Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வெள்ளி, 22 மே, 2020

பதினேழாம் நாள் போர்..! கர்ணனின் வீழ்ச்சி..!

 கிருஷ்ணர், அர்ஜூனன் அருகே சென்றதும் தேர் மேல் ஏறி உட்கார்ந்து கொண்டு, அர்ஜூனனிடம், இப்போது உன்னிடமுள்ள அஞ்சரீகம் என்னும் அஸ்திரத்தை எடுத்து கர்ணன் மேல் செலுத்து. இம்முறை அது அவனுடைய உயிரை வாங்கிவிடும் என்றார். அவ்வாறே அர்ஜூனன் அஞ்சரீகக் கணையை எடுத்து கர்ணன் மேல் எய்தான். அர்ஜூனன் எய்த அஞ்சரீகம் என்னும் அஸ்திரம் கர்ணன் மார்பிலே பாய்ந்து அவனைக் கீழே தள்ளியது. கர்ணன், உயிர் தளர்ந்து பிரியும் வேதனையோடு கீழே விழுந்து நெருப்பில் அகப்பட்ட மலர் போலத் துடிதுடித்தான்.

கர்ணனின் உயிர் உடலிலிருந்து மெதுவாகப் பிரிந்து சென்று கொண்டிருந்தது. அந்த சமயத்தில் குந்தியின் மனதில் புரிந்து கொள்ள முடியாத துயர உணர்வுகள் அலைமோதிக் கொண்டிருந்தது. குந்தியின் உடல் காரணமின்றி நடுங்கியது. தன்னுடைய மகன் கர்ணன் முடிவை நெருங்கிக் கொண்டிருக்கிறான்! என்று ஏதோ உருவமற்ற தெளிவிழந்த குரல் ஒன்று இடைவிடாமல் அவள் செவிகளில் ஒலித்துக் கொண்டிருப்பது போல தோன்றியது. அவளுடைய மனமும் எண்ணங்களும் குழம்பி நடுங்கின. பதறியடித்துக் கொண்டு போர்க்களத்துக்கு ஓடிவந்தாள். அங்கே சென்றதும் சற்று முன்பு அவள் எதைப் பிரமை என்று எண்ணினாளோ, அதுவே உண்மையாக நடந்திருந்தது. போர்க்களத்தில் கர்ணன் இரத்த வெள்ளத்தில் வீழ்ந்து கொண்டிருந்தான். குந்தி அவனை அந்த நிலையில் கண்டதும் கதறியழுது புலம்பினாள்.

கர்ணனின் உடலைத் தன் மடியில் எடுத்து வைத்துக்கொண்டு புலம்பினாள். அதனைக் கண்ட பாண்டவர்களுக்கு, தன் தாய் குந்தி கர்ணனின் உடலை எடுத்து வைத்துக்கொண்டு ஏன் அழுகிறாள்? அவளுக்கும் கர்ணனுக்கும் என்ன சம்பந்தம்? கர்ணனுடைய மரணத்தை ஏன் தாங்கமுடியவில்லை என்று குழம்பினார்கள். போர்க்களத்தில் கூடியிருந்த அத்தனை பேரும் எதுவும் புரியாமல் குழப்பத்தில் இருந்தார்கள். துரியோதனன், கர்ணனின் பிரிவை தாங்க முடியாமல் வருந்தினான். அவனுக்கிருந்த கடைசி நம்பிக்கையாகிய கர்ணனும் அழிந்துவிட்டான். கர்ணனின் அழிவை துரியோதனனால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. இனிமேல் என் படைகளைத் தலைமை தாங்கி நடத்துவதற்கு யார் இருக்கிறார்கள்? ஒப்பற்ற நண்பன் உன்னை இழந்து இனி நான் எப்படி வாழப் போகிறேன் என்று துரியோதனன் புலம்பினான்.

தங்களுடைய தாய், கர்ணனுக்காக ஏன் இவ்வாறு அழுகின்றாள்? என்று குழம்பிய பாண்டவர்கள் கிருஷ்ணரிடம் சென்று கேட்டார்கள். கிருஷ்ணர், கர்ணன் உங்களுடைய தமையன். அவன்தான் தர்மனுக்கும் மூத்தவன் என்று கூறி கர்ணனுக்கும், குந்திக்கும் உள்ள உறவைப் பற்றி விவரித்து கூறினார். அவற்றை அறிந்ததும் பாண்டவர்களும் மனம் வருந்தி கர்ணன் இருக்கும் இடத்திற்கு சென்றனர். கர்ணன் தங்களுடைய மூத்த சகோதரன் என்று அறிந்ததும் அவர்கள் துடிதுடித்தனர். குந்தியிடம் தாங்கள் ஏன் இந்த இரகசியத்தை முன்பே எங்களுக்குச் சொல்லவில்லை, நாங்களே! கர்ணன் உயிர் பிரிய காரணமாகி விட்டோம் என்று கூறி வருந்தினார்கள். பாண்டவர்கள், கிருஷ்ணரிடம் நீங்கள் சூழ்ச்சி செய்து எங்களை ஏமாற்றி விட்டீர்கள். உங்களுக்கு இந்த இரகசியம் தெரிந்திருந்தும் நீங்கள் சொல்லாமல் இருந்து உள்ளீர்கள். நீங்கள் இருவரும் சேர்ந்துகொண்டு எங்களைப் பெரிதும் ஏமாற்றி விட்டீர்கள். வஞ்சகம் செய்து விட்டீர்கள். உங்களுடைய சூழ்ச்சிகள் மனிதர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை.

எங்களுக்கு முன்பு பிறந்தவனாகிய மூத்த தமையனை எங்களைக் கொண்டே கொன்றுவிட்டாய் என்று கிருஷ்ணரிடம் முறையிட்டனர். கர்ணனுடைய மரணம் போர்க்களம் முழுவதும் ஒருவிதமான சோகத்தை உண்டாக்கியிருந்தது. கர்ணனின் மரணம் பாண்டவர்கள், கௌரவர்கள் ஆகிய இரு தரப்பினருக்கும் வருத்தத்தை தந்தது. போட்டியும், பொறாமையும், பகைமையும், குரோதமும் நிறைந்து நின்ற அந்தப் போர்க்களம் கர்ணனுடைய மரணத்தால் யாவற்றையும் மறந்து சோகம் என்ற உணர்வில் ஆழ்ந்து போயிருந்தது.

அன்றிரவு துரியோதனன் உணவு, உறக்கம், மறுநாள் போர், எதைப் பற்றியுமே கவலைப்படாது கர்ணனைப் பிரிந்த துன்பத்தில் மூழ்கியிருந்தான். அங்கு வந்த சகுனி, துரியோதனனிடம் இறந்தவன் பற்றி வருத்தப்படாமல் கவலையை விட்டு விடு. நாளைப் போருக்கு யாரைத் தலைவராக நியமிக்கலாம் என்று கேட்டான். படைத்தலைவனாக யாரை நியமிப்பது என்பது பற்றி அன்று இரவு சகுனியும், துரியோதனனும் நீண்டநேரம் விவாதித்தனர். இறுதியில் இருவரும் ஒருமனதாக ஒரே முடிவுடன், பதினெட்டாவது நாள் போருக்குச் சல்லியனைப் படைத் தலைவனாக்குவதாக தீர்மானித்தனர். கர்ணனுக்குப் பிறகு கௌரவசேனையில் எஞ்சியிருந்தவர்களில் சல்லியனைக் காட்டிலும் தகுதி வாய்ந்தவர்கள் வேறு எவரும் இல்லை. அவன் ஒருவனால் தான் இனிமேல் கௌரவசேனையை நிர்வகித்து நடத்த முடியும். இத்தகைய காரணங்களாலேயே துரியோதனன், சகுனி இருவரும் சல்லியனைத் தேர்ந்தெடுத்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக