Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

செவ்வாய், 5 மே, 2020

மதுக் கடைகளை திறந்தால் விபரீதமாகும்: டாஸ்மாக் ஊழியர்கள் எச்சரிக்கை!

டாஸ்மாக் கடைகளை திறக்க தமிழக அரசு எடுத்துள்ள விபரீத முடிவை மறுபரிசீலனை செய்யவேண்டுமென டாஸ்மாக் ஊழியர்கள் சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
 
மதுக் கடைகளை திறந்தால் விபரீதமாகும் டாஸ்மாக் ஊழியர்கள் எச்சரிக்கை
மே 7ஆம் தேதி முதல் டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த விபரீத முடிவை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டுமென டாஸ்மாக் ஊழியர்கள் சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.


தமிழக அரசு மதுபானக் கடைகளை திறப்பதற்கு அண்டை மாநிலங்களில் மது விற்பனையை சுட்டிக்காட்டுவது ஏற்புடையதல்ல. இன்று அண்டை மாநிலங்களில் மதுபானக் கடைகளில் கொரோனா குறித்த அச்சமோ, தனிமனித இடைவெளி குறித்த விழிப்புணர்வோ இல்லாமல் மக்கள் கூட்டம் கூட்டமாக அலைமோதியதை அரசு கவனத்தில் எடுத்துக்கொள்ளவில்லையோ என ஐயம் ஏற்படுகிறது. தமிழகத்திலுள்ள பெரும்பாலான மதுபானக் கடைகள் தனிமனித இடைவெளியை கடைப்பிடிக்கும் வகையிலான கட்டமைப்பு இல்லாத நிலையில் உள்ளன.

இந்நிலையில் ஊழியர்கள் தனிமனித இடைவெளியை பின்பற்றி விற்பனையில் ஈடுபட முடியாத நிலையும், குடிமக்கள் கும்பலாக கடைக்கு அருகிலேயே மதுவை குடிப்பதும், எச்சில் துப்புவதும், வாந்தி எடுப்பதுமான சூழ்நிலையும் நோய் தொற்று பரவுவதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தும். மதுக்கடை ஊழியர்கள் பொதுப் போக்குவரத்து இல்லாததால் வெளியூர்களிலிருந்து வந்து கடைகளில் பணிபுரிந்துவிட்டு மீண்டும் வீட்டிற்கு செல்வது, விற்பனை பணத்தை வங்கியில் செலுத்துவது, மாவட்ட மேலாளர் அலுவலகங்களுக்கு சென்று வருவது போன்ற அன்றாட பணிகளை மேற்கொள்வது பெரும் சிரமத்தை ஏற்படுத்தும்.

ஊரடங்கினால் வேலையிழந்து வருமானமில்லாமல் அத்தியாவசிய தேவைகளுக்குக்கூட பெரும் சிரமத்துக்கு ஆளாகியுள்ள கோடிக்கணக்கான மக்களில் குடிப்பழக்கத்திற்கு ஆட்பட்டுள்ள மக்களிடம் உள்ள பணத்தை குடிக்கு செலவழிக்க வைக்க அரசு முயற்சிப்பது வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவதாகும். குடும்ப வன்முறையும், சட்ட ஒழுங்கு பிரச்சினைகளும் அதிகரிக்கக்கூடும் என்பதை அரசின் கவனத்திற்கு கொண்டுவருகிறோம்.

மாநிலம் முழுவதும் தன்னுயிரையும் பொருட்படுத்தாமல் இரவு பகல் பாராமல் ஊரடங்கு பணியில் ஈடுபட்டுள்ள காவல்துறையினரை மதுக்கடைகளுக்கு பாதுகாப்பளிக்கும் பணியில் ஈடுபடுத்துவதும் அவர்களுக்கு பணிச்சுமையை அதிகரிக்கும். தமிழகத்தில் கொரோனா நோய் தொற்று அதிகமாகி வரும் சூழ்நிலையில் மதுபானக் கடைகள் திறப்பு என்கிற விபரீத முடிவை மறுபரிசீலனை செய்து மூன்றாம் கட்ட ஊரடங்கு காலம் முடியும் வரை மதுபானக் கடைகள் திறப்பு நடவடிக்கையை நிறுத்திவைக்கும்படி தமிழக அரசை வலியுறுத்துகிறோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக