Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வெள்ளி, 7 பிப்ரவரி, 2020

தமிழகத்துக்கு வரவில்லை: கியா மோட்டார்ஸ் சர்ச்சைக்கு விளக்கம்!

ந்திராவில் இயங்கிக் கொண்டிருக்கும் கியா மோட்டார்ஸ் நிறுவனம் தமிழகத்துக்கு இடம்பெயர்வதாக வந்த செய்தியை ஆந்திர அரசும் கியா மோட்டார்ஸ் நிறுவனமும் திட்டவட்டமாக மறுத்துள்ளன.

தென்கொரியாவின் முன்னணி ஆட்டோமொபைல் தயாரிப்பு நிறுவனமான ஹுண்டாய் மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஒரு அங்கமான கியா மோட்டார்ஸ், தமிழக எல்லையில் உள்ள அனந்தப்பூரில் கார் தயாரிப்பு ஆலையை நிறுவியுள்ளது. முதலில் சென்னையில் ஆலை அமைக்க முடிவுசெய்யப்பட்டு பின்னர் வரிச் சலுகை உள்ளிட்ட காரணங்களுக்காக ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் ஆலை அமைத்து இயங்கிக் கொண்டிருக்கிறது கியா மோட்டார்ஸ். 2017ஆம் ஆண்டில் இந்த ஆலை அமைக்கும் பணி தொடங்கப்பட்டு, 2019 டிசம்பர் மாதம் முழு வீச்சுடன் செயல்படத் தொடங்கியது.

இந்நிலையில், நேற்று ராய்டர்ஸ் உள்ளிட்ட சில ஊடகங்களில் கியா மோட்டார்ஸ் நிறுவனம் தொடர்பான செய்தி வெளியானது. அதில், கியா மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஆலை ஆந்திராவிலிருந்து வெளியேறுவதாகவும், தமிழகத்தில் ஆலை அமைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் கூறப்பட்டது. ஆனால், இதுகுறித்து கியா மோட்டார்ஸ் தரப்பிலிருந்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. இந்நிலையில், கியா மோட்டார்ஸ் நிறுவனம் வெளியேறுவதாக வந்த செய்தியை ஆந்திரப் பிரதேச அரசு முற்றிலும் மறுத்துள்ளது.
இதுகுறித்து ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் அரசு தொழில் துறை மற்றும் வர்த்தகத் துறைக்கான சிறப்பு தலைமைச் செயலாளர் ரஜத் பார்கவா வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில், “1.1 பில்லியன் டாலர் மதிப்பிலான கியா மோட்டார்ஸ் ஆலையை ஆந்திரப் பிரதேசத்திலிருந்து இடம் மாற்றுவதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக ராய்டர்ஸ் நிறுவனத்தில் பிப்ரவரி 5ஆம் தேதி வெளியான செய்தி முற்றிலும் தவறானது. இதற்கு எவ்வித அடிப்படையும் இல்லை. ஆந்திர அரசும் கியா மோட்டார்ஸ் நிறுவனமும் தொடர்ந்து இணைந்து செயல்பட்டு கார் உற்பத்தியைப் பெருக்குவதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றன” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கியோ மோட்டார்ஸ் நிறுவனத்தின் வாகன உற்பத்தி அளவை தற்போதுள்ள 2 லட்சத்திலிருந்து 3 லட்சமாக உயர்த்தும் திட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகவும், ஆந்திராவில் நிறுவனங்களுக்கான தொழில் சூழலை மேம்படுத்தி வருவதில் அரசு முனைப்புடன் செயல்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார். ஆந்திராவிலிருந்து வெளியேறுவதாக வந்த செய்தியை கியா மோட்டார்ஸ் நிறுவனமும் திட்டவட்டமாக மறுத்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக