தமிழக அரசின் மூலம் ஆன்லைன் திரைப்பட
டிக்கெட் விற்பனை திட்டம் விரைவில் நடைமுறைப்படுத்தப்படும் என செய்தி மற்றும்
மக்கள் தொடர்புத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார்!!
முன்னாள்
தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்களின் 72-வது பிறந்த நாளையொட்டி சென்னை மெரினா
கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் அமைச்சர்கள் கடம்பூர் ராஜு, சிவி சண்முகம்,
கே.பி. அன்பழகன் மற்றும் முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா ஆகியோர் மலர் தூவி
மரியாதை செலுத்தினர். முன்னதாக நினைவிடம் ஃபீனிக்ஸ் பறவை வடிவத்தில் பூக்களால்
அலங்கரிக்கப்பட்டிருந்தது.
தொடர்ந்து
செய்தியாளர்களை சந்தித்த செய்தி மற்றும் விளம்பர துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ
பேசுகையில், ”தமிழக அரசு மூலமாக ஆன்லைன் டிக்கெட் விற்பதற்கான பேச்சுவார்த்தைகள்
திரைத்துறையினருடன் மூன்று கட்டமாக நடைபெற்று இறுதிகட்டத்தை எட்டியுள்ளது.
விரைவில் தமிழக அரசின் மூலம் ஆன்லைன் டிக்கெட் விற்பனை திட்டம்
நடைமுறைப்படுத்தப்படும். இதனால் டிக்கெட் கட்டணம் முறையாக கண்காணிக்கப்படும்”
என்று தெரிவித்தார்.
தமிழகத்தில்
உள்ள திரையரங்குகள் மல்டிபிளக்ஸ் திரையரங்குகளாக மாற்ற திரையரங்கு உரிமையாளர்கள்
கோரிக்கை வைத்துள்ளனர். விரைவில் அதற்கான அரசாணை வெளியிடப்படும். இந்த சூழலில்
மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவால் 110 விதியின் கீழ் அறிவிக்கப்பட்ட
அம்மா திரையரங்கத் திட்டம் செயல்படுத்தத் தேவையில்லை என்றும் அமைச்சர் கடம்பூர்
ராஜூ தெரிவித்துள்ளார்.
மறைந்த
முன்னாள் முதலமைச்சர் தனக்கென வாழ்க்கையை அமைத்துக்கொள்ளாமல் மக்களுக்காகவே
வாழ்ந்தவர் என்றும் அவருடைய வாக்கு இன்று நிறைவேறி அதிமுக ஆட்சி சிறப்பாக
நடைப்பெற்று வருகிறது. அம்மா எப்போதும் அவரது பிறந்த நாளை ஏழை எளிய
மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க வேண்டும் என்று கூறுவார். அவ்வாறு தற்போது
நலத்திட்ட உதவிகள் செய்து வருகிறோம் என்றும் கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.
திமுக
அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி பத்திரிகையாளர்கள் குறித்து பேசிய கருத்திற்கு
கண்டனம் தெரிவித்த அவர், விரைவில் பத்திரிகையாளர்களுக்கு நல வாரியம் அமைக்கப்படும்
அதன் மூலமாக பத்திரிகையாளர்களுக்கான பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என கடம்பூர்
ராஜூ தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக