Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

வெள்ளி, 22 மே, 2020

பிச்சைக்காரனும் தங்க நாணயமும்

ஒரு ஊரில் பிச்சைக்காரன் ஒருவன் வீடு வீடாக உணவுக்காக அலைந்தான். அவன் மிகவும் அசிங்கமாக, கிழிந்த உடைகளோடு இருந்தான். ஒரு பழைய கோணிப்பையே அவனுக்கு உடமையாக இருந்தது. ஒவ்வொரு வீடாகப் போய் பார்த்து விட்டு எதுவும் கிடைக்காவிட்டால் அந்த வீட்டின் முன்னே போய் நின்று வீடு மிகப் பெரியது, ஆனால் இங்குள்ளவர்களுக்குப் பணம் நிறைய இருந்தும் இன்னும் அதிகமாகவே எதிர்பார்க்கிறார்கள். கடைசியில் எல்லாவற்றையும் இழப்பார்கள் என்று சொன்னான்.

இன்னொரு வீட்டுக்குப் போனான். உணவு கிடைக்கவிலை. இந்த வீட்டில் உள்ளவன் கோடீஸ்வரன். ஆனால் இருக்கிற பணத்தில் திருப்தியடையாமல் சூதாடினான். கடைசியில் எல்லாவற்றையும் இழந்தான். எனக்கோ கொஞ்சப் பணம் கிடைத்தால் போதும். திருப்தி கொள்வேன். அதிக ஆசைப்படமாட்டேன்! என்று அந்த பிச்சைக்காரன் சொன்னதும் அதிர்ஷ்ட தேவதை அவன் முன்னே தோன்றியது.

நான் உனக்கு தங்க நாணயங்கள் கொடுத்து உதவுகிறேன் என்றது தேவதை. பிச்சைக்காரன் உடனே அவன் கோணிப்பையை விரித்தான். அப்போது அதிர்ஷ்ட தேவதை கோணிப்பைக்குள் விழுகின்ற நாணயங்கள் தங்கமாக இருக்கும். அவை நிலத்தில் விழுந்தால் தூசியாகி விடும் என்று சொல்லியது. பிச்சைக்காரன் மிகுந்த மகிழ்ச்சியோடு இருந்தான். அதிர்ஷ்ட தேவதை கோணிப்பை நிரம்பியதும் தங்க நாணயங்களைக் கொட்டுவதை நிறுத்தியது.

உன் கோணிப்பையில் இருக்கிற நாணயங்கள் உன்னை அரசனை விட பணக்காரனாக்கும். அது போதும்தானே? என்றது அதிர்ஷ்ட தேவதை. போதாது. இன்னும் வேண்டும் என்றான் பிச்சைக்காரன். அதிர்ஷ்ட தேவதை மேலும் சில தங்க நாணயங்களைக் கொடுத்து விட்டு உன் கோணிப்பை இதற்கு மேல் தாங்காது என்றது. பிச்சைக்காரன் இன்னும் கொஞ்சம் வேண்டும் என்றான். அதிர்ஷ்ட தேவதை மேலும் தங்க நாணயங்கள் கொடுத்தது. மறு வினாடி கோணிப்பை கிழிந்தது. அதனுள் இருந்த நாணயங்கள் கீழே விழுந்து தூசியாகின. அதிர்ஷ்ட தேவதையும் மறைந்தது. பிச்சைக்காரன் திகைத்துப் போய் நின்றான்.

நீதி :

கிடைத்ததை வைத்து வாழவேண்டும். பேராசைப்பட்டால் உள்ளதும் போய்விடும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!