Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

புதன், 5 பிப்ரவரி, 2020

நிம்மதியான வாழ்வு..!

Image result for நிம்மதியான வாழ்வு..!"


  ரண்மனையில் பணிபுரியும் ஒரு சேவகன் எப்போதும் சிரித்தபடி மகிழ்ச்சியாக இருப்பதைப் பார்த்து அரசர் பொறாமைப்பட்டார். அவன் மகிழ்ச்சியாக இருப்பதை பார்த்து, பொறாமை தாங்கமுடியாமல் அந்த சேவகனிடம் நேரில் சென்று பிரமாண்டமான அரண்மனை, ஏகப்பட்ட சேவகர்கள், மிக அதிக வருமானம் இத்தனையும் இருந்தும் எனக்கு இல்லாத நிம்மதியும், மகிழ்ச்சியும் உனக்கு இருப்பது எப்படி? என்று அரசர் அவரை விசாரித்தார்.

அதற்கு சேவகன் மேன்மை தங்கிய மன்னரே..! நான் ஓர் ஏழைக் காவலன். எங்கள் குடும்பத்தின் தேவைகள் மிக மிகக் குறைவு. மழையையும், வெயிலையும் மறைக்க ஒரு கூரை. வயிறு நிரம்ப ஏதோ ஓர் உணவு. மானம் காக்க ஒரு துணி. இதற்கு என் வருமானம் போதுமானதாக உள்ளது.

வேறு எந்த ஆசைகளையும் நான் வளர்த்து கொள்வதே இல்லை. அதனால், நிம்மதியாக இருக்கிறேன்..! என்று பணிவுடன் சேவகன் கூறினான். சேவகன் கூறியதைக் கேட்ட அரசர், அதை தம் அமைச்சரிடம் பகிர்ந்து கொண்டார். அதற்கு அமைச்சர் வேண்டுமானால் அந்த சேவகனையும் நமது கவலைப்படுவோர் சங்கத்தில் உறுப்பினராக்கி விடலாம் என்று பணிவுடன் சிரித்தபடி கூறினார்.

அதற்கு அரசர்! அதென்ன கவலைப்படுவோர் சங்கம்? என்று வியப்புடன் கேட்டார். அதற்கு அமைச்சர் அரசரிடம்! ஒரு பையை எடுக்க வேண்டும். பின்பு அதில் 99 பொற்காசுகளை போட்டுக் கட்ட வேண்டும். இந்த பொற்காசு பைகளை அந்த ஏழையின் வீட்டு வாசற்படியில் வைத்துவிட வேண்டும்.

பிறகு பாருங்கள் அவனது நடவடிக்கைகளை..! என்று அமைச்சர் கூறினார். அதைக் கேட்டு அரசரும் அப்படியே செய்யுங்கள்! என்று உத்தரவிட்டார். தன் வீட்டு வாசலில் கிடைத்த 99 பொற்காசுகளை ஒரு தடவைக்குப் பல தடவை எண்ணி, எண்ணி சேவகன் சோர்ந்துவிட்டான்.

ஏனென்றால் அந்த பொற்காசுகளில் 99 தான் உள்ளது. அந்த சேவகன் இன்னும் ஒன்று குறைகிறதே! ஒன்று குறைகிறதே.! என்று புலம்பினான். எங்கே போயிருக்கும் என்று அங்கும் இங்கும் தேடிப்பார்த்தான்.

அந்த நேரத்தில் அவன் அமைதியை இழந்துவிட்டான். எப்பாடுபட்டாவது பணம் சேர்த்து, அதை ஒரு பொற்காசாக மாற்றி நூறு பொற்காசுகள் என்று முழுமைப்படுத்த வேண்டும் என்கிற வெறி அந்த சேவகனுக்குள் ஏற்பட்டுவிட்டது.

அவனது கலகலப்பு, நிம்மதி, சந்தோஷம் எல்லாமே அந்த ஒரு பொற்காசு பற்றிய கவலைக்குள் கரைந்து போய்விட்டது. இதற்காக அதிகமாக உழைத்தான். பட்டினியும் கிடந்தான். தன் குடும்பத்தில் உள்ளவர்களை, பொறுப்பற்றவர்கள், ஊதாரிகள்! என்று திட்டிக் கொண்டிருந்தான். பரபரப்பும், படபடப்பும் அவனது ஒவ்வொரு செயலிலும், சொல்லிலும் குடியேறி விட்டது! சேவகனின் நிலைமை அரசருக்குத் தெரிந்தது.

அதற்கு அமைச்சர் அரசே! அவன் நமது கவலைப்படுவோர் சங்கத்தில் உறுப்பினராகிவிட்டான்.! என்று சிரித்தபடி கூறினார். ஏனென்றால், அனுபவிக்க ஏகப்பட்ட விஷயங்கள் இருந்தாலும், கிடைக்கத் தவறிய ஒன்றிற்காகவே ஏங்கும் உலகம் இது! என்று அமைச்சர் கூறினார்.

தத்துவம் :

இருப்பதை வைத்துக் கொண்டு சந்தோஷப்படாமல், இல்லாத ஒன்றை நினைத்துக் கொண்டு வருந்தினால் பயன் ஏதும் இல்லை. அதனால், எதிலும் இருப்பதைக் கொண்டு வாழ்ந்தால், நிம்மதியுடனும், மகிழ்ச்சியுடனும் வாழலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!