Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வியாழன், 16 ஏப்ரல், 2020

ஏற்றுமதிக்கு கிரீன் சிக்னல் கொடுத்த அரசு!

அரிசி, இறைச்சி, பால்பொருட்கள், பதப்படுத்தப்பட்ட உணவுகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை இந்தியா ஏற்றுமதி செய்யத் தொடங்கியுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. மே 3ஆம் தேதி வரை ஊரடங்கை மத்திய அரசு நீட்டித்துள்ள நிலையில், சரக்கு பேக்கேஜிங், போக்குவரத்து உள்ளிட்டவற்றுக்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன.

இதுகுறித்து மத்திய வேளாண் அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஏற்றுமதியாளர்கள் சந்தித்து வரும் பிரச்சினைகளை வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் சரிசெய்துள்ளது. அரிசி, நிலக்கடலை, பதப்படுத்தப்பட்ட உணவுகள், கோழி, இறைச்சி, பால்பொருட்கள், இயற்கை பொருட்கள் உள்ளிட்ட முக்கிய சரக்குகளின் ஏற்றுமதி ஏற்கெனவே தொடங்கிவிட்டது.

சரக்குப் போக்குவரத்து, ஊரடங்கு அனுமதி பாஸ்கள், பேக்கேஜிங் ஆலைகள் என பல்வேறு பிரச்சினைகளை தீர்க்க வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் கடும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. ஏற்றுமதிக்கு தேவையான சான்றிதழ்களை டிஜிட்டல் நகல்களாக வேளாண் அமைச்சகம் விநியோகித்து வருகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரையில் ஏற்றுமதிக்காக 9,759 சான்றிதழ்கள் டிஜிட்டல் நகல்களாக விநியோகிக்கப்பட்டுள்ளதாக வேளாண் அமைச்சகம் தெரிவித்துள்ளது. சில நாடுகள் விடுத்துள்ள கோரிக்கைக்கு ஏற்ப, ஆப்கானிஸ்தானுக்கு 50,000 டன் கோதுமையும், லெபனானுக்கு 40,000 டன் கோதுமையும் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. மேலும், 2,728 சரக்குப் பெட்டகங்கள் இறக்குமதிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக