Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வெள்ளி, 22 மே, 2020

கொரோனாவால் 4 மடங்கு வளர்ச்சி... பேடிஎம் ஹேப்பி!

Paytm merchant payments

பிசினஸ் கதா சேவை மூலம் வர்த்தகர்களுக்கு செலுத்தப்பட்ட கட்டணத் தொகை நான்கு மடங்கு வளர்ச்சியடைந்துள்ளதாக பேடிஎம் நிறுவனம் தெரிவித்துள்ளது.

கொரோனா கொள்ளை நோயை கட்டுப்படுத்துவதற்காக மார்ச் 25ஆம் தேதி முதல் நாடு தழுவிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் பல தொழில்கள் முடங்கியது. எனினும், அத்தியாவசியப் பொருட்களின் விநியோகத்திற்கு கட்டுப்பாடுகளுடன் அனுமதியளிக்கப்பட்டது. தற்போது நான்காம் கட்ட ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள் மேற்கொள்ளப்பட்டு ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களும் சேவையை மீண்டும் தொடங்கியுள்ளன.

பெரும்பாலான சிறு வர்த்தகர்கள் முதல் நடுத்தர வணிக கடைகள் வரை ஏராளமானோர் பேடிஎம் உள்ளிட்ட டிஜிட்டல் பரிவர்த்தனை சேவைகளை பயன்படுத்தி வருகின்றனர். ஊரடங்கு காலத்தில் பணம் எடுக்க ஏடிஎம்களுக்கு செல்வதும் சிரமம் ஏற்பட்டுள்ளது. ஏடிஎம் சென்றாலும் வரிசையில் நின்று பணம் எடுக்க பலருக்கும் பொறுமை இல்லை. ஆகவே, பேடிஎம், யூபிஐ போன்ற டிஜிட்டல் பரிவர்த்தனைகளை ஏராளமான வாடிக்கையாளர்கள் விரும்புகின்றனர்.

இந்நிலையில், கொரோனா ஊரடங்கு காலத்தில் வர்த்தகர்களுக்கு வரும் பணப் பரிவர்த்தனைகள் நான்கு மடங்கு உயர்ந்துள்ளதாக பேடிஎம் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஏறக்குறைய நான்கு மாதங்களில் வாடிக்கையாளர்கள் வர்த்தகர்களுக்கு செலுத்திய பணத்தின் ஒட்டுமொத்த மதிப்பு ரூ.1,500 கோடியை தாண்டியுள்ளதாக பேடிஎம் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து பேடிஎம் நிறுவனத்தின் துணைத் தலைவர் சஜால் பாத்னகர் பேசுகையில், “எங்களது புதிய பிசினஸ் கதா சேவை மூலம் ஜனவரி 8ஆம் தேதி முதல் மே 15ஆம் தேதி வரையில் பேடிஎம் தளத்தில் வர்த்தகர்களுக்கு செலுத்தப்பட்ட பணத் தொகை நான்கு மடங்கு வளர்ச்சி கண்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

பிசினஸ் கதா என்ற டிஜிட்டல் லெட்ஜர் சேவையை வர்த்தகர்களுக்காக பேடிஎம் நிறுவனம் ஜனவரி 8ஆம் தேதி முதல் அறிமுகப்படுத்தியது. இச்சேவை மூலம் வர்த்தகர்கள் தங்களது சரக்குகளின் விவரங்கள், விலை, வாடிக்கையாளர் மொபைல் எண் உள்ளிட்டவற்றை பதிவு செய்து பயன்படுத்திக்கொள்ளலாம். இதுவரை சுமார் 10 லட்சம் வர்த்தகர்கள் இச்சேவையை பயன்படுத்த தொடங்கியுள்ளதாக பேடிஎம் தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக