கொரோனா வைரஸ் பாதிப்பால் மனித உயிர்கள் பலியாவது மட்டுமின்றி, பல்வேறு அரசு திட்டங்களுக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.
சீனாவில் இருந்து அதிகப்படியான மருந்துகள் இந்தியாவிற்கு இறக்குமதி
செய்யப்படுகிறது. இந்த சூழலில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக சீனாவில் இருந்து ஏற்றுமதி
மற்றும் இறக்குமதி தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ளது. இதனால் ராஜஸ்தான் மாநில முதலமைச்சர்
அசோக் கெஹ்லாத்தின் இலவச மருத்துவத் திட்டத்திற்கு பலத்த அடி விழுந்துள்ளது.
கடந்த டிசம்பர் மாதம் தான் இந்த திட்டத்திற்கு மத்திய அரசின் ஆதரவு கிடைத்தது. சீனாவின் ஏபிஐ எனப்படும் ஆக்டிவ் பார்மசிட்டிகல் இங்கிரீடியண்ட் என்ற நிறுவனத்தில் இருந்து ராஜஸ்தான் அரசு மருந்துகளை இறக்குமதி செய்கிறது. இவை அம்மாநில மக்களுக்கு இலவசமாக அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சூழலில் கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக சீனாவில் இருந்து இறக்குமதி நிறுத்தப்பட்டுள்ளது.
இதனால் இலவச மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்படும் என்று கூறப்படுகிறது. இருப்பினும் தற்போது வரை நிலைமை சீராகவே இருக்கிறது என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதற்கிடையில் மருந்துகளின் இருப்பையும், பொதுமக்களுக்கான விநியோகிப்பையும் அரசு உன்னிப்பாக கவனித்து வருகிறது. இதுவரை எந்தவொரு மருந்து நிறுவனமும் தடையை முழுவதுமாக செயல்படுத்தவில்லை என்று சுகாதாரத்துறை கூடுதல் தலைமைச் செயலர் ரோகித் குமார் சிங் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் தான் இலவச மருத்துவ திட்டத்திற்காக மருந்துகளின் இறக்குமதியை அதிகரிக்க ராஜஸ்தான் அரசு திட்டமிட்டது. ஆனால் அதற்குள் கொரோனா வைரஸ் காரணமாக இப்படியொரு தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உருவாகும் என்று எதிர்பார்க்கவில்லை என்று அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. இதுபற்றி மத்திய அரசிடமும், பிற மாநில அரசுகளிடமும் பேசி வருகிறோம்.
மருந்துகள் தட்டுப்பாடு ஏற்படும் எனில் உடனே மாற்று ஏற்பாட்டிற்கு தயார் நிலையில் இருக்கிறோம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் இந்திய மருத்துவ கம்பெனிகளும் தங்கள் கவலையை வெளிப்படுத்தி உள்ளன. கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக வருங்காலங்களில் மருந்து பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என்று கூறுகின்றனர்.
இரண்டு முதல் மூன்று மாதங்களுக்கு மருந்துப் பொருட்கள் தட்டுப்பாடு ஏற்படாது. சீனாவில் உள்ள ஏபிஐ நிறுவனத்தில் இருந்து அடுத்த 20 முதல் 30 நாட்களுக்குள் மருந்துப் பொருட்கள் இறக்குமதி சீரடையவில்லை எனில் நிலைமை மோசமாகிவிடும் என்று கூறப்படுகிறது. ராஜஸ்தான் அரசு மருத்துவமனைகளில் உள்ள மருந்தகங்களில் இருந்து 600க்கும் மேற்பட்ட மருந்துகளை பொதுமக்களுக்கு இலவசமாக விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
சமீபத்தில் சிறுநீரக, இதய, புற்றுநோய் சிகிச்சைக்கான மருந்துகளும் சேர்க்கப்பட்டு 100க்கும் மேலான மருந்துகள் இலவசமாக வழங்கப்படுகிண்றன. கடந்த 2016ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் தகவல் தெரிவித்த மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகம், மெட்ஃபார்மின், பாராசிடமல், அசிடைல் சலிசைலிக் உள்ளிட்ட 9 அத்தியாவசிய மருந்துகளுக்கு வெளிநாடுகளை நம்பியிருக்க வேண்டிய சூழல் இருப்பதாக குறிப்பிட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக