Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

திங்கள், 23 செப்டம்பர், 2019

மாணவர்களும்... ஆசிரியர் தினமும்..!

Image result for மாணவர்களும்... ஆசிரியர் தினம்..!
இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

 

Follow Us:

Join Our Whatsapp Group

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com



மாணவர்கள் கூடிக் கூடிப் பேசிக்கொண்டிருக்கிறார்கள். பள்ளிக்கூடமே ரகசியமாக பேசுவதில் களைக்கட்டியிருக்கிறது. எல்லோருக்கும் தெரிந்த விஷயம் ஆசிரியர்களுக்கு மட்டும் தான் அது ரகசியமாக இருந்தது.

டேய், அங்க என்னடாப் பேச்சு, காலாண்டுத் தேர்வுக்கு இன்னும் பத்து நாள் தான் இருக்கு. படிங்க, படிச்சத எழுதிப் பாருங்க, அடுத்த பீரியட் கேள்வி கேட்பேன்.

மாணவிகள் 'எ" குரூப், மாணவர்கள் 'பி" குருப் எந்த குரூப் அதிக மதிப்பெண் எடுக்குறாங்கன்னு பார்ப்போம். ஒரு கேள்விக்கு இரண்டு மார்க்கு.

வகுப்புக்கு முப்பது முப்பத்தைந்து பேர் இருப்பார்கள். எட்டாம் வகுப்பு வரை இருக்கிறது. சார், ஒரு கேள்விக்கு பாதி பதில் மட்டும் சரியாச் சொன்னால் பாதிமார்க்கு போடுவீங்களா?

பாதி மார்க்கு போட மாட்டேன். ஒரு மார்க்கு போடுவேன். ஆசிரியரின் பதிலைக் கேட்டு லேசாக சிரித்தார்கள். மாணவர்கள் சிரிக்க வேண்டும் என்றுதான் ஆசிரியர் அப்படிச்சொன்னார்.

ஆசிரியர் கேள்விகள் கேட்க மாணவர்கள் பதில் சொல்ல இருபக்கமும் மதிப்பெண்கள் முன்னும் பின்னும் உயர்ந்து கொண்டிருந்தது. வழக்கம்போல மாணவர்கள் பின்தங்கியும், மாணவிகள் முந்தியும் மதிப்பெண்கள் பெற்றனர். அதாவது 'எ" குரூப் வெற்றி பெற்றது. நாங்க தான் ஜெயிச்சோம், நாங்க தான் ஜெயிச்சோம் என்று மாணவிகள் சொல்லி சந்தோசப்பட்டுக் கொண்டார்கள். மாணவர்களும், கைத்தட்டிக் கொண்டார்கள். இது தான் சிறுவர்கள் அவர்களுக்கு காழ்ப்புணர்ச்சி இல்லை. போட்டி இருந்தது, பொறாமை இல்லை.

அடுத்த ஆண்டு நீங்கள் ஆறாம் வகுப்பிற்கு போய்விடுவீர்கள். அப்போது இந்த ஐந்தாம் வகுப்பில் படிக்கிறவர்கள் உங்களுக்குத் தம்பி, தங்கைகளாக இருப்பார்கள். இது ஒரு வளர்ச்சி இதை வளர்ச்சி என்கிறோம். இதை யாரும் தடுக்கவோ, தவிர்க்கவோ முடியாது. அதைப்போல மனவளர்ச்சியும் அதே விகிதத்தில் வளர வேண்டும். அது தான் சரியான வளர்ச்சி. உடல் வளர்ச்சிக்காக நீங்கள் உண்ணும் உணவை போல அறிவு வளர்ச்சிக்கும் நீங்கள் நிறைய படிக்கவேண்டும். அதனால நீங்கள் வகுப்பறையில் படிக்கிறது மட்டும் போதாது. பாடப்புத்தகங்கள் மட்டும் படித்தால் போதாது. வேறு பல புத்தகங்களும் நிறைய படிக்கவேண்டும், என்றார் ஆசிரியர்.

சார், நாளைக்கு வீட்டுப்பாடம் என்னது.

நாளைக்கு வீட்டுப்பாடம், போர்ட்ல நாலு தலைப்பு எழுதிப் போடுறேன், அதை உங்க நோட்ல எழுதிக் கொள்ளுங்க. முதலில் உங்கள் வீட்டில் இருக்கும் பொருட்களில் தினமும் பயன்படுத்துகிற பொருட்களின் பெயர், இரண்டாவது அடிக்கடி பயன்படுத்துகிற பொருள், மூன்றாவது எப்போதாவது பயன்படுத்துகிற பொருள், நான்காவது பயன்படுத்தபடாமல் சும்மா இருக்கிற பொருள். இந்த நான்கு தலைப்பின் கீழ் பொருட்களின் பெயர்களைப் பட்டியலிட வேண்டும். இது தான் இன்றைக்கு வீட்டுப்பாடம்.

மதிய உணவு இடைவேளைக்கு மணி அடித்தது. எல்லா வகுப்பறைகளிலும் சப்தம் எழுந்தது. அனைவரும் உணவருந்த செல்வதில் ஆர்வம் இல்லாமல் கூடிக்கூடிப் பேசுவதில் ஆர்வம் காட்டினர்.

ஒருவன் சொன்னான். டேய் நான் நாளைக்கு ஆசிரியர் தினத்திற்கு, நம்ம சாருக்கு ஒரு ஹீரோ பேனா வாங்கி கொடுக்க போறேன்.

அடுத்தவன் சொன்னான், டேய் நான் நம்ம சாருக்கு கேக் வாங்கி கொடுக்க போறேன் என்று சொல்லி சொடுக்கு விட்டுக் கொண்டான்.

டேய் நீ அஞ்சி ரூவா கேக்குதான வாங்கி கொடுப்ப, நாங்க நாலு பேரும் சேர்ந்து நம்ம சாருக்கு பெரிய ஸ்வீட் பாக்ஸே வாங்கி கொடுப்போமே என்று பெருமையடித்துக் கொண்டான்.

அருகில் நின்ற மணிமுத்து எல்லோரையும் மாறிமாறிப் பார்த்துக் கொண்டிருந்தான். இவன் எதுவும் சொல்லவில்லை. அப்படியே இவன் எதுவும் சொன்னாலும் யாரும் கேட்க மாட்டார்கள். ஏன் அவன் டவுசர் கூட கேட்காது. இடுப்பில் நிற்காமல் கீழே இறங்கிக் கொண்டிருக்கும்.

மணிமுத்து மாணவர் குழுவில் நிற்பான். அத்தனை பேரிலும் அவன்தான் ஒல்லியா, குள்ளமா இருப்பான் ஆனால் அவனை எந்த குழுவிலும் சேர்த்துக் கொள்ளமாட்டார்கள். அவனும் எந்தக்குழுவிலும் நிரந்தரமாக இணைத்து தோழமை பாராட்ட மாட்டான். பெரும்பாலும் தனியாகவே சுற்றுவான்.

மாணவர்கள் பேசுவதைக் கேட்டதும் மணிமுத்துவுக்கும் ஆசை, தானும் தனது ஆசிரியருக்கு ஏதாவது ஒன்று வாங்கி கொடுத்து ஆசிரியர் தின வாழ்த்து சொல்ல வேண்டும் என ஆவல் கொண்டான்.

அன்று மாலையே மாணவர்கள் பரிசுப்பொருட்கள் வாங்குவதில் ஆர்வமாக இருந்தார்கள். ஆசிரியருக்குப் பிடிக்குமா, பிடிக்காதா, தேவையா, தேவையில்லையா என்று கூட பார்க்காமல், அவர்கள் மனதிற்குப் பிடித்த பொருட்களை வாங்கி வைத்துக்கொண்டார்கள்.

வறுமைக்கு அடையாளம் காட்டுங்கள் என்றால் மணிமுத்துவின் அம்மா மலர்விழியைக் காட்டிவிடலாம். பெயரில் தான் மலர் இருக்கிறது முகத்தில் இல்லை. ஒட்டிய கன்னத்தில் சுருக்கங்களுடன் கோணல்மானலாக மூடியிருந்த தோல். வறுமை கோரத் தாண்டவம் ஆடியிருக்கிறது இந்த வீட்டில் என்று யாரும் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. பள்ளிக்கூடம் விட்டு வீட்டுக்கு வந்தான் மணிமுத்து. குடிசை வீட்டுக்குள் அம்மா மலர்விழி கடுங்காபி குடித்துக் கொண்டிருந்தாள். குடிசைக்குள் வரும்போது குனிந்து தான் வரவேண்டும். ஆனால் மணிமுத்து குதித்து குதித்து வரலாம். விரலுக்கேற்ற வீக்கம் என்பது போல குடிசைக்கேற்ற சொற்ப வளர்ச்சிதான் அவனுக்கு, வந்ததும் அம்மா மலர்விழியின் கழுத்தைக் கட்டிப் பிடித்து முகத்தில் முத்தமிட்டான். என்ன மணிமுத்து பண்டம் வேணுமா? உனக்கு பிடித்த எள்ளுமிட்டாய் ஒன்னு வாங்கி வச்சிருக்கேன். அதோ அம்மி மேல இருக்கு பாரு போய் எடுத்து தின்னு என்றாள். அதற்குத்தானே இந்த முத்தம் என்பது மலர்விழியின் கணக்கு.

அம்மா நான் ஒன்னு கேப்பேன் செய்வியா?

என்னடா வேணும் உனக்குப் பிடித்த எள்ளுமிட்டாய் போன வாரமே கேட்டியேன்னு வாங்கி வச்சிருக்கேன். இதைவிட உனக்கு வேற என்ன வேணும் என்றாள் அம்மா.

அதில்லம்மா…. இந்த… ந்த... நாளைக்கு ஆசிரியர் தினம். அதுக்குத்தான் எல்லா பையன்களும் எங்க சாருக்கு கிப்ட்டு வாங்கிக்கொடுக்கப்போறாங்க. அதான் நானும் ஒரு கிப்ட் வாங்கிக் கொடுக்கனும்மா...

ஒய்யாரமாம் கொண்டையாம். அதுக்குள்ள இருக்குதாம் ஈரும் பேனும். குடிக்கவே கஞ்சி தண்ணி இல்லையாம், வாத்தியாருக்கு கிப்ட் வாங்கி கொடுக்க போறானாம். கிப்ட். நீயேல்லாம் கிப்ட் வாங்கிக் கொடுக்கனும்ன்னா எதிர்பாத்துக்கிட்டு இருக்காரு, உங்க வாத்தியாரு, என்றாள் சற்று கோபமாக.

அம்மா வேணும்மா அம்மா காசு குடும்மா என்று நச்சரித்தவாறு மலர்விழியின் முழங்கையை சொரிந்தான். எரிச்சலடைந்த மலர்விழி கையைத் தட்டிவிட கோழி குஞ்சுபோல் தள்ளி போய் விழுந்தான்.

கிப்ட் வாங்க துட்டு வேணும்மாம் துட்டு, என்று சப்தம் போட்டவாறே தண்ணீர் பிடிக்க பிளாஸ்டிக் குடத்தைக் தூக்கிக்கொண்டு தெருமுனைக்கு போனாள், மலர்விழி. ஒரு நடை தண்ணீர் எடுத்துக்கொண்டு வீட்டில் நுழைந்தாள். மணிமுத்து படுத்துக்கிடந்தான். கண்ணீர் மட்டும் வடிந்திருந்தது.

டேய் பொழுது சாய்ற நேரம் ஆம்பள புள்ள படுத்துக் கிடக்கக் கூடாது. கொஞ்ச நேரம் தெருவுல போய் விளையாடு. பிறகு வந்து கஞ்சியக்குடிச்சுட்டுத் தூங்கு என்று வெளியே விரட்டிவிட்டாள்.

வெளியே சென்ற மணிமுத்து எங்கு செல்கிறோம் என்று தெரியாமல் போய்க்கொண்டிருந்தான். டேய் மணிமுத்து எங்கடாபோற என்ற குரல் கேட்டு திரும்பினான். அருகில் வகுப்பு மாணவன் குமார்.

டேய் மணிமுத்து பார்த்தியா சூப்பர் ஹீரோ பேனா. நம்ம சாருக்கு ஆசிரியர் தின பரிசு.. ஆமா நீ என்னடா வாங்கியிருக்க என்றான். உதட்டை பிதுக்கினான் மணிமுத்து... குமார் மகிழ்ச்சியில் துள்ளிக்குதித்து ஓடினான் வீட்டிற்கு.

மணிமுத்து நடையை தொடர்ந்தான். நடந்தவன் ஊருக்கு ஒதுக்குப்புறம் வந்துவிட்டான். அப்போது அவன் கண்ணில்பட்டது. காலியான பிராந்திப்பாட்டில். ஒரு கணம் யோசித்தவன் அதைக் கையில் எடுத்துக்கொண்டான். சற்று தள்ளிப் போனதும் மற்றொரு பாட்டில் கிடந்தது. அதையும் எடுத்துக்கொண்டான். அப்புறம் காலி பிராந்திப்பாட்டில்களை தேட ஆரம்பித்தான். சில பாட்டிகள் கிடந்தன. ஆவற்றை கையிலும், இடுப்பில் சொருகியும் வைத்துக் கொண்டான். ரோட்டை விட்டுக் கீழே இறங்கி மரத்தடிகளில் பாட்டில்களைத் தேடிக் கொண்டிருந்தான். அப்போது அந்தப்பக்கமாக மோட்டார் சைக்கிளில் வந்த வகுப்பாசிரியர் வண்டியை நிறுத்தி, டேய் மணிமுத்து இங்க என்னடா பண்ற வீட்ல உக்காந்து ஹோம் ஒர்க் செய்யாம ரோட்டு ஒரமா பிராந்தி பாட்டிலா பொறுக்கிக்கிட்டு திரியிற. நாளைக்கு ஸ்கூலுக்கு வா, அங்க வந்து வச்சிக்கிறேன் உனக்கு, என்று எச்சரித்து விட்டு கிளம்பினார்.

மிரட்சியோடு பார்த்தவன் சிறிது நேரம் அப்படியே நின்றான். பின்பு தனது சட்டையைக் கழற்றி பாட்டில்களை அதில் வைத்து சுருட்டிக்கொண்டு சென்றான் காய்லான் கடைக்கு. காய்லான் கடையில் பாட்டில்களைக் கொடுத்து காசு வாங்கினான். அந்த வழியாக வந்த அவனுடைய வகுப்பு மாணவன் குமார், டேய் கோட்டர் பாட்டிலா பொறுக்கி விக்கிற. நாளைக்கு நம்ம சார்கிட்ட சொல்றேன் பாரு என்று பயமுறுத்திட்டுப் போனான்.

காய்லான் கடைக்காரர் பாட்டில்களை வாங்கிக்கொண்டு ஐந்து ரூபாய் கொடுத்தார். மலர்ந்த முகத்துடன் பெற்றுக்கொண்ட மணிமுத்து ஒரே ஓட்டமாக ஓடினான் பாய் கடைக்கு. மூச்சிரைக்க ஓடியவன் பாய் கடை முன்பு நின்று முதலில் மூச்சு வாங்கினான். மூச்சு வேகமாக உள்ளேயும், வெளியேயும் சென்றதால் வாயால் என்ன வேண்டும் என்று சொல்ல முடியாமல் கையை நீட்டி ஒரு பேனாவை சுட்டிக்காட்டினான்.

மணிமுத்து சுட்டிக்காட்டிய பேனாவை எடுத்துக் காட்டினார் பாய். இந்தாப்பா பச்சை கலர் பேனா, அஞ்சு ரூபாய என்றார் பாய்.

இப்போது கொஞ்சம் ஆசுவாசமடைந்த மணிமுத்து சொன்னான். பச்சை கலர் பேனா வேண்டாம் அந்த சிவப்புக்கலர் பேனா தாங்க என்று சுட்டிக்காட்டிச் சொன்னான். பாய் சிவப்புக்கலர் பேனாவைக் கொடுத்துவிட்டு அவனைப் பார்க்க அவனது முகத்தில் பிரகாசம் தெரிந்தது. ஐந்து ரூபாயைக் கொடுத்து விட்டு கைவீசி வீறுநடை போட்டு வீடு சென்றான்.

முதலில் பேனாவைப் பத்திரமாக தனது புத்தகப் பையில் வைத்துக் கொண்டான். இரவில் சாப்பிட்டுத் தூங்கியவனுக்கு இடையில் முழிப்புத்தட்டியது. தலைமாட்டில் இருந்து புத்தகப் பைளைத் திறந்து பேனாவை எடுத்துப் பார்த்து, கொண்டான். பின்பு தூங்கினான். காலையில் எழுந்ததும் குளித்துவிட்டு சாப்பிட்டான். பின்பு பள்ளிக் புத்தகப் பையைத் திறந்து பேனாவை எடுத்து சுத்திப் பார்த்தான் மிகவும் அழகாக இருந்தது, அவனுக்கு. மீண்டும் புத்தகப்பையில் தினித்துக் கொண்டு கிளம்பும் போது முந்தின நாள் அவனுடைய அம்மா அவனுக்குப் பிடித்த எள்ளுமிட்டாய் வாங்கிக்கொடுத்தது அம்மி மேல் இருந்தது. பள்ளிக்கு போகிற அவசரத்தில் அதை எடுத்து டவுசர் பையில் போட்டுக்கொண்டு வேகமாக ஓடினான். மீண்டும் திரும்பி உள்ளே வந்து அம்மா டாடா என்று வழக்கமாக சொல்வதைச் சொல்லிவிட்டு ஓடினான்.

வகுப்பில் எல்லா மாணவர்களும் தனது ஆசிரியருக்கு வாழ்த்துச் சொல்ல ஏதோதோ வாங்கிக்கொண்டு வந்திருந்தனர். ஒருவன் சாக்லேட் வைத்திருந்தான். இன்னொருவன் வாழ்த்து அட்டை வாங்கி அவனது பெயரை அதில் எழுதி வைத்திருந்தான். மாணவிகள் பிளாஸ்டிக் பூ மற்றும் சாக்லெட், சாவிக் கொத்து என்று ஏகமாக வைத்திருந்தனர். தன் சக மாணவ-மாணவியரிடம் காண்பித்து பெருமைப்பட்டு கொண்டனர். மணிமுத்து எல்லோருடைய கிப்ட்களையும் பார்த்தான். ஆனால் அவனுடைய கிப்டை யாரிடமும் காட்டவில்லை.

ஆசிரியர் வகுப்பறைக்குள் நுழைந்தார். சலசலத்துக்கொண்டிருந்த மாணவர்கள் இப்போது சப்தம் இன்றி அமைதியானார்கள். முதலில் யார் வாழ்த்துச் சொல்லி ஆசிரியரிடம் கிப்டை கொடுப்பது என்பது போல் ஒருவருக்கொருவன் பார்த்துக்கொண்டனர். டேய் மணிமுத்து, இங்க வாடா ஆசிரியர் அழைத்தார்.

மணிமுத்து தயங்கி தயங்கி ஆசிரியர் முன் வந்தான்.

டேய் ஸ்கூல் முடிந்து வீட்டுக்கு போனா, ஹோம் ஒர்க் செய்யனும். அதை விட்டுட்டு காடுமேடா அலையுறது, சாக்கடைக்குள்ளேயும் முள்ளுக்காட்டுக்குள்ளேயும் சுத்துறது, படிக்கிற பிள்ளைக்கு அழகாடா? என்று திட்டியவாறு தலையில் ஒரு கொட்டு கொட்டினார். முதுகில் ஒரு அடி போட்டார். மணிமுத்துவுக்கு வலித்தது.

இனிமேல் கண்ட இடத்தில் எல்லாம் சுற்றக்கூடாது என்று காதைத் திருகி எச்சரித்து, போடா இடத்திற்கு என்று அதட்டி அனுப்பினார்.

எல்லோரும் மணிமுத்துவையே பார்த்தனர். அவனுக்கு அவமானமாக இருந்தது.

ஒரு மாணவன் எழுந்து தான் வாங்கி வைத்திருந்த கிப்டை கையில் எடுத்துக்கொண்டு எழுந்து ஆசிரியர் அருகில் முதலில் சென்று, சார் ஹேப்பி டீச்சர்ஸ் டே! என்று சொல்லி கிப்டை ஆசிரியரிடம் கொடுத்தான்.

ஓ! தேங்யூ தேங்யூ வெரிமச் என்று அவனுக்கு கைக்கொடுத்து நன்றி தெரிவித்தார். உடனே மற்ற மாணவர்களும் அவரவர் தாங்கள் வாங்கி வந்திருந்த கிப்டை ஆசிரியரிடம் கொடுத்து வாழ்த்து சொன்னார்கள். பதிலுக்கு ஆசிரியர் நன்றி சொல்லி மகிழ்ச்சியோடு அவர்களுடன் கைக்குலுக்கிக் கொண்டார்.

ஓவ்வொரு மாணவ-மாணவியரும் வழங்கிய கிப்ட் பொருட்களையும், இனிப்புகளையும், மாணவர்களின் மனம் நோகாமலிருக்க புன்சிரிப்புடன் வாங்கி அவற்றை மேசை மீது வைத்தார்.

கடைசியாக மணிமுத்து தயங்கி தயங்கி ஆசிரியர் அருகில் சென்று சார் ஹேப்பி டீச்சர்ஸ் டே என்று வார்த்தைகளை உதிர்த்து தான் வாங்கி வைத்திருந்த பேனாவை ஆசிரியரிடம் கொடுக்க நீட்டினான். அப்போது குமார் எழுந்து சார் அந்த பேனாவை வாங்காதீங்க சார். சார் மணிமுத்து நேத்து சாயங்காலம் பிராந்தி பாட்டில் பொறுக்கி, காய்லான் கடையில் போட்டு காசுவாங்கிட்டு வந்து, அந்தக் காசுலதான் இந்தப்பேனாவை வாங்கினான். அதான் அந்தப் பேனாவ வாங்காதீங்க சார் என்று படப்படத்து சொல்லி முடித்தான் குமார். ஒரு கனம் திகைத்த ஆசிரியர் மணிமுத்துவைப் பார்த்தார். அவன் சிவப்புகலர் பேனாவை நீட்டியவாறு நின்று கொண்டிருந்தான். குமாரையும், ஆசிரியரையும் பாவம் போல் மாறி மாறிப் பார்த்தான், மணிமுத்து.

ஆசிரியர் மணிமுத்துவிடம் அந்த பேனாவை வாங்கினார். அந்த பேனாவை மட்டும் தனது சட்டைப் பையில் சொருகிக்கொண்டார். சட்டென்று மணிமுத்து தனது பையில் வைத்திருந்த எள்ளுமிட்டாயை ஆசிரியரிடம் நீட்டினான்.

எள்ளுமிட்டாயை வாங்கிய ஆசிரியர், அதை கடித்து சாப்பிட்டார்.

உணர்ச்சிவசப்படுபவராய் மணிமுத்துவை தோளில் தட்டிகொடுத்தார்.

கதையை தொகுத்தவர்,
அகஸ்டியன் ஆசிரியர்,
தென்காசி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக