இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு
செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து
கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Join Our Telegram Channel
Join Our Whatsapp Group
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
"முத்து
உறழ் மணல் எக்கர் அளித்தக்கால், முன் ஆயம்
பத்து
உருவம் பெற்றவன் மனம் போல, நந்தியாள்
அத்
திறத்து நீ நீங்க, அணி வாடி, அவ் ஆயம்
வித்தத்தால்
தோற்றான் போல், வெய் துயர் உழப்பவோ?"
மேலே
இருப்பது சங்க இலக்கிய நூல்களில் ஒன்றான கலித்தொகையில் வரும் 136வது பாடல்.
"முத்துப் போன்ற மணலில் நீ தலைவிக்கு அருள் செய்தாய். அப்போது அவள்
விளையாட்டில் பத்து எண்ணிக்கை உருவம் பெற்றவள் போல மகிழ்ந்தாள். அவளை விட்டுவிட்டு
நீ நீங்கியபோது அவள் தன் அங்கமெல்லாம் வாடி ஆயத்தாரின் தந்திரத்தால் தோற்றவர் போல
துன்பத்தில் உழல்கின்றாள். இப்படி அவள் துன்பத்தில் உழலலாமா?" என்பது இந்தப்
பாடலின் பொருள்.
தலைவியைத்
தலைவன் பிரிந்துசெல்ல, தலைவி படும் துன்பத்தைக் கூறும் பாடல் இது. இந்தப் பாடலில்,
"பத்து உருவம் பெற்றவன் மனம்போல" என்ற வார்த்தைகள், தாய விளையாட்டில்
பத்து என்ற எண்ணிக்கையை பெற்றவன் மனம் மகிழ்வதைச் சுட்டிக்காட்டுகிறது.
அப்படி
பத்து என்ற எண்ணைப் பெறுவதற்கு உருட்டப்படும் பகடைக்காய்கள் எப்படி இருந்திருக்கும்
என்பதை கீழடியில் கிடைத்திருக்கும் பகடைக்காய்கள் காட்டுகின்றன. தற்போது தாயத்தில்
உருட்டப்படும் தாயக்கட்டைகள் நான்கு பக்கங்களைக் கொண்டிருக்கின்றன. அவற்றை
உருட்டுவதால் ஒருபோதும் பத்து என்ற எண்ணைப் பெற முடியாது.
ஆனால்,
கீழடியில் கிடைத்திருப்பது போன்ற ஆறு பக்கங்களைக் கொண்ட பகடைக் காய்கள் பத்து என்ற
எண்ணைத் தரக்கூடியவை.
"சங்க
இலக்கியமான கலித்தொகையில் சொல்லப்படுவது போன்ற தாயக்கட்டைகள் இங்கே
கிடைத்திருக்கின்றன. சங்க காலத்தையும், கீழடியையும் இதை வைத்து இணைத்துப் பார்க்க
முடியும்" என்கிறார் ரோஜா முத்தையா நூலகத்தில் உள்ள சிந்துவெளி ஆய்வு
மையத்தின் இயக்குநரான ஆர். பாலகிருஷ்ணன்.
கீழடி
4ஆம் கட்ட அகழ்வாய்வில் மட்டும் இதுபோல 600 விளையாட்டுப் பொருட்கள் கிடைத்துள்ளன.
இவை ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் விளையாடக்கூடியவை. விளையாட்டிற்கு நேரம்
ஒதுக்கும் அளவிற்கு வேலைகளை நேரஒதுக்கீடு செய்துகொண்ட சமூகமாக அங்குள்ளவர்கள்
இருந்திருக்கக்கூடும் என்பதற்கான ஆதாரமாக இந்த காய்கள் இருக்கின்றன.
தமிழ்நாட்டின்
இரண்டாவது பெரிய நகரமாகக் கருதப்படும் மதுரை நகரம், வரலாற்றுக்கு முந்தைய
காலத்திலிருந்து தொடர்ச்சியாக மக்கள் வசித்துவரும் வெகுசில நகரங்களில் ஒன்று.
மதுரையிலும் மதுரையைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் வரலாற்றுக்கு முந்தைய
காலகட்டத்தைச் சேர்ந்த பல பொருட்கள் கிடைத்திருக்கின்றன. பல தொல்லியல் சின்னங்கள்
இப்போதும் இருந்துவருகின்றன.
மதுரையைச்
சுற்றியுள்ள சமணர் படுகைகளில் கி.மு. 500 முதல் கி.பி. 300 வரையிலான காலகட்டத்தைச்
சேர்ந்த பல எழுத்துகள் காணப்படுகின்றன. மதுரைக்கு வடக்கில் சில கற்காலக்
கருவிகளும் ஆவியூரில் பழங்கற்காலக் கருவி ஒன்றும் பிரிட்டிஷ் காலத்தில் மேற்கொண்ட
ஆய்வுகளில் கண்டெடுக்கப்பட்டன. 1987ஆம் ஆண்டில் தமிழக அரசின் தொல்லியல் துறை
உத்தமபாளையத்தின் எல்லப்பட்டி என்ற ஊரில் மேற்கொண்ட ஆய்வில் இரும்பு உருக்கும்
தொழிற்கூடப் பகுதி இருப்பது வெளியில் கொண்டுவரப்பட்டது.
இந்திய
விடுதலைக்கு முன்பாக அலெக்ஸாண்டர் ரீயா மதுரைக்கு அருகில் உள்ள பரவை, அனுப்பானடி
பகுதிகளில் அகழ்வாய்வு நடத்தினார். 1976ல் டி. கல்லுப்பட்டியில் அகழ்வாய்வு
நடத்தப்பட்டது. இதற்குப் பிறகு தமிழக தொல்லியல் துறை கோவலன் பொட்டல், அழகன் குளம்,
மாங்குளம் பகுதிகளில் அகழ்வாய்வுகளை மேற்கொண்டது.
இந்தப்
பின்னணியில்தான் இந்தியத் தொல்லியல் துறை வைகை நதிக்கரையின் இரு பக்கங்களிலும்
உள்ள 293 இடங்களில் கள ஆய்வு நடத்தி, பெருங்கற்காலத் தாழிகள், கல்வெட்டுகள்,
பண்டைய வாழ்விடப் பகுதிகள் கண்டறிந்தது. இதில் ஒரு இடம்தான் கீழடி.
இந்த
அகழ்வாய்வுப் பகுதி 110 ஏக்கர் பரப்பளவுள்ள, அதிக சிதைவில்லாத ஒரு தொல்லியல் மேடு.
இங்கே இந்திய தொல்லியல் துறை 2015, 16, 17ஆம் ஆண்டுகளில் அகழ்வாய்வு மேற்கொண்ட
நிலையில், 2017-18, 2018-19ம் ஆண்டுகளில் தமிழகத் தொல்லியல் துறை அகழ்வாய்வு
மேற்கொண்டது.
இதில்
2017-18ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட நான்காம் கட்ட அகழ்வாய்வின் முடிவுகள்தான்
இப்போது வெளியாகியுள்ளன. ஐந்தாம் கட்ட ஆய்வு தற்போது நடந்துவருகிறது.
தற்போது
வெளியாகியிருக்கும் கீழடி அகழ்வாய்வு முடிவுகளின் மிகப் பெரிய முக்கியத்துவமாக சில
விஷயங்களைச் சுட்டிக்காட்ட முடியும்.
கீழடி
அகழ்வாய்வு முடிவுகளின் முக்கிய அம்சங்கள்
முதலாவதாக,
தமிழ் பிராமி எழுத்தின் காலம் ஒரு நூற்றாண்டு பின்னோக்கிச் செல்வது. முன்னதாக
தமிழ் பிராமி எழுத்துகளின் காலம் கி.மு. மூன்றாம் நூற்றாண்டாகக்
கருதப்பட்டுவந்தது. கொடுமணல், பொருந்தல் ஆகிய இடங்களில் கிடைத்த தமிழ் பிராமி
எழுத்து பதிக்கப்பட்ட மட்பாண்டங்களின் காலம் கி.மு. 5ஆம் நூற்றாண்டு என
கணிக்கப்பட்டவுடன், அந்த எழுத்துகளின் காலம் மேலும் 2 நூற்றாண்டுகள் பழமையானது
என்ற முடிவு எட்டப்பட்டது.
இப்போது
கீழடியில் கிடைத்திருக்கும் எழுத்துகள் பொறிக்கப்பட்ட மட்பாண்டங்கள், கி.மு. ஆறாம்
நூற்றாண்டைச் சேர்ந்தவை என்பதால், தமிழ் பிராமி எழுத்துகளின் காலம் மேலும் ஒரு
நூற்றாண்டு பழமையானது என்ற முடிவுக்கு இது இட்டுச்செல்கிறது.
NADU
STATE ARCHEOLOGY DEPARTMENT
இரண்டாவதாக,
தமிழகத்தில் நடத்தப்பட்ட அகழ்வாய்வுகளில் இதுவரை நகர நாகரிகத்திற்கான அடையாளங்கள்
கிடைத்ததில்லை. ஆகவே, கி.மு. ஆறாம் நூற்றாண்டில் கங்கைச் சமவெளியில் இருந்ததைப்
போன்ற ஒரு நகர நாகரிகம் தமிழகத்தில் இல்லை என்றே கருதப்பட்டது.
ஆனால்,
கீழடியில் சுட்ட செங்கல்களால் ஆன வீடுகள், கழிவுநீர் போக்கிகள்,சுவர்கள், உறை
கிணறுகளுடன் கூடிய ஒரு பகுதி தோண்டியெடுக்கப்பட்டிருப்பதால், இது ஒரு நகர
நாகரிகமாகவே கருதப்படுகிறது. இது தமிழகத்தில் கிடைத்த நகர நாகரிகத்தை சுட்டும்
ஆதாரம் என்பதோடு, கங்கைச் சமவெளி நாகரிக காலகட்டத்திலேயே இங்கேயும் ஒரு நகர
நாகரிகம் இருந்தது என்பதை கீழடி அகழ்வாய்வு மூலம் நிறுவ முடியும்.
AMIL
NADU STATE ARCHEOLOGY DEP
மூன்றாவதாக
பானை ஓடுகளில் காணப்படும் பெயர்கள். பானைகள் சுடப்பட்ட பிறகு, அதில் பெயர்கள்
எழுதப்பட்டிருப்பதால் அவை அந்தப் பானையை வாங்கியவர்களால் எழுதப்பட்டிருக்கலாம்
எனக் கருதப்படுகிறது. வெவ்வேறு பானைகளில் வெவ்வேறுவிதமான எழுத்தமைதி இருப்பதால்,
பலரும் இதை எழுதியிருக்கலாம் என்றும் அந்த சமூகத்தில் பலரும் எழுத்தறிவு
பெற்றவர்களாக இருந்திருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.
"இந்த
ஆய்வு முடிவுகளுக்கும் சங்க இலக்கியத்திற்கும் என்ன தொடர்பு எனக் கேட்கிறார்கள்.
சங்கப் பாடல்கள் அந்த காலகட்டத்து மண்ணையும் மனிதர்களையும் பாடின. அந்தப்
பாடல்களுக்கான வரலாற்றுப் பின்னணியை இங்கே கிடைத்த பொருட்கள் உணர்த்துகின்றன. சங்க
காலப் பாடல்கள் காட்டும் தமிழ்ச் சமூக மிக உயர்ந்த நாகரீகம் கொண்டதாகத்
தென்படுகிறது. அப்படி ஒரு நாகரீகம் இருந்திருந்தால்தான், அம்மாதிரி பாடல்கள் உருவாகியிருக்க
முடியும். அதற்கான ஆதாரமாகத்தான் கீழடி இருக்கிறது" என்கிறார் ஆர்.
பாலகிருஷ்ணன்.
மற்றொரு
விஷயத்தையும் பாலகிருஷ்ணன் சுட்டிக்காட்டுகிறார். சிந்து சமவெளி குறியீடுகளுக்குப்
பிறகு தமிழ் பிராமி உருவாவதற்கு முன்பாக கீறல்கள் பானைகளில் எழுதப்பட்டுள்ளன. சிந்து
வெளிக் குறியீடுகளைப் போலவே இந்த கீறல்களையும் படிக்க முடியவில்லை. இம்மாதிரியான
பானைக் கீறல்கள் இந்தியாவிலேயே அதிகம் கிடைத்திருப்பது தமிழ்நாட்டில்தான்.
கீழடியில் மட்டும் 1001 பானைக் கீறல்கள் கிடைத்திருக்கின்றன. இது எழுத்து
உருவாவதைக் காட்டுகிறது. இம்மாதிரியான கீறல்கள் கங்கைச் சமவெளியில் பெரிதாகக்
கிடைக்கவில்லை என்கிறார் அவர்.
STATE
ARCHEOLOGY DEPARTMENT
மேலும்,
கீழடியில் வழிபாட்டுக்குரிய உருவங்கள் என குறிப்பாக சுட்டிக்காட்டும் வகையில்
பொருட்கள் ஏதும் காணப்படவில்லை. ஆனால், இதற்கு பொருள், அங்கு வசித்தவர்கள் எதையும்
வணங்கவில்லை என்பதல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். இம்மாதிரி வணங்குவதும் சமயச்
செயல்பாடுகளும் அவர்கள் வாழ்வின் முக்கியப் பகுதியாக இருக்கவில்லை என்பதைத்தான்
இது சுட்டிக்காட்டுகிறது. "சங்க இலக்கியத்தில் நிறைய பெண் தெய்வங்கள் உண்டு.
ஆனால், கீழடியில் வாழ்ந்த பழங்கால மக்கள் அவற்றைச் சுற்றி வாழ்வை அமைத்துக்கொள்ளவில்லை
என்ற முடிவுக்கு வரலாம்" என்கிறார் பாலகிருஷ்ணன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக