Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

புதன், 5 பிப்ரவரி, 2020

காந்தாரியின் வரம்... நூறு குழந்தைகளின் பிறப்பு...!


 காந்தாரி, சிவன் கொடுத்த வரத்தால் நூறு குழந்தைகள் பெறுவதற்கான வரத்தை பெற்றிருந்தாள். இரண்டு வருடங்கள் கழித்த போதும் அவளால் குழந்தையை ஈன்றெடுக்க முடியவில்லை. திருதிராஷ்டிரன், பீஷ்மர் முதலிய தலைவர்கள் அவையில் கூடியிருந்தனர். அப்பொழுது ஒற்றர்கள் அங்கு வந்து பாண்டுவுக்கு மகன் பிறந்துள்ளான். அவனின் பெயர் யுதிஷ்டிரன் எனக் கூறினான். இதைக்கேட்டு திருதிராஷ்டிரன் கோபம் கொண்டான். பீஷ்மர் மகிழ்ச்சி அடைந்தார். திருதிராஷ்டிரன் கோபத்துடன் காந்தாரியின் மாளிகைக்கு சென்றான். திருதிராஷ்டிரன், இரண்டு வருடங்கள் கழிந்துவிட்டது. இன்னும் உன்னால் எனக்கொரு மகனை பெற்றுக் கொடுக்க முடியவில்லை. நீ சிவனிடம் இருந்து பெற்ற வரம் எங்கே போனது.

 அங்கு வனத்தில் பாண்டு, மகனை பெற்று மகிழ்ச்சியில் இருக்கிறான். ஆனால் எனக்கு அந்த மகிழ்ச்சியை எப்போது தரப் போகிறாய் எனக் கோபத்துடன் கூறி விட்டு அங்கிருந்து சென்றுவிட்டான். காந்தாரி, திருதிராஷ்டிரனின் இந்த கடுஞ்சொற்களை கேட்டு மிகவும் துன்பமடைந்தாள். அப்பொழுது அவளுக்கு குழந்தை பிண்டமாக பிறந்தது. இச்செய்தி திருதிராஷ்டிரனுக்கு தெரிவிக்கப்பட்டது. குழந்தை பிண்டமாக பிறந்திருப்பதை கேட்ட திருதிராஷ்டிரன் பெரும் அதிர்ச்சி அடைந்தான். பிறகு திருதிராஷ்டிரன், பீஷ்மரிடன் சென்று, காந்தாரி பிண்டத்தை குழந்தையாக பெற்றுள்ளாள். எனக்கு இனியும் குழந்தை பிறக்கும் என்பதில் நம்பிக்கை இல்லை எனக் கூறினான். இதைக் கேட்ட பீஷ்மர் பெரிதும் கவலைக் கொண்டார். உடனே தன் தாய் கங்கா தேவியிடம் சென்று கூறினார்.

 கங்காதேவி, பீஷ்மா! சிவனின் வரம் என்றும் பொய்யாகாது. ஏற்கனவே குழந்தைகள் நூறு விதைகளாக பிறந்து விட்டனர். அவர்களை மனிதர்களாக பிறக்க வைக்க வியாசரால் மட்டுமே முடியும் என்றாள். இதைக் கேட்டு மகிழ்ச்சி அடைந்த பீஷ்மர், திருதிராஷ்டிரனிடம் சென்று வியாசரால் மட்டுமே நுறு குழந்தைகளை நமக்கு தர முடியும் எனக் கூறினார். அதன் பின், வியாசர் அஸ்தினாபுரம் அரண்மனைக்கு வந்தார். வியாசரை பார்த்த அனைவரும் அளவற்ற மகிழ்ச்சி அடைந்தனர். வியாசர், நூறு குழந்தைகளுக்கான பூஜையை ஆரம்பித்தார். நூறு பானைகள் அங்கு வைக்கப்பட்டிருந்தன. வியாசர், அப்பானைக்களுக்கு பூஜையை செய்தார். பூஜை முடிந்த பின், பலத்த இடியும், காற்றும் வீசியது. இதைக் கண்டு அனைவரும் பயந்தனர். அப்பொழுது ஒரு பானையிலிருந்து ஒரு குழந்தை வெளிவந்தது. அக்குழந்தையை வியாசர் காந்தாரியிடம் கொடுத்தார்.

 அதன் பின் வியாசர் இவ்வாறே மீதமுள்ள அனைத்து பானைகளில் இருந்தும் ஒவ்வொரு குழந்தை வெளிவரும் எனக் கூறிவிட்டு அங்கிருந்து சென்றார். குழந்தை பிறந்தது என்பதை அறிந்து திருதிராஷ்டிரனின் மிகவும் மகிழ்ச்சி அடைந்தான். குழந்தையை கையில் வாங்கிய திருதிராஷ்டிரன், அக்குழந்தைக்கு துரியோதனன் என பெயர் சூட்டினான். வியாசர் போகும் முன் பீஷ்மரிடம், இக்குழந்தையினால் இந்த நாட்டிற்கு ஆபத்து ஏற்படக் கூடும். அதற்கான அறிகுறி தான் இந்த இடியும், காற்றும் என்றார். இதைக் கேட்ட பீஷ்மர் மிகவும் வருத்தம் அடைந்தார்.

 அதன்பின் சிறிது நேரத்தில் மற்றொரு குழந்தை பிறந்தது. அக்குழந்தைக்கு துச்சாதனன் எனப் பெயரிட்டனர். அதன் பின் பீஷ்மர் திருதிராஷ்டிரனிடம், திருதிராஷ்டிரா, முதல் குழந்தையினால் நமது நாட்டிற்கும், ஆட்சிக்கும் ஆபத்துக்கள் ஏற்படப் போகின்றன. அதனால் நீ துரியோதனை கொன்றுவிடு எனக் கூறினார். திருதிராஷ்டிரன், எனக்கு வெகு நாட்களுக்கு பிறகு குழந்தை பிறந்துள்ளது. என் குழந்தையை நான் எவ்வாறு கொல்வது. என்னால் கொல்ல முடியாது எனக் கூறினார். பீஷ்மர் திருதிராஷ்டிரனிடம் எவ்வளவோ எடுத்துக் கூறினார். கடைசியில் சகுனியின் சூழ்ச்சியாலும், திருதிராஷ்டிரன் குழந்தையின் மேல் வைத்த பாசத்தாலும், குழந்தையை கொல்ல முடியாது எனக் கூறினான்.

 திருதிராஷ்டிரனனுக்கு நூறு குழந்தைகள் பிறந்த செய்தி பாண்டுவிற்கு தெரிவிக்கப்பட்டது. இதை அறிந்து பாண்டுவும், அவனின் மனைவிமார்களும் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால் பாண்டுவின் இரண்டாவது மனைவியான மாத்ரிக்கு மட்டும் மனதில் கலக்கம் இருந்தது. மாத்ரி பாண்டுவிடம், மன்னவரே! காந்தாரி நூறு மகன்களை பெற்று விட்டாள். குந்தியும் தங்களுக்கு மகன்களை பெற்றுக் கொடுத்து விட்டாள். ஆனால் என்னால் தங்களுக்கு புத்திரப்பேறு கிடைக்கவில்லையே என்பதை நினைத்து நான் மிகவும் வருந்துகிறேன் என்றாள். அதன் பின் பாண்டு குந்தியிடம் சென்று, தேவி! மாத்ரி தன்னால் குழந்தைப்பேறு கிடைக்கப் பெறவில்லை என்பதை நினைத்து மிகவும் வருத்தம் கொள்கிறாள் என்றார்.

இதை அறிந்த குந்தி மாத்ரியை அழைத்து, மாத்ரி! நீ மனதில் தேவர்கள் யாரேனும் நினைத்து நான் சொல்லும் மந்திரத்தை கூறு என அம்மந்திரத்தை கூறினாள். குந்தி கூறியதை போலவே, மாத்ரி மனதில் அஸ்வினி இரட்டையர்களை நினைத்தாள். மந்திரத்திற்கு கட்டுப்பட்ட அஸ்வினி இரட்டையர்கள் மாத்ரி முன் தோன்றி நகுலன், சகாதேவன் என்னும் இரட்டை குழந்தைகளை அருளினர். அப்பொழுது அசரீரி ஒன்று ஒலித்தது. இக்குழந்தைகள் அழகிலும், வலிமையிலும், சக்தியிலும் ஒப்பற்றவர்களாக இருப்பார்கள். இவர்கள் நகுலன், சகாதேவன் என்னும் பெயரோடு அன்போடு அழைக்கப்படுவார்கள் என்றது.

தொடரும்...!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக