Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

திங்கள், 24 பிப்ரவரி, 2020

கலெக்டர்களுக்கு உயர் நீதிமன்றம் கிடுக்கிப்பிடி!

ரி குளங்களில் ஏற்படும் உயிரிழப்புகளைத் தடுக்க மாவட்ட ஆட்சியர்கள் எடுத்துள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்ன என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

தமிழ்நாடு முழுவதும் ஏரி, குளங்கள், அருவிகள், கடற்கரைகள் உள்ளிட்ட நீர் நிலைகள், சுற்றுலாத் தலங்கள் கோவில் குளங்கள் ஆகியவற்றில் ஏற்படும் உயிரிழப்புகளைத் தடுக்க எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் கோட்டீஸ்வரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். இந்த மனுமீதான விசாரணை நடைபெற்றுவருகிறது.

நீதிபதிகள் வினித் கோத்தாரே, சுரேஷ் குமார் அடங்கிய அமர்வில் இந்த விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது கோவில் குளங்களில் உயிரிழப்புகளைத் தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறநிலையத் துறை சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அடுத்தகட்ட அறிக்கை தாக்கல் செய்ய கால அவகாசம் கேட்கப்பட்டது.

ஏரிகள், குளங்களில் ஏற்படும் உயிரிழப்புகளைத் தடுக்க எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர்கள் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டதை மனுதாரர் தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டது. இந்த அறிக்கையைத் தாக்கல் செய்ய அரசு தரப்பில் கால அவகாசம் கேட்கப்பட்டது.

அதற்கு நீதிபதிகள் மார்ச் 9ஆம் தேதிக்குள் அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் உயிரிழப்புகளைத் தடுக்க எடுத்த நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும். தாக்கல் செய்யாத மாவட்ட ஆட்சியர்கள் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உத்தரவிடப்படும் என்று கூறினர். மேலும் இந்த விசாரணையை மார்ச் 9ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக