Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

சனி, 2 மே, 2020

வட கொரிய அரசியல் குழப்பங்களை பயன்படுத்த மாஸ்டர் பிளான்.. அசைக்க முடியாத சக்தியாக உருவாகும் சீனா

வட கொரியா அதிபர் கிம் ஜாங் உன் உடல்நிலை பற்றி, விவரம் தெரியாமல், உலக நாடுகள் தீவிரமாக குழம்பி நிற்கும் நிலையில், சீனா ஒருபடி முன்னே போய்விட்டது. வட கொரியாவில், அரசியல் நிலையற்றத் தன்மை உருவானால், அதை தங்களுக்கு சாதகமாக எப்படி பயன்படுத்துவது என்பது பற்றிய முழு திட்டமிடல் சீனாவிடம் இருக்கிறது.வட

வடகொரிய அரசியல் குழப்பங்களை பயன்படுத்த மாஸ்டர் பிளான்.

சீனாவின் இந்த திட்டம் நடைமுறைக்கு வந்தால், அமெரிக்காவுக்கும், அதன் தோழமை நாடான ஜப்பானுக்கும் பெரும் பின்னடைவை ஏற்படுத்தப்போகிறது. வட கொரியாவிடம் கொட்டிக் கிடக்கும் ஏவுகணைகளும், அணு ஆயுதங்களும் யார் கைக்கு போகப்போகிறது என்பதை தீர்மானிக்கப் போகிறவை சீனாவின் அடுத்தடுத்த நாட்களின் நகர்வுகள்தான்.
கிம் உடல்நிலை குறித்த நிலையற்றத் தன்மைகளுக்கு இடையே, சீனா எந்த மாதிரி மூவ் செய்யப்போகிறது என்பது பற்றிதான், சர்வதேச அரசியல் பார்வையாளர்கள் அதிகம் கவலைப்படுகிறார்கள.

வட கொரியா உள்நாட்டு குழப்பம்

கிம்முக்கு ஏதாவது ஆனாலோ, அல்லது அவர் உடல்நிலை முன்பு மாதிரி இல்லாமல் வலுவிழந்தாலோ அவரது தங்கை, கிம் யோ ஜாங் அதிகாரத்தை கைப்பற்ற எத்தனிப்பார். பெண் என்பதால், இதை அங்குள்ள அதிகார மையம் ஏற்க தயங்கும். அப்போது ராணுவ தலைமை, ஆட்சியை பிடிக்க முயற்சி செய்ய கூடும். இது பெரும் உள்நாட்டு அரசியல் மோதல்களுக்கு வழி வகுக்கும். உள்நாட்டு போர்கள் வெடித்தாலும் ஆச்சரியம் இல்லை

சீனாவின் அங்கம்

இதுதான், வட கொரியாவில், சீனா தனது ஆதிக்கத்தை நிலைநாட்டுவதற்கு கிடைக்கப்போகும் அருமையான வாய்ப்பு. சீனாவின் தெற்கு பகுதியில் உள்ள அண்டை நாடுதான் வட கொரியா. பெரும் நிலப்பரப்பை சீனாவுடன் எல்லையாக கொண்ட நாடு. எனவே, சீனாவின் ஒரு அங்கம் போல வட கொரியாவை மாற்றும் வித்தையை ஜி ஜிங்பின் கையில் எடுக்க கூடும். ஹாங்காங் விரும்பாவிட்டாலும் இப்படித்தானே சீனா நடந்து கொள்கிறது.

கொரிய தீப கற்பம்

தனது உறவுக்காரரும், சீனாவின் நண்பருமான, ஜாங் சாங்-தேக்கை தூக்கிலிட்டு கொன்றார் கிம் ஜாங் உன். இதனால் கிம் மீது பெரும் அதிருப்தியிலிருந்தது சீனா. இரு நாட்டு உறவும் சில காலம் பாதிக்கப்பட்டது. இழந்த செல்வாக்கை மீண்டும் நிலைநாட்ட இப்போது சீனா முயலும். மற்றொரு பக்கம், வட கொரியாவின் எதிரி நாடு, தென் கொரியாவின் அதிபர் மூன் ஜே-இன்னுடன், சீனாவுக்கு நெருக்கம் சமீபகாலமாக ரொம்பவே அதிகரித்து வருகிறது. வட கொரியாவில் சீனா கால் பதித்தால், தென் கொரியாவை சமாதானம் செய்வது எளிதுதான். காரணம், சீனாவிடம் உள்ள கட்டற்ற பொருளாதார வலிமை. பணம் இருந்தால் பத்தும் செய்யலாம்தானே. பொருளாதார சக்தியின், வட கொரியா மட்டுமின்றி தென் கொரியாவிலும் அரசியல் கட்டுப்பாட்டை செலுத்துவது சீனாவிற்கு உள்ள மற்றொரு ஆப்ஷன்.

வட கொரியாவிற்குள் நுழையும் சீன ராணுவம்

கொரோனா வைரஸ் தொற்றுநோயால் உலகின் கவனம் அந்த பக்கமாக மட்டுமே இருக்கிறது. இந்த நேரத்தில், அமைதி மற்றும் சட்டம் ஒழுங்கை காப்பாற்றுகிறேன் பேர்வழி என்ற பெயரில் வட கொரியாவின் அரசியலில் தலையிட சீனாவுக்கு நல்ல ஒரு வாய்ப்பு கைகூடி வந்துள்ளது. அப்படிச் செய்தால், அரசியல் குழப்பத்திற்கு முடிவுகட்டி, அங்கே தனது கைப்பாவை அரசை சீனா நடத்த முடியும். வட கொரிய ராணுவத் தலைவர்களைத் தங்கள் பக்கம் கொண்டு வருவது சீனாவுக்கு எளிதான காரியமாக இருக்க கூடும். இப்படி செய்துவிட்டால், தலையை சுற்றி மூக்கை தொட்டு அதிகாரத்தை கைப்பற்ற தேவையில்லை. தங்கள் ராணுவத்தை நேரடியாக வட கொரியாவின் தலைநகருக்கே அனுப்ப முடியும். எதிர்ப்பு இன்றி, தலைநகர் பியோங்யாங்கில் சீனா சிம்மாசனம் போட்டு அமர இது வழி செய்யும்.

புவி சார் அரசியல்

அணு ஆயுதங்கள் மற்றும் ஏவுகணை தளங்களை பாதுகாப்பது, ஸ்திரத்தன்மையை உறுதி செய்வதாக கூறி அவற்றை தங்கள் கட்டுப்பாட்டில், சீனா கொண்டுவரும். வட கொரியா மீதான, பீஜிங்கின் கட்டுப்பாடுகள், புவிசார் அரசியல் தாக்கங்களில் மகத்தானதாக இருக்கும். வட கொரியாவில் சீன கடற்படை மற்றும் விமானப்படை பிரிவுகள் நிலை நிறுத்த வாய்ப்புள்ள நிலையில், சீனா மற்றும் அமெரிக்கப் படைகள் ஒருவருக்கொருவரை அங்கே எதிர்கொள்ள நேரிடும். தென் கொரியாவுடனான அமெரிக்க நட்பு வலு இழக்க கூடும். சீனாவிலிருந்து வரும் அழுத்தம் மற்றும் அச்சுறுத்தல்களுக்கு பணிந்து அல்லது பொருளாதார ஆசைகளுக்காக, அமெரிக்காவின் நட்பை தென் கொரியா விட்டுக் கொடுத்துவிட்டு சீனாவுடன் கை கோர்க்கும் வாய்ப்பு அதிகம்.

தென் கொரியா vs ஜப்பான்

தென் கொரியாவின் சிறிய தீவு கூட்டமான லியான்கோர்ட் ராக்ஸ் மீது ஜப்பான் உரிமை கோரி வருகிறது. தாகேஷிமா என்று அந்த தீவுக் கூட்டத்தை ஜப்பான் உரிமை கொண்டாடுகிறது. அந்த தீவு கூட்டத்தை உங்களுக்கே பெற்றுத் தருகிறோம் என்று சீனா கூறினாலே போதுமானது, தென் கொரியா, அந்த பக்கம் சாய்ந்துவிடும். சீன கடற்படை ஆதிக்கத்திற்கு தென் கொரியா ரத்தின கம்பளம் விரிக்கும். இதன் மூலம் ஜப்பான் கடல், மஞ்சள் கடல் மற்றும் கிழக்கு சீனக் கடலை இணைக்கும் கொரியா நீரிணையை சீனா தன்வசப்படுத்தும். ஆசியாவின் முக்கிய உள் கடல் பாதையில், சீனக் கொடிதான் பறக்கும்.

வேகமாக காய் நகர்த்தும் சீனா

இது, வடகிழக்கு ஆசியாவில் ஜப்பானை தனிமைப்படுத்திவிடும். சீன ஆதிக்கம் விரிந்து பரந்துவிடும். அமெரிக்கா விழித்துக் கொள்ளும் முன்பே இத்தனை அதிரடிகளுக்கும் அச்சாணி போட்டுவிட்டது சீனா. தனது மருத்துவர் குழுவை வட கொரியாவுக்கு அனுப்பி வைத்துவிட்டது. அங்கு நடக்கும் தகவல்கள் சீனாவின் விரல் நுனியில் உள்ளன. எப்போது நிலையற்ற தன்மை எழுகிறதோ, அப்போது, சீனா மேலே நீங்கள் படித்த அத்தனை திட்டங்களையும், அப்படியே அமல்படுத்தும் என்கிறார்கள், சர்வதேச அரசியல் பார்வையாளர்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக