இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Join Our Telegram Channel
Join Our Whatsapp Group
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
ஆசிரியர் சந்திரன் இன்று பள்ளிக்கூடம்
வரவில்லை. உறவினர் வீட்டில் விசேஷமாம். அவருக்கு மட்டுமா விசேஷம். அன்று ஐந்தாம்
வகுப்பு மாணவ-மாணவியருக்கும் தான் விசேஷம். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் கூட
இவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கமாட்டார்கள். வகுப்பாசிரியர் விடுமுறை என்றால் அந்த
வகுப்புக்கு விடுதலை தான் போங்கள். பேசாத, நேரா இரு, அங்க என்ன பேச்சு, இங்க என்ன
சிரிப்பு, படி, எழுது என்று ஒலிக்கிற உடைந்த இசை தட்டு ஓசை கேட்காது.
அடுத்த வகுப்பு ஆசிரியை கையில் ஒரு
பிரம்போடு ஐந்தாம் வகுப்பு வாசலில் வந்து நின்றார். அவரைப் பார்த்ததும் அமைதியாக
இருந்தனர் மாணவ-மாணவியர். ஆர்வமும் இல்லாமல் ஆவலும் இல்லாமல் பார்த்துக்
கொண்டிருந்தவர்களைப் பார்த்து ஆசிரியை சொன்னார், டேய் உங்க சார் இன்றைக்கு
வரவில்லை. அதனால சும்மா கூத்தடிக்காம படிக்கிறவங்க படிங்க, எழுதுறவங்க எழுதுங்க.
அதவிட்டுட்டு விளையாடிக் கொண்டிருந்தால் அவ்வளவு பேரையும் முழங்கால்ல நிக்கவிட்டு
தோல உறிச்சிடுவேன்.
மாணவர்கள் கப்சிப்ன்னு அமைதியாக
இருந்தனர். ஒரு மாணவி இடது கையை மார்புக்கு குறுக்காக மடைக்கி வைத்துக் கொண்டு,
வலது கை ஆள்காட்டி விரலை மூடிய உதடுகளுக்கு நடுவே வைத்துக் கொண்டு கண்ணை மட்டும்
உருட்டிக் கொண்டிருந்தாள் அவளைப் பார்த்து அவள் அருகில் இருந்தவளும் அவ்வாறே
செய்தாள்.
ஒரு மாணவன், ஆசிரியை சொன்ன உடனே
கீழ்படிகிற மாணவன் என்று காட்டிக் கொள்ள புத்தகத்தை தலைகீழாக வைத்துக் கொண்டு
தலையைக் கவிழ்ந்து, கண்ணை மட்டும் உயர்த்தி வாசலில் நின்று எச்சரித்துக்
கொண்டிருக்கும் ஆசிரியையை எரிச்சலாகப் பார்த்துக் கொண்டிருக்கிறான்.
மறுநாள்; சந்திரன் ஆசிரியர் வந்ததும்
அவரிடம், சார் நேற்று நீங்கள் வரவில்லை, அதனால உங்க வகுப்பு பிள்ளைகள் பன்னின
சேட்டை இருக்கே, அப்பப்பப்பா... நான் வந்து சத்தம் போட்டு, ஒழுங்கா உட்கார்ந்து
படிங்கன்னு சொன்ன பிறகுதான் அமைதியாக இருந்தாங்க என்று சொல்வதற்கு இந்த நடிப்பு
போதும் என்று தன்னுடைய வகுப்பை நோக்கி நடந்தார் ஆசிரியை.
அமைதியாக இருந்த வகுப்பறையில் ரவி
என்ற மாணவன் மௌனத்தைக் கலைக்க இருமினான். மூன்றாவது வரிசையில் இருந்தவன் வராத
இருமலை வரவழைத்து குனிந்து கொண்டு இருமினான். அதுபோதும் அடுத்த வரிசையில் இரண்டு
பேர் இரும, திடீரென்று வரும் கோடை மழை போல கிட்டத்தட்ட அனைவருமே இரும ஆரம்பித்தார்கள்.
வகுப்பறையே டவுண் பஸ் போல விதவிதமான சத்தத்துடன் இருமல் உச்சத்தில் இருந்தது.
ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக, சிலர் தொண்டையில் கை வைத்துக் கொண்டும், வாயில்
ஊதுகுழல் வைத்துக்கொண்டும் அவரவர் பங்குக்கு ஜாலியாக இருமிக் கொண்டிருந்தார்கள்.
வெளிநாடுகளில் சிரிப்புச் சங்கம் வைத்துக் கொண்டு, சுற்றி நின்று வாய்விட்டுச்
சிரித்துக் கொண்டிருப்பார்கள். அதுபோல இருமிக் கொண்டே சிரித்துக் கொண்டார்கள்.
கையில் பிரம்புடன் புறங்கையைக் கட்டிக் கொண்டு அந்த வழியாக தலைமையாசிரியர்
வருவதைக் கண்ட ஒரு மாணவன், டேய் ஹெச்.எம் சார்டா! என்று கத்த மொத்த வகுப்பறையும்,
புயலுக்குப் பின் ஏற்படும் அமைதி போல அமைதியானார்கள்.
வகுப்பறைக்குள் நுழைந்த தலைமை
ஆசிரியர், இங்க என்னடா சத்தம். என்ன நடக்குது இங்க என்று கேட்டார்.
எல்லோரும் அமைதியாக இருந்தார்கள்.
தலைமை ஆசிரியரின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தனர்.
யார்டா லீடர், எழுந்திரு, என்றதும்
குமார் எழுந்து நின்றான்.
என்ன நடந்தது என்று சொல், என்று
பிரம்பை ஆட்டிக் கொண்டே கேட்க, சார் முதல்ல ரவி தான் சார் இருமினான். அவனப்
பார்த்து எல்லோரும் இரும ஆரம்பிச்சிட்டாங்க சார், என்றான் குமார்.
ஏன்டா, இருமின நீட்ரா கைய. இனிமேல்
இரும மாட்டியா சொல்லு இனிமேல் இரும மாட்டியா, என்று கேட்டுக் கொண்டே பிரம்பால்
கையில் இரண்டு அடி கொடுத்தார். அதோடு எச்சரிக்கை செய்து விட்டு வெளியேறினார்,
தலைமை ஆசிரியர்.
ஏற்கனவே குமாருக்கும் ரவிக்கும் ஒத்து
போகாது. குமார் படிப்பிலே கெட்டிக்காரன் என்றால் ரவி விளையாட்டிலே கெட்டிக்காரன்.
அதோடு சேட்டையும் அதிகம்.
ரவிக்கு கை வலித்தது. லேசா தலையை
திருப்பியவாறே ஓரக் கண்ணால் குமாரைப் பார்த்தான். கோபம் கண்ணில் தெரிந்தது.
பழிவாங்கத் துடித்தான். சந்தர்ப்பம் எப்போ வரும் என்று யோசித்தான். சந்தர்ப்பத்தை
எப்படி உருவாக்கலாம் என்பதிலேயே அவன் சிந்தனைக் குதிரை ஓடியது. அன்று மாலை
பள்ளிக்கூடம் விட்டதும் ரவியைக் ஹீரோவாக நினைக்கும் அவனது நண்பர்கள் அவனுடன்
ஒன்றாக சென்றனர். குமாருடன் அவனது நண்பர்கள் மற்றும் ரவியிடம் அடி வாங்கி
அலுத்துப் போனவர்கள் ஒன்று சேர்ந்து போனார்கள்.
உனக்கு அடிவாங்கி கொடுத்து விட்டு
எப்படி போராம்ன்னு பாத்தியா ரவி. அவன சும்மா விடக்கூடாது. இதே மாதிரி அவனுக்கும்
நாம அடிவாங்கிக் கொடுக்கனும், என்று சொடக்குப் போட்டுக் கொண்டான் ரவியின் நண்பன்.
டேய் அவன் லீடர். அவன சாரு அடிக்க
மாட்டார். அவன எப்படிக் கவனிக்கம்ன்னு ஐயாவுக்குத் தெரியும் நாளைக்குப் பாரு.
குமாரு அவங்க ஏதோ பிளான் பண்றாங்கன்னு
நினைக்கிறேன். நீ தனியா போனா ரவி அடிச்சிறுவான். அவன் உன் மேல செம கோவத்தில
இருக்கான் என்று குமாரின் நண்பன் ஒருவன் சொல்ல இன்னொருவன் ஆமாண்டா என்று
ஆமோதித்தான்.
குமாரின் வீடும், ரவியின் வீடும் ஒரே
தெருவில் தான் இருக்கின்றன. குமாரின் அப்பா அரசு ஊழியராக இருந்தாலும்
அரசியல்வாதிகளுடன் நல்ல தொடர்பு உண்டு. செல்வாக்குள்ள மனிதர்.
மறுநாள் வழக்கம் போல் பள்ளிக்கூடம் ஆரம்பித்தது.
ஆசிரியர் சந்திரன் தேர்வுத்தாள் கட்டுகளுடன் வகுப்பறைக்குள் நுழைந்தார். தேர்வுத்
தாளைப் பார்த்தவுடன் மாணவர்களுக்கு மகிழ்ச்சி. சிலருக்கு கலக்கமாக இருந்தது.
ஏனென்றால் தேர்வு விடைத்தாளில் பெற்றோரிடம் கையெழுத்து வாங்கி வரவேண்டுமே.
ஆசிரியர் சந்திரன் ஒவ்வொரு பேப்ராக
எடுத்து பெயரைச் சொல்லி பெற்ற மதிப்பெண்ணையும் சொல்லி, அதிக மதிப்பெண் பெற்ற
மாணவர்களுக்குப் பராட்டும், குறைந்த மதிப்பெண் பெற்றவர்களுக்கு அடியும்,
அறிவுரையும் கொடுத்தார்.
அடுத்தப் பேப்பரை கையில் எடுத்துப்
பார்த்தார் ரவி. பேப்பரை ரவியிடம் கொடுத்துவிட்டு, விளையாட்டில் மட்டும் கவனம்
இருந்தால் பேறாது. படிப்பிலும் கவனம் இருக்க வேண்டும். பள்ளிக்கூடம் வர்றதே
படிக்கக்தான் என்று அறிவுறுத்தினார் ரவி பேப்பரை கையில வாங்கிக்கொண்டு குமாரைப்
பார்த்தான். அவனது ரியாக்ஷன் எப்படி இருக்கிறது என்று கவனித்தான். ஆனால் குமார்
வேண்டுமென்றே வோறங்கோ பார்த்தபடி எந்த ரியாக்ஷனும் செய்யவில்லை. ஆனால் குமாரின்
நண்பர்கள் நமட்டுச் சிரிப்பு சிரித்துக் கொண்டிருந்தனர். ரவிக்கு எரிச்சலாக
இருந்தது.
குமார், இந்த தடவையும் நீ நூற்றுக்கு
நூறு வெரிகுட், என்று ஆசிரியர் கூறவும் அனைவரும் கைதட்டினர்.
ரவி தனது பென்சிலை தரையில் அழுத்தி
கார்பன் முனையை உடைத்து தனது கோபத்தை வெளியேற்றிக் கொண்டிருந்தான்.
மதிய உணவிற்குப் பின் பிற்பகல் மூன்று
மணிக்கு மாணவர்களை மைதானத்திற்கு அழைத்துச் சென்றார். விளையாட்டுப் பீரியட்
என்றால் மாணவர்களுக்கு எங்கிருந்துதான் அந்த உற்சாகம் வருமோ தெரியவில்லை. உற்சாகக்
குரல் எழுப்பிக் கொண்டே ஆனந்தமாக மைதானத்திற்கு வந்தனர்.
போன வாரம் கோ-கோ விளையாடினீர்கள்.
இன்றைக்கு என்ன விளையாட்டு விளையாடலாம் என்று ஆசிரியர் கேட்டார். சார் கபடி
விளையாடுவோம் என்று ரவி கூறியதும் அனைவரும் கபடி… கபடி… கபடி… என்று பஜனை பாட
ஆரம்பித்துவிட்டனர்.
கபடிக்கு கோடு போடப்பட்டது. ரவி
தலைமையில் ஒரு அணி ஒரு பக்கம் நின்று கொண்டார்கள். குமார் தலைமையில் ஒரு அணி
திரண்டாலும் குமாருக்கு விளையாட விருப்பம் இல்லை. அதை ஆசிரியரிடம் தெரிவித்தான்.
இதைக் கேட்டதும் சில மாணவர்கள் குமாரைப் பார்த்து தோத்தான், தோத்தான் என்று கோரசாக
ரவியும் சேர்ந்து தான் கத்த குமாருக்கு வெட்கமாக போய்விட்டது. குமாரின் நண்பர்களோ
குமாரை வலுகட்டாயமாக விளையாட உற்சாகப்படுத்தினர்.
ஏன் குமார் என்;னாச்சு உனக்கு. நீ
நன்றாக விளையாடக் கூடியவன்தானே. ஏன் இன்று விளையாட மறுக்கிறாய், உடம்புக்கு
முடியலையா என்று ஆசிரியர் கேட்டார். இல்ல சார் உடம்புக்கு ஒன்றும் பிரச்சனை இல்லை.
அப்படியென்றால் விளையாடு என்று
ஆசிரியர் சொல்லவும் குமார் கபடி கிரவுண்டுக்குள் இறங்கினான்.
ஆசிரியர் நடுவராக இருக்க விளையாட்டு
ஆரம்பித்தது. கேப்டன் ரவி மற்றும் குமாரை நடுக்கோட்டுக்கு அழைத்து, ஒரு ரூபாய்
நாணயத்தை சுண்டி போட்டுப் பிடித்தார். இடது கையை கீழேயும், வலது கையை மேலேயும்
வைத்து ஒரு நாணயத்தை மறைத்துக் கொண்டு தலையா? பூவா? என்று ரவியிடம் கேட்டார்.
'தலை" என்றான் ரவி.
ஆசிரியர் கையைத் திறக்க நாணயத்தில்
மேல்பகுதியில் தலை இல்லை, பூ இருந்தது. உடனே ஆசிரியர் டாஸ் ஒன் பை குமார் என்று
கூறினார். பின்பு குமாரைப் பார்த்து ஸைடா? ரைடா? என ஆசிரியர் கேட்க 'ரைடு"
என்றான் குமார்.
ஆசிரியர் விசில் அடிக்க குமார் கபடி,
கபடி என்று எதிரணிக் கோட்டைக்குள் வேட்டையாடினான். புள்ளி கிடைக்காமல்
திரும்பினான்.
அடுத்த ரைடு ரவி சென்றான். கையை
விரைப்பாக வைத்துக் கொண்டு, கபடி.. கபடி என்று அழுத்தமாக உச்சரித்து, சாட்டையால்
அடிப்பது போல் கையால் ஓங்கி ஓங்கி அடிக்க, பிடிக்க முயன்ற ஒருவனின் முதுகில்
அடித்துவிட்டு ஒரு புள்ளியோடு திரும்பினான். ஒரு புள்ளி எடுத்ததும் ரவியின்
அணியினருக்கு உற்சாகம் களைகட்டியது.
குமாரின் அணியிலிருந்து மாணவன் ரைடு
போனான். புள்ளியில்லாமல் திரும்பினான். இப்போது ரவி அணியிலிருந்து ஒரு மாணவன் ரைடு
போக புள்ளி கிடைக்காமல் திரும்பினான். குமார் ரைடு போகிறான். ரவி எப்படியாவது
இவனைப் பிடிக்க வேண்டும் என்று குமார் காலைப் பிடிக்க, அணியினர் அத்தனை பேரும்
குமார் மீது வந்து விழுந்தனர். இதுதான் சமயம் என்று ரவி குமாரின் கை விரலைப்
பிடித்து திருகினான். குமார் வலியால் துடித்துப் போனான். ஆசிரியர் விசில் அடித்து
கலைத்துவிட்டார்.
பழிவாங்கிய சந்தோஷம் ரவியின்
முகத்தில் தெரிந்தது. குமார் அமைதியாகக் கோட்டுக்கு வெளியே போய் அமர்ந்து, விரலைப்
பிடித்து நீவி விட்டுக் கொண்டிருந்தான். ரவி அணியிலிருந்து மாணவன் பாடிச் செல்ல
அவனைப் பிடித்துக் கொண்டார்கள். அதனால் மீண்டும் குமார் களத்தில் இறங்கினான்.
குமார் அணியிலிருந்து ஒருவன் பாடிச் செல்ல அவனைப் பிடித்துக்கொண்டார்கள்.
வெற்றிக் களிப்போடும், கண்ணில்
வெறியோடும் ரவி பாடிச் சென்றான். கபடி…. கபடி… என்று அழுத்தி அழுத்தி அவன் பாடுவது
இவர்களுக்கு வேகத்தைக் கூட்டியது. குமார், ரவியின் காலைப் பிடிக்க முயல குமாரின்
முகத்தில் அடித்து குப்புற கீழே தள்ளி விட்டுட்டு, நடுக்கோட்டில் வந்து, திரும்பி
நின்று கொண்டு, ஆணழகனைப் போல் இரண்டு கைகளையும் தூக்கிக் கொண்டு தனது பலத்தைக்
காட்டினான். கீழே கிடந்தவனை அவனது நண்பர்கள் தூக்கிவிட்டு அவனது மேல் ஒட்டியிருந்த
மண்ணைத் துடைத்து விட்டார்கள்.
நேரம் ஆகவே மணி அடித்தது. விளையாட்டை
முடித்துக் கொண்டார்கள்.
ரவியிடம் மோதி ஜெயிக்க முடியுமா.
இனிமே உன்னைப் பற்றி சாரிடம் குமார் எதுவும் சொல்ல மாட்டான் என்றான் ரவியின்
நண்பன்.
குமாரின் இடதுகை மோதிர விரலில்
வீக்கம் இருந்தது. வலி அதுக்குமேல். முதுகில் புத்தகப்பை தொங்க இடதுகை மோதிர
விரலைப் பார்த்துக் கொண்டே வீடு வந்து சேர்ந்தான். புத்தகப்பையை இறக்கி
வைத்துவிட்டு, சமையல் கட்டு பக்கம் வந்தான். வந்துட்டியா. உனக்கு புடிச்ச
பனங்கிழங்கு அவிச்சி வச்சிருக்கேன் பாரு. எடுத்துட்டுப் போயி ஹாலில் உக்காந்து
ஓடிச்சி சாப்பிடு அம்மா உனக்கு காப்பி போட்டு எடுத்துட்டு வாறேன்.
இரண்டு கிழங்கை கையில் எடுத்துக்
கொண்டு ஹாலுக்கு சென்றவன் டிவியை ஆன் செய்து கார்ட்டூன் சேனலை பார்த்து ரசித்தான்.
கிழங்கை உறிக்க, ஒடிக்க கை ஒத்துழைக்கவில்லை. விரல் அதிகமாக வலித்தது. காப்பியுடன்
வந்த அம்மா கண்ணில் பட, டே என்னடா இது. கை இப்படி வீங்கியிருக்கு, என்று பதறிப்
போய் கையைப் பிடித்துக் கொண்டு கேட்டார்.
அம்மா விளையாடும் போது கீழே
விழுந்திட்டேன்ம்மா. விரல் எப்படியோ பிசக்கிவிட்டது. வலிக்குதம்மா. கிழங்க உடிச்சி
உறிச்சித்தாயேன் என்று சொல்லிக் கொண்டிருக்கும் போது குமாரின் அப்பா மோட்டார்
சைக்கிளை நிறுத்திவிட்டு வீட்டுக்குள் வந்தார்.
என்ன தாயும் மகனும் வருங்காலப் பனை
மரத்தை அவிச்சி, ஒடிச்சி சுவைச்சிக்கிட்டு இருக்கீங்க என்றவாறே முகம் அலம்பிக்
கொண்டு ஹாலில் ஒரு சேரில் உக்காந்து துண்டால் துடைத்துக் கொண்டு ரிமோட்டைக் கையில்
எடுத்தார். நியுஸ் சேனலுக்கு மாற்றினார். என்னங்க குமார் கையைப் பாருங்க. எப்படி
வீங்கியிருக்கு. ஹாஸ்பிட்டல் வரை போய்ட்டு வந்துடுவோமா என்று கேட்டுக் கொண்டே
காப்பியைக் கொடுக்க, காப்பியை வாங்கி பக்கத்தில் வைத்துவிட்டு கையைப் பார்த்தார்.
விரலைத் தெட்டார். ரத்தக்கட்டு மாதிரி இருக்கு. சூடு ஒத்தடம் கொடுத்தால்
சரியாயிடும் என்று சொல்லிக் கொண்டிருந்தார்.
அப்பா கையில் இருந்த ரிமோட்டை
வெடுக்கென புடுங்கிய குமார் கார்ட்டூன் சேனலுக்கு மாற்றிக் கொண்டான். அம்மா நான்
டிவி பார்க்கிறேன். நீங்க எனக்கு ஒத்தடம் கொடுங்க. அப்போதான் வலிக்காது.
ரவியும், அவன் அம்மாவும் வேகமாக
வந்தார்கள். குமாரின் வீட்டுக்குள் நுழைந்து பதட்டத்தோடு அண்ணாச்சி, அண்ணாச்சி
என்று கூப்பிட, என்னம்மா, என்ன ஆச்சு. ஏன் இப்படி பதட்டமா இருக்கீங்க.
ரவி அம்மாவின் கையைப் பிடித்துக்
கொண்டு நின்றான். உமியை வருத்து வெள்ளைத் துணியில் கெட்டி எடுத்து வந்தவள் என்ன
மீனாட்சி ஏன் அழுகிற. ஏன் படபடப்பா இருக்க. என்னன்னு சொல்லு என்று கேட்க. அவள்...
அண்ணாச்சி என் வீட்டுகாரரைக்
காப்பாத்துங்க. அவுகள போலீஸ் பிடிச்சிட்டுப் போய்ட்டாங்க.
போலீஸ் புடிச்சிட்டுப் போயிட்டாங்களா!
ஏன், எதுக்கு. போலீஸ் என்ன சொன்னாங்க. அண்ணாச்சி கீழத்தெரு மாடசாமிக்கும்
இவகளுக்கும் ஒரு பிரச்சனையும் கிடையாது அண்ணாச்சி. சும்மா பேசிக்கிட்டு இருக்கும்
போதே வாய்த்தகராறாகி, கைமல்லு வந்திருக்கு. இவுகளப் பத்திதான் தெரியுமே. உடனே
பக்கத்தில கிடந்த கம்ப எடுத்து அவன அடிச்சிருக்காக. அவன் போலீஸ்ல கம்ளைன்ட்
குடுக்க போலீஸ் வந்து பிடிச்சிட்டுப் போயிட்டாங்க.
சரி சரி. நீ அழாதே. இன்ஸ்பெக்டர்ட்ட
என்ன விவரம்ன்னு கேட்டுட்டு என்ன செய்யனும்ன்னு யோசிப்போம். நீ அழாம இரு.
தனது செல்போனில் இருந்து
இன்பெக்டருக்கு போன் செய்தார். போனில் இன்ஸ்பெக்டர் பேசினார். விபரம் சொன்னார்.
நேரில் வரவும் சொன்னார்.
என்ன அண்ணாச்சி சொல்றாங்க.
ஜெயிலுக்குள்ள போட்டுரவாங்களோ அண்ணாச்சி, என்று அழுதாள்.
பொரும்மா. நீ அழாம இரு. நான் ஸ்டேசன்
வரை போயிட்டு வர்றேன் என்று கிளம்பி போய்விட்டார்.
குமாரின் அம்மா, நீ பயப்படாத மீனாட்சி
எப்படியாவது போலீஸ் டேசன்ல் பேசி கூட்டிட்டு வந்துருவாக. இந்தா இந்த காப்பியக்
குடி. அம்மாவின் கையைப் பிடித்துக்கொண்டு நின்ற ரவிக்கு இரண்டு பனங்கிழங்கைக்
கொடுத்து சாப்பிடச் சொன்னார். ரவி கிழங்கை கையில் வைத்துக்கொண்டு மௌனமாக நின்றான்.
அவன் கண்கள் மட்டும் குமாரை அவ்வப்போது பார்ப்பதும், அம்மாவின் கையை இறுகப்
பிடிப்பதுமாக இருந்தான். குமாரின் அம்மா மீனாட்சியிடம் பேசிக் கொண்டே குமாருக்கு
ஒத்தடம் கொடுக்க ஆரம்பித்தாள். என்னக்கா என்னாச்சி. கை விரல் இப்படி
வீங்கியிருக்கு என்று கேட்டாள் மீனாட்சி.
பள்ளிக்கூடத்தில கபடி
விளையான்டாங்களாம் . விளையாடும் போது…. என்று சொல்லி முடிப்பதற்குள் செல்போன்
ஒலிக்க போனை எடுத்து பேசினாள். எதிரில் குமாரின் பாட்டி. என்னம்மா
நல்லாயிருக்கியா. குமார்கிட்ட போனைக் குடு. அவனுக்கு பிறந்தநாள் வாழ்த்து
சொல்லனும். போனைக் குமாரிடம் கொடுக்க, குமாருக்கு பிறந்தநாள் வாழ்த்துச்
சொன்னார்கள் பாட்டி, தாத்தா.
பள்ளிக்கூடத்தில் கபடி விளையாடும்
போது என்று சொன்னதும் ரவியின் இதயம் படபடவென அடித்துக் கொண்டது. ஒடித்துக் கையில்
வைத்திருந்த கிழங்கைக் கூட சாப்பிட முடியாமல் பயத்தில் சற்று தடுமாறினான்.
ஏன் பாட்டி எல்லா வருசமும் என்னுடைய
பிறந்தநாளுக்கு ட்ரெஸ் எடுத்துக்கிட்டு வருவீங்களே. இன்றைக்கு ஏன் பாட்டி வரல.
அதுக்குப் பாட்டி, டேய் குமாரு தாத்தாவுக்கு இன்னைக்கு உடம்பு முடியல. அதான்
ஆஸ்பத்திரிக்குப் போயிட்டு இப்போதான் வந்தோம். அதனால நாளைக்கு கண்டிப்பா வருவோம்
என்று பேசி முடித்தார்கள்.
புள்ளைக்கு இன்றைக்கு பிறந்த நாளா
என்று கேட்டுக் கொண்டே குமாருக்கு வாழ்த்து சொன்னாள் மீனாட்சி. அப்புறம்க்கா
பள்ளிக்கூடத்தில கபடி விளையாடும் போது… என்று மீனாட்சி விட்ட இடத்தல இருந்து
தொடர்ந்தாள்
ஆமா மீனாட்சி, பேசிக்கிட்டு இருக்கும்
போதே போன் வந்திடுதில்ல. பள்ளிக் கூடத்தில கபடி விளையாடும் போது கீழ விழுந்துட்டானாம்.
கீழ விழுந்ததில் கை விரல் பிசக்கிக் கொண்டதாம். இப்போ பெரிசா வீங்கிக்கிட்டு
இருக்கு. வலி தாங்க முடியலைன்னான். அதான் பிறந்தநாள் அதுவுமா ஆஸ்பத்திரிக்குப் போக
வேண்டாமேன்னு ஒத்தடம் குடுத்துக்கிட்டு இருக்கேன்.
ரவிக்கு இப்போது தான் நிம்மதி வந்தது.
மெதுவாக எழுந்தவன் குமாருக்கு அருகில் சென்றான். அப்பொழுது செல்போன் ஒலிக்க,
ஒத்தடம் கொடுப்பதை நிறுத்திவிட்டு போனை எடுத்துப் பேசினாள். எதிர் முனையில்
குமாரின் அப்பா.
குமாருக்கு அருகில் இருந்த உமி
பொட்டலத்தை எடுத்து ரவி, குமாரின் கையில் ஒத்தடம் கொடுக்க அவனது கையைப்
பிடித்தான். ஒத்தடம் கொடுத்தான் ரவி.
ரவியின் மாற்றம் குமாருக்கு
மகிழ்ச்சியாக இருந்தது. குனிந்து கொண்டே ஒத்தடம் கொடுத்த ரவியின் முகத்தைச் சற்று
குனிந்து பார்த்தான் குமார். ரவியின் கண்களில் நீர் திரண்டு நின்றிருந்தது. சற்று
நிமிர்ந்த ரவி, குமாரின் கண்களை நேருக்கு நேர் பார்த்து, டேய் குமார் நீ என்னை
உன்னுடைய ஃபிரண்டா ஏத்துக்குவியா என்றான்.
டேய் ரவி என்னுடைய பிறந்தநாளுக்கு
எனக்கு பொம்மையும், விளையாட்டு பொருட்களும், புத்தாடையும் தான் பரிசாக
கொடுத்தார்கள். ஆனால் அதைவிட நீ இப்ப தந்த பரிசுதான் எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு.
உன்னுடைய ஃபிரண்ட்ஷிப்தான் எனக்கு பிறந்த நாள் பரிசு. மீனாட்சி உன்
வீட்டுக்காரரும், மாடசாமியும் ராசியாயிட்டங்களாம். சமாதானம் பேசி முடிச்சி
வீட்டுக்கு வந்துகிட்டு இருக்காங்க, என்று குமாரின் அம்மா சொன்னதும் ரவி மூகம்
மலர்ந்தது.
கதையை தொகுத்தவர்,
அகஸ்டியன் ஆசிரியர்,
தென்காசி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக