தமிழகத்தில் உள்ள பங்க்குகளில் இனிமேல்
பாட்டிலில் பெட்ரோல் வழங்க கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது.
ஒரு இடத்திற்கு சென்று
கொண்டிருக்கும்போது, வாகனத்தில் திடீரென பெட்ரோல் தீர்ந்து விட்டால், நமக்கு
உதவுவது வாட்டர் பாட்டில்கள்தான். பெட்ரோல் தீர்ந்து விட்ட நிலையில், பங்க் வரை
வாகனத்தை தள்ளி கொண்டு செல்வது என்பது சிரமமான காரியம். இது போன்ற இக்கட்டான
நேரங்களில், வாட்டர் பாட்டில்கள்தான் நமக்கு கைகொடுக்கும்.
ஒரு பாட்டிலை எடுத்து
கொண்டு பங்க்கிற்கு சென்றால், எளிதாக பெட்ரோல் வாங்கி வந்து விடலாம். ஆனால் இதற்கு
தமிழக பெட்ரோல் விற்பனையாளர்கள் சங்கம் தற்போது வேட்டு வைத்துள்ளது. ஆம்,
தமிழகத்தில் உள்ள பங்க்குகளில் இனிமேல் பாட்டில்களில் யாருக்கும் பெட்ரோல் விற்பனை
செய்ய கூடாது என தமிழக பெட்ரோல் உரிமையாளர்கள் சங்கம் அறிவுறுத்தியுள்ளது.
எனவே இனி வாகனங்களில்
செல்பவர்களுக்கு மட்டுமே பெட்ரோல் நிரப்பப்படும். அதற்கு பதிலாக பாட்டில் எடுத்து
செல்பவர்களுக்கு பெட்ரோல் விற்பனை செய்யப்படாது. தமிழக பெட்ரோல் விற்பனையாளர்கள்
சங்கத்தின் இந்த முடிவிற்கு காரணம் என்ன தெரியுமா? ஐதராபாத் நகரில் அரங்கேறிய ஒரு
கொலை சம்பவம்தான் இதற்கு காரணம்.
தெலங்கானா மாநிலம்
ஐதராபாத் நகரில், கடந்த சில நாட்களுக்கு முன்பு, அரசு பெண் கால்நடை மருத்துவர்
ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, எரித்து கொல்லப்பட்டார். தெலங்கானா
மட்டுமல்லாது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை இந்த கொலை சம்பவம் ஏற்படுத்தியது.
இது தொடர்பாக 4 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
அவர்களிடம் நடத்தப்பட்ட
விசாரணையில், கொலை செய்யப்பட்ட பெண் டாக்டரின் சடலத்தை எரிப்பதற்கு, பாட்டிலில்
பெட்ரோல் வாங்கியது தெரியவந்தது. எனவே நாடு முழுவதும் உள்ள பெட்ரோல் பங்க்குகளில்,
பாட்டிலில் பெட்ரோல் விற்பனை செய்ய தடை விதிக்க வேண்டும் என ஒரு சிலர் கோரிக்கைகளை
முன்வைத்தனர்.
அதனை தமிழக பெட்ரோல்
விற்பனையாளர்கள் சங்கம் ஏற்று கொண்டது. இதன் எதிரொலியாகதான் இனி யாருக்கும்
பாட்டிலில் பெட்ரோல் விற்பனை செய்ய கூடாது என அறிவுறுத்தியுள்ளது. ஆனால்
பாட்டிலில் பெட்ரோல் விற்பனை செய்ய தடை என்ற உத்தரவிற்கு, சமூக வலை தளங்களில்
தமிழக நெட்டிசன்கள் கடுமையான எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர்.
இந்த நடவடிக்கை
பொதுமக்களை கடுமையாக பாதிக்கும் என்பதே நெட்டிசன்கள் பலரின் கருத்தாக உள்ளது.
குறிப்பாக வயதான நபர்கள் வாகனங்களில் செல்லும்போது, திடீரென பெட்ரோல் தீர்ந்து
விட்டால், பங்க் வரை அவர்களால் வாகனங்களை தள்ளி செல்ல முடியாது என
பெரும்பாலானவர்கள் தெரிவித்து வருகின்றனர்.
இது தவிர ஒரு சில
பெட்ரோல் பங்க்குகளில் பொதுவாகவே யாருக்கும் பாட்டில்களில் பெட்ரோல் விற்பனை செய்ய
மாட்டார்கள். வினியோகம் செய்யப்படும் அளவு தெரிந்து விடும் என்பதால், அந்த மோசடியை
மறைப்பதற்காகவே, பாட்டில்களில் பெட்ரோல் வழங்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு
பரவலாக முன்வைக்கப்படுகிறது.
இப்படிப்பட்ட சூழலில்
வெளிவந்துள்ள இந்த அறிவிப்பு கடும் எதிர்ப்பை சம்பாதித்து வருகிறது. எதற்கும் வாகன
ஓட்டிகள் இனிமேல் தங்கள் வாகனங்களில் பெட்ரோல் அளவை சரிபார்த்து கொண்டு செல்வது
நல்லது. இது தொடர்பான உங்களுடைய கருத்துக்களை கீழே உள்ள கமெண்ட் பாக்ஸில்
தெரியப்படுத்துங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக