ஒரு ஊரில் ஒரு இளம்பெண் பால் விற்று வரும் பணத்தில் வாழ்ந்து வந்தாள். அவள் தினமும் தன்னிடம் இருந்த ஒரு பசு மாட்டிலிருந்து பாலைக் கறந்து அதை ஒரு குடத்திலிட்டு தன் தலையில் வைத்து எடுத்து சென்று வியாபாரம் செய்து வந்தாள்.
தான் ஏழையாக இருப்பதனாலே இப்படி தினமும் பால் விற்று வாழ வேண்டி உள்ளது, என்னை போன்ற மற்றப் பெண்களெல்லாம் விதவிதமாக ஆடை அணிந்து செல்கிறார்களே என தன்னுள் கவலையுடன் இருந்தாள்.
ஒருநாள் அவள் வழக்கம் போல் பாலைக் கறந்தெடுத்து அதை விற்பதற்காக வீதி வழியே சென்று கொண்டிருந்த போது தன் வாழ்க்கைத் தரத்தை எப்படி முன்னேற்றலாம் என கற்பனை செய்தாள்.
இன்று பாலை விற்று வரும் பணத்தில் சில கோழிக்குஞ்சுகள் வாங்குவேன். அவை வளர்ந்து பெரிதானதும் அவைகளை விற்று வரும் பணத்தில் இரண்டு ஆட்டுக்குட்டிகள் வாங்குவேன்.
அவை வளர்ந்ததும் அவற்றை விற்று இன்னொரு பசுமாடு வாங்குவேன். அவற்றைக் கொண்டு ஒரு பெரிய மாட்டுப்பண்ணை வைப்பேன். அதில் வேலை செய்ய பல பெண்களை வேலைக்கு அமர்த்துவேன்.
வருமானம் பெருகியதும் பலவிதமான ஆடைகளையும், நகைகளையும் வாங்கி அவற்றை அணிந்துக்கொண்டு மற்றப் பெண்கள் எல்லாம் என்னைப் பார்த்து அதிசயிக்கக் கூடியதாக உல்லாசமாக நடப்பேன் என தலையில் பால் குடம் இருந்ததை மறந்து அதைப் பிடித்திருந்த கையை எடுத்து கையை வீசிக் கொண்டு ஸ்டைலாக நடக்க ஆரம்பித்தாள்.
அவளின் இந்த செயலால் தலையில் இருந்த அனைத்து பாலும் கீழே கொட்டியதுடன் குடமும் உடைந்தது. அவளுக்கு அன்றைய பால் வியாபாரம் நஷ்டமடைந்ததுடன் பால் குடமும் வேறு வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
அப்போதுதான் அவள், எந்த ஒரு காரியமும் நடந்து முடிக்கும் முன், அதை எண்ணி திட்டங்கள் போடக்கூடாது என்பதை உணர்ந்தாள்.
எந்த ஒரு செயலில் ஈடுபட்டாலும் அதை முதலில் கவனமாக முடிக்க வேண்டும். இடையில் வேறு நினைவுகள் வந்தால் செய்யும் செயலில் நஷ்டமே ஏற்படும் என்பதை புரிந்துக்கொண்டால்.
நீதி:
இல்லாததை நினைத்து கற்பனை செய்து
கொண்டிருந்தால் செய்யும் செயலில் நஷ்டமே உண்டாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக