இந்தியாவில்
பரவலாகப் பயன்படுத்தப்படும் UPI பேமன்ட் சேவையான கூகுள் பே தமிழக அரசின் விதிகளை
மீறியிருப்பதாகத் தெரியவந்துள்ளது.
`Better Luck Next Time'
இதைச்
சொன்னதும் `கூகுள் பே' உங்கள் நினைவுக்கு வந்தால் நீங்களும் `டிஜிட்டல் இந்தியா'
குடிமகன்தான். இன்று பேடிஎம், போன்பே எனப் பல டிஜிட்டல் பேமன்ட் சேவைகள்
இருந்தாலும் UPI பணப்பரிவர்த்தனைகளைப் பலருக்கும் முதலில் அறிமுகப்படுத்தியது
கூகுள் பே-வாகத்தான் இருக்கும். `ஸ்கிராட்ச் கார்டு வரும்... சும்மா ஒரு 500
அனுப்பு... திருப்பி அனுப்புறேன்' என்ற நண்பரின் பேச்சைக் கேட்டுதான் பலரும்
கூகுள் பே பயன்படுத்தத் தொடங்கியிருப்பார்கள். எப்படியும் 'Better Luck Next Time'
வரும்... இல்லை சொற்பத் தொகை ஒன்று வரும் என்று தெரிந்தாலும் என்றாவது லட்சம்
ரூபாய் ஜெயித்துவிட மாட்டோமா என விடாமல் முயற்சி செய்துகொண்டிருப்பவர்களும் உண்டு.
கூகுள் பே 'தீபாவளி ஆஃபர்'
|
ஆனால்,
நாள்கள் செல்லச் செல்ல இதற்கென இருந்த க்ரேஸ் அப்படியே குறைந்து போனது. அதைப் புதுப்பிக்க
கூகுள் கொண்டுவந்ததுதான் 'Google Pay’s Diwali Offer'. இந்தத் திட்டத்தில் ஐந்து
விதமான ஸ்டாம்புகளைச் சேகரிப்பதன் மூலம் குறைந்தபட்சமாக 251 ரூபாய் கிடைப்பது
உறுதி. இத்துடன் `தீபாவளி போனஸ் டிக்கெட்' என்ற ஒரு அதிர்ஷ்ட கூப்பன் ஒன்றும்
கிடைக்கும். இதன்மூலம் 1 லட்சம் ரூபாய் வரை ஜெயிக்கும் வாய்ப்பும் உங்களுக்குக்
கிடைக்கும். இதனால் பலரும் இந்த ஸ்டாம்புகளைப் பரிமாறிக்கொள்ளத்
தொடங்கியிருக்கின்றனர். `ரங்கோலி ஸ்டாம்ப் இருக்காடா?' என்று பல வருடங்களாகப்
பார்க்காத எல்.கே.ஜி கிளாஸ்மேட் வரை மெசேஜ் அனுப்ப, இப்போது மீண்டும்
களைகட்டியிருக்கிறது கூகுள் பே.
ஆனால்,
இந்த ஸ்கிராட்ச் கார்டு முறை தமிழகத்தில் அமலில் இருக்கும் லாட்டரி சட்டத்திற்கு
எதிரானது எனச் சில தகவல்கள் வரத்தொடங்கின. கூகுளும் தனது Terms and Conditions-ல்
'தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு இந்த ஆஃபர் கிடையாது' என்று தெளிவாகக்
குறிப்பிட்டிருக்கிறது. 2003-ல் ஜெயலலிதா ஆட்சியில் லாட்டரிச்சீட்டுகள்
தடைசெய்யப்பட்டன. ஏழை மக்கள் அதிர்ஷ்டத்தை மட்டும் நம்பி வாழ்க்கையைத்
தொலைத்துவிடக்கூடாது என்ற காரணத்திற்காக இந்தச் சட்டம் அமலுக்குக்
கொண்டுவரப்பட்டது.
Terms and Conditions Google
Pay
|
"தமிழ்நாடு
பரிசுத்திட்ட தடைச்சட்டம் (Tamil Nadu Prize Schemes (Prohibition) Act, 1979)
சூதாட்டத்தையும், திறன் சார்ந்த விளையாட்டுகளையும் தெளிவாகப்
பிரித்துக்காட்டுகிறது. இந்த தீபாவளி ஆஃபரில் அனைவருக்கும் பணம் வெல்வதற்கான
வாய்ப்பு ஒரே மாதிரியானதாகத்தான் இருக்கிறது. ஆனால், இது திறன் சார்ந்த விளையாட்டு
கிடையாது. இந்தச் சட்டத்தின் 2(b) பிரிவில், பொருள்கள் ஏதேனும் வாங்குவதற்கு
இப்படியான குலுக்கல் முறை பரிசுகளைக் கொடுக்கக்கூடாது என்று
குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஆனால், கூகுள் பொருள் எதுவும் விற்கவில்லை, இதற்காகத்
தனியாக எந்தத் தொகையும் பெறுவதில்லை. வெறும் பணப்பரிவர்த்தனை சேவையை மட்டுமே
வழங்குகிறது. இதனால் இந்த விஷயத்தில் கூகுள் தரப்புக்கு எந்தப் பிரச்னையும்
இருக்காது.
ஆனால்
கூகுள் நிறுவனமே இந்த தீபாவளி ஆஃபர் பற்றிக் குறிப்பிடுகையில் 'தீபாவளி போனஸ்
டிக்கெட்' ஒரு குலுக்கல் பரிசுச்சீட்டுதான் (lucky draw) என்கிறது. இதனால் இது
அதிர்ஷ்டம் சார்ந்தது என கூகுளே ஒப்புக்கொள்கிறது.
'தீபாவளி போனஸ் டிக்கெட்' ஒரு
குலுக்கல் பரிசுச்சீட்டுதான் (lucky draw) என்கிறது கூகுள்
|
இந்த
முறைக்குச் சட்டரீதியாகத் தமிழ்நாட்டைத் தவிர வேறு எங்குமே பிரச்னைகள் இல்லை.
இங்கு மட்டும்தான் இது சட்டத்தை மீறுவதாக அமைந்திருக்கிறது. சமூக வலைதளங்களில்
மக்கள் பேசுவதை வைத்துப் பார்க்கும்போது தமிழ்நாட்டுப் பயனர்களுக்கு ரங்கோலி
ஸ்டாம்ப் கூகுள் தரப்பில் கொடுக்கப்படவேயில்லை மற்ற மாநிலத்தவர்களிடமிருந்துதான்
பெற்றிருக்கின்றனர். இதனால் போட்டி என்று பொதுவாகச் சொல்லி பாரபட்சம்
காட்டுகிறார்கள் என்று கூகுள் மேல் தமிழகப் பயனர்கள், இந்தியத் தேசிய நுகர்வோர்
குறை தீர்ப்பு ஆணையத்திலோ, மாநில நுகர்வோர் நீதிமன்றத்திலோ புகார்
கொடுக்கமுடியும். (Consumer Protection Act, 1986 for claims under Unfair Trade
Practices)
பிரச்னை
என்று வந்தால், 'நாங்கள் தெளிவாகத் தமிழக வாடிக்கையாளர்கள் பங்குபெற வேண்டாம் எனக்
குறிப்பிட்டிருக்கிறோம்' என்று கூகுள் விளக்கம் கொடுத்துத் தப்பித்துக்கொள்ளும்.
ஆனால், இதைக் கட்டுப்படுத்த கூகுளும் தக்க நடவடிக்கைகள் எடுத்திருக்க வேண்டும்.
இன்று ஒருவர் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பதைத் தெளிவாக ட்ராக் செய்யமுடியும்.
விளம்பரங்கள் போன்ற விஷயங்களில் அதையே செய்கிறது கூகுள். அப்படியில்லையென்றால்
வங்கிக் கணக்கை வைத்து எந்த மாநிலம் என்று எளிதாகக் கண்டறியமுடியும். அதைவைத்து
தமிழகப் பயனாளர்களை இதில் பங்குகொள்ள முடியாமல் செய்யமுடியும்.
அதே
சமயம், இப்படி ஒரு போட்டி நடத்த தமிழக அரசிடம் தங்களுக்கு விலக்கு அளிக்கவேண்டும்
என்று கூகுள் விண்ணப்பிக்கலாம். தமிழ்நாடு பரிசுத்திட்ட தடைச்சட்டத்தின் 12-வது
பிரிவு இப்படி விலக்கு அளிக்கும் உரிமை இருப்பதை விளக்குகிறது. ஆனால், இப்படியான
நடவடிக்கைகள் எதுவுமே எடுக்காமல், தெளிவான விளக்கங்கள் கொடுக்காமல் மக்களின்
நேரத்தை வீணாக்குகிறது கூகுள். தமிழ்நாடு அரசும் இதற்கு எதிராக எந்த நடவடிக்கையும்
இதுவரை எடுக்கவில்லை.
இந்தச்
சட்டத்தின் 6-வது பிரிவின்படி இருதரப்பிற்குமே தண்டனை உண்டு. இதனால் இப்படியான
ஆஃபர்களில் பணம் வென்று அதை வெளியில் வாட்ஸ்அப், ஃபேஸ்புக் போன்றவற்றில்
பகிரும்முன் ஒருமுறைக்கு இரண்டு முறை யோசியுங்கள்"
கூகுள்
தரப்பிடம் இதுகுறித்து விளக்கம் கேட்க முயற்சி செய்தோம். ஆனால், இதுவரை பதில்
எதுவும் கிடைக்கப்பெறவில்லை. அவர்கள் பதிலளிக்கும் பட்சத்தில் அதையும் இங்கு
பிரசுரிப்போம்.
இந்த கூகுள் பே `தீபாவளி ஆஃபர்' நவம்பர்
11-ம் தேதி முடிவுக்கு வருகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக