அதிகாலைை விழிப்பு
வீட்டில் முடங்கியிருக்கிறோம் என்று கவலை கொண்டு முன் தூங்கி பின் எழும் பழக்கத்துக்கு குட்பை சொல்லுங்கள். அதிகாலை இல்லையெனிலும் குறைந்தது 7 மணிக்காவது படுக்கையை விட்டு எழுந்திருங்கள்.
சிலர் தூக்கத்திலிருந்து எழுந்தாலும் கூட மீண்டும் புரண்டு புரண்டு படுத்தபடி படுக்கையில் கிடப்பார்கள். இதனால் உடல் அசதிக்குள்ளாகவே செய்யும். அதனாலும் மனம் சோர்வாக இருக்கும். நாள்முழுக்க எந்த வேலை மீதும் நாட்டமில்லாமல் சோம்பலாக உணர்வீர்கள். அதனால் விழிப்பு வந்ததும் படுக்கையை விட்டு எழுந்திருங்கள்.
மூச்சு பயிற்சியும் உடற்பயிற்சியும்
வீட்டில் முடங்கி கிடக்கும் போது வாக்கிங் எப்படி போவது என்று முணுமுணுக்க வேண்டாம். காலைக்கடன்களை முடித்ததும் பத்துமுறையாவது மூச்சு பயிற்சி மேற்கொள்ளுங்கள். இதற்கு தனியாக நிபுணரிடம் பயிற்சி செய்ய வேண்டும் என்றில்லை. காற்றோட்டமான இடத்தில் வீட்டின் மொட்டை மாடியில், தோட்டத்தில் விரிப்பை போட்டு அமர்ந்து மூச்சை ஆழமாக இழுத்து பொறுமையாக விடுங்கள். சுத்தமான பிராணவாயுவால் உடல் மனம் இரண்டும் ஆரோக்கியம் அடைகிறது. மூளைக்கும் உடலுக்கும் சுறுசுறுப்பு கிடைக்கிறது. அப்படியே மிதமான நடைபயிற்சியும் செய்யுங்கள். குறைந்தது 20 நிமிடங்களாவது இதற்கு நேரம் ஒதுக்குங்கள்.
தியானம்
இது எல்லாருக்கும் எல்லா வயதினருக்கும் பலன் கொடுக்கும். ஐந்து நிமிடங்கள் எதையும் செய்யாமல் மனதை ஒருமுகப்படுத்தி தியானம் செய்யலாம்.இந்த குறைந்த நேரத்தில் மனதை அலைபாயவிடாமல் எந்த பிரச்சனைகளையும் கொண்டுவராமல் மனதை அமைதியாக்க பழகுங்கள். ஆரம்பத்தில் சிரமமாக இருந்தாலும் குறைந்த நாட்களில் மனம் உங்கள் கட்டுக்குள் வருவதை உணர்வீர்கள். இதனால் மனதுக்குள் தாழ்வு மனப்பான்மை விலகும். உறுதியும் உற்சாகமும் அதிகரிக்கும், உங்கள் மீதான நம்பிக்கை இரட்டிப்பு மடங்கு அதிகரிக்கும். அனுபவபூர்வமாக நீங்களே உணரலாம்.
மூன்று வேளை சத்தான உணவு
மனதில் சோர்வு இருந்தாலே பசியின்மை பிரச்சனை இருக்கதான் செய்யும். ஆனால் பசி இல்லையென்றாலும் மூன்று வேளையும் சரியான நேரத்துக்கு உணவை எடுத்துகொள்வது அவசியம். உணவு எடுக்கணுமே என்று கொறிக்காமல் சத்தான உணவை எடுத்துகொள்வதும் முக்கியம்.குறிப்பாக மெக்னீஷியம் கலந்த உணவையும் எதிர்ப்புசக்தி தரும் உணவையும் கூடுதலாக உணவில் சேர்த்துவர வேண்டும். உண்ணும் போது கண்கள் உணவை மட்டுமே பார்க்கவேண்டும். மனதிலும் உணவின் சுவை மட்டுமே நிரம்பியிருக்க வேண்டும். எந்த காரணம் கொண்டும் உணவை நேரம் தள்ளி எடுக்க வேண்டாம்.
அவ்வபோது திரவ ஆகாரம்
உடலில் நீர்ச்சத்து குறையாமல் பார்த்துகொள்ள வேண்டும். இதற்கு நீர் மட்டும் தான் தேவை என்றில்லை. சத்து நிறைந்த பழச்சாறுகளையும் எடுத்துகொள்ளலாம். உரிய இடைவேளையில் பழச்சாறுகள் சோர்விலிருக்கும் மூளையை தட்டி எழுப்பி உங்களை சுறுசுறுப்பாக வைத்திருக்கும்.
ஓவ்வொரு வேலைக்கு நடுவிலும் உங்களை சோர்விலிருந்து நீக்கி உடனடியாக புத்துணர்ச்சி பெற தினமும் 2 டம்ளர் பழச்சாறு எடுத்துகொள்ளுங்கள். ஆரோக்கியம், மன சோர்வு நீக்கி புத்துணர்ச்சி பெறுவதோடு இளமையாகவும் அழகாகவும் இருக்க வைக்கவும் உதவும்.
உங்களுக்கான நேரம்
குறிப்பாக பெண்களுக்குத்தான் இவை பொருந்தும். குடும்பம், குழந்தைகள், பொறுப்புகள் தாண்டி தற்போது பணிக்கு செல்லும் பெண்கள் மேலும் பல இன்னல்களுக்கு ஆளாகிறார்கள். இந்நிலையில் தமக்கென்று பிடித்த விஷயங்களை செய்ய நேரம் ஒதுக்கி கொள்வதில்லை. எப்போதும் வேலை என்று ஓடிக்கொண்டிருந்தால் மூளையும் மனமும் ஓயாமல் சிந்தித்து அழுத்தத்தை அதிகரிக்கவே செய்யும். அதனால் அரை மணி நேரம் உங்கள் அத்தனை பொறுப்புகளையும் மூட்டை கட்டிவிட்டு உங்களுக்கு பிடித்த விஷயங்களில் கவனத்தோடு ஈடுபடுங்கள். கைவேலையோ, பாட்டு கேட்பதோ, புத்தகங்கள் படிப்பதோ உங்களுக்கு பிடித்த விஷயங்கள் மறக்க வேண்டாம்.
குடும்பத்தோடு நேரம்
எப்போதும் குடும்பத்தோடு தான் இருக்கிறோம். அதிலும் கொரோனாவால் வீட்டுக்குள் குடும்ப உறுப்பினர்கள் அனைவருமே ஒன்றாக இருக்கிறோம் என்று சொல்லலாம். ஆனால் எல்லோரும் ஒன்றாக பேசிகொண்டும், பிடித்த விஷயங்களை பகிர்ந்துகொண்டும் இருக்கிறீர்களா என்பதையும் யோசியுங்கள்.
குடும்பத்தில் நான்கு பேர் இருந்தாலும் ஒருவர் ஃபோனிலும், ஒருவர் டீவியிலும், ஒருவர் புத்தகத்திலும், மற்றொருவர் கணினி அல்லது லேப்- டாப்பிலும் மூழ்கியிருக்கு நிலைதான் இன்று அதிகம் இருக்கிறது. கிடைக்கும் இந்த நேரத்தில் வேலைகள் முடிந்ததும் குறைந்தது ஒரு மணி நேரமாவது பிடித்த விஷயங்களை பகிர்ந்து கொள்வதன் மூலம் மனதில் அழுத்தியிருக்கும் பல விஷயங்களும் தளர்ந்து இலேசாக கூடும்.
வேலையில் சோர்வு வேண்டாம்
வரிசை கட்டி நிற்கும் வீட்டு வேலையாக இருந்தாலும் , அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் ஃபைல்களாக இருந்தாலும் இதை முழுமையாக செய்யபோவது நீங்கள் தான் என்பதால் இதில் சுணக்கம் காண்பிக்க வேண்டாம். அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று யோசிக்கும் போதே மனம் சோர்வுக்கு போகும். அதனால் முதல் நாளே வேலையை திட்டமிடுங்கள்.
கடினமாக உங்களுக்கு சலிப்பும் வெறுப்பும் தரும் வேலையை எப்போதும் ஒதுக்கி வைக்காதீர்கள். இவை தள்ளி போக போக மனதில் அழுத்தம் தான் அதிகரிக்கும். மாறாக முதல் வேலையாக உங்களுக்கு கடினமான வேலையாக இருப்பதை எடுத்து செய்வதன் மூலம் விரைவாகவும் முடிக்கலாம். இதனால் அடுத்தடுத்த வேலையையும் சுலபமாக முடிப்பீர்கள்.
கெட்டபழக்கங்கள் வேண்டாம்
வெறுப்பா இருக்கு ஒரு தம் போட்டா சரியாகும் என்று சிகரெட் பிடிக்க காரணங்களை வைத்திருப்பவர்களும், டென்ஷனா இருக்கு ஒரு பெக் சாப்பிட்டா தான் மனசு இலேசாகும் என்று மதுப்பக்கம் சாய்பவர்களும் அதை தவிர்க்க வேண்டும். குறிப்பாக ஆண்களுக்குதான் இந்த குறிப்பு.ஏனெனில் இலேசாக்கும் என்று சொல்லகூடிய இந்த மோசமான பழக்கம் தற்காலிகமாக சோர்வை விரட்டி அடிக்காது. மறக்கவே செய்யும். பிறகு அதிகப்படியான மோசமான மனநிலைக்கு தள்ளிவிடும்.
இரவு தூக்கம்
விடுமுறை நாளாக இருந்தாலும் வேலை நாளாக இருந்தாலும் தினமும் இரவு தூங்கும் நேரத்தை சரியாக பின்பற்றுங்கள். உறங்குவதற்கு முன்பு ஒரு குட்டி குளியல் போடுவதும் ஆழ்ந்த தூக்கத்துக்கு உதவும். தூக்கம் வரவில்லை என்று ஃபோனிலும், தொலைக்காட்சியிலும் மூழ்கி இருப்பதால் மறுநாள் வேலையில் ஈடுபட முடியாமல் மனமும் உடலும் சோர்வை சந்திக்கவே செய்யும்.
குறிப்பிட்ட நேரத்தில் படுக்கையில் இருங்கள். தூக்கம் வரும் வரை பிடித்த புத்தகத்தை படியுங்கள். வெளிச்சம் தடையாக இருந்தால் மிதமான இசையை கேட்டு கொண்டிருந்தால் தூக்கம் விரைவில் வரக்கூடும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக