Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

புதன், 6 நவம்பர், 2019

ரஷ்யாவின் ராட்சஸ ரட்சகன் - ரஸ்புடின்...!!!

Image result for ரஸ்புடின்...!!!


 


இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

Follow Us:

Join Our Whatsapp Group

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com


அனைவருக்கும் எனது அன்பு வணக்கங்கள்...!

           நமது கடந்த பதிவின் இறுதியில் குறிப்பிட்டிருந்தவாறு எந்தவொரு நோயாளியையும் தொடாமலேயே குணமாக்கிய ஒரு மர்மமான மனிதரைப் பற்றி இப்பதிவில் காணலாம். அவர், ரஷ்யாவின் ஒரு மன்னர் குடும்பத்தையே தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்த, சாதாரண நிலையிலிருந்து அவ்விடத்தை எட்டிப்பிடித்த ஒரு அசாதாரண மனிதர். அவர்தான் ரஸ்புடின்..!


Image result for ரஸ்புடின்...!!!
ரஸ்புடின்

          
 ஏறத்தாழ ஆறரை அடி உயரம், மயக்கும் கண்கள், முறைக்கும் கூரிய பார்வை, அடர்ந்த புருவங்கள், கட்டுமஸ்தான உடல்வாகு, தோள்வரை தொங்கும் தலைமுடி, கரும்புதரில் செம்புக்கம்பிகளை மறைத்து வைத்தாற்போல் வளைவுகளுடைய தாடி, அதனுள் ஒளிந்திருக்கும் உதடுகள், அதிலிருந்து வெளிப்படும் மிரட்டலான  'கணீர்' குரல், அதனுள் பொதிந்திருக்கும்  வசீகரிக்கும் பேச்சுத்திறன். இவை அனைத்திற்கும் மேலாக மிக நீளமான ஆணுறுப்பு. இவைதான் ரஸ்புடினின் அடையாளங்கள். இனி அவரது வாழ்க்கை குறித்து காண்போம்.

           ரஷ்யாவிலுள்ள (Russia) சைபீரியாவின் (Siberia) துரா (Tura) நதிக்கரையோரமுள்ள போக்ரோவ்ஸ்கொயே (Pokrovskoye) எனும் பின்தங்கிய கிராமத்தில், யெஃபிம் யாகொவ்லேவிச் ரஸ்புடின் (Yefim Yakovlevich Rasputin) என்பவருக்கு (ரஸ்புடினின் தாயார் பற்றிய தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை!), 3 குழந்தைகளில் மூன்றாவதாகப் பிறந்தார், க்ரிகொரி யெஃபிமோவிச் ரஸ்புடின் (Grigori Yefimovich Rasputin) என்கிற முழுப்பெயர் கொண்ட இந்த மர்ம யோகி. ('ரஸ்புடின்' என்பது இவர்களது குடும்பப்பெயர்.) இவர் 1863-க்கும் 1873-க்கும் இடைப்பட்ட காலத்தில் பிறந்திருக்கலாம் எனக் கருதுகின்றனர். ஒரு சில ஆவணங்கள், இவர் 10.1.1869-ல் பிறந்ததாகவும், சில 21.1.1869-ல் பிறந்ததாகவும், சில 22.1.1869-ல் பிறந்ததாகவும் சான்று பகர்கின்றன. இருப்பினும், இவர் பிறந்த உண்மையான தேதி குறித்த தெளிவான ஆவணங்கள் இதுவரையில் மர்மமாகவே இருக்கின்றன. (மர்மம் அவர் பிறந்தது முதலே தொடர்கிறது!) இவரது சிறுவயது வாழ்க்கை எதுவும் பெரிதாகப் பதிவுசெய்யப்படவில்லை. இவரின் மூத்த சகோதரன் டிமிட்ரி; சகோதரி மரியா. ஏழை விவசாயக்குடும்பத்தில் பிறந்த இக்குழந்தைகளுக்கு, பள்ளிப்படிப்பு எட்டாக் கனியானது; வயல் வேலை மட்டுமே அன்றாட பிழைப்பானது. மரியாவிற்கு வலிப்பு நோய் இருந்தது. அவள் அவ்வாறு அவதிப்படும் சமயமெல்லாம் ரஸ்புடின் அருகிலிருந்து கவனித்துக் கொள்வான். ஒரு சமயம் மரியா ஆற்றில் குளிக்க சென்றாள். குளித்துக்கொண்டிருக்கும்போது திடீரென வலிப்பு வர, நீரில் மூழ்கி இறந்து போனாள். இச்சம்பவம் ரஸ்புடினை வெகுவாக பாதித்தது. சில காலம் கழிந்திருக்கும். ரஸ்புடினும், அவனது அண்ணன் டிமிட்ரியும் ஆற்றில் மீன்பிடிக்க சென்றனர். திடீரென ஆற்றில் வெள்ளம் வர, யாரோ ஒருவர் இருவரையும் வெள்ளத்திலிருந்து மீட்டு கரை சேர்த்தார். இருப்பினும் சில நாட்களில் டிமிட்ரி குளிரினால் ஏற்பட்ட நிமோனியாவினால் இறந்து போனான். இச்சம்பவம், ஏற்கனவே சோகம் சூழ்ந்திருந்த ரஸ்புடினை மேலும் தளர்வுறச் செய்தது. கலகலவென்று துள்ளித்திரிந்த சிறுவன் யாரிடமும் சரிவரப் பேசாமல் ஓரிடத்தில் முடங்கிப்போனான். அன்றிலிருந்து சிறுவன் ரஸ்புடினின் செயல்களில் மாற்றங்கள் தென்பட்டன. சிறுவயதுமுதலே ரஸ்புடினிடம் சில அசாதாரணமான அதிசய சக்திகள் இருந்ததாக நம்பப்படுகிறது. ரஸ்புடினின் தந்தை ஓரளவு படிப்பறிவு பெற்றிருந்த காரணத்தால், இரவு நேரங்களில் தனது மனைவி குழந்தைகளுடன் பைபிளைப் படித்து விவரிப்பதில் செலவிட்டார். இவை ஏற்கனவே சக்திகள் இருப்பதாக நம்பப்படும் ரஸ்புடினை மேலும் இறைபக்தி மிக்கவனாக மாற்றியது. இத்தகு மனோபாவமுடையவன், மேற்கண்ட அசம்பாவித சம்பவங்களுக்குப் பின் ஒருவரிடமும் சரிவரப் பேசாமல், எதையோ யோசிப்பதைப் போல வீட்டுக் கூரையையோ, கண்முன் தென்படும் ஏதேனும் ஒன்றையோ வெறித்துப் பார்த்தவாறே இருந்தான். அவ்வாறான சமயத்தில்தான் ஒருநாள், இவனது சக்திகள் குறித்த நம்பிக்கையை மெய்ப்பிக்கும் சம்பவம் ஒன்று நடந்தேறியது.

           ரஸ்புடின் வாழ்ந்த ஊரில், அக்காலத்தில் திருட்டு அதிகம் நிகழும். ஒருமுறை ரஸ்புடினின் தந்தை வளர்த்துக்கொண்டிருந்த குதிரை காணாமல் போனது. (அழகர்சாமியோட குதிரை இல்ல மக்களே...!) 'இனி பிழைப்புக்கு என்ன செய்யப் போகிறோமோ?!' என கவலையுற்றவராய், குதிரையை கண்டுபிடிக்கும் நோக்கில் தனது நண்பர்களுடன் வீட்டின் வெளிப்பகுதியில் வைத்து விவாதித்துக் கொண்டிருந்தார். வீட்டினுள் கட்டிலில் கால்மேல் கால் போட்டவாறு படுத்துக்கொண்டு, வழக்கம்போல் வீட்டுக்கூரையை வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்த ரஸ்புடின் திடீரென எழுந்து வெளியில் சென்றான். நேராக அவன் தந்தையிடம் சென்று, "குதிரையைத் திருடியவன் யாரென்று ஏன் வீணாகக் குழம்பிக்கொண்டிருக்கிறீர்கள்? இதோ உங்கள் அருகிலேயே இருக்கும் இவன்தான் குதிரையைத் திருடியது. இப்போது இங்குவந்து உங்களுடன் குதிரையைத் தேடுவதுபோல், நல்லவனாக நாடகமாடுகிறான்" என்றான். திடீரென படுக்கையிலிருந்து எழுந்துவந்து தனது நண்பனை இவ்வாறு சொல்லியதை சற்றும் எதிர்பாராத ரஸ்புடினின் தந்தை, ரஸ்புடினைக் கண்டித்து வீட்டினுள் அனுப்பிவிட்டு, அவன் சுட்டிக்காட்டிய நண்பரிடம், "அவன் சின்னப் பையன். ஏதோ தெரியாமப் பேசிட்டான்!" என்பதுபோல கூறி, மன்னிப்புக் கேட்டு அனுப்பிவைத்தார். அந்த நபருக்கும் திடீரென ரஸ்புடின் இவ்வாறு கூறியதும் வியர்த்துக் கொட்டியது. அனைவரும் சென்றதும் வீட்டினுள் சென்று மகனிடம் விசாரித்தார். "அவர்தான் திருடினார் என்று நீ பார்த்தாயா? எதை வைத்து அவ்வாறு நீ கூறினாய்?" என அதட்ட, "நான் நேரில் பார்க்கவில்லை. ஆனால் எனக்கு அவர்தான் என்று தெரியும்" என்றான் அழுத்தமாக. முதலில் மகனின் பேச்சில் நம்பிக்கை இல்லாவிட்டாலும், பின்னர் 'ஒருவேளை இவன் கூறுவது உண்மையாக இருந்தால்?' என்கிற எண்ணம் துளிர் விட, அந்த குறிப்பிட்ட நபரை ரகசியமாகக் கண்காணித்தார்; ஆச்சர்யம்! உண்மையில் குதிரையைத் திருடியவன் ரஸ்புடின் சுட்டிக்காட்டிய அதே ஆள்தான். மீண்டும் மகனிடம் கேட்டார், எவ்வாறு இதைக் கூறினாயென. "எனக்குத் தெரியவில்லை. என் மனதினுள் தோன்றியது, கூறினேன்" என்று விளக்கினான் ரஸ்புடின். இதன்பின் தன்னை சுற்றியுள்ளவர்களின் எதிர்காலம் குறித்து குறி சொல்லத் தொடங்கினான். இதன் முன்னரும் தனது உள்ளுணர்வை ரஸ்புடின் வெளிப்படுத்தியிருந்தாலும், இச்சம்பவத்தின்பின்தான் ஊராரால் திரும்பிப் பார்க்கப்பட்டா(ன்/ர்), ரஸ்புடின்.

           அன்றிலிருந்து சற்று மரியாதைகளைப் பெற்ற ரஸ்புடினின் வாழ்வு மீண்டும் தடம் மாறியது. பதின்வயது ரஸ்புடின் ஊருக்கு அடங்காத இளைஞராக வளர்ந்தார். பொய் சொல்வது, ஏமாற்றுவது, திருடுவது எல்லாம் கை வந்த கலையாகியிருந்தது. தீய நண்பர்களுடன் மட்டுமே சேர்க்கை. எல்லாவற்றுக்கும் மேலாக குடிப்பழக்கம், பெண்கள் சகவாசம் வேறு. இத்தனை தீய பழக்கவழக்கங்களுக்கும் முத்தாய்ப்பாக, அவரது 18-வது வயதில், ஒரு குதிரையைத் திருடிய வழக்கில் சிக்கி,  அதற்கு தண்டனையாக அவரது ஊரிலிருந்து 400 கி.மீ. தொலைவிலுள்ள 'வெர்கொடுர்யே' (Verkhoturye) எனும் ஊரிலுள்ள குருமார்களுக்கு 3 மாதங்கள் அங்கேயே தங்கியிருந்து பணிவிடைகள் செய்யவேண்டுமென தீர்ப்பளித்து அனுப்பிவைக்கப்பட்டார். ஒருநாள் இரவில் திடீரென விழித்த ரஸ்புடின், மகிழ்ச்சி பொங்க சத்தமாக சிரித்தார். என்னவென விசாரித்த மதகுருமார்களிடம், "சொன்னால் நம்புவீர்களா எனத் தெரியவில்லை. சிறிது நேரத்திற்கு முன்புதான் கன்னி மேரி எனது கண்களுக்கு பேரொளி வடிவில் காட்சியளித்தார்" என உணர்ச்சி பொங்க தெரிவித்தார். இதன்பின் ரஸ்புடினின் இறைபக்தி மேலும் அதிகரித்தது. "இனி நான் திருமணம் செய்யப்போவதில்லை, இறை சேவையில் ஈடுபடப் போகிறேன்" என தெரிவித்தார். (இருப்பினும், பின்னாளில் பிராஸ்கோவியா என்கிற பெண்ணை மணமுடித்து 3 குழந்தைகளைப் பெற்றதும், அக்குழந்தைகளில் இருவருக்கு தனது உடன்பிறந்தவர்களின் நினைவாக டிமிட்ரி, மரியா என பெயரிட்டதும், வேறு சில பெண்களுக்கும் காதலனாக இருந்ததும், மற்றொரு பெண்ணின் குழந்தைக்கு தகப்பனானதும் தனிக்கதை.) (ரொம்ப நல்லாயிருக்கு ராஜா உன் வொர்க்கு...!)


Image result for மதகுருக்களின் மதகுருவான ரஸ்புடின்
மதகுருக்களுடன் மதகுருவாக ரஸ்புடின்
()
Image result for குழந்தைகளுடன் ரஸ்புடின்
குழந்தைகளுடன் ரஸ்புடின்

    
       இல்லத்திலிருந்து வெளியே வந்த பின், ரஸ்புடின் 'க்ளிஸ்டி' (Khlysty) எனும் தடை செய்யப்பட்ட ஒரு ரஷ்ய கிறிஸ்தவப் பிரிவில் இணைந்தார். 'அதிகப் பாவங்கள் செய்வதன்மூலமும், அதற்கான மன்னிப்பைக் கோருவதன் மூலமும் கடவுளை அடையலாம். ஒழுங்கற்ற வாழ்க்கையே கடவுளை அடையும் பாதை' என்பது போன்ற கோக்குமாக்கான கொள்கைகளைக் கொண்ட அப்பிரிவு, தீய பழக்கங்களில் திளைத்திருந்த தனது கடந்த காலத்தின் பசுமையான நினைவுகளை ரஸ்புடினுக்கு நினைவூட்டியதே, அவர் இப்பிரிவில் இணையக் காரணம். ஏற்கனவே அவர்களின் கொள்கைகள் ரஸ்புடினுக்குக் கை வந்த கலையாதலால், விரைவிலேயே அப்பிரிவின் மதகுருவாக உயர்ந்தார் ரஸ்புடின். (என்ன ஒரு முன்னேற்றம்...!)




           பின் அப்பிரிவிலிருந்து வெளியேறி, ரஷ்யாவில் புகழ்பெற்றிருந்த மகாரி எனும் துறவியிடம் சீடராக சேர்ந்தார். அவர் ரஸ்புடினிடம், "இந்த யாத்திரையை ஒரு வகையில் கடவுளின் முன்னறிவிப்பாக எடுத்துக்கொள். உனக்குக் கிடைத்துள்ளது மிகப்பெரிய வாய்ப்பு, இதை நல்ல முறையில் கையாண்டு, மீண்டும் உனது ஊருக்குச் செல்லும்போது மனிதப்புனிதராகச் செல்" என ஆசீர்வதித்தார். அதன்பின்னர், காடு, மேடு, மலை என எங்கெங்கோ அலைந்து திரிந்து, இறுதியில் தனது சொந்த ஊருக்கே திரும்பினார், ஒரு மகானாக! மது, புகை, மாமிசம், அவ்வளவு ஏன் இனிப்பு சாப்பிடுவதைக்கூட நிறுத்தியிருந்தார். (அவருக்கு அப்போ சுகர்-லாம் இல்லப்பா...!) முகத்தில் ஓர் தீர்க்கம், பேச்சில் அமைதி, நடவடிக்கைகளில் நிதானம், மயக்கும் உடல்மொழி, பெரும்பாலானே நேரங்கள் பிரார்த்தனையில் இருப்பது என முழுவதுமாக மாறியிருந்தார், பலரின் கொள்கைகளிலும் ஊறிப்போன அந்த பைத்தியக்காரத் துறவி. (அவர பைத்தியம்னு நான் சொல்லலீங்கோ... ஆய்வாளர்கள் அப்டிதாங்கோ செல்லமா சொல்றாங்கோ...!) "இத்தனை காலம் நான் இந்த உலகில் இருந்தேன். இப்போது நான் இந்த உலகோடு இருக்கிறேன்" என அவர் உதிர்த்த பல தத்துவ முத்துக்கள், மக்களை மயிர்க்கூச்செரியச் செய்தன. திருடனாகவும், அயோக்கினாகவும் ஒரு காலத்தில் பார்க்கப்பட்ட ரஸ்புடின், தற்போது 'சக்திவாய்ந்த சாமியார்' (!) என்ற நிலைக்கு மக்களால் உயர்த்தப்பட்டார். அவர்களது அந்நம்பிக்கையையும் மெய்யாக்கும் நாள் விரைவிலேயே வந்தது.

           தன்னால் வருங்காலத்தில் நிகழ்வதைக் கூற முடியும், தீராத நோய்களைக் குணப்படுத்த முடியும், கடவுளுடன் நேரடியாக தொடர்புகொள்ள முடியும் என பல்வேறு நம்பமுடியாத அடையாளங்களால் தன்னை அலங்கரித்துக் கொண்டார். (இதன்பின்னர்தான், மேற்குறிப்பிட்டவாறு திருமணம், குழந்தைகள், எல்லாம்!) பின், 1901-ல் 'இறைவனின் கட்டளைப்படி' (!) புனித யாத்திரை மேற்கொள்ளப் போவதாகக் கூறிவிட்டு உற்றார், உறவினர், குடும்பம், குழந்தைகள் என அனைவரையும் விடுத்து கிளம்பினார். கிரீஸ், ஜெருசலேம் என நீண்ட பயணம் 1903-ல் செயின்ட் பீட்டர்ஸ்பெர்க்-கிற்கு அவரை இட்டுச்சென்றது. அப்போது நடைபெற்றுக்கொண்டிருந்த முதல் ரஷ்யப்புரட்சியின் காரணமாக, எங்கும் கலவரம்; அமைதியின்மை. அச்சமயம் எங்கிருந்தோ வந்த 'அமைதியின் தூதுவர்' போல மக்களின் மனநலத்தையும், உடல்நலத்தையும் தனது அமைதியான பேச்சுக்கள் மூலமும், பிரார்த்தனைகள் மூலமும் தீர்த்துவைத்து, அவ்வூரில் புகழ்பெறத் துவங்கினார். அவரால் குணமடைந்த/பலனடைந்த மக்கள் சிலரின் கண்களுக்கு அவர் கடவுளாகவே தோன்றினார்.


Image result for icon of gregory rasputin and alexei
இயேசுவைப் போல் சித்தரிக்கப்பட்ட ரஸ்புடின்

        
 பின்பொருநாள் இவர் செய்த ஒரு அற்புதம் இவரை மேலும் புகழேணியில் ஏற்றியது. ரஷ்ய பிரபுக் குடும்பத்தைச் சேர்ந்த பீட்டர் நிக்கொலவிச் - மிளிட்சா தம்பதியினர் வளர்த்து வந்த நாய் திடீரென நோய்வாய்ப்பட்டு முடங்க, தனது வாரிசின் உயிருக்கு நேர்ந்த ஆபத்தைப் போல பாவித்து, தனது செல்வாக்கையெல்லாம் பயன்படுத்தி, எத்தனையோ மருத்துவர்களை வரவழைத்து வைத்தியம் பார்த்தும், சுருண்டு கிடந்த நாய் புரண்டுகூட படுக்கவில்லை. பின்னர், ரஸ்புடினை சந்தித்து, தங்கள் நாயைக் குணப்படுத்துமாறு வேண்டினார் பீட்டர். முன்னரே ரஸ்புடினைப் பற்றிக் கேள்விப்பட்டு, அவரிடம் நட்பு பாராட்டியிருந்தார், பீட்டர். இதனால் ரஸ்புடினும் அழைப்பை ஏற்றார்.

         நேரே அவர்களின் பங்களாவிற்குச் சென்ற ரஸ்புடின், அங்கே எழுந்து நிற்கக் கூட திராணியற்றுப் படுத்திருந்த நாயின் அருகில் அமர்ந்து பிரார்த்தனை செய்யத் தொடங்கினார். இதற்கு முன் அதற்கு வைத்தியம் பார்த்த மருத்துவர்கள், இன்னும் இரண்டு மாதங்கள் மட்டுமே இந்த நாய் உயிர் வாழும் என தேதி குறித்துவிட்டு சென்றிருந்தனர். படுத்திருந்த நாய் மெல்ல தலையைத் தூக்கி ரஸ்புடினைப் பார்த்தது. (ஆமா, இதுவரைக்கும் வந்தவன் எல்லாம் ஊசியக் குத்திட்டு, மருந்தக் குடுத்துட்டு, இன்னும் 2 மாசத்துல செத்துருவேன்-னு சொல்லிட்டு போயிட்டானுங்க. இப்போ இவரு வந்து உக்காந்து போஸ் குடுக்குறாரு..!) பின் மீண்டும் தலையை சாய்த்துப் படுத்துக்கொண்டது. சரியாக அரைமணிநேரம், இடைவிடாமல் பிரார்த்தித்தார் ரஸ்புடின்; அருகில் பிரபு பீட்டரும், அவரது மனைவியும் பவ்யமாக நடப்பதைப் பார்த்துக் கொண்டிருந்தனர். அசையாமல் படுத்திருந்த நாய் தற்போது கண்களை நன்றாகத் திறந்து சுற்றியிருக்கும் அனைவரையும் பார்த்தது. (நான் இப்போ எங்க இருக்கேன்...?!) வாலை ஆட்டியவாறு, சற்று சிரமப்பட்டேனும் எழுந்து நிற்க முயன்றது. இதைக்கண்டு பிரபுவும், அவரது மனைவியும் ஆச்சர்யத்தில் மூழ்கிப் போனார்கள். மறுநாள் எழுந்து நின்றது; பால், பிஸ்கட் உண்டது. 2 மாதங்கள் மட்டுமே உயிர்வாழும் என மருத்துவர்களால் கைவிடப்பட்ட நாய், பின்னர் ஓராண்டு காலம் உயிர் வாழ்ந்தது. ஊர் முழுக்க இதைப் பற்றி ஆச்சர்யத்தோடு பேசித் தீர்த்தனர், நாயைக் கைவிட்ட மருத்துவர்கள் உட்பட! இவ்வாறு பிரார்த்தனைகள் மூலம் ஒரு நோயாளியைத் தொடாமல் ரஸ்புடின் குணப்படுத்தும் விஷயம் ரஷ்யாவை அப்போது ஆண்டுகொண்டிருந்த ஜார் மன்னரின் காதுகளையும் அடைந்தது.

       அச்சமயம் ரஷ்யாவை ஆண்டுகொண்டிருந்த ஜார் வம்சத்து அரசரான இரண்டாம் நிக்கோலஸிற்கும் (Tsar Nicholas - II), அரசி அலெக்சாண்ட்ரா செரீனாவிற்கும் (Alexandra Tsarina) முதலில் பிறந்த நான்கும் பெண் குழந்தைகள். ஆள்வதற்கு ஆண்வாரிசு இல்லாமல் போய்விட்டதே என வருந்திய ரஷ்ய நாட்டுக்கும், அதை ஆண்டுகொண்டிருந்த ராஜாவுக்கும், ராணிக்கும் கவலையைத் தீர்ப்பதுபோலப் பிறந்தது ஐந்தாவதாக ஓர் ஆண்குழந்தை. அக்குழந்தைக்கு அலெக்ஸி எனப் பெயரிட்டு பேணி வளர்த்தனர். மகிழ்ச்சியினுள்ளும் மறைந்திருக்கும் சோகமாய் அக்குழந்தையின் உடன் பிறந்தது, 'ஹீமோஃபீலியா' (Hemophilia) என்றழைக்கப்படும் ரத்த உறைதிறன் குறைபாடு. இந்நோயால் தாக்கப்பட்டவர்களுக்கு உடலில் சிறு காயம் ஏற்பட்டாலும், ரத்தம் வெளியேறிக்கொண்டே இருக்கும்; நிற்காது! முடிவில், ரத்தம் முழுவதும் வெளியேறி மரணத்தில் வீழ்வர், இந்நோயாளிகள். அலெக்ஸியின் கொள்ளுப்பாட்டியான, பிரிட்டிஷ் மகாராணி விக்டோரியாவிற்கும் (Victoria) இந்நோய் இருந்தது. அவரின் மரபில் பிறந்ததால், அலெக்ஸியும் இந்நோயால் தாக்கப்பட்டிருந்தான். (இந்நோய் அலெக்ஸி மட்டுமல்லாது, ஐரோப்பிய அரச மரபினர் பலரையும் தாக்கி சோகத்தில் ஆழ்த்திக்கொண்டிருந்தது.) இவ்விஷயம் வெளியில் தெரியாமல் நீண்ட நாட்கள் பாதுகாத்து வந்தனர். அலெக்ஸி பொத்திப் பொத்தி வளர்க்கப்பட்டார். இருப்பினும் ஒருநாள் உடல்நிலை மோசமானது. அரசரும் அரசியும் மனமுடைந்து போயினர். (அக்காலத்திய) எம்மருத்துவமும் கைகொடுக்கவில்லை. அச்சமயத்தில், அரசியின் தோழியான அன்னா (Anna), "அரசியாரே, எனக்குத் தெரிந்த ஒரு சாமியார் இருக்கிறார். தீராத நோய்களையெல்லாம் தீர்த்து வைக்கிறார். அவரை அழைத்துவந்தால் நிச்சயம் நமது இளவரசரை குணமாக்கலாம் என நம்புகிறேன்" என்று ஆறுதலும், ஆலோசனையும் சொல்ல, ரஸ்புடினுக்கு அரசியிடமிருந்து ரகசிய அழைப்பு விடுக்கப்பட்டது. (வைத்தியம் பார்க்கத்தான்...!)


Image result for king nicholas and queen victoria
அரசர் நிக்கோலஸும், அரசி விக்டோரியாவும் தங்கள் 4 மகள்களுடனும், அலெக்ஸியுடனும்

       
ஆறரை அடி உயரத்தில் ஆஜானுபாகுவான தோற்றத்துடனும், கருப்புநிற உடையுடனும் அரசவையில் நுழைந்தார், ரஸ்புடின். இளவரசரைப் பார்த்தார்; அருகில் அமர்ந்து பிரார்த்தனை செய்தார். காக்கா உட்கார பனம்பழம் விழவில்லை; பனைமரமே விழுந்தது. இளவரசர் அலெக்ஸி குணமடையத் தொடங்கினார். அரசனும் அரசியும் ரஸ்புடினைக் கொண்டாடினார்கள். இந்நிகழ்வு குறித்து, அரசர் நிக்கோலஸின் மூத்த மகளான 'அனஸ்தாசியா ரோமனாவ்' (Anastasia Romanov) தனது நாட்குறிப்பேட்டில் பதிவுசெய்திருப்பதாவது : "அலெக்ஸியின் கண்களுக்குக் கீழே கருவளையம் படர்ந்திருந்தது. அவனது கால்கள் வீங்கியிருந்தன. இவற்றைக்கண்டு மருத்துவர்கள் செய்வதறியாது நின்றிருந்தனர். தங்களுக்குள் கிசுகிசுவென்று பேசிக்கொண்டனர். அப்போது நான் அங்கிருந்து எனது அறைக்குள் செல்லுமாறு வற்புறுத்தப்பட்டேன். பின்னர், செயின்ட் பீட்டர்ஸ்பெர்க்கிலிருந்த ரஸ்புடினுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அநேகமாக நள்ளிரவு அல்லது அதன்பிறகே அவர் அரண்மனைக்கு வந்ததாகத் தெரிகிறது. பின் மறுநாள் காலை என்னை எழுப்பி, அலெக்ஸியின் அறைக்குச் சென்று பார்க்குமாறு கூறினார்கள். அங்கு நான் சென்று பார்த்தபோது, என் கண்களை என்னாலேயே  நம்பமுடியவில்லை. அலெக்ஸியின் நோயுடனான போராட்டம் முற்றிலும் குணமாகியிருந்தது. அவன் கண்கள் பிரகாசமாக இருந்தது. தனது பாதங்களை தரையில் ஊன்றி எழுந்து நின்று பிரார்த்தனை செய்தான். அவர் அலெக்ஸியை தொடாமலேயே குணப்படுத்தியது எனக்கு மேலும் ஆச்சர்யமளித்தது; அவர் என் கண்களுக்கு கடவுளாகவே காட்சியளித்தார்." இவ்வாறு அதில் குறிப்பிட்டிருந்தார், அனஸ்தாசியா.
       
ஆனால் இதை, ரஸ்புடினின் சக்தியில் நம்பிக்கையற்றவர்கள் நம்புவதாயில்லை. 'அவர் இதை அறிதுயில் (Hypnotism) நிலையில் (இதுகுறித்து எதிர்கால பதிவுகளில் காணலாம்) செய்திருக்கலாம்' என்றும். 'அது நோயை போக்காது; நோயின் தாக்கத்தைக் குறைக்கும்' என்று ஒரு சாராரும், 'அவர் அட்டைப் பூச்சிகளைப் பயன்படுத்தியிருக்கிறார். அட்டைப்பூச்சியின் உமிழ்நீர் ரத்தத்தை உறைய வைக்கும், ஆனால், இச்சிகிச்சை நோயை மேலும் மோசமாக்கும்' என மற்றொரு சாராரும் வரிந்துகட்டிக்கொண்டு ரஸ்புடினை வசைபாட, ரஸ்புடினிலிருந்து மன்னர்வரை ஒருவரும் அதை கண்டுகொள்ளவில்லை. காரணம் இளவரசர் குணமாகிவிட்டார் என்பதே நிஜம்.
       
அன்றுமுதல் ரஸ்புடின் ஜார் மன்னரின் அரசவையின் வழிகாட்டியாகவும், மதகுருவாகவும், ஆலோசகராகவும் மாறினார். அன்றிலிருந்து தும்முவதாக இருந்தாலும் ரஸ்புடினை ஒரு வார்த்தை கேட்டுக்கொள்ள ஆரம்பித்தார் நிக்கோலஸ். இது, அங்கு முன்னர் மன்னரை ஆட்டுவித்துக்கொண்டிருந்த, திருச்சபையைச் சேர்ந்த மதகுருமார்களிடம் அனலைக் கிளப்பியது. எங்கிருந்தோ வந்த சாமியார், மன்னரை ஆட்டுவிப்பதா? ஜார் மன்னரின் ஆட்சியில், ஒரு சாமான்யனின் அதிகாரம் வேர்விடுவதா? என புழுங்கிய மந்திரிகளாலும் ரஸ்புடினின் இப்புகழை சகிக்க இயலவில்லை. எத்தனையோ எதிர்ப்புகளையும், வதந்திகளையும் ரஸ்புடினுக்கு எதிராகக் கிளப்பியும் கூட மன்னரிடத்தில் ரஸ்புடினின் செல்வாக்கு சரியவில்லை. ரஸ்புடினும் இதுகுறித்து கவலைப்படவும் இல்லை; அலட்டிக்கொள்ளவும் இல்லை. 'ஒருவனுக்கு நாணயமற்றவர்களிடமிருந்து எதிர்ப்புகள் கிளம்புமானால் அவன் வளர்கிறான் என்று அர்த்தம்' என்பதை அறிந்திருந்தார் ரஸ்புடின். இத்தகு இக்கட்டான சூழ்நிலையில் தன்னை தீர்க்கதரிசியாக பிரகடனப்படுத்திக் கொண்டு, அவரது எதிர்ப்பாளர்களின் வயிற்றெரிச்சலில் நெய்க்குடத்தை உடைத்தார். இவ்வாறான நிலையில்தான் ஜார் மன்னரின் அரசவைக்கு வந்தார் மற்றோர் தீர்க்கதரிசி. அவர், சீரோ/செய்ரோ. (Cheiro)


Image result for Cheiro
செய்ரோ
       
எதிர்காலத்தில் நிகழ இருப்பவற்றை நிகழ்காலத்தில் சொல்லவல்ல திறன்/சக்தி கொண்டவர்களே தீர்க்கதரிசிகள். என்னதான் ரஸ்புடின் பல்வேறு மதபிரிவுகளைக் கடந்திருந்தாலும், மனப்பக்குவமின்றி அவருள் இருந்த தீய-ரஸ்புடின் விழிப்புடனே இருந்தான். நமக்குப் போட்டியாக இன்னொரு தீர்க்கதரிசியா?! என்கிற ஆணவத்தோடும் கோபத்தோடும் அவையில் நுழைந்தார், ரஸ்புடின். அரசர் நிக்கோலஸின் அழைப்பின்பேரில் ரஷ்யாவிற்குச் சென்றிருந்த செய்ரோ, (இவரைப் பற்றி விரிவாக எதிர்கால பதிவுகளில் காணலாம்) அரசவையிலிருந்த ஒவ்வொருவரின் கைகளையும் பார்த்து, அவர்களின் எதிர்காலத்தைக் கூறி, பின்னர் அரசர் நிக்கோலஸின் கைரேகையையும் பார்த்து ஜோதிடம் கூறிக்கொண்டிருந்தார். அப்போது திடீரென ஒரு நபர் அரசவையினுள் அதிரடியாகப் புகுந்தார். நடுவகிடெடுத்த தலைமுடி, அடர்ந்த தாடி, உயரமான உருவம், தரையைத் தொடும் கறுப்பு அங்கி, கையில் சிலுவை, அதிரவைக்கும், அதிகாரம் நிறைந்த அழுத்தமான குரல், தீர்க்கமான கண்கள், மிரட்டும் பார்வை. இவை மட்டுமே செய்ரோவிற்குப் போதுமானதாக இருந்தது, வந்திருப்பது ரஸ்புடின்தான் என்பதை உணர்ந்துகொள்ள.

       'நம்மையும் மீறி ஒருவன் இங்கே எதிர்காலத்தைக் கணிக்க வந்திருக்கின்றானா?' என்கிற ஏளனமான தொனியில் சீரோவை ஏறிட்டார் ரஸ்புடின். அமைதியாக ரஸ்புடினைப் பார்த்து, "உங்கள் கைகளைப் பார்க்கலாமா?" என்றார் செய்ரோ. உள்ளூர தயங்கினாலும், வெளியில் அதனைக் காட்டிக்கொள்ளதவராய் சமாளித்தார். சிலநேர விதண்டாவாதங்களுக்குப் பின், முறைத்தவாறு கைகளை நீட்டினார் ரஸ்புடின். கைகளைப் பார்த்த சீரோ ஒரு கணம் உறைந்துபோய் நின்றார். 'இது மனிதனின் கையா? இல்லை சாத்தானின் கையா?!' என ரஸ்புடினின் சுயரூபத்தையும், அவரால் ரஷ்யாவின் மன்னராட்சியில் வருங்காலத்தில் வீசப்போகும் புயலையும் கைரேகையில் கண்டுணர்ந்து, அதை எவ்வாறு வெளிப்படுத்துவது என சற்றுத் தயங்கியவாறு விழித்துக் கொண்டிருந்தார், செய்ரோ. "எனது எதிர்காலத்தை நிர்ணயிக்கும் உரிமை எனக்கு மட்டும்தான் உண்டு. விதியை நிர்ணயிப்பவனின் விதியைப் பற்றி நீ சொல்லப் போகிறாயா?! இம்மக்களின் எதிர்காலம், ஏன், அரசரின் எதிர்காலம் கூட என் கைகளில்தான் உள்ளது" என கர்ஜித்தார் ரஸ்புடின். ('நான் சாகணும்னாலும் அதை நான்தான் முடிவு பண்ணனும்; நீ சாகணும்னாலும் அதையும் நான்தான் முடிவு பண்ணனும்'ங்கற ரேஞ்சுக்கு 'அஞ்சான்' பட டயலாக்கெல்லாம் அப்போவே பேசிருக்காரு மனுஷன்!) "ஏதோ எனக்குத் தெரிந்ததைச் சொல்கிறேன். அதை ஏற்பதும், ஏற்காததும் உங்கள் சவுகரியம்" என்றார் செய்ரோ, அமைதியாக. "நீ சொல்லப்போவது எனக்கு சிரிப்பைத்தான் வரவழைக்கப் போகிறது. இருந்தாலும் நீ என்னதான் சொல்லப்போகிறாய் எனப் பார்க்கலாம்!" என ஏளனமாகப் பேசினார், ரஸ்புடின். சற்றே அமைதியான புன்னகையுடன், "அடிமட்டத்திலிருந்து இந்த அதிகார நிலைக்கு வந்தவர் நீங்கள். ஆனால், இவ்வதிகாரமெல்லாம் தீயவற்றுக்குத்தான் வழிவகுக்கின்றன. மேலும் சொல்லவா?" என ரஸ்புடினை ஏறிட்டார், செய்ரோ. "நானே ஒரு தீர்க்கதரிசி. உன்னை விடப் பெரியவன். உன்னால் என்னைப்பற்றி என்ன சொல்லமுடியும்?" என கண்ணில் கனல் தெறிக்கக் கொதித்தெழுந்தார், ரஸ்புடின். மற்றொருபுறம், அரசருக்கும் அரசிக்கும், செய்ரோ ரஸ்புடினைப் பற்றி என்ன சொல்லப்போகிறாரோ என வயிற்றில் புளியைக் கரைத்தது. (வந்தோமா, நாலு நல்லத சொன்னோமா, அன்பளிப்ப வாங்கினோமா, கிளம்பி ஊருப் பக்கம் போனோமா-னு இல்லாம, இவன்கிட்ட என்னடா விபரீத விளையாட்டு?!) செய்ரோவின் முகம் திடீரென வாட்டமாக மாறியது. "இந்த அரண்மனை வளாகத்திலேயே உங்களின் மரணம் மிகக் கொடூரமாக நிகழப்போவது எனக்குத் தெரிகிறது. விஷமும், தோட்டாக்களும், கத்தியும் உங்கள் உயிரைக் குடிக்கப் போகின்றன. குளிர்நிறைந்த நேவா நதியில் உங்கள் உடல் மிதக்கப் போகிறது. அதோடு உங்கள் மரணத்திற்கு மன்னர் பரம்பரையினரே காரணமாக இருப்பர்" என்றவாறு மெல்ல நிமிர்ந்து ரஸ்புடினின் கண்களைப் பார்த்தார். ஒரு சில நொடிகள் முகத்தில் படர்ந்த பயம், அடுத்தகணம் வெறியாய் மாறியது. சிலவினாடிகள் அரசவையே அமைதியானது. அரசரும் அரசியும் பேயறைந்ததுபோல் அமர்ந்திருந்தனர். சீரோ பிடித்திருந்த தனது கையை வெடுக்கென உருவி, சட்டென எழுந்தார் ரஸ்புடின். செய்ரோவைத் தாக்கிவிடுவார் என்றே அனைவரும் அஞ்சினர். ஆனால், ரஸ்புடின் தன் கையிலிருந்த சிலுவையை நீட்டி, ரஷ்ய மொழியில் சீரோவை நோக்கி கோபமாக எதேதோ பேசினார். (நிச்சயமா எதாவது கெட்டவார்த்தையா இருக்கும்னு அங்க இருந்த ரஷ்ய மொழி தெரியாதவங்க நினைச்சிருப்பாங்க! ஏழெட்டு தலைமுறைய தோண்டியெடுத்து திட்டியிருப்பாரோ..?!) கோபத்தோடு வேகமாக அரசவையைவிட்டு வெளியேறவேண்டுமென்கிற நோக்கில் சிறிது தூரம் நடந்தவர், சற்று நின்று திரும்பி செய்ரோவையும், அரசவையிலுள்ள அனைவரையும் ஒருமுறை திரும்பிப்பார்த்தார். தனது நடுங்கவைக்கும் குரலில், "எனது மரணம் இயற்கையானதாக அமைந்தால் யாருக்கும் எந்தப் பிரச்சனையும் இல்லை. ஒருவேளை நீ சொன்னதுபோல் இந்நாட்டு அரச பரம்பரையினரால் நான் கொல்லப்பட்டால், இவ்வரசரின் வம்சமே நிர்மூலமாகும்!" என சபித்துவிட்டு திரும்பிப்பார்க்காமல் வெளியேறினார் ரஸ்புடின். ('இந்த எலும்புப் பய, சும்மா கிடந்தவனயெல்லாம் கிளப்பிவிட்டுட்டானே' என மன்னர் நினைத்திருக்கக்கூடும்.) கண் இமைக்காமல், நடந்த அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்த செய்ரோவிடம் வந்த ஒரு மொழிபெயர்ப்பாளர், சற்று நேரத்திற்குமுன் ரஸ்புடின் ரஷ்ய மொழியில் கொந்தளித்தவற்றை விளக்கினார். அவை, "ரஸ்புடினின் மரணத்தைச் சொல்ல நீ யார்? ரஸ்புடினுக்கு மரணமே கிடையாது! நீ கூறிய விஷம், கத்தி, தோட்டா எதனாலும் என் உயிரைப் பறிக்க இயலாது. நானே மக்களின் ரட்சகன். ஜார் பரம்பரையின் பாதுகாவலன். நான் ஜாருக்கும் மேலானவன்!".


      
 ரஷ்யாவிலிருந்து கிளம்பும்வரை செய்ரோவிற்கு உள்ளூர நடுக்கம் இருக்கத்தான் செய்தது. செய்ரோ மட்டுமல்ல, ஒட்டுமொத்த அரசகுடும்பமும் அரண்டுபோய்தான் கிடந்தது. (ஒருவேள, காட்டேரி பூசை கட்டிருவாரோ..?!) காரணம், ரஸ்புடினின் சக்தியில் அவர்கள் வைத்திருந்த அபார நம்பிக்கை. உண்மையிலேயே அவருக்கு அந்த அளவிற்கு சக்தி இருந்ததா? என்பதற்கான பதிலை ஒருவராலும் ஆதாரப்பூர்வமாகக் கூற இயலவில்லை. இருப்பினும், தனது ஆளுமைத்திறனாலும், சமயோசித புத்தியாலும் தன்னை ஒரு புதிய மீட்பராகவே மக்கள் நம்பும்படி செய்திருந்தார் ரஸ்புடின். இருக்கின்ற பீதி போதாதென்று, ரஸ்புடினின் ஆதரவாளர்களாக அரண்மனை முழுக்க வியாபித்திருந்த பெண்களனைவரும் 'ரஸ்புடினின் வாக்கு நிச்சயம் பலிக்கும்' எனக் கூறி, ஜார் மன்னருக்கு ஜுரம் வர வைத்தனர். ரஸ்புடின், பொதுவாகவே பெண் சிஷ்யைகள் அதிகம் கொண்ட ஒரு 'மஜா' சாமியாராகவே வாழ்ந்து வந்தார். கீழே பதிவிட்டிருக்கும் புகைப்படங்களே, அதற்கான சில ஆதாரங்கள். அவர் அனைத்துப் பெண்களையும் வசியம் செய்து, தனது மாயவலையில் வீழ்த்தி வைத்திருந்தவர், என பரவலாக பேச்சு அடிபட்டது; பின்னர் ஓரளவிற்கு ஊர்ஜிதமும் ஆனது. இருப்பினும் எவராலும் எதுவும் செய்ய இயலவில்லை. (ராஜாவால கூடவா..?!) சாதாரண பெண்கள் தொட்டு, அரச பரம்பரைப் பெண்கள் உட்பட, ராணி அலெக்ஸாண்ட்ரா வரை அனைவரையும் தொட்டுவிட்டார் என நாடெங்கும் ரஸ்புடினையும், அவரது பெண் சிஷ்யைகளையும் (!) இணைத்து, 'மஞ்சள் செய்திகள்' கொடிகட்டிப் பறந்தன. இந்த சூழ்நிலையில் ராணி அலெக்சாண்ட்ரா, தனது அந்தரங்க காரியதரிசியாக (அட பெர்சனல் செக்கரட்ரி-பா!) ரஸ்புடினை நியமித்தார். (ம்க்கும்... அப்புறம் ராஜாவால என்ன பண்ண முடியும் பாவம்..! ராணியே ரஸ்புடின் கைக்குள்ள..!)


Image result for தனது பெண் சிஷ்யை களுடன் ரஸ்புடின்
தனது பெண் சிஷ்யைகளுடன் ரஸ்புடின்

       ரஸ்புடினிடம் பெண்கள் வலிய சென்று பேசுவதும் பழகுவதும், அப்பெண்களின் கணவர்கள், காதலர்கள் (ஒருவருக்கு ஒருவர்-ங்கற அர்த்தத்துலதான் மக்களே சொல்றேன்.) என அப்பெண்கள் சம்பந்தப்பட்ட ஆண்களிடம் வெறுப்புணர்ச்சியை வளர்த்தது. அந்நாட்டு ராணியாரும், அரச பரம்பரையைச் சேர்ந்த பெண்களும் இதற்கு விதிவிலக்கில்லாமல் போனது, அரச வம்சத்தைச் சேர்ந்த ஆண்களிடமும், பிரபுக்களிடமும், திருச்சபையைச் சேர்ந்தவர்களிடமும் பகையுணர்ச்சியைப் பெருக்கியது. முடிவில், ரஸ்புடினின் கதையை முடித்தால்தான், இம்மாதிரியான விஷயங்களுக்கும், வதந்திகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கமுடியும் என நாலைந்துபேர் கொண்ட உயர்மட்டக் குழு ஒன்று முடிவு செய்தது. இவ்விஷயத்தில் பெரிதும் ஆர்வம் காட்டியவர், இளவரசர் ஃபெலிக்ஸ் யூசுபோவ் (Felix Yusupov). காரணம், இவரும் பாதிக்கப்பட்டிருந்தார். ('இந்த அரண்மனையில இருக்குற பொண்ணுங்கள இவன்கிட்ட இருந்து காப்பத்துறதே, இந்த அரண்மனைல இருக்குற ஆம்பளைங்களுக்கு வேலையா போச்சே..! அதுலயும் என் duty, over time-ஆவுல போய்கிட்டு இருக்கு..!!!' என யூசுபோவ் வருந்தாத நாளில்லை.) 


       
இளவரசன் ஃபெலிக்ஸ் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் பயின்றவன். தனது மனைவி ஐரினா(Irina)-வின்மேல் அளவுகடந்த அன்பு கொண்டிருந்தான். ஆனால் ஐரினாவோ, ரஸ்புடின் மேல் அளவுகடந்த அன்பு வைத்திருந்தாள். (வெளங்கிடும்..!) ஒரு போலிச்சாமியார் (யூசுபோவிற்கு ரஸ்புடினின் சக்தியில் நம்பிக்கை கிடையாது) அரசவையின் அதிகாரத்தில் கைவைப்பதா என பலநாள் புழுங்கிய மனத்தின் கடைசி அஸ்திரம்தான், ரஸ்புடினைக் கொல்லும் சதித்திட்டம். யூசுபோவ் தனியொருவனாக இதைச் செய்ய விரும்பவில்லை. இதற்காக 25 வயதேயான டிமிட்ரி பவ்லோவிச் (Dmitri Pavlovich) என்ற பிரபுவை முதலில் தன்னுடன் கூட்டு சேர்த்தான். முதலில் சற்று (ரஸ்புடின் மீதான பயத்தின் காரணமாக) தயங்கினாலும், பின்னாளில் தானும் அரியணை ஏறும் சந்தர்ப்பம் இருப்பதால் சம்மதித்தான். (இவனும் அனுபவப்பட்டிருக்கான்!) பின்னர், அங்கிருந்த செயல்படாத பாராளுமன்றத்தின் தலைவனாக இருந்த விளாடிமிர் புரிஷ்கெவிச் (Vladimir Purishkevich) என்பவரை இக்கூட்டு சதியில் இணைய அழைத்தபோது, விருப்பத்தோடு வந்திணைந்தார். இறுதியாக இக்கூட்டணியில் தன்னை இணைத்துக்கொண்டவர், டாக்டர். ஸ்டேனிஸ்லஸ் லாசாவெர்ட் (Dr.Lazavert). (இவரது புகைப்படம் கிடைக்கவில்லை!) நால்வரும் ரஸ்புடினை அழித்தே தீருவது என்பதில் முனைப்போடு மிகத்தீவிரமாகத் திட்டமிட்டார்கள். முடிவில், ரஸ்புடினுக்கு விஷம் வைத்து கொள்வது என ஏக மனதாக முடிவெடுக்கப்பட்டு, அப்பொறுப்பு டாக்டர்.லாசாவெர்ட்டின் வசம் ஒப்படைக்கப்பட்டது. (ரஸ்புடினோட பலத்தோட இவங்களால ஒண்டிக்கு ஒண்டிலாம் நின்னு மோத முடியாது!)


   
சரி. திட்டம் தீட்டியாயிற்று. எவ்வாறு விஷம் வைத்துக் கொல்வது? கிறிஸ்துமஸ் நெருங்கிக்கொண்டிருந்த நேரம். டிசம்பர் 16-ம் தேதி இரவு விருந்தொன்றிற்கு ரஸ்புடினை அழைத்து, அவ்விருந்தில் ரஸ்புடினுக்கு என சிறப்பாகப் பரிமாறப்படும் உணவில் விஷத்தைக்கலப்பது என முடிவுசெய்யப்பட்டது. சாமான்யமாக ரஸ்புடின் எதற்கும் ஒப்புக்கொள்ளமாட்டானே என யூசுபோவ் குழம்பும்போது, 'ஐரினாவும் விருந்திற்கு வருகிறாள் என்று சொன்னால் நிச்சயம் வருவான்' என எந்த நல்லவனோ யோசனை கூறினான். (அவனை நிச்சயம் யூசுபோவ் முறைத்திருப்பார்!) வேறுவழியின்றி ரஸ்புடினிடம் அவ்வாறே சொன்னார் யூசுபோவ். ஐரினா வருகிறாள் என்றதும் உடனே சம்மதித்தார் ரஸ்புடின்; யூசுபோவ் காதுகளில் புகை வந்தது. (வாடா நீ வாடா... என் ஏரியாவுக்கு வாடா, உனக்கு இருக்கு..!)

       'மெளகா' (Mouga) எனும் கால்வாய்க்கு அருகிலிருந்த 'பெட்ரோகிராட்' (Petrocrate)-டில் விருந்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இவர்கள் எதிர்பார்த்ததுபோன்றே குறித்த நேரத்தில், தனக்கு விருப்பமான விலையுயர்ந்த பட்டாடை அணிந்தவராய் வந்து சேர்ந்தார் ரஸ்புடின். அவர் அவ்வாறு அங்கு வரும்முன், அவரது ஆதரவாளர்கள் சிலர், அங்கு அவரின் உயிருக்கு ஏதோ ஆபத்து இருப்பதாகவும், அதனாலேயே யூசுபோவ் வலிய வந்து விருந்திற்கு அழைப்பதாகவும் எச்சரித்தனர். இருப்பினும், ஐரினாவின் மீதிருந்த மயக்கத்தினாலும், நம்பிக்கையினாலும் அவற்றை உதாசீனப்படுத்தினார் ரஸ்புடின். தனது மகளுக்கு பணம் அனுப்புவதிலும், சில ரகசிய கடிதங்களை எரித்து அழிப்பதிலும், பிரார்த்தனை செய்வதிலுமே கவனமாக இருந்தார்; அவர்கள் வார்த்தைகளை காதில் வாங்கிக் கொள்ளவில்லை. ரஸ்புடின் வரும்முன்னரே ஐரினாவை தனது எஸ்டேட்டிற்கு அனுப்பிவைத்திருந்தான், யூசுபோவ். விருந்து நடக்கும் மாளிகையின் கீழேயுள்ள பாதாள அறையில் ரஸ்புடினுக்கான விசேஷ உணவுகள் மேஜையின்மீது பரப்பட்டிருந்தன. அங்கிருந்த (ரஸ்புடினுக்கான) உணவுப் பொருட்களனைத்திலும் பொட்டாசியம் சயனைட் எனும் கொடிய நஞ்சு கலக்கப்பட்டிருந்தது. [இங்கு சயனைடைப் பற்றி சொல்லியாகவேண்டும். வாயில் வைத்தவுடன் உயிரை எடுக்கும் அளவிற்கு கொடியது, சயனைடு. தீவிரவாதிகள் பற்றிய திரைப்படங்களில், தீவிரவாதிகள் கழுத்தில் கட்டியிருப்பார்களே, பிடிபடும் சூழ்நிலையில் அதை வாயில்வைத்து இறப்பார்களே, அது சயனைடேதான்! அதன் சுவை எவ்வாறு இருக்கும் என அறிய, சில சோதனைகளுக்கு தங்களை உட்படுத்திக்கொள்ள தாங்களாகவே சில மனிதர்கள் முன்வந்ததாகவும், 'S' என்ற முதல் எழுத்தை எழுதியவாறே அவர்களின் உயிர் பிரிந்ததாகவும், என் நண்பர் திரு.செந்தில் குமரன் அவர்கள் கூறி, கேள்விப்பட்டிருக்கிறேன். S எனத் துவங்குவதால், அச்சுவை, இனிப்பு (Sweet), புளிப்பு (Sour), உவர்ப்பு (Salty) என எதுவாகவும் இருக்கலாம்! 'அவர்கள் ஏன் எழுதச் சொன்னார்கள்? பேசாமல் ஒரு பொத்தானை அழுத்தி, எந்த சுவை என கண்டறியும்படி செய்திருக்கலாமே' என கேட்டதற்கு, 'ஒருவேளை ஒன்றுக்கு மேற்பட்ட சுவைகளை, அதை விழுங்கும் நபர், அதை விழுங்கும்முன் உணர்ந்தால்?' என்பது என் நண்பரின் எதிர்க்கேள்வியாய் அமைந்தது. எது எப்படியோ, வாயில் சயனைடை வைத்தவுடன் உயிர் பிரியும் என்பதே நிதர்சனம்!] முதலில் விருந்து என்றும், அது முடிந்தபின் கேளிக்கைகளுக்கு மேலே செல்வது என்றும் நிகழ்ச்சிநிரல்கள் அமைக்கப்பட்டன. ரஸ்புடின் வரும்போதே நிகழ்சிகள் ஆரம்பமாகிவிட்டன. எனவே அவரை நேரே (தங்கள் திட்டப்படி) பாதாள அறைக்கு அழைத்துச் சென்றனர்.
   
அறையினுள் நுழைந்தவுடன் ரஸ்புடின் யூசுபோவிடம் கேட்ட முதல் கேள்வி, "ஐரினா எங்கே?" ('அது ஏண்டா எப்ப பார்த்தாலும் என் பொண்டாட்டி மேலயே குறியா இருக்கான்?!' என யூசுபோவ் அருகிலிருப்பவனை முறைத்திருக்கக் கூடும்!) "மேலே வந்திருக்கும் விருந்தினர்களை உபசரித்துக் கொண்டிருக்கிறாள். விரைவாக சாப்பிடுங்கள் இருவரும் சேர்ந்தே போய் அவளைப் பார்க்கலாம். உங்களுடன் சேர்ந்து சாப்பிடவேண்டுமென்பதற்க்காக நானும் இன்னும் சாப்பிடவில்லை." என வற்புறுத்தி விருந்துக்கான மேஜையில், தன் எதிரில் அமர்த்தினான். இருப்பினும், ரஸ்புடினின் மனதினுள் ஏதோ விநோதமாகப் பட, உடனே எழுந்தார். வற்புறுத்தி அமரவைத்து, விஷ கேக்குகள் ரஸ்புடினுக்கும், நஞ்சற்றவை யூசுபோவுக்கும் பரிமாறப்பட்டன. ரஸ்புடினின் மனம் வேறெங்கோ சஞ்சரித்துக்கொண்டிருந்தது. 'இனி நான் உண்டால்தான் இவனும் உண்பான் போலிருக்கிறது' என உணர்ந்த யூசுபோவ், தனது தட்டிலிருந்த கேக்குகளை உண்ணத் தொடங்க, ரஸ்புடினும் தனது தட்டிலுள்ளவற்றை உண்ண ஆரம்பித்தார். வெறுமனே உண்ணாமல் தனக்கிருந்த ஓரினசேர்க்கை  வியாதிக்கு தீர்வு கூறவேண்டுமென்று, ரஸ்புடினின் சக்தியில் நம்பிக்கையுள்ளவனைப் போல் காட்டிக்கொண்டவாரே சாப்பிட்டான். கேக்குகள்தான் காலியாகினவேயொழிய, ரஸ்புடின் அதே கம்பீரத்தோடு அமர்ந்திருந்தார். மணி பன்னிரெண்டை நெருங்கிக் கொண்டிருந்தது. சயனைடு அவரை ஒன்றுமே செய்யவில்லை. போதாக்குறைக்கு இடையிடையே, 'ஐரினா எங்கே?' என்றுவேறு கேட்டுக்கொண்டார். அவ்வாறான நேரங்களில் யூசுபோவ் பல்லைக்கடிப்பது, அவர் வாயினுள் இருந்த கேக்கின் காரணமாக வெளியில் தெரியாமல் இருந்தது. பின்னர் சயனைடு கலக்கப்பட்ட ஒயின் கொடுக்கப்பட்டது; அதுவும் ரஸ்புடினை ஒன்றும் செய்யவில்லை. ஒரு சின்ன தலைசுற்றல்கூட இல்லாமல், ஐரினாவைக் குறித்து கேள்வியெழுப்பி யூசுபோவின் வெறியைக் கிளப்பிக்கொண்டிருந்தார், ஏதும் அறியாதவராய். (நான், 'இந்த சதித்திட்டம் பற்றி ஏதும் அறியாதவர்' என்று கூறினேன்!) அங்கு ரஸ்புடினுக்கு வைக்கப்பட்டிருந்த அனைத்துமே ரஸ்புடினுக்கு விருப்பமான கேக் வகைகள். அதனால், சற்று அதிகமாகவே சாப்பிட்டார் ரஸ்புடின். அத்தனை கேக்குகளிலும் விஷம்! இருந்தும் எதுவுமே ஆகாமல் உட்கார்ந்திருந்த ரஸ்புடினைப் பார்த்து உள்ளூர வியந்துதான் போனான் யூசுபோவ். மேலே கொண்டாட்ட சப்தங்கள் அதிகமாக அதிகமாக, ஐரினா வருவாள் என்கிற ரஸ்புடினின் எதிர்பார்ப்பும் அதிகமானது. ('அபிராமி வருவாளா?'-னு கேக்குற குணா கமல் மாதிரி ஆயிட்டாரே பா மனுஷன்!) ரஸ்புடினின் கவனத்தைத் திருப்ப, அவரின் விருப்பப்படி பாடலெல்லாம் பாடிக் காட்டினான் யூசுபோவ். (இங்க கொலை பண்ண வந்தோமா? இல்ல கொடைக்கானல் டூர் வந்தோமா?-னு ஒருதடவையாவது யூசுபோவ் நெனச்சுப் பாத்திருப்பாரு!) கதை முடிந்தது என்று பார்த்தார்கள்; ஆனால் உண்மையில் விடிந்தது! (கிழிந்தது!) மணி இரண்டு! இருவருக்கும் பொறுமையில்லை! "நீங்கள் இங்கேயே இருங்கள். நான் சென்று ஐரினாவை அழைத்துவருகிறேன்" என ஆத்திரத்தோடும் ஒருவித பயத்தோடும் மேலே சென்றான், யூசுபோவ். மேலே சென்று தன் சகாக்களிடம் விஷயத்தைத் தெரிவித்தான். முதல்முறையாக அவர்கள் அனைவருக்கும், 'பிறர் நம்புவதுபோல், உண்மையில் ரஸ்புடினிடம் ஏதேனும் சக்தி இருக்குமோ?' என்கிற பயம் தொற்றிக்கொண்டது. (கேக்குல பாய்சன கலந்தீங்களா..? பால்பவுடர கலந்தீங்களாடா..? எங்க அந்த டாக்டரு..?!)

   'இதைவிட்டால் இன்னொரு சந்தர்ப்பம் வாய்க்காது. ஐரினாவும் இப்போது இல்லை. பொய் சொல்லிதான் அவனை வரவழைத்தோம் என்று தெரிந்தால், அடுத்தமுறை உண்மையிலேயே ஐரினா இருந்தாலும்கூட இவன் இதுபோன்ற ஒரு சூழ்நிலைக்கு தானாக வந்து மாட்ட மாட்டான். என்ன செய்யலாம்?' என அனைத்து சதித்திட்ட உயர்மட்டக்குழு உறுப்பினர்கள் மேல்தளத்தில் விவாதித்துக் கொண்டிருந்தனர். "அப்படியானால் அவனை சுட்டுக் கொல்வதுதான் ஒரே வழி!" என தனது முதுகுக்குப் பின்னால் மறைத்துவைத்திருந்த சிறிய கைத்துப்பாக்கியை யூசுபோவின் கைகளில் திணித்து, "எதற்கும் இருக்கட்டும் என கொண்டுவந்தேன்!" என சிரித்தான், டிமிட்ரி பிரபு. ('என்னைய வச்சே செக் பண்ணுங்கடா?' என விழித்திருப்பார் யூசுபோவ்) 

       கீழ் தளத்தில், பிரம்மாண்டமாக செய்யப்பட்டிருந்த அலங்காரங்களைப் பார்த்து வியந்தும், அங்குள்ள சுவற்றில் மாட்டப்பட்டிருந்த ஓவியங்களைப் பார்த்து ரசித்துக்கொண்டும் நின்றிருந்தார், ரஸ்புடின். "படங்கள் மிகவும் அழகாக இருக்கின்றன, இல்லையா?" என்று கேட்டவாரே ரஸ்புடினின் பின்னால் நின்றிருந்த யூசுபோவ், அவரது முதுகில் துப்பாக்கியை வைத்து விசையை அழுத்தினான். துப்பாக்கிக் குண்டு உடலை பெரும் சத்தத்துடன் துளைக்க, முதுகிலிருந்து ரத்தம் பீறிட, சுருண்டு தரையில் விழுந்து துடித்தார் ரஸ்புடின். மேலே வாசலுக்கருகில் மற்ற மூவரும் நின்றிருந்ததால், அவர்கள் மட்டும் சத்தம் கேட்டு கீழே ஓடிவந்தனர். (சுட்டது யாரு? சுடப்பட்டது யாரு?னு பாக்குறதுக்கு!) மேலே இருந்த சத்தத்தின் காரணமாக மற்றவர்களுக்கு துப்பாக்கி சத்தம் கேட்கவில்லை. கீழே வந்த அனைவருக்கும் முகத்தில் அப்படியொரு சந்தோஷம். பின்னர் சலனமற்றுக்கிடந்த ரஸ்புடினின் உடலை, தரையில் விரிக்கப்பட்டிருந்த கம்பளம், அவரது ரத்தத்தால் கறை படாதவாறு இருக்க, நால்வரும் சேர்ந்து தூக்கி ஒரு ஓரமாக வைத்தனர். சற்றே நிம்மதியுடன் மேலே சென்று தனது சகாக்களுடன் சந்தோஷமாகக் குடித்து கும்மாளமிட்டான் யூசுபோவ். திடீரென மனதினுள் ஒரு நெருடல், வேகமாக கீழே இறங்கிவந்து ரஸ்புடினுக்கு இன்னும் நாடி துடிக்கிறதா என அறிய குனித்தான். சட்டென கண்விழித்த ரஸ்புடின், "ஃபிலிக்ஸ்...ஃபிலிக்ஸ்" என பயங்கரமாய்க் கத்தியவாறு யூசுபோவின் சட்டையைக்கிழித்து, யூசுபோவை ஓங்கி ஒரு உதை விட தொலைவில் போய் விழுந்தான் யூசுபோவ். சுதாரித்து எழுந்து திரும்பிப் பார்த்தால், ரஸ்புடின் கண்ணில் கொலைவெறியோடு யூசுபோவை நோக்கி ஓடிவந்துகொண்டிருந்தார். (தெய்வமே என்னையக் காப்பாத்து..!) யூசுபோவ் ஓடத்துவங்க, விடாமல் விரட்டினார் ரஸ்புடின். ஓடும்போதே தன்னிடமிருந்த துப்பாக்கியால் பின்னால் அவ்வப்போது திரும்பி 4 முறை சுட்டான் யூசுபோவ். 2 முறை குறி தவறியது; 2 முறை ரஸ்புடினின் உடலைத் துளைத்தது. இருப்பினும் எவ்வித பயனும் இல்லை; துரத்தல் தொடர்ந்தது. (ஆஹா...இன்னைக்கு-னு பாத்து ஒரு பயலையும் காணோமே..!) சத்தம்கேட்டு கீழே வந்த புரிஷ்கெவிச் தனது பாதுகாவலர்களுக்கு உத்தரவிட அவர்களும் சுட்டனர். அதுவும் வேலைக்கு ஆகவில்லை. ஆனால், எதிரிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதை உணர்ந்த ரஸ்புடின், வேறொரு பாதைவழியாக அங்கிருந்த நந்தவனத்தினுள் நுழைந்து ஓடத் துவங்கினார். அப்போது பின்னாலிருந்து வந்த டிமிட்ரி பிரபு தனது பெரிய துப்பாக்கியால் ரஸ்புடினைச் சுட, தலையில் குண்டுதுளைத்து ரத்தவெள்ளத்தில் கீழே சரிந்தார். ஒருவழியாக ஒழிந்தான் என்றவாறு அவ்வுடலை மீண்டும் மாளிகைக்குள் இழுத்துவந்து போடுமாறு தனது பாதுகாவலர்களைப் பணித்தார். அவர்களும் அவ்வாறே செய்த்துவிட்டு வெளியேறினர். யூசுபோவ் அவ்வுடலையே பார்த்துக்கொண்டிருக்க, ரஸ்புடின் நறநறவென பற்களைக் கடிப்பது தெரிந்தது! "இவன் இன்னும் சாகவில்லை; இன்னும் உயிரோடுதான் இருக்கிறான்" என்று ஒரு இரும்புத்தடியை எடுத்து ரஸ்புடினின் தலையிலும் உடலிலும் சரமாரியாக வெறிபிடித்தவனைப் போல் தாக்கினான், யூசுபோவ். மற்ற நால்வரும் அவனைத் தடுத்தனர். (அப்போது ரஸ்புடினின் ஆணுறுப்பு அறுக்கப்பட்டதாக ஒரு குறிப்பு உள்ளது. அதற்கு ஆதாரமாக அவ்வாறு துண்டிக்கப்பட்டது இன்றும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. கூகுளில் ரஸ்புடினைப் பற்றித் தேடினாலே கிடைக்கும். இத்தளத்தை பள்ளி மாணவ மாணவியரும் பார்வையிடுவதாக தகவல் கிடைத்தது. அவர்களின் நலன்கருதி அப்படத்தை நான் இங்கு இணைக்கவில்லை!) "இதற்குப் பின்னும் சாகாமல் இருக்கிறான் என்றால் இவன் மனிதப் பிறவியே கிடையாது!" என முணுமுணுத்தவர்களாய் அடுத்து என்ன செய்வது என யோசித்தனர். நீண்ட போராட்டத்திற்குப் பின் ரஸ்புடினின் துடிப்பு அடங்கியது. இருப்பினும், அவரது உடல் வெதுவெதுப்பாக இருப்பதை உணர்ந்து அதிர்ந்தனர். (பொதுவாக, இறந்தவுடன் ரத்தஓட்டம் நின்றுவிடுவதாலும், உடலுறுப்புகள் செயலிழந்துவிடுவதாலும், உடல் உஷ்ணம் குறைந்து, உடல் குளிரத் துவங்கும்!)


Image result for காயங்களுடன் ரஸ்புடினின் உடல்
காயங்களுடன் ரஸ்புடினின் உடல்
    
 நால்வரும் ரஸ்புடினின் உடலை இறந்துவிட்டதாக முடிவுசெய்து, ஒரு கம்பளத்தில் வெளியில் வரமுடியாதபடி (ஒருவேளை உயிர் பிழைத்துவிட்டால்!) இறுகக் கட்டி ராணுவ ஆம்புலன்ஸ் ஒன்றில் ரகசியமாக ஏற்றி, அருகில் ஓடிக்கொண்டிருந்த நேவா நதியில் வீசிவிட்டு ஒன்றும் தெரியாதவர்களாக மீண்டும் மாளிகைக்கு நிம்மதியாகத் திரும்பினர். ஆனால், அவ்வாறு அவர்கள் ரஸ்புடினின் உடலை வீசிஎறியும்போது, ரஸ்புடினின் செருப்பு ஒன்று அங்கே விழுந்துவிட, அதை ஒருவரும் கவனிக்கவில்லை. மூன்று நாட்களுக்குப் பின், ஒரு காவல்துறை அதிகாரியின் கண்களில் பட நதிக்கரையில் சோதனை நடத்தினார். ஏற்கனவே நாடெங்கும் ரஸ்புடினைக் காணவில்லை என்கிற செய்தி பரபரப்பாகப் பேசப்பட்டுக்கொண்டிருந்தது. நதிக்கரையில், சற்றுத் தொலைவில் ரஸ்புடினின் உடல் கிடப்பதைக் கண்டறிந்தனர்; பிரேதப் பரிசோதனையும் செய்தனர். உடலில் விஷம் எதுவும் இல்லை! 3 துப்பாக்கிக் குண்டுகள் மட்டும் இருந்தன. ஒரு குண்டு வயிற்றுப் பகுதியையும், கல்லீரலையும் தாக்கியிருந்தது. இன்னொரு குண்டு சிறுநீரகப் பகுதியைத் தாக்கியிருந்தது. மற்றொரு குண்டு மூளைப்பகுதியில் காயத்தை ஏற்படுத்தியிருந்தது. (மூளையை என்னதான் சிதைத்தாலும், நம்மால் அவ்வலியை உணர இயலாது (மயக்கமருந்து கொடுக்கப்படாத நிலையிலுமே கூட) என்பது கொசுறுத் தகவல்!) நுரையீரலில் நீர் இருந்தது. அதாவது நீரினுள் தூக்கிப் போட்டபோதும் கூட ரஸ்புடின் உயிரோடு இருந்திருக்கிறார். அவர் சுவாசிக்கும்போது, நீர் நுரையீரலுள் புகுந்திருக்கும் என சில மருத்துவர்கள் கூறினர். கட்டித் தூக்கிப் போட்டபின் எவ்வாறு வெளியே வந்திருப்பார் என குழம்பிக்கொண்டிருந்த கும்பலுக்கு, அவ்வுறைநீரிலும், அவர் உயிரோடு நீந்தி, எப்படியோ முடிச்சை அவிழ்த்து வெளியேறி, கரையேற முயன்றிருப்பது தெரிந்து வியர்த்துக்கொட்டியது. முடிவில், கொலைகார கும்பல் பிடிபட்டது. அரசவையில் பதவியிலிருந்த ஒரு முக்கிய நபரை படுகொலை செய்ததற்குத் தண்டனையாக, யூசுபோவ் அந்நாட்டு கிராமம் ஒன்றிலிருந்த எஸ்டேட்டுக்கும், டிமிட்ரி பெர்சியா(Persia)-வுக்கும் நாடுகடத்தப்பட்டனர். புரிஷ்கெவிச் ரஸ்புடினின் கதையை முடித்ததாக எண்ணிய அன்று ரயில் ஏறியவன் என்ன ஆனான் என்றே தெரியவில்லை; அதன்பின் யார் கண்ணிலும் அகப்படவில்லை. இது கண்துடைப்பிற்குக் கொடுக்கப்பட்ட தண்டனை என எல்லோருக்குமே தெரிந்தது. (ஏன்னா, ராஜாவுக்கு ராணி கிடைச்ச சந்தோஷம்!) 

       ரஸ்புடினின் மறைவுக்குப் பின், அரண்மனையிலிருந்த அவரது அறையை சோதனையிட்டனர். அப்போது கிடைத்த ஒரு கடிதத்தில் ரஸ்புடின் எழுதியிருந்த தீர்க்கதரிசனங்கள் மக்களை வியப்பில் ஆழ்த்தியது. அதில் ரஸ்புடின் குறிப்பிட்டிருந்தவை.
  • 1917-ம் ஆண்டு ஜனவரி முதல் தேதிக்கு முன்பாகவே நான் மரணமடைவேன்.
  • பிரபுக்கள் அல்லது உயர்குடியைச் சேர்ந்தவர்களால் நான் கொல்லப்படலாம்.
  • எனது மரணம் நிகழ்ந்த அடுத்த இரண்டு ஆண்டுகளில், அரசகுடும்பத்தை சேர்ந்த அனைவரும் மரணமடைவார்கள்.
  • கிறிஸ்தவ மதத்திற்கு எதிரானவர்கள் ரஷ்யாவில் ஆட்சியைப் பிடிப்பார்கள்.
  • அவ்வாறு ஆட்சியைப் பிடிப்பவர்கள், பின்னாளில் தங்களுக்குள் ஏற்படும் சகோதரச் சண்டை காரணமாக வெறுப்பு மிகுதியாகி, ஒருவரையொருவர் தாக்கி மடிவார்கள்.
  • தேவாலயங்களின் மதிப்பு குலைக்கப்படும்.
இவற்றில் அவர் குறிப்பிட்டிருந்த அனைத்துமே நடந்ததுதான் ஆச்சர்யம். இவ்வாறு குறிப்பிட்டிருந்த 6 விஷயங்களில் எவைஎவை நிகழ்ந்தன என இனி காணலாம்.
1.      1916-ம் ஆண்டு டிசம்பர் 19-ம் தேதி ரஸ்புடினின் உடல் கண்டெடுக்கப்பட்டது.
2.      ரஸ்புடினைக் கொல்வதில் பங்கற்றியவர்கள் அரச மரபினரும், பிரபுக்களுமே என்பதை முன்னரே கண்டோம்.
3.      ஜார் மன்னரின் மனைவி அலெக்சாண்ட்ரா ஜெர்மனியைச் சேர்ந்தவள். முதல் உலகப்போர் காலகட்டத்தில் (1914 - 1918), ஜார் மன்னர் நிக்கோலசை வற்புறுத்தி போர்முனைக்கு அனுப்பியவர், ரஸ்புடின். அன்று முதலே, அலெக்சாண்ட்ரா ரஷ்யாவின் அப்போதைய எதிரிநாடான ஜெர்மனிக்கு ஆதரவாகவும், ரஷ்யாவிற்கு எதிராகவும் உளவுவேலை பார்ப்பதாக நாடெங்கும் பரவலாகக் கிசுகிசுக்கப்பட்டது. அதற்கு ரஸ்புடின்தான் துணையாக இருப்பதாகவும் நம்பப்பட்டது. இதன்பின், இவ்விருவரின்மீதும் நாட்டுமக்கள் பெரும்பாலானோருக்கு வெறுப்பு இருந்தாலும், ரஸ்புடின் மீதான பயம் மக்களை வாய்பேசமுடியாமல் செய்தது. போதாக்குறைக்கு, "இவர் என் நண்பர்" என ரஸ்புடினின் தோளில் கைபோட்டு ஜார் மன்னர் தனது வட்டாரங்கள் முழுவதும் அறிமுகப்படுத்தியதால், அரசவை அதிகாரிகளும், மந்திரிகளும்கூட 'அரசருக்கு நெருக்கமானவரைப் பற்றிக் குறைகூறினால், தங்கள் பதவி பறிபோய்விடுமோ' என்கிற பயத்தில், ரஸ்புடினுக்கு எதிராக மூச்சுவிடவில்லை. ரஸ்புடின் இறந்த சிலகாலம் கழித்து ஏற்பட்ட மக்கள் புரட்சியின் காரணமாக ஜார் மன்னரின் பதவி பறிக்கப்பட்டது. அதற்கடுத்து பதவிக்கு வந்த ஆட்சியாளர்களால், ஜார் மன்னரின் குடும்பத்திலிருந்த அனைவரும் தூக்கிலிடப்பட்டும், சுட்டுக்கொல்லப்பட்டும் இறந்தனர். ஆனால், ரஸ்புடினின் கொலையில் சம்பந்தப்பட்ட 3 பேர் மட்டும் அப்போது கொல்லப்படவில்லை என்றும், அவர்கள் நீண்ட நாட்கள் உயிர்வாழ்ந்தாகவும் சொல்லப்படுகிறது. ரஸ்புடினின்மீது உயிரையே வைத்திருந்த ஐரினா, ரஸ்புடினின் மறைவிற்குப் பின் மனநிலை பாதிக்கப்பட்டு, பைத்தியம் போல் ஆனாள். அவளது இந்நிலைக்குக் காரணம் ரஸ்புடின்தான் என்று நம்பி, தனது கடைசிக்காலம் வரை வருந்திக்கொண்டிருந்தான் யூசுபோவ்.
4.      ரஷ்யாவில் அதன்பின் ஆட்சிக்கு வந்தவர்கள், 'கம்யூனிஸ்டுகள்' (Communists). அவர்கள் இறைமறுப்புக் கொள்கையுடையவர்கள் என்பது அனைவருக்கும் தெரியும்.
5.      முதலில் ஒற்றுமையாக இருந்த கட்சியில், பின்னாளில் லெனினுக்கு (Lenin) எதிராக ஸ்டாலின் (Joseph Stalin) புறப்பட்டதும், அவர்களுக்கிடையேயான பிணக்குகளால் ஏற்பட்ட பிரிவினைகளும் அனைவரும் அறிந்ததே.
6.      ஸ்டாலின் தனது ஆட்சிக்காலத்தில், தேவாலயங்களை தானியக் கிடங்குகளாகப் பயன்படுத்தினார்.
       
இவ்வாறாக ரஸ்புடின் தீர்க்கதரிசனமாய்க் கூறிய பலவும் பின்னாளில் நிகழ்ந்தன. எப்படி ஒரு சாதாரண மனிதரால் இவற்றை செய்ய முடிந்தது? இவ்வளவு சக்திகள்/திறன்கள் இவருக்கு எங்கிருந்து வந்தன? மாயாஜாலமா? மந்திரசக்தியா? கடவுள் அருளா? சாத்தானின் செயலா? தற்செயலா? மர்மம் இன்னும் மர்மமாகவே தொடர்கிறது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக நம்பினர்; இன்னும் நம்பிக்கொண்டிருக்கின்றனர்; எதிர்காலத்திலும் இவ்வாறான தனிப்பட்ட நம்பிக்கைகள் தொடரும் என்று நாமும் நம்பலாம். பின்பு, 1977-ல், ரஸ்புடின் வாழ்ந்த வீட்டுத் தோட்டத்தை தோண்டியபோது ஒரு மரப்பெட்டி கிடைத்தது. அதிலிருந்தவை பார்ப்போரை முகம் சுளிக்க வைத்தது. அதிலிருந்தவை பெண்களின் அந்தரங்கப் பகுதிலிருந்து கத்தரிக்கப்பட்ட முடி. (கேட்டா, ஆன்மீக ஆராய்ச்சி-னு சொல்லுவாங்க!)

     
 ரஸ்புடினின் மறைவு பெரும்பாலானோருக்கு மகிழ்ச்சியைத் தந்தாலும், அவரின் மறைவிற்கு வருத்தப்பட்ட மக்களும் இருக்கத்தான் செய்தார்கள். அவரது உடல் கண்டெடுக்கப்பட்ட நதியிலிருந்த நீர் அவரது உதிரத்தால் (ரத்தத்தால்) புனிதமடைந்ததாகக் கூறி, வாளிகளில் அந்நதிநீரை நிரப்பிக் கொண்டுபோய் வீடுகளில் தெளித்து, பாதுகாத்தவர்கள் ஏராளம். அவர் இன்னும் உயிரோடுதான் இருக்கிறார் என அக்காலத்தில் நம்பியவர்களும் ஏராளம் என்பது ஆச்சர்யத்தின் உச்சம்! இதில் இக்கட்டுரையைப் படிக்கும் எத்தனை பேர் கவனித்தீர்களோ தெரியாது. ரஸ்புடினின் உடன்பிறந்த சகோதரன் டிமிட்ரி, சகோதரி மரியா ஆகியோரின் உயிர் எவ்வாறு நீரில் பிரிந்ததோ, அவ்வாறேதான் ரஸ்புடினுக்கும் நிகழ்ந்தது! (ஒருவேள, இவர்கூட பிறந்தவங்களுக்கு தண்ணியில கண்டமோ..?!) இம்மக்களால், வழக்கம்போல ரஸ்புடின் சிலரால் போற்றவும் தூற்றவும் பட்டார். எல்லா மனிதருக்கும் இந்நிலைதான் என்றாலும், உண்மையில் ரஸ்புடின் நல்லவரா? கெட்டவரா? என்கிற கேள்விக்கு, எனது பார்வையில் தோன்றியதை தலைப்பிலேயே தந்துவிட்டேன். அதுவும் அந்நாட்டு மக்களுக்கு என்பதால், தலைப்பன் முகப்பே அதை உங்களுக்கு உணர்த்தும்!

       சரி. இவர் இவ்வாறுதான் இறப்பார் என இவரிடமே தைரியமாக வந்து சொன்னாரே செய்ரோ, அவர் எவ்வாறு கூறினார்? கைரேகையில் அவ்வாறான எதிர்காலம் தெரியுமா? அப்படியானால், ஜோதிடம் உண்மையா? இவ்வாறு ஒருவரது எதிர்காலத்தை கணிக்க இயலுமா? காணலாம், அடுத்த பதிவுகளில்; அதுவரை காத்திருங்கள்.






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக