Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

வியாழன், 30 ஜனவரி, 2020

பிடிவாத குணம்..!

Image result for பிடிவாத குணம்..!"


ரேகா என்பவள் நன்றாகப் படிக்கும் மாணவி. பிறர் தன்னிடம் ஒப்படைக்கும் வேலையை கச்சிதமாக செய்து முடிக்கும் திறமைசாலியானவள். பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரிடமும் அன்பாகவும், பணிவாகவும் நடந்து கொள்வாள்.

ஆனால் ரேகாவின் பிடிவாத குணம் மட்டும் யாருக்கும் பிடிக்காது. ரேகாவின் அம்மா, அப்பாவிற்கு அவளது பிடிவாதம் பெரிய தலைவலியாக இருந்தது. உடை, பொம்மை, பரிசுப் பொருள் என்று எது கேட்டாலும் உடனே வாங்கி தரவேண்டும். இல்லாவிட்டால் வீட்டையே போர்க்களம் போல ஆக்கிவிடுவாள்.

நாளைய தினம் ரேகாவின் பிறந்தநாள் வரப்போகிறது. வெகு நாட்களாகக் கேட்டுக் கொண்டிருந்த விலை உயர்ந்த கைக்கடிகாரத்தை அன்றே வாங்கித் தரவேண்டும் என்று ரொம்ப அடம்பிடித்தாள். ரேகாவின் அம்மாவும், அப்பாவும் அவர்கள் சூழ்நிலையைக் கூறி, அடுத்த மாதம் வாங்கித் தருகிறோம் என்று கூறினார்கள். ஆனால் ரேகா அதெல்லாம் எனக்குத் தெரியாது. நான் பள்ளிக்கூடத்திற்கு சென்று வீட்டிற்கு வரும்போது நான் கேட்ட கைக்கடிகாரம் இங்கே இருக்கணும். இல்லாவிட்டால் நடப்பதே வேறு என்று கட்டளையிடுவதுபோல் கூறிவிட்டு சென்றாள்.

ரேகாவின் பெற்றோர் என்ன செய்வதென்று தெரியாமல் தவித்தனர். மாலையில் பள்ளி முடிந்ததும் ரேகா வீட்டிற்கு வந்து கொண்டிருந்தாள். அப்போது மழை பெய்ய ஆரம்பித்தது. உடனே அருகில் இருந்த ஒரு குடிசை ஓரத்தில் ஒதுங்கி நின்றாள். அப்பொழுது அந்த வீட்டிற்குள் இருப்பவர்கள் பேசிக்கொண்டிருந்தார்கள். அந்த குடும்பத்தில் உள்ள சிறுமி தன் அப்பாவிடம், அப்பா உங்கள் கால் ரொம்ப அடிப்பட்டிருக்கு. இருந்தும் ஏன் லீவு எடுக்காம வேலைக்குப் போறீங்க? என்று கேட்டாள்.

அதற்கு அந்த தந்தை நீதான், எல்லாரும் பள்ளிக்கூடத்தில் சுற்றுலா போறாங்க...! என்னை அனுப்ப மாட்டீங்களான்னு கேட்டீல. அதான் நான் லீவு போடமா வேலைக்குப் போனாத்தான் உனக்கு சுற்றுலா போக பணம் தர முடியும்! என்று கூறினார். அதற்கு அந்த சிறுமி இல்ல அப்பா நான் சுற்றுலா போகவில்லை. அடுத்தமுறை போய்க்கொள்கிறேன். நீங்க உங்க காலைப் பார்த்துக்கோங்கப்பா! என்றாள்.!

அதற்கு அந்த சிறுமியின் தாய்! இல்லைங்க, நீங்க ரெஸ்ட் எடுங்க, அவள் சுற்றுலா போகட்டும். பண்ணைக்காரர் தோட்டத்தில் வேளைக்கு ஆள் கூப்பிட்டிருக்காங்க. நான் ஒருவாரம் வேலைக்குப்போறேன். கிடைக்கிற பணத்துல அவளுக்கு சுற்றுலா போகவும், உங்க காலுக்கு வைத்தியம் பார்க்கவும் சரியாக இருக்கும்! என்று கூறினார்.

இதை பார்த்துக் கொண்டிருந்த ரேகா ஆச்சரியப்பட்டாள். அந்த சிறுமி தன் அப்பாவின் கஷ்டத்தைப் புரிந்துக்கொண்டு விட்டுக் கொடுக்கிறாள். அம்மா, தன் குழந்தைக்காகவும், கணவருக்காகவும் வேலைக்குப் போகிறேன் என்கிறார். ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுப்பதால் அவர்கள் குடிசையில் வாழ்ந்தாலும் சந்தோஷமாக வாழ்கிறார்கள். ஆனால் நான் பிடிவாதமாக வீட்டில் சண்டை போட்டுவிட்டு வந்துவிட்டேனே! இனி நாமும் அம்மா, அப்பாவுக்கு தொந்தரவு கொடுக்கக்கூடாது! என்று தன்னுடைய பிடிவாத குணத்தை மாற்றிக் கொண்டாள். உடனே அங்கிருந்து வீட்டிற்கு புறப்பட்டாள்.

ரேகா வீட்டிற்கு சென்றதும் அவளது பெற்றோர் என்ன சொல்லப்போகிறாளோ என்று தயங்கிக் கொண்டிருந்தனர். ரேகா... என்று அவர்கள் வாயெடுக்க, அப்பா கைக்கடிகாரம் இப்போ இல்லைன்னா அடுத்த பிறந்த நாளைக்கு வாங்கிக்கலாம்! என்று கூறினாள். அதைக் கேட்டதும் அவளுடைய பெற்றோர் வியப்படைந்தனர். ஆனால் அவளுடைய மாற்றத்தைக் கண்டு மகிழ்ச்சியடைந்தனர். ரேகாவும், தனது பிடிவாத குணத்தை விட்டுவிட்டு மகிழ்ச்சியோடு பிறந்த நாளைக் கொண்டாடினாள்.

தத்துவம் :

குடும்ப சூழ்நிலையை புரிந்துக்கொண்டு நம்முடைய பிடிவாத குணத்தை மாற்றிக்கொண்டு விட்டுக்கொடுத்து வாழ்ந்தால், குடும்பம் மகிழ்ச்சியாக இருக்கும்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!