Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வியாழன், 30 ஜனவரி, 2020

ஏத்தர் 450 மின்சாரக் ஸ்கூட்டர் விற்பனை நிறுத்தம்- அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!

வாடிக்கையாளர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வரும் ஏத்தர் 450 மின்சாரக் ஸ்கூட்டரின் உற்பத்தி விரைவில் நிறுத்தப்படவுள்ளது. இதுதொடர்பான விவரங்களை பார்க்கலாம்.

ஏத்தர் எனர்ஜி நிறுவனத்தின் பிரபலமான ஏத்தர் 450 மின்சாரக் ஸ்கூட்டர் விற்பனையில் இருந்து விலக்கிக்கொள்ளப்படவுள்ள நிலையில், ஏற்கனவே முன்பதிவு செய்யப்பட்டுள்ள வாகனங்களுக்கான உற்பத்தி பணிகள் மட்டும் தற்போது நடந்து வருகிறது.

இந்தியாவில் மின்சார வாகன கட்டமைப்பிற்கான பணிகள் துவக்க நிலையில் உள்ளது. இந்த செக்மென்டை சிறப்பாக பயன்படுத்திக் கொள்ளும் விதத்தில் பெங்களூரில் நிறுவப்பட்ட நிறுவனம் தான் ஏத்தர் எனர்ஜி.

இந்நிறுவனத்தின் முதல் தயாரிப்பாக ஏத்தர் 350 மற்றும் ஏத்தர் 450 மின்சார ஸ்கூட்டர்கள் விற்பனையில் கால்பதித்தன. முதலாவதாக பெங்களூருவில் அறிமுகமான இந்த ஸ்கூட்டர்கள், விரைவில் தமிழகத்திலும் கிளை பரப்பின.

அப்போது ஏத்தர் 450 மாடலுக்கு வரவேற்பு பெருகியது. இதனால் அந்த ஸ்கூட்டருக்கான விற்பனை பணிகளில் கவனத்தை செலுத்தும் பொருட்டு, ஏத்தர் 350 மாடலை கைவிடுவதாக ஏத்தர் எனர்ஜி நிறுவனம் அறிவித்தது. அதை தொடர்ந்து ஏத்தர் 450 ஸ்கூட்டர் மட்டும் தற்போது விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இந்தியாவின் அனைத்து நகரங்களிலும் கால் பதிக்கும் பொருட்டு, ஏத்தர் 450எக்ஸ் என்கிற மாடலை, நேற்று முன்தினம் விற்பனைக்கு கொண்டு வந்தது ஏத்தர் எனர்ஜி நிறுவனம். நாட்டின் முதன்மையான நகரங்களில் மட்டுமே இந்த ஸ்கூட்டர் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

இந்நிலையில் சற்று எதிர்பாராத வகையில் புதிய நடவடிக்கை மேற்கொள்ள தயாராகி வருகிறது ஏத்தர் எனர்ஜி நிறுவனம். அதன்படி, விரைவில் ஏத்தர் 450 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனையில் இருந்து விலக்கிக்கொள்ளப்படவுள்ளது. இதற்கான பணிகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளன.

முன்னதாக, டிவிஎஸ் நிறுவனம் ஐ-கியூப் மின்சார ஸ்கூட்டரை சில நாட்களுக்கு முன்னர் விற்பனைக்கு அறிமுகம் செய்தது. இந்த ஸ்கூட்டரின் கட்டமைப்பு, செயல்பாடு மற்றும் செயல்திறன் உள்ளிட்ட அம்சங்கள் ஏத்தர் 450-க்கு சவால் விடும் வகையில் உள்ளது. இதனால் இந்த முடிவை எடுத்துள்ளது ஏத்தர் எனர்ஜி நிறுவனம்.

தற்போது ஏத்தர் 450 மாடலுக்கான இறுதிக்கட்ட முன்பதிவு பணிகள் நடைபெற்று வருகின்றன. அவற்றுக்கான உற்பத்தி பணிகள் மட்டுமே தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டும். அதை தொடர்ந்து ஓரிரு மாதங்களில் இந்த ஸ்கூட்டர் விற்பனையில் இருந்து முழுமையாக நிறுத்தப்படவுள்ளது.

இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள ஏத்தர் எனர்ஜி நிறுவனம், ஏத்தர் 450 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்கியவர்கள் மற்றும் முன்பதிவு செய்துள்ள வாடிக்கையாளர்களுக்கு தொடர்ந்து அதற்குரிய அனைத்து சேவைகளும் வழங்கப்படும் என்று உறுதி அளித்துள்ளது.

ஏத்தர் 450 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் 5.4kW மின் மோட்டார் வழங்கப்பட்டுள்ளது. இது 7.25 பிஎச்பி பவர் மற்றும் 20.5 என்.எம் டார்க் திறனை அதிகப்பட்சமாக வழங்கும். இந்த ஸ்கூட்டரில் ஒரு கி.மீ தொலைவு செல்ல வேண்டுமென்றால், அதை ஒரு நிமிடம் சார்ஜ் செய்வது அவசியம்.

மின்சார வாகன விரும்பிகளிடம் ஏத்தர் 450 மாடலுக்கு நன்மதிப்பு உள்ளது. தற்போது இதனுடைய விற்பனை நிறுத்தப்படும் என்கிற அறிவிப்பு பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று முன்தினம் விற்பனைக்கு கொண்டுவரப்பட்ட ஏத்தர் 450எக்ஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் 6kW மின் மோட்டார் மற்றும் 2.9kW பேட்டரி பயன்படுத்தப்பட்டு உள்ளது. இந்த கூட்டணி 7.25 பிஎச்பி பவர் மற்றும் 20.5 என்எம் டார்க் திறனை அதிகப்பட்சமாக வழங்கும்.

இந்த மாடலில் ஈக்கோ, பவர் உள்ளிட்ட ரைடிங் மோடுகளுடன் வார்ப் என்ற புதிய ரைடிங் மோடு வசதி இடம்பெற்றுள்ளது. ஏத்தர் 450 எக்ஸ் ஸ்கூட்டரின் பேட்டரி அதிகவேகமாக சார்ஜாகும் தன்மையுடன் தயாரிக்கப்பட்டுள்ளது.

நாட்டிலுள்ள மின்சார வாகனங்களுக்கான சந்தையில் ஏத்தர் 450எக்ஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் புதிய வரவாக கால்பதித்துள்ளது. இதற்கு டெல்லியில் ரூ. 85 ஆயிரம் விலையும், மற்ற நகரங்களில் ரூ. 99 ஆயிரம் விலையும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. விலை எக்ஸ்-ஷோரூம் மதிப்பில் வழங்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக