பெரியகுளத்தில் அரசு அனுமதியின்றி தனியார் மருந்துக் கடையில் மருத்துவர் எனக்கூறி பொதுமக்களுக்கு ஊசி மருந்து போடப்பட்டதால் மருந்துக்கடை உரிமையாளர் மற்றும் ஊழியர் இருவரை காவல்துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
இத்தகவலறிந்த பெரியகுளம் நகராட்சி நகர் நல அலுவலர் மருத்துவர் தினேஷ்குமார் திடீரென மருந்துக் கடையில் ஆய்வு மேற்கொண்டபோது, முகமது யூனிஸ் சேட் நோயாளிகளுக்கு ஊசி மருந்து செலுத்திக் கொண்டிருந்ததால் கையும் களவுமாக பிடிபட்டார். இந்நிலையில் பெரியகுளம் வடகரை காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கவே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் ஆய்வாளர் சுரேஷ், கடை உரிமையாளர் முகமது யூனிஸ் சேட் மற்றும் கடை ஊழியர் முகமது இஸ்மாயில் (32 வயது) ஆகியோரை கைது செய்து காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.
இவ்விவகாரம் தொடர்பாக இருவரிடமும் காவல்துறையினர் துருவித்துருவி விசாரணை செய்தபோது குற்றத்தை ஒப்புக்கொண்டதால் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பெரியகுளம் பகுதியில் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளிலும், ஒன்றிய பகுதிகளிலும் 30க்கும் மேற்பட்ட மருந்துக் கடைகள் இயங்கி வருகின்றன. இதில் பெரும்பாலான கடைகளில் பொதுமக்களுக்கு மாத்திரை வழங்குவதை விட்டுவிட்டு ஊசி மருந்து செலுத்தி பணம் சம்பாதித்து வருகின்றன.
இவரைப் போன்ற நபர்களை கண்டறிந்து, பொது மக்களின் உயிர் விலை மதிப்பற்றது என்பதனை உணர்ந்து மாவட்ட தலைமை மருத்துவமனை இணை இயக்குநர் லட்சுமணன் உடனடியாக நடவடிக்கை எடுத்து மருந்தகங்களில் ஊசி மருந்து செலுத்தக்கூடாது என விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டுமெனவும், அவ்வாறு ஊசி மருந்து செலுத்தும் நபர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் பெரியகுளம் பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக