்டியலாகி எரிச்சலைக் கொடுக்கும். Backrub உதவியோடு அந்த
தேவையற்ற பக்கங்களை நீக்கி, தேவையானவற்றை மட்டும் பேஜ்ரேங்க் அடிப்படையில் பட்டியலிட்டு
கொடுக்கும் தெளிவான தேடல் பொறியை உருவாக்குங்கள் என ராஜீவ் ஆலோசனை கொடுத்தார். அதன்பின்
லாரி பேஜ் மற்றும் செர்ஜி பிரின் இருவரும் தூக்கத்தை தொலைத்தனர்.
இந்த அற்புத ஆய்வுக்காக, ஸ்டான்ஃபோர்டு
நிர்வாகம் 10 ஆயிரம் டாலர் பணத்தை இவர்களுக்கு கொடுத்தது. லாரி பேஜ் இதை கொண்டு நவீன
கம்ப்யூட்டர்களை வாங்கவில்லை. விலை குறைந்த, அதே சமயம் செயல்திறன்மிக்க உதிரி பாகங்களை
வாங்கினார். சக்திமிக்க கணினிகளை தானே உருவாக்கிக்கொண்டார்.
ஒவ்வொரு இணையதளத்தையும் மொத்தமாக டவுன்லோடு
செய்து, வார்த்தை வார்த்தையாக தேடுவது கடினமான, நேரம் பிடிக்கும் காரியம் அல்லவா? ஆகவே,
தளங்களில் உள்ள தலைப்புகளை மட்டும் டவுன்லோடு செய்து, அதன் மூலம் தேடினால் சுலபம் என
யோசனை சொன்னார் லாரி பேஜ். இருவரும் கருத்து மோதல்களால் முட்டி மோதி, தேடலை எளிமையாக்கும்
வழிவகைகளை உருவாக்கினார்கள்.
கூகுள் பெயர் எப்படி வந்தது?
தேடல் இயந்திரத்திற்கு என்ன பெயர் வைக்கலாம்?
என்று இருவரும் யோசித்துக்கொண்டிருந்தனர். ஷான் ஆண்டர்சன் என்ற நண்பர் பரிந்துரைத்த
கூகுள் ப்ளெக்ஸ் என்ற வார்த்தையின் சுருக்கமாக 'கூகோள்" (Googol) என்ற பெயரைத்
தேர்ந்தெடுத்தனர். இவர்கள் கூகோள்.காம் (Googol.com) என்ற பெயரை சூட்ட தீவிரம் காட்டி
வந்தனர். Googol என்பதன் பொருளானது 1ஐ தொடர்ந்து 100 பூஜ்ஜியங்களை கொண்ட எண்ணை
குறிப்பதாகும்.
மேலும் இந்த பெயரை முன்னதாகவே சிலிக்கான்
பள்ளத்தாக்கு பொறியாளரால் பதிவு செய்யப்பட்டுவிட்டது. அப்போது அவர் அந்த பெயரை விட்டுத்தர
சம்மதிக்கவில்லை. தளத்தின் பெயரைப் பதிவு செய்யும்போது ஷான், தவறுதலாக Google.com எனப்
பதிவு செய்துவிட்டார். ஆரம்பத்திலேயே 'பிழை". ஆனால், சரித்திரப் பிழை.
கையில் அசாத்திய கண்டுபிடிப்பு ஒன்று இருக்கிறது.
அதை திறமையாக வணிகம் செய்து, மக்களுக்கு பயன்படும் விதத்தில் பரப்ப வேண்டும். இதில்
பணம் கிடைத்தால்தான் ஆய்வை அடுத்தடுத்த கட்டங்களுக்கு கொண்டு செல்ல முடியும். லாரி
பேஜும், செர்ஜி பிரினும் ஸ்டான்ஃபோர்டு ஆய்வுப் படிப்பில் இருந்து விடுமுறை எடுத்துக்கொண்டு
கூகுளை கவனிக்க களம் இறங்கினார்கள்.
லாரி பேஜ், கூகுள் தேடல் தொழில்நுட்பத்தை
மற்ற இணையதளங்களில் பயன்படுத்தும் வகையில் விற்க முயற்சி செய்தார். அவர் சொன்ன விலை
ஒரு மில்லியன் டாலர். 'தொழில்நுட்பம் சூப்பராக இருக்கிறது. காசுக்கெல்லாம் வாங்க மாட்டோம்.
தேடல் சேவையை வாங்குவதால், எங்களுக்கு என்ன லாபம்?" எனப் பலரும் ஒதுங்கிக்கொண்டனர்.
அந்த சமயத்தில் சன் மைக்ரோ சிஸ்டம்ஸ் நிறுவனர்களில்
ஒருவரான ஆன்டி பெக்டொல்ஷைமை லாரி பேஜும், செர்ஜி பிரினும் சந்தித்தனர். 'முட்டாள் தேடல்
இயந்திரங்களால்" வெறுப்பு அடைந்திருந்த இவருக்கு, கூகுள் மிகவும் பிடித்திருந்தது.
'இதில் நான் முதலீடு செய்கிறேன்" என Google.Inc என்ற பெயரில் ஒரு லட்சம்
டாலருக்கான காசோலையை எழுதி கொடுத்துவிட்டு சென்றுவிட்டார்.
இருவரும் மகிழ்ச்சியில் திளைத்தார்கள்.
ஆனால், Google.Inc என்றொரு நிறுவனமே இல்லையே. காசோலையை எப்படிப் பணமாக்குவது?
என யோசித்தார்கள். இந்த விஷயத்தை சொந்தங்கள், நண்பர்களிடம் சொன்னார்கள். 'ஆன்டி பெக்டொல்ஷைமே
முதலீடு செய்திருக்கிறாரா..?" என்ற வியப்பில் மேலும் சிறு முதலீடுகள் சேர்ந்தன.
கலிஃபோர்னியாவில் சூஸன் என்பவர், சிறு
அறையையும், கார் பார்க்கிங்கும் சேர்ந்த பகுதியை வாடகைக்கு இவர்களுக்கு கொடுத்தார்.
பூவா... தலையா போட்டுப்பார்த்து இருவரும் கூகுளில் பதவியை பிரித்துக்கொண்டார்கள். லாரி
பேஜ் கூகுள் தலைமை நிர்வாக அதிகாரியாகவும், செர்ஜி பிரின் இணை நிறுவனராகவும் பதவி
வகித்தனர். இவர்களுடன் மூன்றாவதாக கிரெய்க் என்கிற சக மாணவரும் இணைந்தார். 1998ஆம்
ஆண்டு டாப் 100 வலைதளங்கள் என PC Magazine வெளியிட்ட பட்டியலில் கூகுளும்
இடம்பிடித்தது.
1999ஆம் ஆண்டு, கூகுளுக்கு பெரிய அலுவலகம்
ஒன்றை அமைத்தார் லாரி பேஜ். பல கட்டங்களில் வடிகட்டி புதிய பணியாளர்களை சேர்த்தார்.
எந்த விளம்பரமும் இன்றி கூகுளின் பெயர் பரவியது. தினமும் கூகுளில் மட்டும் 70 லட்சம்
தேடல்கள்.
சர்ச் இன்ஜின்களின் சூப்பர் ஸ்டாராக கூகுள்
உருவெடுத்தது. ஆனால், வருமானம் தேறவில்லை. கூகுளில் விளம்பரங்களை அனுமதிப்பது மட்டுமே
வருமானத்திற்கு வழியாக இருந்தது. இணையத்தில் விளம்பரங்கள் என்றாலே லாரி பேஜுக்கு அலர்ஜி.
ஆனால், கூகுளின் ஆயுள் நீடிக்க விளம்பரங்கள்
தேவை என்ற கட்டாயத்தில் அதற்கு ஒப்புக்கொண்டார். ஆனால், கண்களை உறுத்தாத, யாரையும்
தொந்தரவு செய்யாத வரி விளம்பரங்களை மட்டுமே கூகுள் தேடலில் இடம்பெறும்படி பார்த்துக்கொண்டார்.
இதன்பின் வருமானம் கொஞ்சம் கொஞ்சமாக வரத் தொடங்கியது.
அதன் அடுத்தக்கட்ட வளர்ச்சியாக Fashion அறிமுகமானது.
தேடும் விஷயத்திற்கு ஏற்ப விளம்பரங்களை தேடுவது. அதாவது Fashion எனத்தேடினால்,
அருகில் உள்ள துணிக்கடை, நகைக்கடை (வரி) விளம்பரங்கள் தோன்றும் தொழில் யுக்திதான் அது.
இது கூகுளின் விளம்பர வருமானத்தை அதிகப்படுத்தியது.
2000ஆம் ஆண்டு கூகுள் தேடல் 10 மொழிகளில்
அறிமுகமானது. அடுத்தது பிரௌசர்களில் கூகுள் டூல்பார் அறிமுகமானது. அதாவது எந்த பிரௌசரிலும்
கூகுள் பக்கத்துக்கு செல்லாமலேயே கூகுள் தேடலை மேற்கொள்ளும் வசதி.
முதலில் டூல்பார் குறித்த ஐடியாவை வெஸ்லே
சான் என்கிற புராஜெக்ட் மேனேஜர் சொன்னப்போது, 'மொக்கை யோசனை" என கூறினார் லாரி
பேஜ். ஆனால், வெஸ்லே விடாப்பிடியாக டூல்பாரை உருவாக்கி, லாரியை இயக்கிப்பார்க்க செய்தார்.
இயக்கி பார்த்த லாரி பேஜ் அசந்துபோனார்.
அதுவரை 'அதிரடி பாஸ்" ஆக இருந்த லாரி
பேஜ், டூல்பார் விஷயத்துக்குப் பின், தன் அணுகுமுறையை மாற்றிக்கொண்டார். தன் பணியாளர்களின்
புதிய ஐடியாக்களை செயல்படுத்தி பார்ப்பதற்காகவே, வாரத்தில் ஓரிரு நாள் நேரம் ஒதுக்கினார்.
அதன்பின் கூகுள் பல பரிமாணங்களில் மெருகேற தொடங்கியது.
அமெரிக்காவில் நடந்த இரட்டை கோபுர தாக்குதலின்போது
அதுகுறித்த செய்திகளைத் தேடி இணையத்தில் நெரிசல் அதிகரிக்க, செய்தித்தளங்கள் செயலிழந்தன.
அப்போது கூகுள், மற்ற தளங்களின் செய்திகளை
எல்லாம் தொகுத்து கொடுத்து உலகை இளைப்பார செய்தது. அந்தக் கணத்தில் 'கூகுள் நியூஸ்"
சேவைக்கான தேவையை உணர்ந்து உடனடியாக அதையும் ஆரம்பித்தார் லாரி பேஜ்.
'தேவையை உருவாக்குதல் கடினம். ஆனால், தேவைப்படுவதை
மக்களின் எதிர்பார்ப்பைவிட சில மடங்கு அதிகத் தரத்துடன் செம்மையாக வழங்கினால் செழிப்பாக
ஜெயிக்கலாம்" இதுதான் லாரி பேஜின் பிசினஸ் ஃபார்முலா. அதற்காகவே 2002ஆம் ஆண்டு Google
Labs ஐ உருவாக்கினார். புதிய புதிய யோசனைகள் கூகுள் தயாரிப்புகளாக அங்கே செயல்வடிவம்
பெறத் தொடங்கின.
அதேசமயம் அக்கம்பக்கத்தில் தென்படும்
'ஐடியா"க்களையும் கூகுளுடன் இணைக்க லாரி பேஜ் தயங்கவில்லை. 2003ஆம் ஆண்டு புகழ்பெற்று
கொண்டிருந்த Blogger, 2006ஆம் ஆண்டு வீடியோ பகிர்வுகளால் ஹிட் அடித்துக்கொண்டிருந்த Youtube..
ஆகியன சில உதாரணங்கள். இதே சமயத்தில் கூகுள் இமெயில் சேவைக்கான (Gmail) ஆராய்ச்சிகள்
தொடர்ந்து நடந்து கொண்டிருந்தன.
மற்ற இமெயில் சேவைகளைவிட அதிவேகம், பல
புதிய வசதிகள் இரண்டும் முக்கியம் என்பது லாரி பேஜின் கட்டளை. புராஜெக்ட் மேனேஜர் பவுல்,
ஒருமுறை லாரி பேஜுக்கு ஜிமெயிலை பரிசோதித்து காண்பித்தப்போது, அவர் 'வேகம் பத்தாது"
என்றார். 'லோட் ஆக ஒரு செகண்டுதானே ஆகிறது" என்றார் பவுல். 'இல்லை, 600 மில்லிசெகண்டு
ஆகிறது. அது இன்னும் குறைய வேண்டும்" என்றார் லாரி பேஜ்.
2004ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 1ஆம் தேதி
ஜிமெயில் இறக்கப்பட்டது. மற்ற மெயில் சேவைக்காரர்கள், ஒரு நபருக்கு 20 எம்பி, 40 எம்பி
என கஞ்சத்தனம் காட்டிய இடத்தில், ஜிமெயில் ஒரு ஐ.டி-க்கு 1 ஜிபி காலி இடம் வழங்கி கவனத்தை
ஈர்த்தது. பின் அதிலேயே Gtalk என்ற அரட்டை சேவையை கொண்டு வந்தது. அந்த அரட்டை
தானாக 'ஹிஸ்ட்ரி"யில் பதிவாகிவிடும் வசதி இருந்தது. வந்த கொஞ்ச காலத்திலேயே ஜிமெயில்
உலகம் விரும்பும் உன்னத மெயிலாக ஆட்சியைப் பிடித்தது.
நல்ல லாபத்தில் இயங்க ஆரம்பித்திருந்த
கூகுள், 2004ஆம் ஆண்டு நாஸ்டாக் பங்குச்சந்தையில் பங்குகளை வெளியிட்டது. ஆரம்பத்திலேயே
சுமார் 1.2 பில்லியன் வரை கூகுள் திரட்ட, அன்றே லாரி பேஜும், செர்ஜி பிரினும் பில்லியனர்
ஆனார்கள்.
சம்பளம் தவிர, கூகுளின் பங்குகளையும் வைத்திருந்த
நூற்றுக்கணக்கான கூகுள் ஊழியர்கள் ஒரே பகலில் மில்லியனர் ஆனார்கள். கூகுள் புக்ஸ்,
கூகுள் மேப்ஸ், கூகுள் டிரான்ஸ்லேட், கூகுள் காலண்டர், கூகுள் குரோம் என அடுத்தடுத்து
ஹிட் அடித்துக்கொண்டிருந்த லாரி பேஜ், பல நாடுகளில் அலுவலகங்களை திறந்தார். இணையத்தின்
திசையெங்கும் கூகுள் ஆட்சி பரவ ஆரம்பித்தது.
அடுத்ததாக, மக்களின் கைபேசிகளில் கூகுளையும்
அதன் பிற சேவைகளையும் கொண்டுசெல்ல வேண்டும். லாரி பேஜ், அதற்கான வேலைகளில் 2004ஆம்
ஆண்டிலேயே இறங்கி இருந்தார்.
Android inc நிறுவனம் மொபைல்களுக்கான எளிய
ஆப்ரேட்டிங் சிஸ்டமை உருவாக்கும் பணிகளில் இருந்தது. 2005ஆம் ஆண்டு கூகுள், ஆன்ட்ராய்டை
வாங்கியது.
2007ஆம் ஆண்டு ஜூன் மாதம் வெளியான ஆப்பிளின்
ஐபோன்கள் பெரும் பரபரப்பை உருவாக்கின. ஏனெனில், ஆப்பிள் போனின் விலை அதிகம். எளியவர்களின்
மொபைலிலும் கூகுளின் சிறப்பை காண நினைத்த லாரி பேஜ், ஆன்ட்டி ரூபின் என்பவரோடு இணைந்து
உழைத்து, 2008ஆம் ஆண்டு ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போனை சந்தையில் களம் இறக்கினார். அன்று
முதல் இன்று வரை ஸ்மார்ட்போன் உலகம்... ஆன்ட்ராய்டு வசம்.
வெறும் தேடல் இயந்திரமாக தொடங்கிய கூகுளின்
தேடல்கள் எல்லையற்று விரிவடைந்துகொண்டே செல்கின்றன. இன்று மட்டுமல்ல, இனி என்றும் கூகுள்
இன்றி அமையாது உலகு என அழுத்தமாக நிரூபித்திருக்கிறார் லாரி பேஜ்!
லாரி பேஜுக்கு ஒரு நோக்கம் இருந்தது. அது
கூகுளின் தயாரிப்புகளை உலக மக்கள் அனைவரும் ஒரு நாளைக்கு இருமுறையாவது உபயோகிக்க வேண்டும்
என்பதுதான்.
எல்லோரும் விரும்பக்கூடிய ஒரு தொழில்நுட்பத்தை
உருவாக்கவேண்டும். அந்த தொழில்நுட்பம் எல்லோரிடமும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தவேண்டும்.
அழகாகவும், அதே அளவு வீரியத்துடனும் உருவாக்கும் தொழில்நுட்பத்தை மக்கள் தங்கள் டூத்பிரஸ்-ஐ
போல் ஒருநாளைக்கு இருமுறை பயன்படுத்த வேண்டும் என்று கனவு கண்டார்.
G for Google என்பது போல மற்ற எழுத்துக்களுக்கும்
கூகுளின் தயாரிப்புகளை சொல்ல வேண்டும் என்ற நோக்குடன் கூகுளின் கிளை நிறுவனமாக Alphabet ஐ
உருவாக்கினார்கள் லாரி பேஜும், செர்ஜி பிரினும்.
ஆல்பாபெட்டையும், கூகுளையும் திறமையான
ஒருவரிடம் ஒப்படைக்க வேண்டும் என நினைத்த இருவரும் நீண்ட ஆலோசனைக்கு பிறகு கூகுளில்
பணிபுரிந்து வந்த இந்தியரான சுந்தர் பிச்சையிடம் ஒப்படைக்க முடிவு செய்தனர்.
2004ம் ஆண்டு பணியில் சேர்ந்தது முதல்
கூகுள் நிறுவனத்தின் வளர்ச்சிக்கும், மேம்பாட்டிற்கும் பாடுபாட்ட சுந்தர் பிச்சையை
2015ஆம் ஆண்டு ஆகஸ்ட் 10ம் தேதி கூகுளின் சிஇஓவாக பணியில் அமர்த்தினர்.
லாரி பேஜின் திருமணம் :
2007ஆம் ஆண்டு லூசிண்டா சவுத்வொர்த் என்கிற
பெண்ணை திருமணம் செய்துகொண்டார் லாரி பேஜ். தற்போது இவர்களுக்கு இரண்டு குழந்தைகள்
உள்ளனர்.
லாரி பேஜுக்கு, பல வருடங்களாக குரல்வளையில்
பிரச்சனை உண்டு. அந்தப் பிரச்சனையினால் மீட்டிங்கில் சில முறை பேச முடியாமல் போனதும்
உண்டு.
கூகுளின் CEO லாரி பேஜ், இன்று உலகின்
சக்திமிக்க தலைமை நிர்வாக அதிகாரியாகவும் மற்றும் கண்டுபிடிப்பாளராகவும். அடுத்த இலக்காக
செயற்கை அறிவுத்திறன் சார்ந்த புராஜெக்ட்களில் தீவிரமாக இயங்கிக்கொண்டிருக்கிறார்.
அவர் எடுத்த முடிவுகளில் தோல்விகளும், நஷ்டங்களும், சறுக்கல்களும் உண்டு. இதை இவர்
எதிர்கொண்டதால் மட்டுமே இன்று உலகின் மாபெரும் மனிதராக உள்ளார்.
லாரி பேஜின் பிஸ்னஸ் தந்திரங்கள் :
புதிய யோசனையின் வெற்றி வாய்ப்பை மட்டும்
பாருங்கள். யோசனை சொல்பவர்களின் வயதையோ, அனுபவத்தையோ ஆராயாதீர்கள்!
எப்போதும் போட்டியாளர்களைக் கவனத்தில்
கொள்ளாதீர்கள்!
தேவைகளை உருவாக்காதீர்கள்... தேவைக்கேற்ற
கண்டுபிடிப்புகளை உருவாக்குங்கள்.
பலன் அளிக்காது என உறுதியாகத் தோன்றும்
விஷயத்தோடு மல்லுக்கட்டி, நேரத்தை விரயமாக்காதீர்கள்.
சிறந்த கண்டுபிடிப்புகள் கவனம் பெறும்.
ஆனால், உன்னதமான கண்டுபிடிப்புகளே உலகை ஆளும்!
உங்கள் திட்டத்தை நீண்ட காலத்திற்காக தீட்டுங்கள்.
சவால்களை ஏற்றுக்கொள்ளுங்கள்.
சரியான ஆட்களை தேர்ந்தெடுத்து பதவியில்
அமர்த்தி நீங்கள் அடுத்த கட்டத்திற்கு செல்லுங்கள்.
மாற்றங்களை சரியாக பயன்படுத்தி கொள்ளுங்கள்.
உங்கள் கனவுகளை பின்பற்றுங்கள்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக