ஊரடங்கு உத்தரவால் ஏற்பட்டுள்ள வருவாய் இழப்பு கொரோனாவை விட அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது எனக் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர். ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்!!
முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பிரதமர் நரேந்திர மோடிக்கு ஞாயிற்றுக்கிழமை கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், "முழுமையான பொருளாதார பணிநிறுத்தத்தின்" விளைவுகள் கொரோனா தொற்றுநோய் பரவுவதால் எழும் இறப்பு எண்ணிக்கையை விட "பேரழிவை" ஏற்படுத்தும் என குறிப்பிட்டுள்ளார்.
கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க மத்திய அரசு நாடு முழுவதும் 21 நாட்கள் முழு முடக்கத்தை அறிவித்தது. சமூக விலக்கல் மூலமே கொரோனா வைரசைக் கட்டுப்படுத்த முடியும் என்பதால் இந்த ஊரடங்கைக் கடுமையாகக் கடைப்பிடித்து வருகிறது அரசு. இதனால், தொழிற்சாலைகள், வர்த்தக நிறுவனங்கள், சிறு, குறு தொழில்கள், கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளது. இரயில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.
இந்த ஊரடங்கு உத்தரவால் ஏராளமான தொழிலாளர்கள், கூலித் தொழிலாளர்கள் வேலையிழந்துள்ளனர். நிறுவனங்கள், தொழிற்சாலைகள் மூடப்பட்டதால், உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் கூட்டம் கூட்டமாக தங்கள் சொந்த மாநிலத்துக்குத் திரும்புகின்றனர்.
அவர்களுக்குப் பேருந்து கிடைக்காததால், நடந்தே செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இவ்வாறு கூட்டமாகச் செல்வது கொரோனாவை தாமே வரவேற்பது போன்றது என்பதால், அதைத் தவிர்க்குமாறு பல்வேறு மாநில அரசுகளும் கேட்டுக் கொண்டுள்ளன.
இந்நிலையில், முழு முடக்கம் குறித்து பிரதமர் மோடிக்குக் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர். ராகுல் காந்தி கடிதம் எழுதியுள்ளார். இது குறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில்.... ''கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த வளர்ந்த நாடுகளில் ஊரடங்கு உத்தரவுக்குப் பதிலாக வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளனர். இந்தியாவின், சூழல் மிகவும் வித்தியாசமானது என்பதை நாம் புரிந்துகொள்வது முக்கியம்.
முழுமையான ஊரடங்கு உத்தரவைப் பின்பற்றும் நாடுகள் பின்பற்றுவதைக் காட்டிலும் வேறு வித்தியாசமான நடவடிக்கைகளை எடுத்திருப்பது அவசியம். நாள்தோறும் கிடைக்கும் ஊதியத்தை நம்பி வாழும் கூலித் தொழிலாளர்கள், ஏழைகள் இருக்கும் நாடு இந்தியா. திடீரென ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால், பொருளாதாரச் செயல்பாடுகள் முடக்கப்பட்டுள்ளன.
முழுமையான பொருளாதார முடக்கத்தின் விளைவு, கொரோனா மூலம் உருவாகும் உயிரிழப்புகளைவிட மோசமாக இருக்கும் எனத் தெரிவித்துக் கொள்கிறேன். திடீரென, அறிவிக்கப்பட்ட முடக்கத்தால் மக்களிடையே பெரும் பதற்றத்தையும், குழப்பத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. தொழிற்சாலைகள், சிறு தொழில்கள், கட்டுமான தொழில்கள் மூடப்பட்டதால், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தங்களின் சொந்த மாநிலத்துக்குச் செல்கிறார்கள். இது போன்ற ஏழைத் தொழிலாளர்களுக்குத் தங்குவதற்கு இடம் அளித்து, அவர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக அடுத்த சில மாதங்களுக்குப் பணம் செலுத்தி அரசு உதவ வேண்டும்.
முழுமையான முடக்கம் என்பது நிச்சயம் லட்சக்கணக்கான மக்களை வேலையின்மைக்குத் தள்ளும். இதனால், வீடுகளிலும், கிராமங்களிலும் இருக்கும் முதியோர்கள் நோய் தாக்குதலுக்கு ஆளாக நேரிடும். நம்முடைய மக்களின் குழப்பமான நிதர்சனத்தைக் கருத்தில் கொண்டு, இந்த விஷயத்தில் மத்திய அரசு மிகவும் நுணுக்கமாக, புத்திசாலித்தனமாகச் செயல்பட வேண்டும்" என அவர் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக