திருமணமாகாத இளைஞன் காசிக்குச் செல்லக்கூடாது என
ஒரு சிலர் சொல்கிறார்கள். அது ஏன்.. இது சரியா?
இது முற்றிலும் தவறான கருத்து.
திருமணமாகாத பிரம்மச்சாரி காசிக்குச் செல்வதில் தவறேதும் இல்லை. இந்து மதத்தைச்
சேர்ந்த ஒரு சில சமூகத்தினர் தங்களது குடும்பத்தில் நடைபெறும் திருமணங்களில்
காசியாத்திரை என்ற நிகழ்வினை நடத்துவார்கள். திருமணத்தின்போது கன்னிகாதானத்திற்கு
முன்னதாக இந்த காசியாத்திரை என்ற வைபவமானது நடக்கும்.
நம்மவர்கள் இந்த காசியாத்திரை என்ற
சம்பிரதாய சடங்கினை நகைச்சுவை நிறைந்த ஒரு நிகழ்வாகத்தான் காண்கிறார்களே தவிர,
அதன் உண்மையான அர்த்தத்தைப் புரிந்து கொள்வதில்லை. நம்மில் பலரும் மாப்பிள்ளை
கோபித்துக்கொண்டு காசியாத்திரை செல்வதாக தவறாகப் பொருள் காண்கிறார்கள்.
காசியாத்திரைக்குச் செல்லும்
மாப்பிள்ளையை பெண்ணின் தகப்பனார் அல்லது சகோதரன் எதிரில் வந்து மாப்பிள்ளையை
காசியாத்திரைக்குச் செல்ல வேண்டாம் என்று தடுத்து தங்கள் வீட்டுப் பெண்ணை
கன்னிகாதானம் செய்து தருவதாகவும், திருமணம் செய்துகொண்டு தம்பதியராக காசிக்குச்
செல்லுங்கள் என்று அறிவுறுத்துவதாகவும் அந்தச் சடங்கு அமைந்திருக்கும். இந்த
சடங்கினைக் காண்பவர்கள், பிரம்மச்சாரி இளைஞன் காசிக்குச் செல்லக் கூடாது என்று
தவறாகப் புரிந்துகொள்கிறார்கள்.
உண்மையில் மாப்பிள்ளை கோபித்துக்கொண்டு
காசியாத்திரைக்குச் செல்வதில்லை. அந்நாட்களில் குருகுலப் படிப்பினை
முடித்துவிட்டு, உயர்கல்வி பயிலுவதற்காக காசிக்குச் செல்வது வழக்கம். காசிமாநகரம்
பல்கலைக்கழகங்கள் நிறைந்த பகுதி என்று சொல்வதுண்டு. அவ்வாறு மேற்படிப்பிற்காக
காசிக்குச் செல்பவன் திரும்பி வருவதற்கு பல ஆண்டுகள் ஆகும் என்பதால் திருமணம்
செய்துகொண்டு காசிக்குச் செல்லுங்கள் என்று சொல்லி வைத்தார்கள்.
அது மட்டுமல்லாமல் விவாஹத்திற்கு நிறைய
பணம் தேவைப்படும். தான் கற்ற வித்தையை காசிராஜாவிடம் காண்பித்து பொன்னையும்,
பொருளையும் பெற்று வந்து விவாஹத்தை நடத்திக்கொள்ளலாம் என்ற எண்ணத்தோடு காசிக்குச்
செல்வதாகவும், பெண்ணின் தகப்பனார் வழிமறித்து தனக்கு பொன்னும், பொருளும் வேண்டாம்,
எனது மகளை கன்னிகாதானம் செய்து தருகிறேன், திருமணத்தைச் செய்துகொண்டு பிறகு
சம்பாதிக்கச் செல்லுங்கள் என்று மாப்பிள்ளையை காசிக்குச் செல்லவிடாமல் தடுத்து சகல
மரியாதையோடு அழைத்துச் செல்வதே காசியாத்திரை என்கிற சடங்கின் தாத்பரியம்.
ஆனால், இன்றைய சூழலில் குருகுலத்தில்
(கல்லூரியில்) இருந்து வெளியே வந்தவுடன் யாரும் திருமணம் செய்துகொள்வதில்லை.
நன்றாக சம்பாதிக்கும் மாப்பிள்ளைக்குத்தான் எல்லோரும் பெண் தருகிறார்கள்.
திருமணத்தின்போது நடத்தப்படுகின்ற இந்த
காசியாத்திரை என்ற நிகழ்விற்கும், திருமணம் ஆகாத பிரம்மச்சாரி இளைஞன் காசிக்குச்
செல்லக்கூடாது என்று சொல்வதற்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை. திருமணம் ஆகாத ஒரு
பிரம்மச்சாரி இளைஞன் தாராளமாக காசிக்குச் சென்று புனித நீராடலாம். அதில் எந்தவிதத்
தவறும் இல்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக