Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

புதன், 22 ஜனவரி, 2020

வேலம்மாள் கல்வி குழுமம்: சோதனையில் சிக்கும் முக்கிய ஆவணங்கள்!

வேலம்மாள் கல்வி குழும நிறுவனங்களில் வருமான வரித்துறை சோதனை இரண்டாவது நாளாக நீடித்துள்ளது.

தமிழ்நாடு முழுவதும் வேலம்மாள் கல்லூரிக்கு சொந்தமான இடங்களில் நடைபெற்று வரும் சோதனையின் ஒருபகுதியாக தேனியில் 250 ஏக்கர் நில ஆவணங்கள், ஹார்ட் டிஸ்க்குகள் ஆகியவை கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் மெட்ரிகுலேசன் பள்ளிகள், பொறியியல் மற்றும் மருத்துவக் கல்லூரிகளை வேலம்மாள் குழுமம் நடத்தி வருகிறது. இந்த நிலையில், வரி ஏய்ப்பு புகாரை அடுத்து சென்னை, மதுரை உள்பட சுமார் 50 இடங்களில் உள்ள வேலம்மாள் கல்வி குழுமத்திற்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
 
சென்னை சுற்றுவட்டாரத்தில் சூரப்பட்டு, பருத்திப்பட்டு, அயனம்பாக்கம், முகப்பேர் உள்ளிட்ட பகுதிகளிலுள்ள வேலம்மாள் குழுமத்துக்குச் சொந்தமான இடங்களில் வருமானவரி சோதனை இரண்டாவது நாளாக நடைபெற்று வருகிறது.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே பஞ்செட்டி வேலம்மாள் தொழில்நுட்ப கல்லூரி, வேலம்மாள் மெட்ரிக் பள்ளி, வேலம்மாள் வித்யாலயா, சிபிஎஸ்இ பள்ளி, வேலம்மாள் இன்டர்நேஷனல் பள்ளி உள்ளிட்டவற்றில் 20க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

 மதுரையில் வேலம்மாள் போதி கேம்பஸ், வேலம்மாள் பொறியியல் கல்லூரி, தூத்துக்குடி சாலையிலுள்ள வேலம்மாள் மருத்துவக் கல்லூரி, அதே வளாகத்திலுள்ள சி.பிஎஸ்சி பள்ளி, திருப்புவனத்தை அடுத்த லாடனேந்தலிலுள்ள வேலம்மாள் உறைவிடப் பள்ளி உள்ளிட்ட இடங்களில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேபோல் கரூர் காக்காவாடி வேலம்மாள் வித்யாலயா பள்ளியிலும் வருமானவரி சோதனை நடைபெற்று வருகிறது. 10க்கும் மேற்பட்ட அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
 
தேனி அருகே முத்துதேவன்பட்டியில் உள்ள வேலம்மாள் சிபிஎஸ்இ மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 10க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். நேற்றிரவு சோதனையை முடித்து கொண்ட வருமானவரித்துறை அதிகாரிகள் அங்கிருந்து ஹார்டு டிஸ்க்குகள், மற்றும் கல்லூரி கட்டுவதற்கு 250 ஏக்கரில் நிலம் வாங்கியதற்கான ஆவணங்கள் ஆகியவற்றை எடுத்து சென்றதாக தகவல் வெளியாகி உள்ளது.

வேலம்மாள் கல்விக் குழுமத்தின் உரிமையாளர் மற்றும் நிர்வாகிகளின் வீடுகளிலும் இந்த சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இந்த சோதனை மேலும் இரு நாட்களுக்கு நீட்டிக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக