Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

திங்கள், 22 ஜூன், 2020

சிவபுராணம் - பாகம் 2 பகுதி 046

நின்றசீர் நெடுமாற நாயனார்...!

மதுரையை ஆண்டவர்களில் ஒருவர் கூன் பாண்டியன் என்னும் நெடுமாறன். நெடுமாறனின் போர்த்திறமையும், புகழும் சோழ மன்னனை ஈர்த்தது. சோழ மன்னன் தனது மகள் மங்கையர்க்கரசியை நெடுமாறனுக்கு திருமணம் செய்து வைத்தார். அத்துடன், குலச்சிறையார் என்ற அறிவார்ந்த அமைச்சரையும் மதுரைக்கு அனுப்பி, தன் மருமகனுக்கு ஆலோசனைகள் வழங்குமாறு அறிவுறுத்தினார்.

குலச்சிறையார் இளமை பருவம் முதற்கொண்டே கங்கை சூடிய முக்கண்ணனின் பாத கமலங்களில் தம்முடைய சிந்தனைகள் மற்றும் எண்ணத்தை செலுத்தி சிவனடியார்களுக்குத் தேவையான திருத்தொண்டு புரிவதில் ஆர்வத்துடனும், மிகுந்த ஈடுபாட்டுடனும், உண்மையையும் உடையவராக விளங்கியதோடு மட்டுமல்லாமல் அனைவராலும் போற்றப்பட்டார். அடியார்களுக்கு வேண்டிய உதவிகளை புரிவதால் பிறவா நிலையாகிய பேரின்ப வீடு அடைவதற்கான வழியை நன்கு உணர்ந்திருந்தார்.

தம்மை காண வரும் அடியார்கள் எந்த குலத்தினராக இருப்பினும் அவர்களிடம் வேற்றுமை பாராது அவர்களையும் சிவமாகவே கருதி வழிபட்டு வந்தார். நாம் அனுபவிக்கும் அனைத்து நலன்களுக்கும் முக்கியமானதாக இருப்பது சமய ஞானமே ஆகும். சமய ஞானம் என்பது நாம் கொண்டுள்ள பக்தியை பெருக்குவதினால் மட்டுமே கிடைப்பதாகும். அந்த பக்தியை பெருக்க நாம் உயிரை வளர்க்க வேண்டும். இதுவே அனைத்திற்கும் ஆணிவேர் என்பதை நன்கு உணர்ந்திருந்தார் குலச்சிறையார்.

சோழ மன்னனின் உத்தரவிற்கு கட்டுப்பட்டு இவர் மதுரையை ஆண்டு வந்த நின்றசீர் நெடுமாறனிடம் தலைமை அமைச்சராய் பணியாற்றி வந்தார். இத்தொண்டர் அமைச்சராகப் பணிபுரிந்து வரும் நாளில் பாண்டிய நாட்டில் சமணர்கள் தங்கள் சமயத்தின் கருத்துக்களையும், ஆதிக்கத்தையும் பரப்ப பல வழிகளில் முயன்றார்கள். ஆனால் குலச்சிறையாரோ தாம் பின்பற்றி வருகின்ற சைவ மதக் கொள்கைகளை விடாமல் பற்றிக் கொண்டு ஒழுகினார்.

குலச்சிறையார் சமணக் கொள்கைகளை பாண்டிய நாட்டில் பரவாமல் அதை தடுப்பதற்கு உறுதுணையாகவும் இருந்தார். பாண்டியமாதேவியாருடைய ஒப்பற்ற சிவத்தொண்டிற்கு தம்மை உட்படுத்தி உண்மைத் தொண்டராகி பணியாற்றினார் குலச்சிறையார். இந்நிலையில் மன்னன் நெடுமாறனை சமண மதம் ஈர்த்தது. மக்கள் சமண மதத்தைப் பின்பற்ற வேண்டுமென்ற உத்தரவையும் அவர் பிறப்பித்தார். இது மங்கையர்க்கரசியாருக்கும், குலச்சிறையாருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால், மன்னனிடம் பேசும் துணிச்சல் அவர்களுக்கேது? மீனாட்சியம்மன் கோவிலுக்கு வரவே மக்கள் பயந்தனர். மக்களின் வருகை இல்லாததால் கோவில் வெறிச்சோடி காணப்பட்டது.

இந்த அவலநிலையை பற்றி, சொக்கநாதப் பெருமானிடமே சென்று பிரார்த்திக்க ராணி முடிவெடுத்தாள். குலச்சிறையாரையும் அழைத்துக் கொண்டு கோவிலுக்குச் சென்று, இருவருமாய் பிரார்த்தித்தனர். அப்போது சான்றோர் ஒருவர் அக்கோவிலின் சன்னதிக்கு வந்தார். கோவிலுக்குள் அர்ச்சகர்கள் உள்ளிட்ட யாருமே அரசனின் ஆணைக்கு பயந்து வராத நிலையில், இவர் மட்டும் மன்னனின் கட்டளையை மீறி எப்படி துணிச்சலாக உள்ளே வந்தார்? என்று அவர்கள் ஆச்சரியப்பட்டனர். வந்தவர் அரசியை வணங்கி, அரசியாரே! நான் சோழநாட்டில் வசிக்கிறேன்.

பல திருத்தலங்களுக்கும் சென்று வருகிறேன். மதுரையில் எம்பெருமானையும் தரிசிக்க வேண்டும் என எண்ணம் கொண்டு இங்கு வந்தேன். இங்கே யாருமே இல்லாததைக் கண்டு விசாரித்தேன். அப்போதுதான் சமணத்தை மக்கள் பின்பற்றுவதால் யாருமே வருவதில்லை என அறிந்து வருத்தமடைந்தேன். இருப்பினும், மீண்டும் சைவத்தைக் கொண்டு வர ஒரு மார்க்கம் உள்ளது என்று கூறினார். வழி இருப்பதை அறிந்ததும் மட்டற்ற மகிழ்ச்சி அடைந்த இருவரும் அம்மார்க்கத்தை கூற வேண்டும் என்று வேண்டி நின்றனர். பின்பு அவர் சீர்காழியில் திருஞானசம்பந்தர் என்னும் தெய்வமகன் இருக்கிறார். அவர் மூன்று வயதில் உமையம்மையிடமே பால் குடித்த குழந்தை அவர். அவரை இங்கு வரவழைத்தால் சைவம் தழைக்க வழி செய்வார் என்று கூறினார்.

அவர்களும் அதற்கான முயற்சிகளில் இறங்கி செயல்பட துவங்கினார்கள். இவ்வாறு சிவநெறியில் வாழ்ந்து அரசகருமம் செய்து வரும் நாளில் சிவநெறியை விளக்கும் திருஞானசம்பந்தர் பாண்டிய நாட்டிற்கு அருகாமையில் உள்ள திருமறைக்காட்டில் எழுந்தருளியிருப்பதாக செய்தியை அறிந்தார். இச்செய்தியினை அறிந்த பின்பு அவரை நேரில் கண்டு அடிபணிந்து மிகவும் மகிழ்ச்சி கொண்டார். இந்த செய்தியை பாண்டியமாதேவியாரிடம் எடுத்துரைத்தார். பாண்டிய நாடெங்கும் சைவம் ஓங்கவேண்டுமென்ற எண்ணத்தோடிருந்த பாண்டியமாதேவியாரோடு ஆலோசித்து திருஞானசம்பந்தரை பாண்டிய நாட்டிற்கு வரவழைக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டனர்.

பாண்டிய நாட்டு தூதுவர்கள் திருஞானசம்பந்தரை சந்தித்து அரச ஒற்றை அவரிடம் அளித்தனர். அச்செய்தியை படித்ததும் அவர்களின் நல்ல எண்ணத்தை புரிந்து கொண்ட திருஞானசம்பந்த பெருமானும் பாண்டிய நாட்டிற்கு வருவதாக கூறினார்.திருஞானசம்பந்த பெருமான் பாண்டிய நாட்டிற்கு எழுந்தருளும் செய்தி கிடைக்கும் முன்னரே அவரை வரவேற்க பலவிதமான ஏற்பாடுகள் செய்யப்பட்டு கொண்டிருந்தன. பின்பு தூதுவர்கள் திருஞானசம்பந்த பெருமான் வருவதாக கூறிய செய்தியைக் கேட்டதும் அங்கிருந்த அனைவரும் திருஞானசம்பந்த பெருமானின் வருகையை எதிர்பார்த்து கொண்டிருந்தனர்.

இவர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் விதமாக திருஞானசம்பந்த பெருமான் பாண்டிய நாட்டிற்கு எழுந்தருளினார். திருஞானசம்பந்தமூர்த்தி வந்து கொண்டிருக்கின்றார் என்னும் செய்தியை கேட்டதும் குலச்சிறையார் அடைந்த மகிழ்ச்சி என்பது எல்லை இல்லாதது.

உள்ளம் நிறைந்த அன்பு வெள்ளத்தாலே...

கைகள் சிரமிசை ஏறிக்குவிய...

அவ்விடத்திலே நிலமிசை வீழ்ந்து வணங்கினார்.

பின் எழுந்து நெருங்கிச் சென்று வீழ்ந்து வணங்கிக் கிடந்தார்.

ஆளுடைய பிள்ளையாரைச் சூழ்ந்து வந்த தொண்டர் கூட்டம் மற்றும் பாண்டிய முதல் மந்திரி மற்றும் அவருடன் வருகை தந்த அமைச்சர்கள் என அவரை பணிந்தபோதும் அவர் எழாததைக் கண்டு ஆளுடைய பிள்ளையாரின் தொண்டர் சிலர் சென்று சிவபுரச் செல்வரிடம் நிகழ்ந்து கொண்டு இருப்பதைக் கூறினார்கள். சிவஞானச் செல்வரும் முத்துச் சிவிகையின்றும் இறங்கி வந்து தம் கைமலர்களால் குலச்சிறையாரை எழுப்பி அவரை அணைத்தெடுத்தார். அவர் தம் அரவணைப்பினால் எழுந்த குலச்சிறையார் சிவஞானச் செல்வரான ஆளுடைய பிள்ளையாரைக் கைதொழுது நின்றார்.

ஆளுடைய பிள்ளையாரோடு சென்று ஆலவாய் உறையும் அவிர்சடைக் கடவுளை வழிபடும் பாக்கியமும், பேரும் பெற்றார். பின்பு அவர்கள் தங்குவதற்காக ஏற்படுத்தப்பட்டுள்ள இடத்திற்கு சம்பந்தப்பெருமானையும், அவருடன் வந்த தொண்டர் கூட்டத்தையும் அழைத்துச் சென்று திருமடத்தில் உறையச் செய்தார். அவர்கள் அனைவருக்கும் வேண்டிய அனைத்து தேவைகள் மற்றும் திருவிருந்தளிக்கும் பேறும் அவருக்கே வாய்த்தது.

இவற்றையெல்லாம் மனநிறைவோடு செய்து முடித்தாலும் சமணர்களால் இவருக்கு தீங்கேதும் நேருமோ? என அஞ்சினார். அவ்விதம் ஏதேனும் நிகழுமாயின் தனது உயிரை துறப்பதும் சரியே என்றும் எண்ணத் துவங்கினார். அவர் அஞ்சிய வண்ணமே சமணத்துறவிகள் மதபேதத்தால் மதியிழந்து மன்னனின் ஆணையின் பேரில் ஆளுடைய பிள்ளையார் தங்கியிருந்த மடத்திற்குத் தீ வைத்தனர் என்னும் செய்தியானது அவருக்கு வந்தது. அதைக்கேட்டதும் அவருக்கு மனம் பதைபதைக்கச் செய்தது.

திருஞானசம்பந்தர் தங்கியிருந்த மடத்திற்கு சமணர்கள் தீ வைத்தனர் என்னும் செய்தியைக் கேட்டதும் குலச்சிறையாருக்கு மனம் பதைபதைக்கச் செய்தது. இருந்தாலும் சிவஞானச் செம்மலுக்கு தீங்கு ஏதும் நிகழவில்லை என்பதை அறிந்த பின்னரே அவரது மனம் ஆறுதல் அடைந்தது. செய்யும் பிழைக்கு தண்டனை கிடைப்பது போல் அவன் இட்ட தீ அவனையே சென்று மெல்லத் தாக்கட்டும் என்று திருஞானசம்பந்தர் தீயின் தாக்கத்தை பாண்டியனுக்கே திருப்பிவிட்டார்.

பாண்டிய மன்னருக்கு வெப்பு நோயானது வருத்த துவங்கியது. இந்த நோயின் தாக்கத்தை குறைக்க சமணர்கள் செய்த எவ்விதமான மந்திரங்களும், சிகிச்சைகளும் பலனளிக்கவில்லை. இந்த நோய்க்கு திருஞானசம்பந்தரின் மதியுரைதான் சிறந்த மருந்தாக இருக்கும் என்று குலச்சிறையார் கூறினார். மன்னனும் அவர் ஆலோசனைப்படி திருஞானசம்பந்தரை அழைத்து வருமாறு பாண்டியமாதேவியாரையும், குலச்சிறையாரையும் பணித்தான்.

மன்னனின் விருப்பப்படியே பாண்டியமாதேவியாரும், குலச்சிறையாரும் குதிரையில் ஏறிச்சென்று திருஞானசம்பந்தப்பிள்ளையார் தங்கி இருக்கும் திருமடத்தை அடைந்தார்கள். அங்கே ஞானத்தின் திருவுருவாய் நின்ற திருஞானசம்பந்தரைக் கண்டார். குலச்சிறையார் அவரை கண்ட பொழுதே சமணர்களின் கொடுந்தொழிலை நினைத்து கண்களில் நீர் வழிந்தோடியது. மேலும், தங்களது இருக்கரங்களை குவித்து திருஞானச்சம்பந்த பெருமானின் திருவடியில் வீழ்ந்து அழுதார். திருவடியைப் பற்றி விடாது இருந்தார்.

மேலும் அவரைப் புகலிவேந்தரே...! ஒன்றுக்கும் கவலை கொள்ள வேண்டாம் என்று ஆறுதல் கூறினார். பின்பு அபயமளித்த அவரை சிவிகையில் ஏறிவர அவரை அரச மாளிகைக்கு அழைத்துச் சென்றனர். பின் அரசனது தலைமாட்டில் பொற்பீடத்தில் அமர்வித்தார். பின்பு திருஞானசம்பந்தர் மந்திரம் ஜபித்து மன்னருக்கு திருநீறு பூசியவுடன் நோயின் தாக்கமானது குறைய துவங்கியது. பின் மன்னரை முழுவதுமாக குணமடையச் செய்தார்.

நெடுமாற பாண்டியன் கூன் உடம்பு கொண்டவர். திருஞானசம்பந்தரின் அருள்மழையால் அவரது கூனும் நிமிர்ந்துவிட்டது. சிறிது நேரத்தில் சமணர்கள் வருகை தரவும் அவர்களுக்கு சைவத்தின் மீதும், திருஞானசம்பந்தரின் மீது இருந்த வெறுப்பு மற்றும் விரோதத்தினால் அவர் குணமானதை மந்திர தந்திர விஷயம் என்று கூறினர். ஆனால் திருஞானசம்பந்தரோ சிகையில் எவ்விதமான சினமும் இன்றி

இதில் எவ்விதமான தந்திரமும் இல்லை...

மந்திரமும் இல்லை...

என்று கூறினார். திருஞானசம்பந்தரின் கூற்றுக்கு செவி சாய்க்காத சமணர்கள் தங்களோடு வாதமிட அழைப்பு விடுத்தனர்.

அனல்வாதம், புனல்வாதம் என்ற இருவாத முறைகளிலும் முறையே மந்திரம் ஓதப்பட்ட ஏடுகளை தீயிலும், நீரிலும் இட்டாலும் எந்த ஏடு எரியாமலும், மூழ்காமலும் நிற்கிறதோ அவர்கள் வென்றதாக கருதப்பட வேண்டும் என்பதே போட்டியின் நிபந்தனை ஆகும். திருஞானசம்பந்தர் தன்னை போட்டிக்கு அழைத்த சமணர்களுடன் போட்டியில் பங்கு கொண்டு அனைத்திலும் வெற்றியும் பெற்றார். வாதத்தில் தோற்ற சமணர்களையும் மற்றும் அவர்களுக்கு உடன்பட்டவர்கள் என அனைவரையும் கழுவிலேற்றி முறை செய்யுமாறு வேந்தர் ஆணையிட்டார். மன்னரின் ஆணைப்படியே எண்ணாயிரம் சமணர்கள் கழுவில் ஏற்றப்பட்டனர்.

திருநீறணிந்த பாண்டிய மன்னனை பாண்டியமாதேவியாருடன் திருஞானசம்பந்தர் அழைத்துச் சென்று ஆலவாய் அண்ணலைப் போற்றினார். வேந்தருக்கும் அவரோடு கூடிச்செல்வதே ஆசையாக இருந்தது. ஆனால் சிவபுரச் செல்வரோ வேந்தரை நோக்கி தாங்கள் இங்கு இருந்தே சிவநெறி போற்றியிருங்கள் என்று பணித்தார். சங்கத்தமிழ் வளர்த்ததோடு, சைவத்தையும் வளர்த்து, வான்புகழ் பெற்றார். அந்நாளில் வடநாட்டு மன்னர் பாண்டிய நாட்டின் மீது படையெடுத்து வந்தார்.

அவர்களை நெல்வேலிப் போர்க்களத்தில் தோற்கடித்தார். வெற்றி கண்ட நெடுமாறனை கன்னித் தமிழ் தெய்வப்புலவர்கள் திருநெல்வேலி வென்ற நெடுமாறர் என்று சிறப்பித்தார்கள். இத்தகைய தமது சிறந்த வெற்றிக்கு காரணம் சிவனாரின் திருவருள் ஒன்றேதான் என்பதை உணர்ந்தார் நெடுமாறன்... பின் ஆலயப் பணிகள் பல புரிந்து ஆலவாய் அண்ணலின் அருளோடு அரசாண்டார். உலகில் வீரத்தோடு... திருநீற்று பெருமையை ஓங்கச் செய்த புகழோடு... நெடுங்காலம் அரசாண்ட நின்றசீர் நெடுமாற நாயனார் சிவபாதமடைந்து இன்புற்றிருந்தார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!